ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, இப்போது லண்டன் ஒலிம்பிக் பிரதானச் சுற்றில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளதையே பெரிய விஷயமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
1928 முதல் 1956 வரை தொடர்ந்து 6 முறையும், 1964-லும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி, ஒலிம்பிக்கில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த இந்திய அணிக்கு அதன்பிறகு இறங்குமுகம்தான்.
கடைசியாக 1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு, இன்றுவரை தங்க வாய்ப்பு கைகூடவில்லை. மிக மோசமாக, 2008-ல் சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் பிரதான சுற்றுக்கே தகுதி பெற முடியாமல் போனது. இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக்கில் விளையாட முடியாத வேதனையான தருணம் அது.
மைதானத்தில் அனைத்து வீரர்களையும் துடிப்பாக வைத்திருந்து, ரசிகர்களின் இருதயத் துடிப்பையும் அதிகப்படுத்தும் ஹாக்கி, சோம்பேறிகளின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டால் அழிவுப்பாதைக்குச் சென்றதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
மக்களும், அரசாங்கமும் கிரிக்கெட்டுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஹாக்கிக்குத் தரவில்லை என்பதை மறுக்க முடியாது. ரசிகர்களின் நாடியைப் பிடித்துப்பார்த்து கிரிக்கெட்டைச் சிறிது சிறிதாக வர்த்தகமயமாக்கி, இன்று உலகிலேயே அதிகப் பணம் கொழிக்கும் விளையாட்டாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாறிவிட்டது.
கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் புகழையும், பணத்தையும் பார்த்தபிறகு, எந்த இளைஞர்களுக்குத்தான் ஹாக்கிமேல் காதல் பிறக்கும்?
பறக்கும் குதிரையில் பந்தயம் கட்டுவதைப்போல, பெரும் வணிக நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்களுக்கு கிரிக்கெட் வீரர்களைத் தேடிப்போய் ஒப்பந்தம் செய்து, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கத் தொடங்கிய பிறகு, ஹாக்கிக்கு கொஞ்சம் இருந்த மவுசும் மங்கிப்போனது.
இது புறக்காரணிகள் என்றால், அகக்காரணி ஒன்றும் இருக்கிறது. இந்திய ஹாக்கி வீரர்களுக்குச் சம்பளப் பணத்தைக்கூட பாக்கி வைத்து, தேசிய விளையாட்டையே அவமானப்படுத்திய சம்பவமும் நடந்தது. 2010-ல் "தங்களுக்குத் தரவேண்டிய சம்பளப் பாக்கியான 25 ஆயிரம் ரூபாயைத் தந்தால்தான் அடுத்த போட்டிக்குத் தயாராவோம்' என ஹாக்கி வீரர்கள் "ஹாக்கி இந்தியாவின்' தலைவருக்குக் கடிதம் எழுதிய துர்பாக்கியமும் நிகழ்ந்தது.
2011-ல் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன் டிராபியைக் கைப்பற்றிய இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கப்பரிசாக தலா ரூ.25 ஆயிரத்தைத் தர முன்வந்தது ஹாக்கி இந்தியா நிர்வாகம்.
தேசிய விளையாட்டின் கௌரவத்துக்கு விலை வெறும் 25 ஆயிரம் ரூபாய்தான் என நிர்ணயிக்கப்பட்ட அந்த ஒரு நிகழ்வே போதும், தேசிய விளையாட்டை எந்த அளவுக்கு இந்தியா மதிக்கிறது என்பதற்கு. அந்தத் தொகையை வைத்து, தரமான உபகரணங்கள்கூட வாங்க முடியாது என வீரர்கள் போர்க்கொடி தூக்கிய பிறகே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தலையிட்டு தலா ரூ.1.5 லட்சம் அளித்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
மொத்தமே 15 நாடுகளே விளையாடும் கிரிக்கெட் உலகக் கோப்பையை கடந்த முறை இந்திய அணி ஜெயித்தபோது, இந்தியாவுக்கு அதைவிடப் பெருமை எதுவுமே இல்லை என்ற அளவு நாடு முழுவதும் மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் முதல் சாதாரணக் குடிமகன்வரை வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர், கொண்டாடினர். அதுபோன்ற ஒரு முக்கியத்துவம் ஹாக்கிக்குத் தரப்படுவதேயில்லை.
ஆனால், என்னதான் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும், அன்னிய மண்ணில் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி பெரிய அளவில் சாதித்தது இல்லை. ஹாக்கியை இந்தியர்கள் கைவிட்டாலும், இந்தியர்களை ஹாக்கி கைவிடாத வேளை இது. ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணியின் உத்வேகமான ஆட்டம், ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்க வைத்துள்ளது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 2 ஹாட்ரிக் உள்பட மொத்தம் 16 கோல்கள் அடித்து நம்பிக்கை நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார் சந்தீப்சிங்.
ஒலிம்பிக் கனவை நனவாக்குவதற்கான பயணம் வெகுதூரம் என்றாலும், ஹாக்கியை மீண்டும் முக்கிய இடத்துக்குக் கொண்டு வருவதற்கான வேளை இதுதான். ஒலிம்பிக்கை நோக்கிய இந்திய அணியைப் பெருமைப்படுத்தி, ஹாக்கியை நாடு முழுவதும் பிரபலப்படுத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் முன்வர வேண்டும்.
""ஹாக்கி வீரர்களுக்குப் போதுமான பரிசுத்தொகையைத் தராவிட்டால், இளைஞர்களை இந்த விளையாட்டு கவராது'' என்று ஒருமுறை சொன்னார் இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராஜ்பால் சிங். ஆம், உண்மைதான், கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்காவிட்டாலும், லட்சங்களையாவது அள்ளிக்கொடுத்து, தேசிய விளையாட்டை குக்கிராமங்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமை இந்தத் தேசத்துக்கு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.