காகிதங்கள் அல்ல!

அறிவு வளர்ச்சிக்கான அடையாளமே புத்தகங்கள். அந்தப் புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலையே நூலகமாகும். இது மனித நாகரிகத்தின் தொட்டில்; சிந்தனையாளர்களின் சீரிய பாசறை; அடுத்த தலைமுறையை ஆளாக்கும் குருக
Updated on
3 min read

அறிவு வளர்ச்சிக்கான அடையாளமே புத்தகங்கள். அந்தப் புத்தகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலையே நூலகமாகும். இது மனித நாகரிகத்தின் தொட்டில்; சிந்தனையாளர்களின் சீரிய பாசறை; அடுத்த தலைமுறையை ஆளாக்கும் குருகுலம்; இதைப் போற்றிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அனைவரின் கடமையுமாகும்.

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்ககத்தின் வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது.

 புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை சர்வதேச மருத்துவமனையாக ஆக்கப் போவதாக அறிவித்ததுபோலவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அதன் ஆய்வுக்கான மருத்துவமனையாகப் பயன்படுத்தப் போவதாகவும், இப்போதுள்ள நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றுவதாகவும் புதிய அரசு அறிவித்தது.

 இதை தமிழ் இயக்கங்களும், எழுத்தாளர் மன்றங்களும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும், கல்வியாளர்களும், அறிவாளர்களும் கண்டித்துள்ளனர்; எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர். அந்த நூலகம் எந்த நோக்கத்துக்காகக் கட்டப்பட்டதோ அதே நோக்கத்துக்காகவே பயன்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.

 இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது; இதுபற்றி விளக்கமும் கூறும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 கிராமப்புறமாகட்டும், நகர்ப்புறமாகட்டும் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்புக்காகப் பெரும்பான்மையான மக்கள் இப்போதும், எப்போதும் நூலகங்களையே நம்பியிருக்கின்றனர். நகரமோ, கிராமமோ நூலகப் பயன்பாடு என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையைக் கடந்துவிட்டது.

 தேர்வுக்கான தயாரிப்பு, ஆய்வுக்கான தேவை, சுயதொழில் வழிகாட்டுதல், தன் முன்னேற்றம் என நூலகத்தின் தேவை விரிவடைந்து வருகிறது. பள்ளிதோறும், வகுப்பறைதோறும் என்ற நிலையைத் தாண்டி வீடுதோறும் நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முழங்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நூல்நிலையங்களின் நிலை எப்படி இருக்கிறது?

 தமிழகத்தின் அனைத்து ஊராட்சியிலும் ஏற்படுத்தப்பட்ட ஊர்ப்புற நூலகங்கள் ஆதரிப்பார் இல்லாத அநாதைகளாகச் செயல் இழந்து கிடக்கின்றன. இருக்க இடம் இல்லாமல் அடுக்கி வைக்க அலமாரி இல்லாமல் அலங்கோலமாகக் கிடக்கும் நூல்கள் அழமுடியாமல் தவிக்கின்றன. அறிவு ஆலயங்களுக்கா இந்த அவல நிலை?

 கிராமப்புற மக்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2000-ம் ஆண்டில் திருவள்ளுவர் நாளான ஜனவரி 16-ம் நாள் 6.5 கோடி மதிப்பீட்டில் 12,700 நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அய்யன் திருவள்ளுவன் பெயரில் அமைந்த இந்த நூலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 75 நூல்கள் வீதம் 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 இவ்வாறு ஒரே நாளில் ஆயிரக்கணக்கான நூலகங்களைத் திறந்த அரசின் சாதனையைப் புத்தக விரும்பிகள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையங்கள் ஊராட்சி அலுவலகங்களின் ஒரு பகுதியில் செயல்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

 இப்போது மாவட்டத்துக்கு ஒருசில ஊராட்சிகளில் மட்டும் இந்த நூல்நிலையங்கள் ஓரளவு செயல்படுகின்றன. அறிவொளி இயக்கத்தினர், தன்னார்வத் தொண்டு அமைப்பினர், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மூலம் இந்த நூலகங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நூல் நிலையங்கள் இருந்தும், இல்லாத நிலையிலேயே இருக்கின்றன.

 இதுதான் இப்படியிருக்கிறது என்றால் பொதுநூலகத்துறை நூலகங்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா? தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 700-க்கும் அதிகமான நூலகங்கள் செயல்படுகின்றன.

 இவை அனைத்தும் பொது நூலகத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. இவற்றுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு பொதுநூலகத் துறையிடம் தரப்பட்டுள்ளது.

 உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீட்டு வரியுடன் சேர்த்து நூலக வரியாக வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான நிதியும், கொல்கத்தா ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை அளிக்கும் நிதியும் பொது நூலகத் துறைக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆதாரங்களை பொது நூலகத் துறை எப்படிச் செலவிடுகிறது என்பதுதான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

 அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் உலக அளவில் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்படும் என்றும், பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் எண்ணிக்கை 1,000 படிகளாக அதிகரிக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் அறிவித்தார்.

 ஆனால், அதற்கேற்ப அரசு நிர்வாகம் செயல்படவில்லை. மாறாக, பொது நூலகத்துறையின் வரிப்பணம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதனால் 2009-ம் ஆண்டுமுதல் இன்றுவரை நூலகங்களுக்கான நூல்களை பொது நூலகத் துறை வாங்கவில்லை என்பது பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வெளியிட முடியாத மனவருத்தமாகும்.

 இனியாவது தாமதமில்லாமல் ஆண்டுக்காண்டு நூல்கள் வாங்குவதை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும்; நடுநிலையான தேர்வுக் குழுவை அமைத்து நூல்களைத் தேர்வு செய்ய வேண்டும்; வெளிப்படையான தெளிவான நூலகக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

 புதிய உலகத்தைப் படைப்பதற்கும், புரட்சிப் பாதையைக் காட்டுவதற்கும் போர்க்களத்தைவிட புத்தகக்களமே வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. அதனால்தான் வாளின் வலிமையைவிட எழுதுகோலின் வலிமையே பெரிது என்பதை நெப்போலியன் போன்ற மாவீரர்களே ஒத்துக்கொண்டனர்; "நாம் எழுத்தால் புத்தகத்தால் சண்டை போடுகிறோம்' என்று ஷேக்ஸ்பியர் கூறியதும் அதனால்தான்.

 1789-ம் ஆண்டு உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த பிரெஞ்சுப் புரட்சி தொடங்கியது. அதற்கான சிந்தனைகளை அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடம் விதைத்து விட்டுப் போன மாபெரும் எழுத்துலகச் சிற்பிகள் வால்டேரும், ரூசோவும் என்பதைக் காலம் மறக்குமா? ரூசோவின் "சமுதாய ஒப்பந்தம்' என்னும் நூலில் உள்ள வாசகங்களே பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரப் பிரகடனத்திலும், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திலும் இடம்பெற்றன.

 மானிட சமுதாயம் ஏற்றத்தாழ்வற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற வெறியோடும், நெறியோடும் கார்ல்மார்க்ஸ் படைத்தளித்த "காபிடல்' என்னும் மூலதனம் இன்றுவரை உலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 1883-ல் அவர் சிந்திப்பதை நிறுத்தும்வரை எழுதிக் கொண்டிருந்தார்.

 டால்ஸ்டாயும், ரஸ்கினும் உருவாக்கிய புத்தகங்கள் காந்தியை "மகாத்மா'வாக்கியது; காந்தியாரின் சுயசரிதை பலரை மனிதர்களாக்கியது. எளிமையும், இரக்கமும் கொள்ளச் செய்தது. நேருவின் "உலக சரித்திரம்' பலருக்குப் பாடமானது. இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் ஆன்மிகப் படைப்புகளால் மக்களை ஆட்கொண்டனர்.

 இவ்வாறு நூல்கள் ஆக்கப்பணிகளுக்கு வழிகாட்டுமானால் வரவேற்க வேண்டியதுதான். ஆனால், அழிவுப் பணிகளுக்கும் பயன்படும் நூல்களைக் கண்டறிந்து விலக்க வேண்டும். ஐரோப்பாவின் சர்ச்சைக்குரிய படைப்பான மாக்கியவல்லியின் "இளவரசன்' என்னும் நூல் ஹிட்லரை உருவாக்கியது. "தனக்கு ஊக்கம் தந்த நூல்' என்று அவன் அதைப் பாராட்டினான். அவன் எழுதிய "மெயின் காம்ப்' என்னும் நூல் ஜெர்மனியில் போர்வெறியை ஏற்படுத்தியது; ஓர் உலகப்போரையே உருவாக்கியது. எனவே, நூல்கள் ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்றல் படைத்தவை.

 புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது என அறிஞர்கள் கருதினர். "எந்த வீட்டில் புத்தகசாலை இருக்கிறதோ அந்த வீட்டில்தான் ஆத்மா இருக்கிறது' என்று பிளேட்டோவும் கூறினார்.

 உலகம் தோன்றிய பிறகு நாகரிகமற்ற மக்களை நெறிப்படுத்த சமயங்கள் உயிர்த்தெழுந்தபோது மறைநூல்களும் தோன்றின. இன்றும் அவை வாழ்ந்து வழிகாட்டுகின்றன. நாகரிகம் பெற்ற மக்கள் நெறிபிறழாமல் நடக்க அறநூல்கள் உருவாக்கப்பட்டன. மனித நாகரிகத்தின் அடையாளமாக இலக்கியங்கள், காவியங்கள் படைக்கப்பட்டன. புராணம், இதிகாசங்களும் இப்படித்தான். சங்க இலக்கியங்களும் தமிழ் மக்களின் பொற்கால வாழ்வின் புதிய விடியல்களாகத் திகழ்ந்தன.

 இந்த பூமி எத்தனையோ அழிவுகளைச் சந்தித்துவிட்டது. எனினும், சாகாத இலக்கியங்கள் இன்னும் வாழ்கின்றன. அவை நம்மோடு பேசுகின்றன. கைகுலுக்குகின்றன. வழியைக் காட்டுகின்றன. "வாழ்க' என்று வாழ்த்து கூறுகின்றன. அவை வெறும் காகிதங்கள் அல்ல, ஆயுதங்கள்.

 ""இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவு கொள்வதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடையைக் கடந்து ஆசிரியருடன் உறவுகொள்ள வைக்கிறது திருக்குறள். அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கின்றோம்'' என்று டாக்டர் மு.வ. கூறுவதும் இந்த இலக்கிய உறவைத்தான்.

 இவ்வாறு காலங்களையும், தேசங்களையும் கடந்து வாழ்ந்துவரும் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கப்படுகிறது; இதற்கு "புத்தகக் கண்காட்சி' என்று பெயர். மனித சமுதாயத்துக்காகச் சிந்தித்தவர்களை நாமும் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் நேரம் இது.

 "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்' என்று பாடிய பாரதி உண்மையான எழுத்துக்கு உதாரணமாக வாழ்ந்தவர். இப்படிப்பட்ட எழுத்தாளர் பொன்னுக்கும், பொருளுக்கும் மட்டுமல்ல, புகழுக்கும்கூட எழுதுகிறவன் அல்ல.

 உலகம் உய்ய வேண்டும் என்பதைத் தவிர, வேறு நோக்கம் இல்லை. அவன் படைப்புகள் காலம் கடந்து வாழ்கிறபோது அவனும் வாழ்கிறான்; அவனால் மனித சமுதாயமும் வாழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com