இயற்கை விடுக்கும் எச்சரிக்கை

மனிதன் இயற்கையை எதிர்த்து வாழ முடியாது; அதனோடு இயைந்து வாழ்வதே அறிவுடைமை என்பதை நம் முன்னோர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.  புயல், மழை, வெள்ளம், சுனாமி என்னும் இவற்றின் திருவிளையாடல்களை அறிவியலால் ஓர
Updated on
3 min read

மனிதன் இயற்கையை எதிர்த்து வாழ முடியாது; அதனோடு இயைந்து வாழ்வதே அறிவுடைமை என்பதை நம் முன்னோர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.

 புயல், மழை, வெள்ளம், சுனாமி என்னும் இவற்றின் திருவிளையாடல்களை அறிவியலால் ஓரளவே அறிய முடியும். அதன் வன்முறையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, அவற்றை நிகழாமல் தடுத்து நிறுத்திட இதுவரை இயலவில்லை.

 கடந்த டிசம்பர் 30 அதிகாலை வீசிய "தானே' புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும், புதுச்சேரியையும் தாக்கி, மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துவிட்டது; விவசாயிகளின் வாழ்க்கையை 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது என்று கூறுகின்றனர். ஏழை எளிய மக்களின் குடிசைகள் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையே தொலைந்துபோய்விட்டது; அதைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலகாலம் ஆகலாம்.

 கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முந்திரி, பலா, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெற்பயிர்கள் பாழ்பட்டுப் போனதோடு இருப்பிடங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

 உயிர்ச்சேதங்களும், பயிர்ச் சேதங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டது. பல நாள்களாக மின்சாரமே இல்லாததால் கிராமங்களும், நகரங்களும் இருண்டு கிடந்தன. அங்கே வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்கே பல நாள்களாகிவிட்டன என்றால் மற்றவற்றைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

 தமிழ்நாடு மற்றும் புதுவையில் புயல் சேதப் பகுதிகளை மதிப்பிட மத்திய அரசின் உள்துறை இணைச் செயலர் லோகேஷ் ஜா தலைமையில் ஒன்பது பேர் குழு கடந்த ஜனவரி 7-ம் நாள் சென்னை வந்தது.

 இதில் வேளாண்மை, திட்ட நெடுஞ்சாலைத்துறை, நீர் வளம், மீன் வளம், சுகாதாரம், கால்நடை உள்ளிட்ட துறைசார்ந்த மத்திய அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

 மத்தியக் குழுவிடம் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி சேத விவர அறிக்கையை வழங்கினார்; தமிழகத்துக்கு மட்டும் புயலால் சுமார் ரூ. 5,800 கோடி பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அந்த நிதியை மத்திய அரசு தரவேண்டும் என்றும் மத்தியக் குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

 நிரந்தரத் தீர்வாக மறு சீரமைப்புத் திட்டங்கள் கொண்டுவர வேண்டும். விவசாயக் கடனை அடியோடு ரத்து செய்ய வேண்டும். சாய்ந்து கிடக்கும் முந்திரி, பலா, தென்னை மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

 இவ்வாறு பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள 300 கோழிப் பண்ணைகள் சேதமடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.

 இயற்கையினால் இத்தனை அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதா? மழை, வெள்ளம் என்பது ஆண்டுதோறும் வந்து கொண்டேயிருக்கிறது. புயல், சுனாமி என்பவை எப்போதாவது ஏற்படுகிறது.

 இவைதவிர, மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் "நிலநடுக்கம்' என்பது அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. இவையெல்லாம் உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதன் அறிகுறிகள்.

 உலகம் பண்டு தொட்டுப் பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வந்திருக்கிறது. எத்தனையோ நாடுகளும், நாகரிகங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. தமிழர்களின் பெருமையைக் கூறும் "குமரிக் கண்டம்' கடற்கோளால் அழிந்து போனதை இலக்கியமும், வரலாறும் எடுத்துக் கூறுகின்றன.

 பழம் பெருமைக்குச் சான்றான எகிப்து நாகரிகம் முதல் சிந்துவெளி நாகரிகம் வரை மண்மூடிப் போய்விட்டன. இப்போது அவற்றை மறுபடியும் காண்பதற்கு அகழ்வாராய்ச்சி செய்து கொண்டுள்ளோம்.

 இயற்கையால் ஏற்பட்ட இந்த அழிவுகளைத் தடுக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், உலக மக்களாகிய நாமே அழிவைத் தேடிக் கொள்ளலாமா? புவி வெப்பமாகிக் கொண்டிருப்பதை அறிவியல் அறிஞர்கள் எடுத்துக்கூறி எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால், மனித சமுதாயம் இரண்டு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டிருக்கிறதே, என்ன செய்வது?

 "வருமுன்னர் காத்துக் கொள்ள வேண்டும்' என்ற எச்சரிக்கை உணர்வும், எதிர்காலம் பற்றிய கவலையும் இல்லாமல் உலக மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். எங்கே இவர்கள் இவ்வளவு அவசரமாக ஓடுகின்றனர்? அழிவை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

 உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரால் வளர்ந்த நாடுகள் விரிக்கும் வலைக்குள் மாட்டிக் கொள்ளாமல் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

 பூமியின் வெப்பநிலை உயர்ந்தால் அண்டார்டிகா போன்ற கடல் பனிப் பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும்; இதனால் கடலோர நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 எனவே, மனிதன் வாழ்வதற்குத் தேவையான நிலப்பரப்பு குறையும். மக்கள்தொகை நெருக்கடி ஏற்படும். மனிதர்கள் வாழ்வதற்கே போராட வேண்டிய அவல நிலை ஏற்படலாம். இனிவரும் காலங்களில் பூமியில் வாழ்வதே ஒரு போராட்டமாக மாறக் கூடும்.

 உலகம் தோன்றிய காலத்தில் சுற்றுச்சூழல் என்பது நிலம், நீர், காற்று, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது.

 மனிதன் தன் எல்லாத் தேவைகளுக்கும் இயற்கையையே பயன்படுத்தினான். காலம் செல்லச் செல்ல மனிதனின் அறிவு வளரவும், நாகரிகம் வளரவும் மனிதர்களின் தேவைகளும் வளர்ந்தன. இதனால் பூமியின் சுற்றுச்சூழலும் மாறத் தொடங்கியது.

 ""ஒரு நாட்டின் பொருளாதாரச் சூழலையே மாற்றி விடும் சக்தி புவி வெப்பமாதலுக்கு உண்டு. நாட்டில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறையும். தண்ணீர்ப் பஞ்சம் மற்றும் சுகாதாரக் கேடு ஏற்படும்.

 இதுதவிர, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவு அபாயங்கள் அடிக்கடி ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்...'' என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

 பூமி வெப்பமாதலை எதிர்கொள்வது பற்றிய புவி உச்சி மாநாடு 1992-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ - டி - ஜெனிரோவில் தொடங்கியது. இந்த மாநாட்டின்போது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

 இந்த ஒப்பந்தம், "ஐ.நா. கால நிலை மாற்ற பணித்திட்டப் பேரவை' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தைக் கணிசமான நாடுகள் ஏற்றதைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

 புவி வெப்பமடைவதற்கு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்தான் காரணமாகும். இந்த நாடுகள்தான் தங்களது விரைவான வளர்ச்சிக்காகவும், ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பூமியை வெப்பமடையச் செய்து வருகின்றன. ஆனால், பழியை வளர்ந்து வரும் நாடுகள் மேல் போடுகின்றன.

 புவி வெப்பமாவதால் உலகம் முழுவதும் பெரும் வெள்ளம், கடும் வறட்சி, அதிவேகப் புயல், நிலநடுக்கம், உணவுப் பற்றாக்குறை, நோய்கள் அதிகரிப்பு எனப் பல கேடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த பூமி உருண்டை சூடாகும் ஆபத்திலிருந்து தடுக்கும் வழிகளில் காடுகள் வளர்ப்பதை மிகச் சிறந்த வழியாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐ.நா. அமைப்பும் ஆண்டுதோறும் இதையே வலியுறுத்துகிறது.

 ஆனால், நாம் காடுகளை வளர்ப்பதற்கு மாறாக இருக்கும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். மணல் கொள்ளையும், மரங்கள் கொள்ளையும் எந்த ஆட்சியாயினும் ஆளுவோர் ஆசியோடு பட்டப் பகலிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இவை தடுக்கப்பட வேண்டாமா? இதுபற்றிக் குரல் கொடுப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். கொலையும் செய்யப்படுகின்றனர். நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

 அக்கால அரசர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போமா? சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் வைத்து வளர்ப்பது மன்னர்களின் அறச்செயல்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. ஆலயங்களில் "தல விருட்சங்கள்' வைத்து வளர்த்ததும், கிராம மக்கள் மரங்களையே தெய்வமாக வழிபட்டதும் பழங்குடி மக்கள் இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டுக்குச் சான்றுகளாகும்.

 பாரி வள்ளல் முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்ததும், "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் மனமுருகிப் பாடியதும் இயற்கை நேசித்த பாசமிகு நிகழ்ச்சிகள்.

 இந்தப் புயலில் உயிர்களையும், பயிர்களையும், தாவரங்களையும் இழந்துவிட்டு பரிதவிக்கும் ஏழை விவசாயிகளின் நிலையும் அப்படித்தான்.

 ""இயற்கைக்குக் கீழ்ப்படிவதே அதை அடக்கி ஆள்வதற்குரிய வழியாகும்'' என்று அறிஞன் பேக்கன் கூறியதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது.

 மனிதன் இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடும்போது அது பழிவாங்கும் வகையில் திருப்பித் தாக்குகிறது. இது மனித குலத்துக்கு இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com