புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பயமுறுத்தும் "பிளாஸ்டிக்' காடுகள்

மனிதர்களாகிய நாம் தினமும் சுவாசிக்கும் காற்றை யாராவது தடை செய்தால், நம்முடைய நிலைமை என்னவாகும்? நம் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும் செயலிழந்து கடைசியாக நம்மால் இறுதி மூச்சுக்கூட விட முடியாமல் பரித

Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

மனிதர்களாகிய நாம் தினமும் சுவாசிக்கும் காற்றை யாராவது தடை செய்தால், நம்முடைய நிலைமை என்னவாகும்? நம் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும் செயலிழந்து கடைசியாக நம்மால் இறுதி மூச்சுக்கூட விட முடியாமல் பரிதாபமாக மாய்ந்து போவாம்.

 மனிதன் சுவாசிப்பதற்குத் தேவையான பிராண வாயு காடுகளில் உள்ள மரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காடுகளின் இப்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கும் நிலையில் இருக்கின்றன.

 மனிதனின் நுரையீரலைப் பிளாஸ்டிக் பையால் அடைத்தால் எப்படிச் சுவாசிக்க முடியாதோ, அதே மனிதனால் காடுகளில் வீசப்படும் பிளாஸ்டிக்கால் மரங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

 முக்கியமாக மனிதர்களால் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் மேற்குத் தொடர்ச்சி காடுகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்தான் ஒவ்வொரு நூறடி தொலைவிலும் நூற்றுக்கணக்கான தாவரங்களும், ஆயிரக்கணக்கான பூச்சிகளும் உள்ளன.

 அதேபோல பறவை இனங்களும் மிகுந்து காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விலங்குகளுக்கும் பஞ்சமில்லை. இப்படிப்பட்ட அடர்காடுகளைப் புற்றுநோயைப்போல கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகின்றன பிளாஸ்டிக் பைகள்.

 காட்டுப் பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள் அந்தக் காட்டிற்கான மரியாதையைத் தருவதில்லை. பிளாஸ்டிக் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊட்டிக்குச் சுற்றுலா செல்பவர்கள் இன்னும் பிளாஸ்டிக் பைகளைத் தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறார்கள்.

 அந்தப் பிளாஸ்டிக்குகள் வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. ஆனால், இவை அனைத்தும் இன்னும் சில ஆண்டுகளில் மனிதனின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலையை உண்டாக்கும்.

 பிளாஸ்டிக் கழிவுகள், அணு ஆயுதங்களைவிட ஆபத்தானது என அண்மையில் உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

 தமிழகத்தில் 60 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்து மிகுந்த பிளாஸ்டிக் பைகள் ஆகியவை, நாளொன்றுக்கு 90 லட்சம் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.

 உதாரணத்துக்கு, டாஸ்மாக் கடைகளில் தினமும் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் கோப்பைகள் பயன்படுத்தப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன. அப்படி இருக்கையில் கோடைக்காலங்களில் சுற்றுலாவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டும். அப்படிப்பட்டவர்கள் வனப்பகுதிகளில் போடும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஓராண்டுக்கு மேலாகும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 உதாரணத்துக்கு, உதகையில் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 22 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் உள்ளது.

 அதேபோல வனப் பகுதிகளில் வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்புப் பலகை மிகவும் யோசிக்க வைக்கிறது. அதாவது "குரங்குகளுக்குத் தேவையான உணவுகள் வனத்தில் கிடைக்கின்றன, சுற்றுலாவுக்கு வரும் மக்கள் தங்களுடைய தின்பண்டங்களைக் கொடுத்து, குரங்குகளின் உணவுப் பழக்கத்தை மாற்றாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

 குரங்குகளின் உணவுப் பழக்கத்தையும் மனிதர்கள் நாம் மாற்றி அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மாற்றி வருகிறோம். இதுவும் வனத்தின் பாதுகாப்புக்கு ஒரு விதத்திலான அச்சுறுத்தலேயாகும்.

 ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு பதினைந்து லட்ச ரூபாய்க்கும் மேலானது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

 கோவையிலுள்ள சாடிவயல் வனப்பகுதி உலகிலுள்ள அரிய உயிர்ச் சூழல் வளமை மிக்க பகுதியாகக் கருதப்படுகிறது.

 காடுகளை நாம் பெருமளவு அழிப்பதால் பூமி தொடர்ந்து வெப்பமயமாகிறது. மரங்களை வெட்டுவதால் காடுகள் அழிவது ஒருபக்கம் இருந்தாலும், இதுபோன்ற பிளாஸ்டிக் பொருள்களைக் காட்டின் வளம் மிக்க மண்களை மங்க வைக்கின்றது.

 வனப்பாதுகாப்புத் துறையினர் தங்களால் இயன்ற முறையில் காடுகளில் மக்கள் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும், எந்தப் பயனும் இல்லாத நிலையே உள்ளன.

 இயற்கையையும் வனத்தையும் காப்பது ஒரு தனிமனிதனின் கடமையாக உணரப்பட வேண்டும், அந்த நாள் விரைவில் வந்தால்தான் நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் நல்ல காற்றை விட்டுச் செல்ல முடியும்.

 அண்மையில் உதகைக்குச் சென்றபோது தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மாலை நேரம் என்பதால் லேசான இருள் மலை இடுக்குகளின் நடுவே ஊடுருவத் தொடங்கியிருந்தது.

 தொட்டபெட்டா சிகரத்தை ரசித்து விட்டுத் திரும்பும் வழியில் அந்த அடர்வனத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பொருள்கள் வீசப்பட்டிருந்தன. இதனை கவலையுடன் பார்த்து வந்தபோது, அந்தக் காட்டில் நாகரிக இளைஞர் ஒருவர் தனியாக நின்றுகொண்டு பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.

 கவலையுடன் வனப்பாதுகாப்பு குறித்து யோசித்து வந்த எனக்கு, அந்த இளைஞரின் தன்னார்வச் செயல் வனத்தின் ஓங்கி உயர்ந்த மரங்களை விட உயர்வானதாக எண்ணத் தோன்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.