ஆசிரியர்-மாணவர் உறவு மேம்படவேண்டும்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மேல்நிலை வரலாற்றுப் பிரிவு மாணவர்களில் சிலர், வகுப்பறையில் ஆசிரியைகளைக் கேலி செய்ததுடன் அத்துமீறி நடந்து


திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மேல்நிலை வரலாற்றுப் பிரிவு மாணவர்களில் சிலர், வகுப்பறையில் ஆசிரியைகளைக் கேலி செய்ததுடன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் இது தொடர்பாக 4 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.
அது மட்டுமல்லாமல், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து சக மாணவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆசிரியைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் இதனைத் தொடர்ந்து மாணவர்கள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தொடர்ந்தன.
மாணவர்கள் சரியாகப் படிப்பதில்லை. பெற்றோர் சொல்வதைக் கேட்பதில்லை. நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இப்போது அதிகரித்துவருகின்றன. பெண் பிள்ளைகளைக்கூட சற்று கடுமையாக அதட்ட பெற்றோர்கள் உள்ளூர அஞ்சுகின்றனர்.
மாதா, பிதா என்ற வரிசையில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ள ஆசிரியைகளை மாணவர்கள் கேலி செய்கிறார்கள், செல்போனில் படம் எடுக்கிறார்கள் என்றால் அது குறித்து நாம் கவலைப்பட்டாகத்தான் வேண்டும்.
சில ஆண்டுகளாகவே, தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சிறுசிறு மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பல பள்ளிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறுகின்றன.
மாணவர்களின் நலன்கருதி பள்ளி நிர்வாகங்கள் அதைப் பெரிய அளவில் வெளியிடுவதில்லை. சில பிரச்னைகள் காவல்துறை வரை சென்று, பின்னர் மாணவர்களின் எதிர்காலம் கருதி பேச்சுவார்த்தையில் சமரசமாக முடிந்து வருகின்றன.
எங்கே சமரசம் தேவையோ, அங்கே நிச்சயம் சமரசம் வேண்டும். ஆனால், ஆசிரியைகளைக் கேலி செய்யும் அல்லது அவமதிக்கும் மாணவர்கள் விஷயத்தில் சமரசம் கூடாது.
எங்கோ ஒரு சட்டக் கல்லூரியில் வெடித்த மோதல் இந்தியா முழுக்க எதிரொலித்து நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியதைப்போல இதுவும் உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
ஆசிரியர்களை மதிக்காத இத்தகைய மாணவர்களின் போக்குக்கு தொலைக்காட்சிகளும்,திரைப்படங்களும் பெருமளவு துணை போகின்றன. பெரும்பாலான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆசிரியரைக் கேலிப்பொருளாக சித்திரிக்கும் போக்கினால், ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்காத நிலை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களை மட்டுமல்ல பெற்ற தகப்பனையே "டப்பா தலையா', "நாற வாயா' என்றெல்லாம் அழைப்பதைப்போல புதிய கலாசாரத்தை கோடம்பாக்கம் கற்றுத்தருகிறது.
இது எவ்வளவு ஆபத்தானது என்பதை வீட்டிலிருந்து பொழுதுபோக்குக்காக இடைவிடாது சீரியல் பார்க்கும் பெண்களும், ஆசிரியர்களைக் கேலிசெய்து படம் எடுக்கும் திரைப்பட இயக்குநர்களும் உணர வேண்டும்.
திரைப்படமே வாழ்க்கை என்கிற மாயை தமிழர்களின் ரத்தத்தில் சின்னத்திரைகளால் தொடர்ந்து ஊட்டப்படுகிறது. அது விவரம் தெரியாத விடலைகளை உடனே பற்றுகிறது. மனப்பாடப் பகுதி செய்யுள்களை ஒப்பிக்கத் தவறும் மாணவர்கள் சமீபத்திய திரைப்படங்களின் பாடல்களை ஆபாசமான அங்க அசைவுகளோடு ஒன்று விடாமல் வெளிப்படுத்தி பெருமைப்படும் போக்கே காணப்படுகிறது.
கிராமங்களில் நடைபெறும் உள்ளூர் கலைவிழாவானாலும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களானாலும் குத்தாட்டம் என்ற சிறப்புக் கலைநிகழ்ச்சி இடம்பெறாத மேடைகளே இல்லை. இதை மாணவ, மாணவிகள் மட்டுமே மேடையேறி ஆடியது போய், ஆசிரியப் பயிற்சி கல்வி நிலைய மாணவிகளும் ஆடத் தொடங்கிவிட்டார்கள்.
பண்பாடு இல்லாத கல்வி யாருக்கும் பயன்படாது. ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்கு அச்சமும் மரியாதையும் இருப்பது அவசியம். மாணவனை அடிக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, ஒழுங்குக் கட்டுப்பாட்டை வலியுறுத்தக்கூடாது என்கிற சுதந்திரச் சிந்தனைகளைக் குப்பையிலே வீசிவிட்டு ராணுவத்தில் நிலவும் ஒழுங்கும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும். இதற்குக் கட்டுப்படாத மாணவர்களுக்கு படிப்பே தேவையில்லை என்று பெற்றோரை அழைத்து வீட்டுக்கு அனுப்பவேண்டும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால்தான் இந்தக் கல்விக்கும் இதற்காகும் செலவுகளுக்கும் அர்த்தம் இருக்கும்.
பொறுப்பில்லாத சமூக விரோதிகளை வளர்ப்பதற்கு வரிப்பணத்தைக் கொட்டி அழக்கூடாது.
"எல்லோருக்கும் கல்வி' என்பதை, "ஆர்வமும் அக்கறையும் உள்ள எல்லோருக்கும் மட்டுமே கல்வி' என்று திருத்தி அமல்செய்வது மிகமிக அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...