முடிவுக்கு வருமா மீனவர் துயரம்?
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து, மாலை வேளையில் அலை பாயும் கடற்கரை மணலில் காலாற நடந்து, கடல் காற்று வாங்கி கவலைகளை மறக்கும் சராசரி மனிதர்கள் நாம்.


விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து, மாலை வேளையில் அலை பாயும் கடற்கரை மணலில் காலாற நடந்து, கடல் காற்று வாங்கி கவலைகளை மறக்கும் சராசரி மனிதர்கள் நாம்.
ஆனால், அந்த கடலையே கடவுளாகவும், உப்புக் காற்றையே சுவாசமாகவும், கடலில் கிடைக்கும் மீனையே வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கையோ நிம்மதியின்றி துன்பக் கடலில் தத்தளிக்கிறது.
கொட்டும் மழை, கொந்தளிக்கும் கடல், கடும் சூறாவளி என எதையும் சமாளித்து விடுவர் கடலன்னையின் மடியே தவம் எனப் பிறந்து வளர்ந்த மீனவத் தோழர்கள். ஆனால், எந்தத் திசையிலிருந்து துப்பாக்கி குண்டு பாயுமோ?
எப்போது எவன் வந்து தாக்குவானோ என அச்சத்தில் அல்லவா சென்று மீன்பிடித்து வருகிறார்கள் நம் மீனவ நண்பர்கள்.
ஒவ்வொரு நாடும், அதன் கடற்கரையிலிருந்து கடலின் குறிப்பிட்ட மைல் (கடல் மைல்கள்) தூரத்தை தனது நாட்டு எல்லையாக வகுத்துள்ளது. அதற்கு மேலே உள்ளது சர்வதேச சட்டத்துக்குள்பட்ட சர்வதேசக் கடல் பகுதியாகும்.
ஆனால், சில நேரங்களில் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் திசை புரியாமல், எல்லை தெரியாமல் இலங்கை மீனவர்களிடம் சிக்கி அடி, உதை பட்டுத் திரும்புவதும், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாவதும், குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து இலங்கைச் சிறைகளில் வாடி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இவ்வளவு கொடூரமாக தமிழக மீனவர்கள் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? இவர்கள் என்ன தவறு செய்து விட்டார்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க? இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்களை இந்திய அரசு கைது செய்துள்ளதே, இலங்கை கடற்படையினரால் குண்டடிபட்டு இறந்த மீனவர்களின் கொலை தொடர்பாக எத்தனை இலங்கை கடற்படையினர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்?
எல்லை தாண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவமானப்படுத்துவதும் மீன்களைப் பறித்துக் கொண்டு அனுப்புவதுமாக, தமிழக மீனவர்களை இலங்கை அரசு படுத்தும் கொடுமைகளுக்கு அளவே இல்லையா?
தமிழக மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டுகிறார்களா? இலங்கை மீனவர்கள் தமிழக எல்லைக்குள் வருவதே இல்லையா? இலங்கை கடற்படையினர் தீவிரமாக ரோந்து சுற்றி, மாதம் நான்கைந்து முறை கொத்து கொத்தாக நம் மீனவர்களை கைது செய்கின்றனர்.
அப்படியென்றால் இந்திய கடல் படையும், கடலோரக் காவல் படையும் நமது மீனவர்களுக்கு வழிகாட்டவோ, அவர்களைப் பாதுகாக்கவோ ரோந்து பணியில் ஈடுபடுவதே இல்லையா?
தமிழக மீனவனும் இந்தியக் குடிமகன் தானே, அவனுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை தானே?
அதை விடுத்து மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு இலங்கை அரசுக்கும் கடிதம் எழுதுவதும், வேண்டுகோள் விடுப்பதும் மட்டுமே தொடர்கதையாக நடந்து வருகிறது.
மறத் தமிழர்கள் அடி வாங்கி அடி வாங்கி மரத் தமிழர்களாக மழுங்கி வருகிறார்கள்.
தமிழக மீனவர்களை காக்க தமிழக அரசே சிறப்பான திட்டங்களைத் தீட்டி பாதுகாத்தால் என்ன? நாம் ஏன் மத்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் தயவு தாட்சண்யத்தை எதிர்பார்க்க வேண்டும்.
மீனவர்களுக்கு கடல் எல்லைகளை அறிவுறுத்தும் நவீன கருவிகளையும் அபாய காலங்களில் தொடர்பு கொள்ள தொலைத் தொடர்பு கருவிகளையும் வழங்கி, தக்க பாதுகாப்போடு மீன்பிடிக்க அனுப்பினால் இந்த உயிர் ஆபத்துகளையும், அபாயங்களையும் தவிர்க்கலாமே.
இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் அளவிலுள்ள இலங்கையிடம் நாம் கெஞ்சிக் கூத்தாடி நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இலங்கையோ நம் முதுகில் குத்தும் விதமாக சீனாவுடன் உறவு பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், மிக விரைவிலேயே தமிழக மீனவர் பிரச்னை, இந்திய மீனவர் பிரச்னையாக மாறப் போகிறது.
ஏனெனில் சீன நிறுவனம் ஒன்று, இலங்கையுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அந் நிறுவனம் இந்திய, இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்றிருக்கிறது.
இதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவிலான மீன் வளங்களை சீனாவின் பெரிய மீன்பிடிக் கப்பல்கள் அழித்துவிடும் அபாயம் நிகழ உள்ளது.
ஆனால், நாம் எதைப் பற்றியும் அறியாமல் அமைதியாக இருக்கும் வேளையில் கேரள மீனவ அமைப்பினர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கச்சத் தீவு பகுதிகளில் இலங்கை அரசின் அனுமதியோடு சீன அரசு கூடாரங்களை அமைத்து இந்திய கடல் எல்லைகளைக் கண்காணித்து வருவது நாம் அறிந்ததே.
இனியும் மத்திய அரசு அமைதியாக இருந்தால், இப் பிரச்னை தேசிய பிரச்னையாக மாறி, மற்ற நாடுகள் உள்ளே புகுந்து, பெரியண்ணன் மனப்பான்மையுடன் நம்மை நாட்டாண்மை செய்யத் தொடங்கி விடும். இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...