வளர்ச்சி, பணவீக்கம், ரூபாய் மதிப்பு
கருப்பு வெள்ளிக்கிழமை' என்று வர்ணிக்கப்பட்ட ஆகஸ்ட் 16-ஆம் தேதி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத சரிவைச் சந்தித்து, ரூ. 62-ஐயும் தாண்டியது; பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அப்படியே.


கருப்பு வெள்ளிக்கிழமை' என்று வர்ணிக்கப்பட்ட ஆகஸ்ட் 16-ஆம் தேதி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத சரிவைச் சந்தித்து, ரூ. 62-ஐயும் தாண்டியது; பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அப்படியே. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 1,175 உயர்ந்து, 10 கிராமுக்கு ரூ. 30,695 என்று அதிகரித்தது. அன்றைய தினம் மக்கள் மிரண்டு போய் விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சரிசெய்வதற்கு ஏதுவாக, தங்க இறக்குமதியைக் குறைத்திடவும், ரூபாயின் மதிப்பைத் தாங்கிப் பிடிப்பதற்கும், ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பல மாதங்களாக மாய்ந்து மாய்ந்து நடவடிக்கைகளை எடுத்தன. இருந்தும் ரூபாயின் மதிப்பு மேலும் சரியவும் பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படவும் காரணம் என்ன?
மேலாகப் பார்க்கும்போது, அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 3,35,000-லிருந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி 3,20,000 ஆக சரிந்திருப்பதால், அங்கு பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது எனலாம். இதனால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், டாலர்களின் புழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்தது.
இதனால், டாலர் புழக்கம் குறைந்து, அதன் மதிப்பு உயரும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்துள்ளது என்று தோன்றக்கூடும். ஆனால், இந்த திடீர் சரிவுக்கு 14-8-2013-இல் பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளே காரணம் ஆகும்.
ஒன்று, வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய கம்பெனிகள் தமது சொந்த மூலதனத்தைப்போல் நான்கு மடங்கு வரை மூலதனத்தை, முன் அனுமதி இல்லாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்று இதுவரை இருந்தது. இனி சொந்த மூலதனத்துக்கு சமமான தொகையையே முதலீடு செய்யலாம் என மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, எந்த ஒரு குடிமகனும் வெளிநாடுகளுக்கு ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என்று இதுவரை இருந்தது. இதனை 75,000 டாலர் வரை மட்டுமே அனுப்பலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இவை இரண்டும், டாலர்கள் வெளிநாட்டுக்குப் போவதைத் தடுக்கவும், ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளே.
ஆனால், நடைமுறையில், முதலீட்டாளர்களுக்கு இது ஒரு தவறான சமிஞ்கையைக் கொடுத்துவிட்டது. வரும் காலங்களில் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிட கடுமையான கட்டுப்பாடுகள் வருவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்பட்டது. இதனால் அச்சமடைந்தனர் முதலீட்டாளர்கள்.
இந்த அச்ச உணர்வின் உடனடி வெளிப்பாடுதான், பங்குச் சந்தை வீழ்ச்சி; ரூபாய் மதிப்பு சரிவு; தங்க விலை அதிகரிப்பு ஆகியவை.
அண்மையில் ரிசர்வ் வங்கி "மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெசிலிடி' (சிறப்பு குறுகியகால கடன்)க்கு வட்டியை எட்டேகால் சதவிகிதத்திலிருந்து பத்தரை சதவிகிதமாக உயர்த்தியது, மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை பத்து சதவிகிதமாக உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளால் ஏற்படாத எதிர்மறையான விளைவு, வெளிநாடுகளுக்கு மூலதனம் டாலராக செல்வதைக் குறைத்தபோது ஏற்பட்டு விட்டது.
இதை, காலம் கடந்து புரிந்துகொண்ட மத்திய அரசு மறுநாளே, ஈவுத்தொகை (டிவிடெண்டு), லாபம், ராயல்டி உள்ளிட்ட பணத்தை டாலராக வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எவ்விதத் தடையும் இருக்காது என்று கூறியது. பங்குச்சந்தை மற்றும் பணச்சந்தைக்கு ஏற்பட்ட அச்சமும், அவநம்பிக்கையும் இதனால் குறையுமா என்பது கேள்விக்குறியே.
சில தினங்களுக்கு இந்த நிலையற்ற தன்மை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. இந்நிலையில், ரூபாய் மதிப்பைத் தாங்கிப் பிடிப்பதற்கு ஊகபேர வணிகர்களை அரசு தொடர்ந்து கவனித்து கட்டுப்படுத்துவது அவசியம்.
அன்னியச் செலாவணி கையிருப்பு 277 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதால் அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனினும் அவசியம் ஏற்படும்போது, சந்தையில் டாலர்களை பாய்ச்சி டாலர் மதிப்பைக் குறைத்து ரூபாயின் மதிப்பை உயர்த்திட வேண்டும்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை பல துறைகளில் உயர்த்தியிருந்தாலும், அதற்கான பலன் நம்மை வந்தடைய கால அவகாசம் தேவை. எனவே, நிலுவையில் உள்ள அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களை உடனுக்குடன் பரிசீலித்து, அரசின் முடிவுகளை வெளியிட வேண்டும்.
இறக்குமதியைக் குறைப்பதற்கு, தங்க இறக்குமதி குறைவதை மட்டும் நம்பி இராமல், "ஸ்மார்ட் போன்' போன்ற அத்தியாவசியம் இல்லாத, ஆடம்பர, நவீன மின்னணு சாதனங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
அதேநேரம், 2009-இல் செய்ததுபோல் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சிறப்பு ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். இறக்குமதியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களுக்கு கூடுதல் சலுகைகளைக் கொடுப்பது நல்ல பலனைத் தரும். நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சிறு தொழில்களின் பங்கு 40 சதவிகிதம் என்பதை மறக்கலாகாது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதாரம் முழுமையாக மீட்சி அடையாத நிலையில், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் கஸகிஸ்தான் போன்ற வளர்ச்சி அடைந்து வரும் சிறு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவாக்கம் செய்வது உரிய பலனை அளிக்கும்.
நல்ல வேளையாக ஜூலை மாதம் ஏற்றுமதி 11 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இது மேலும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்திருப்பது மட்டுமல்லாது, சிறப்புச் சலுகைகளையும் ஊக்குவிப்புத் திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.
பொருளாதார ரீதியில் நாடு ஒரு சிக்கலான நிலையில் உள்ள இத்தருணத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் தலைமையில் மாற்றம் ஏற்பட உள்ளது. தற்போதைய கவர்னர் டி. சுப்பாராவ் விரைவில் ஓய்வு பெறுகிறார். ரகுராம் ராஜன் கவர்னராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
ரகுராம் ராஜன் உலக அளவில் பிரபலமான பொருளாதார மேதை. 2008-ஆம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதை 2005-இல் துல்லியமாகவும், துணிவுடனும் தெரிவித்த பொருளாதார வித்தகர்.
தற்போதைய கவர்னர் டி. சுப்பாராவும் முந்தைய கவர்னர் ஒய். வேணுகோபால் ரெட்டியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் ஆனார்கள்.
2008-ஆம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய வங்கிகள் அதிக பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப்பட்டதற்கு அந்த காலகட்டத்தில் ஒய். வேணுகோபால் ரெட்டியின் தலைமையில் இயங்கிய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களே காரணம் ஆகும்.
குறிப்பாக, சர்வதேச அளவிலான மூலதனக் கணக்குகளை முற்றிலுமாக மாற்றம் செய்வதை ஒரே மூச்சில் அறிமுகம் செய்யாமல், படிப்படியாகவும், போதிய பாதுகாப்பு கவசங்களை அமைத்துக் கொண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற இவரது உறுதியான கொள்கை இந்தியாவுக்கு 2008-இல் கைகொடுத்தது. சுப்பாராவ் காலத்திலும் இக் கொள்கை நீடித்தது.
சுப்பாராவ் காலத்தில் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் ஓரிரு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. கடன் மற்றும் நிதி கொள்கையின் முக்கிய நோக்கம் இரண்டு.
ஒன்று வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்கச் செய்வது, இரண்டு, பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருவது.
சுப்பாராவ் பல நேரங்களில், வளர்ச்சியைவிட, பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளித்தார்.
பலமுறை மத்திய நிதி அமைச்சகத்தின் சூசகமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், "ரெப்பே ரேட்டை' (ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை) தொடர்ந்து 13 முறை உயர்த்தினார்.
இதன் மூலம் பணவீக்கம் குறைந்தபாடில்லை என்றாலும் நிலையான வளர்ச்சிக்கு, பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை சுப்பாராவ் உறுதியாக நம்பினார். ரூபாய் மதிப்பை உயர்த்துவதும் நிதி மற்றும் கடன் கொள்கையில் சேர்ந்து கொண்டது.
இந்நிலையில், 16-8-2013-இல், ரிசர்வ் வங்கி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையில் புதிய பார்வை தேவை' என்று வலியுறுத்தி உள்ளார்.
அதாவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பதற்கும் ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கும், ரிசர்வ் வங்கி கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டபடி ரகுராம் ராஜன் நிதி மற்றும் கடன் கொள்கையை புதிய பார்வையுடன் அணுகுவார் என்று நம்பலாம்.
வளர்ச்சி, பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஆகிய மூன்று முக்கியமான இலக்குகளையும் எட்டுவதில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் வெற்றிபெற வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்.
கட்டுரையாளர்: பணி நிறைவுபெற்ற வங்கி அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...