வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரூபாயின் மதிப்பு உயருமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த நான்கே மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு அதாவது 12 சதவீதம் - சரிந்துள்ளது. ஜூலை மாதம் 8-ஆம் தேதி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.21 என்று வீழ்ச்சி அடைந்தது.

News image
Updated On :26 ஜூலை 2013, 9:27 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த நான்கே மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு அதாவது 12 சதவீதம் - சரிந்துள்ளது. ஜூலை மாதம் 8-ஆம் தேதி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61.21 என்று வீழ்ச்சி அடைந்தது.

÷சாதாரணமாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்தால் ரிசர்வ் வங்கி தலையிட்டு, பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக டாலர்களை சந்தையில் விற்கச் செய்வது வாடிக்கை. இதனால் சந்தையில் டாலர்கள் தாராளமாகக் கிடைக்கும் என்பதால், டாலரின் மதிப்பு குறையும்; ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்.

÷கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி மேற்கூறிய முறையைக் கையாண்டது. இதன் பயனாக, அவ்வப்போது சில தினங்களுக்கு மட்டும் ரூபாயின் மதிப்பு உயர்வதும், பிறகு மீண்டும் சரிவதுமாக இருந்து வந்தது.

÷டாலரின் மதிப்பு திடீரென உயருவதற்கு என்னதான் காரணம்? அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், டாலரை அதிக அளவில் புழக்கத்தில் விட்டிருந்ததை, படிப்படியாக குறைத்துக் கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு ஒரு திடீர் திருப்பத்தை உருவாக்கியது. டாலர் புழக்கம் குறையுமானால் அதன் மதிப்பு உயரும் என்ற எதிர்பார்ப்பில், உலகின் பெரும்பாலான நாணயங்களின் மதிப்பு டாலருக்கு நிகராகச் சரிந்தது. இந்திய ரூபாய் இதற்கு விதிவிலக்கு அல்ல. இது ஒரு காரணம்.

÷அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் மேற்கூறிய அறிவிப்புக்கு இந்திய பணச்சந்தை இப்படி தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாம். அதே நேரம், உலகமயமாக்கல் சூழலில், சர்வதேசக் காரணிகள் இந்தியப் பொருளாதாரத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

÷இரண்டாவதாக, அமெரிக்கப் பொருளாதாரம், எதிர்பார்த்ததைவிட விரைந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனால், இந்தியா போன்ற நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் அமெரிக்காவுக்கு மடை திருப்பி விடப்படுகிறது. இதனால், இந்தியாவிலிருந்து டாலர்கள் கணிசமாக வெளியேறின. இந்தியாவுக்குப் புதிய முதலீடுகளின் வருகையும் குறைந்துள்ளது. இதனால் டாலர்களின் வரத்து குறைந்தது.

÷இந்திய ஏற்றுமதி, சர்வதேச மந்தநிலை காரணமாக குறைந்துள்ளது. அதேநேரம், கச்சா எண்ணெய் இறக்குமதியும் தங்கத்தின் இறக்குமதியும் எட்டுக்கால் பாய்ச்சலில் அதிகரித்தது. இதனால் கணிசமான அளவு டாலர்கள் வெளியேறின.

÷இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஊக பேர வணிகர்கள் அன்னியச் செலாவணிச் சந்தையில் புகுந்து விளையாடியதுதான் மிக முக்கியமான காரணம். கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி பணச் சந்தையில் கணிசமான அளவு டாலர்களைப் பாய்ச்சிய பிறகும், நிலைமை சீரடையாமல் போனதற்கு ஊக பேர வணிகமே தலையாய காரணம் என்பது தெளிவு.

÷இதன் எதிரொலியாகத்தான், ரிசர்வ் வங்கி வேறு வழியில்லாமல், ஜூலை 15-ஆம் தேதி சில "அசாதாரணமான' நடவடிக்கைகளை அறிவித்தது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய "சிறப்பு குறுகிய கால கடன் தொகை'யை (மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெசிலிடி) ரூ.75,000 கோடியாகக் குறைத்தது. வங்கிகளின் டெபாசிட் தொகையில் ஒரு சதவீதம்தான் இந்த ரூ.75,000 கோடி என்பது. மேற்கூறிய கடனுக்கு இதுவே உச்சவரம்பு ஆகும்.

÷இந்த சிறப்பு குறுகிய கால கடனுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது மட்டும் அல்லாமல், அந்த கடன் வசதிக்கான வட்டியும் 8.25 சதவீதத்திலிருந்து 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக வங்கிக் கடன் குறைந்து, பணப் புழக்கம் குறைய வேண்டும் என்பதும், ஊக பேர வணிகர்களுக்கு நிதி ஆதாரம் கிடைப்பது குறைந்திட வேண்டும் என்பதுமே ரிசர்வ் வங்கியின் நோக்கம்.

மூன்றாவதாக, 12,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு கடன் பத்திரங்களை வெளியிடப் போவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அரசு பத்திரங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவர்ச்சி உண்டு. இதனால் முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வார்கள்; இதனால் சந்தையில் உலவுகிற உபரிப் பணம் உறிஞ்சப்பட்டு, ஊக பேர வணிகர்களின் கைக்கு போகக்கூடிய பணம் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

÷ஆனால், "நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று' என ஆகிவிட்டது. இத்தனை முக்கியமான நடவடிக்கைகளுக்குப் பிறகும், ரூபாயின் மதிப்பு சிறிதளவுதான் உயர்ந்தது. அதாவது ரூ.60/-ஐ மிகாமல் பார்த்துக் கொள்ள முடிந்ததே தவிர, ரூபாய் மதிப்பை எதிர்பார்த்த அளவு உயர்த்த இயலவில்லை.

÷மாறாக, மேற்கூறிய நடவடிக்கைகளால் ஆரோக்கியமான பொருளாதாரத் தேவைகளுக்கும்கூட பணம் கிடைக்காமல் பணப்புழக்கம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.12,000 கோடி அளவுக்கான, உத்தேச அரசு கடன் பத்திரங்கள் வெளியிடுவதை ரிசர்வ் வங்கி தள்ளிப் போட்டுள்ளது.

÷ஆக, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் விரும்பிய பலனை அளிக்காமல் போனதால் ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி நடப்பது மிக, மிக அரிதான விஷயம்.

÷இந்நிலையில், ரிசர்வ் வங்கி சற்றும் சளைக்காமல், 23.7.13-இல் மேலும் சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஒன்று, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதமாகிய (சி.ஆர்.ஆர்.) 7.25 சதவீதத் தொகையில் 99 சதவீதம் அளவு நாள்தோறும் வைத்திருக்க வேண்டும் என்பதே அது. முன்னதாக 70 சதவீத அளவுக்கு நாள்தோறும் வைத்திருந்தால்போதும் என்று தளர்த்தப்பட்டிருந்தது. மொத்தமாகக் கணக்கிடும்போது 7.25 சதவீதம் ரொக்கக் கையிருப்பு இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருந்தது.

÷அதேபோல், சிறப்பு குறுகிய காலக் கடன் வசதி (மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெசிலிடி) மீது புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் ஒட்டுமொத்த வைப்பு நிதிகளில் ஒரு சதவீதம் அளவுக்குக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதிமுறைக்கு பதில் அரை சதவீதம் அளவுக்கு மட்டுமே வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகியகாலக் கடன் பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது.

÷இவை இரண்டும், ஊக பேர வணிகர்களுக்கு கடன் கிடைப்பது குறைய வேண்டும் என்பதற்காகவும், அதனால் ரூபாயின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகவும்தான் என்று சொல்லத் தேவையில்லை.

÷நடப்புகணக்கு பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு, தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்க நகைகள் மீது அதன் மதிப்பில் 60 சதவீதத்துக்கு மேல் கடன் கொடுக்கக் கூடாது என்று சென்ற ஆண்டு அறிவித்தது முதல், இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்களாகவோ, வேறுவிதமாகவோ ஏற்றுமதி செய்திட வேண்டும் என்கிற சமீபத்திய ஆணைவரை அடங்கும். இவை உரிய பலனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

÷தங்க இறக்குமதி குறைந்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ரூபாய் மதிப்பு உயருவதற்கு வழிவகுக்கும். ஆனால், அதற்காக, மக்களைப் பார்த்து, தங்கத்தை இறக்குமதி செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்வது பெரிய அளவில் பயனளிக்கும் என்று தோன்றவில்லை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு அத்தியாவசியமான அளவு தங்கத்தை வாங்குவது தவிர, முதலீடு நோக்கில் தங்கம் வாங்குவதைச் சில மாதங்களுக்காகவது தள்ளிப் போடலாம் என்பது நியாயமான யோசனையாக இருக்கும். காரணம், தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறி, இறங்கிக் கொண்டு இருப்பதால், விலை தற்போதைய நிலையில் ஸ்திரப்படுமா அல்லது மேலும் குறையுமா என்ற உறுதியற்ற நிலை நீடிக்கிறது. ஆகவே, தங்கத்தில் தற்போது முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம் என்கிற விழிப்புணர்வை முதலீட்டாளர்களிடம் உருவாக்குவது நல்ல பலனை அளிக்கும்.

÷இந்திய "கார்ப்போரேட்' நிறுவனங்கள், தங்களுடைய நிதித் தேவைகளுக்கு வெளிநாடுகளில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதும், பங்குச் சந்தையில் அன்னிய நிறுவன முதலீடுகளை வரவேற்பதிலும் மட்டுமே அரசு கவனம் செலுத்துவது குறுகிய கால அடிப்படையில் உதவுமே தவிர, நீண்டகால அடிப்படையில் உதவாது.

÷உடனடியாகவும், சற்று நீடித்த காலத்திற்கும் ஏற்ற வகையில், ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கு, மத்திய அரசின் கையில் அஸ்திரம் ஒன்று உள்ளது. அதுதான், வெளிநாடுவாழ் இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை டாலரில் இந்தியாவுக்குக் கொண்டு வரும் வகையில், "சாவரின்' அரசு பாண்டுகளை வெளியிடுவது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு, வெற்றிபெற்ற திட்டம் இது. 1991-இல் ""இந்தியா டெவலப்மெண்ட் பாண்டு'', 1998-இல் ""ரிசர்ஜண்ட் (மறுமலர்ச்சி) இந்தியா பாண்டு'' மற்றும் 2001-இல் ""இந்தியா மில்லினம் டெபாசிட்'' ஆகிய மூன்று திட்டங்கள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் சில குறைபாடுகள் இருந்தன என்றாலும், அவற்றில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் புதிய முதலீட்டு திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்களை மனதில் கொண்டு வடிவமைத்து வெளியிடலாம். அத்தகைய பாண்டுகள் மூலம் 2,000 கோடி டாலர்களைத் திரட்ட முடியும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளும் கிடைக்கும்; பெரிய அளவில் டாலர் வரத்தால், டாலர் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு உயருவதும் சாத்தியம் ஆகும் என்று நம்பலாம்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.