ஒவ்வொரு நாட்டின் மக்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கர்கள் உடனே நட்புடன் சேர்ந்து மகிழ்வார்கள், ஆங்கிலேயர்கள் எளிதில் தங்கள் உணர்ச்சிகளைக் காட்ட மாட்டார்கள். ஜெர்மானியர் எதிலும் ஒரு கட்டுப்பாடு, பிரெஞ்சு நாட்டினருக்குக் கலையுணர்வு, இத்தாலியர் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். தெரியாது... நம் மக்களுக்கு யோசித்துப் பார்த்தேன் ம்ம்ம் இல்லை... நமக்கு... ம்ம் பார்ப்போம்.
பிப்ரவரி மாதம் ஹாலந்து நாட்டில் "திஹேக்' என்னும் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. பாலியல் வன்முறைபற்றி பல நாட்டின் நீதிமன்றங்களும், சர்வதேச நீதிமன்றங்களும் எப்படி நோக்குகின்றன என்று பல கோணங்களில் ஆராயும் ஒரு கலந்துரையாடல். அந்த ஊரில் சுற்றிப்பார்க்க எங்கு போகலாம் என்று யோசித்துப் பார்த்தபொழுது - உலகிலேயே மிகப்பெரிய - பூக்களை ஏலம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
பிரமிக்க வைக்கும் இடம். அடுக்கடுக்காய் வண்ண வண்ணப் பூக்கள். நம்மை ஓர் உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கிருந்து பார்க்கலாம். கண்ணாடி ஜன்னல்கள் பொருந்திய இரு அறைகள் - அங்குதான் ஏலம் நடக்கும். வண்டி வண்டியாய் பூக்கள் சுழன்று வரும். அதைப் பார்த்து ஏலம் எடுப்பவர்கள், தாங்கள் ஏலம் எடுக்கும் தொகையைக் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வார்கள்; அதுவல்ல பிரமிப்பு. அங்கு மேலேயிருந்து அடுக்கடுக்காய் பூக்கள் பார்த்தோமே, அந்த இடம், பெரிய விளையாட்டு மைதானம்போல பரப்பளவு.
"பேட்டரி'யால் இயங்கும் வண்டிகளில் இங்கும் அங்கும் ஓட்டிச்சென்று பூக்களை எடுத்து நகர்த்தி அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். அரை மணி நேரம் பார்த்திருப்போம். நாங்கள் ரொம்ப உயரத்தில் - அவர்களுக்குத் தெரியாது நாங்கள் இருப்பது. 15 - 20 வண்டிகள் இருந்திருக்கும், ஓட்டுபவர்களும் அடுக்குபவர்களுமாக மொத்தம் இருநூறு பேர்கள் இருந்திருப்பார்கள்.
ஒருவரும் நின்று அரட்டையடிக்கவில்லை. டீ, காபி குடிக்கப் போகவில்லை. கருமமே கண்ணாயிருந்தார்கள். அட! ஒரு செல்போனில்கூட ஒருவரும் பேசவில்லை. அதிசயமாக இல்லை? இப்படி ஓயாமல் ஒழியாமல் அவரவர்கள் தமக்கு இட்ட வேலையைச் செய்தோமானால் நம் நாடு என்றோ வல்லரசாகியிருக்கும்.
அது பணக்கார நாடு, குளுகுளு அவர்களுக்கென்ன? நம் கதை வேறு என்கிறீர்களா? அடுத்து பிரேசில் நாட்டுக்குச் செல்வோம். பிரேசில், இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகள். அங்கு மனித உரிமைகள் பற்றிய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு முடிந்தபின், ஒரு நாள் நான் மட்டும் தனியாக இருந்தேன். என்னுடன் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ரையோடி ஜனீரோ நகரத்தைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
பிரேஸிலியா நகரத்தின் அருகே ஒரு நீர்வீழ்ச்சி இருப்பதாகச் சொன்னார்கள். சரி போவோம் என்று ஒரு வாடகை வண்டியெடுத்துச் சென்றேன். ஓட்டுநர் தன் நாட்டைப் பற்றியும் அதன் பெருமையைப் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டு வந்தார். அங்கு சென்றதும், என்னை நீர்வீழ்ச்சிக்கு அருகே அழைத்துச்சென்று, தான் வண்டிகளை நிறுத்துமிடத்தில் இருப்பதாகவும் நான் நிதானமாக வரலாமென்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். நீர்வீழ்ச்சி, நான், இதுதான் சொர்க்கமோ என்று தோன்றியது.
இந்த அழகுதான் இறைவனோ - தன்னை மறந்து தன் நாமம் கெட்டு... இரண்டு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. பிறகு மெதுவாக நடந்து வந்தேன். கையில் எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டேன். கை கழுவ இடம் இருக்குமா... அதோ "டாய்லெட்' என்று எழுதியுள்ளதே. போனால்... கூட்டமே இல்லாத அந்த இடத்தில் சுத்தமான அறை, வாளியில் சுத்தமான நீர். யார் இதைக் கவனித்துக் கொள்கிறார்கள்? வனதேவதைகளோ? எப்படி இப்படி ஒரு சுத்தம்? நம் நாட்டில் சுற்றுலா இடங்களில் இந்த வசதி இருக்காது. இருந்தால் ஓர் இற்றுப்போன கதவு பொருந்திய அறை இருக்கும். எங்கே அந்த அறை உள்ளது என்று தேட வேண்டும். ""கண்களே நீங்கள் தேடி சிரமப்படாதீர்கள்'' என்று "மூக்கு' உதவிக்கு வரும். ஏன் நமக்கு இந்த வசதியும் சுத்தமும் தேவை என்று தோன்றவில்லை? இல்லை கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கு வேண்டுமானாலும் நாம் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணமா? வெட்கம், கூச்சம் வேண்டாமா ஐயா, சுத்தம் சுகாதாரம்? ஒன்றும் தேவை இல்லை.
நம் தாய்நாடு பொறுமை மிக்கவள் பொறுத்துக்கொள்வாள். நாய்க்கும் காக்கைக்கும் இருக்கும் உரிமை மனிதனுக்கும் இருக்கட்டுமே என்கிறோமா? வேறு எந்த நாட்டிலும் இந்த அநாகரிகம் நடப்பதாகத் தெரியவில்லை. இப்பொழுது அரசு விளம்பரம் வேறு. மணப்பெண்
சொல்கிறாளாம் - வீட்டில் "இந்த அறை' இல்லாவிடில் திருமணம் நடக்காது என்று! வருத்தமாக இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். கி. ராஜநாராயணன் எழுதியது என்று நினைவு. "கரிசல் மண்' என்று. அதில் ஒரு "பொக்கை வாய் கிழவர்' கிராமத்திற்கு வருவார். வந்து இந்த விஷயத்தில் எப்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார். அவரைத்தான் நாம் "அக்டோபர் இரண்டு ' என்ற தேதிக்குள் அடைத்து விட்டோமே! அவர் சொன்னதையா நினைவில்கொள்ளப் போகிறோம்?
அடுத்து கொரியாவில் சியோல் நகரத்திற்கு வருவோம். பெண் நீதிபதிகள் மாநாடு. குடும்பத் தலைவியின் பணிக்குப் பொருளாதார மதிப்பு (ஆம் - அதற்கு மதிப்பு உண்டு) என்பதுபற்றிப் பேசினேன். மாலை ஹோட்டல் வெளியே தெருவோரமாக நடந்து போனேன். சாலை ஓரத்தில் அமர ஓர் இடம் கிடைத்தது. அங்கே உட்கார்ந்து போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே ஒரு சுரங்க நடைபாதை, கீழே செல்லும் படிகள், இருபக்கம் பளபளவென்று உலோகத்தாலான கைப்பிடிகள், ஒரு பெண் தொழிலாளர். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அரை மணிக்கொரு முறை துணியை வைத்து கைப்பிடிகளைத் துடைத்து பாலிஷ் போட்டார். இதற்காகவே இரண்டு மணி நேரம் அங்கு உட்கார்ந்தேன். ஹோட்டலில் சாப்பாடு கிடையாது என்றாலும் பரவாயில்லை என்று. இப்படியொரு கர்மயோகியைக் காண்பது அபூர்வம்!
எந்த மேலதிகாரியும் அவரைக் கண்காணிக்கவில்லை. அவரே அவருடைய மனச்சாட்சிக்காக, ஆத்ம திருப்திக்காக தன் பணியைச் செய்தார். என் வேலையை என்னைவிடச் சிறப்பாக யாரும் செய்யக்கூடாது. இது எனக்காக நான் செய்யும் செயல், என் பணியிடத்திற்கு நான் செலுத்தும் மரியாதை, என் நாட்டிற்கு நான் செய்யும் அர்ப்பணம். மாறாக, இந்த வேலையில் எனக்கு என்ன சலுகைகள் கிடைக்கும், எத்தனை விதமான விடுப்புகள் எடுக்கலாம், அந்த விடுப்புகள்போக, மிச்சம் மீதி உள்ள நாட்களில் வேலை பார்த்தால் போதும் என்பது சரியல்ல. நியாயம், தர்மம் என்று பார்க்க வேண்டாம். வாங்குகிறோமே சம்பளம் - அதற்குண்டான உழைப்பைக் கொடுக்க வேண்டாமா? என் வேலையின் தரத்தில் ஏனோதானோவிற்கு இடம் இல்லை. நம் சம்பளத்தில் அநியாயமாக ஒரு ரூபாய் பிடித்தம் செய்தாலும் கேட்கும் உரிமை உள்ளது. உரிமையின் மறுபக்கம் கடமை. அப்பொழுது நம் உழைப்பில் மட்டும் எப்படி ஒரு குந்துமணியளவிற்குக்கூட மாற்றுக் குறையலாம்?
நம் அரசியலமைப்புச் சாசனத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற அத்தியாயம் 1977-இல் சேர்க்கப்பட்டது. கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன். அதில் ஒரு ஷரத்து நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. தனியாகவோ கூட்டாகவோ நாம் உழைக்கும் உழைப்பு, நம் நாட்டிற்கு உயர்வையும் நம் நாட்டின் சாதனையையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்கிறது.
இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒவ்வொருவரும் என்கிறது. அந்த கொரியா நாட்டுப் பெண்மணி அடிப்படைக் கடமையுணர்வு எப்படி இருக்க வேண்டுமென்று கைப்பிடியைத் துடைத்தே காண்பித்தார்.
கடைசியாக, நம் அண்டை நாடு பாகிஸ்தானுக்கு வருவோம். அங்கு நான் சென்றபொழுது நான் மட்டும்தான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று முகத்தில் எழுதி ஒட்டிக்கொண்டு சென்றேன். அகப்பட்டாள் ஏமாளி என்று அவர்கள் நினைக்கவில்லை. குட்டிக்கடையிலிருந்து பெரிய அங்காடிவரை எனக்கு வரவேற்பு. ""ஆப் ஹமாரா மெஹமான் ஹை'' நீங்கள் எங்கள் விருந்தினர் (அதிதி)''. எங்களுடைய மதிப்பிற்குரியவர். எங்களுக்கு லாபமே வேண்டாம். குறைந்த விலை கொடுங்கள் என்றார்கள், நம் நாட்டைப் பார்க்க வேண்டும் என்றார்கள். தெருவில் நான் செல்லும்பொழுது ""மாஷா அல்லாஹ்'' என்று திருஷ்டி கழிப்பதுபோல செய்வார்கள். நான் யார்? என்னால் அவர்களுக்கு ஒரு பயனுமில்லை. பின் ஏன் இந்த அன்புப் பிரவாகம்? ஏனென்றால் நான் அவர்கள் மெஹ்மான். மொழி தெரியாதவளை மொட்டையடிக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை.
இவர்கள் இப்படியென்றால், அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் ஒருநாள் மாலை, "எங்கு போகப் போகிறீர்கள்?' என்று கேட்டார். "கடற்கரைக்கு' என்றோம். தான் கொண்டு விடுவதாகச் சொன்னார். பெரிய வண்டி. சீருடையணிந்த ஓட்டுநர் எல்லாம் கிடையாது. அவரே ஓட்டிச்சென்று எங்களைக் கொண்டுவிட்டார். ஆம் - உச்ச நீதிமன்ற நீதிபதி.
பிறகு எவ்வளவு நேரம் கழித்து வரவேண்டும் என்று கேட்டார். ""வேண்டாம் ஸார். இதற்கே மூர்ச்சை போடாமல் எப்படி இருப்பது என்று முழிக்கிறோம், இதற்கு மேல் தாங்காது'' என்று மறுத்துவிட்டோம். இவ்வளவும் ஏன்? நம் நாட்டிற்கு வந்தவர் என்ற எண்ணம் ஏழையிலிருந்து உயர் பதவியிலிருப்பவர் வரை.
ஒரு சுற்று வந்துவிட்டோம். முதலில் கேட்ட கேள்விக்கு இதோ பதில். நம் நாட்டின் சிறப்பு குணம். ""எங்கள் வழி தனி வழி''; ஆனால், மாறலாம் இல்லையா'' ஒவ்வொரு நாட்டின் சிறப்புக் குணத்தையும் எடுத்துக் கொள்ளலாமே! தேனீ போல... நமக்காக... நம் தாய்நாட்டிற்காக... ப்ளீஸ்!
கட்டுரையாளர்:
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

