நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்

தனது சொந்தத் தொகுதியான திருநெல்வேலியில் இந்த முறை போட்டியிடாமல் சாத்தூரில் களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரன் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

News image

முதல்வர் ஸ்டாலின் | பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 10:54 pm

மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான காமராஜரை இரு முறை வெற்றி பெறச் செய்து முதல்வராக்கிய சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் களம் காண்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், தனது சொந்தத் தொகுதியான திருநெல்வேலியில் இந்த முறை போட்டியிடாமல் சாத்தூரில் களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரன் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் தென் திசையில் அமைந்துள்ளது சாத்தூர் பேரவைத் தொகுதி. முந்தைய காலத்தில் மை பேனா முனை தயாரிப்பில் நாட்டிலேயே முதன்மை பெற்றிருந்த பகுதி சாத்தூர். இதேபோல, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதி. காரச்சேவுக்கு சிறப்புப் பெற்ற சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்பு தொழில்கள் முதன்மை பெற்றுள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டங்களையும், சாத்தூர் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 70 ஊராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியது சாத்தூர் தொகுதி. இங்கு தேவர், நாயக்கர் சமுதாயத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இதற்கடுத்த நிலையில் பட்டியலினத்தவரும், இதர சமுதாயத்தினர் பரவலாகவும் வாழ்கின்றனர்.

பிரச்னைகள்: சாத்தூர் தொகுதியில் வைப்பாறு பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்; இந்த ஆற்றில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாத்தூர், வெம்பக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி வசதி ஏற்படுத்த வேண்டும்; வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; சாத்தூர் புதிய பே ருந்து நிலையம் கட்டும் பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை நீண்டகாலக் கோரிக்கைகள்.

அதிக முறை வென்ற அதிமுக: கடந்த 1952 முதல் 2021 வரை நடைபெற்ற 15 பொதுத் தேர்தல்கள், ஓர் இடைத் தேர்தல் உள்பட 16 தேர்தல்களில் அதிக 6 முறை வெற்றி பெற்று அதிமுக முறை வென்ற கட்சியாக உள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் இரு முறையும் பார்வர்டு பிளாக், சுதந்திரா கட்சி, சுயேச்சை தலா ஒரு முறையும் இங்கு வென்றன.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்தத் தொகுதியில் அதிக முறை வென்றவராக உள்ளார். 3 முறை அதிமுக சார்பிலும், இரு முறை திமுக சார்பிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் களம் கண்டு அவர் வெற்றி பெற்றார்.

கடந்த 2011, 2016 பேரவைத் தேர்தல்கள், 2019 இடைத்தேர்தல் என அதிமுக "ஹாட்ரிக்' வெற்றி பெற்றிருந்தாலும், 2021}இல் இந்தத் தொகுதியை திமுக கூட்டணியில் மதிமுக கைப்பற்றியது.

களம் காணும் வேட்பாளர்கள்: சாத்தூர் பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார். திமுக சார்பில் கடற்கரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தராஜா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அஜீத், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சசிகலா கட்சி) சார்பில் இசக்கிராஜா, புதிய தமிழகம் கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தீவிர களப் பணியில் நயினார் நாகேந்திரன்: தமிழக அரசியலில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்ட அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் நயினார் நாகேந்திரன். 1989}ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த இவர், திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நகரச் செயலர், இளைஞர் அணிச் செயலர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக பேரவைச் செயலர், தேர்தல் பிரிவு இணைச் செயலர் என அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

திருநெல்வேலி தொகுதியில் 2001}ஆம் ஆண்டில் முதல் முறையாகக் களம் கண்ட நயினார் நாகேந்திரன் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மின் துறை, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்தத் தொகுதியில் தொடர்ந்து களம் கண்ட நயினார் நாகேந்திரன் 2011, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2006, 2016 தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017}ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திருநெல்வேலி தொகுதியில் தொடர்ந்து 5 முறை களம் கண்டு, 3 முறை வென்ற நயினார் நாகேந்திரன் முதல் முறையாக தொகுதி மாறி, தற்போது சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சாத்தூர் தொகுதியில் 2006, 2016 பேரவைத் தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. தற்போது, முதல் முறையாக வலுவான கூட்டணியுடன் இந்தத் தொகுதியில் பாஜக களம் காண்கிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தத் தொகுதியில் களம் காண்பது இதுவே முதல் முறை என்ற வகையில் தொகுதிக்கு புதியவர். இந்தத் தொகுதியில் பாஜகவுக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி இருப்பதாக இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக, அமமுகவின் வாக்கு வங்கி நயினார் நாகேந்திரனுக்கு மிகப் பெரிய பலம்.

அதேநேரத்தில், இவரது தீவிர தேர்தல் பணியும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது. பெரு நிறுவனங்களின் நிர்வாகவியல் கட்டமைப்புக்கு இணையான கட்டமைப்பை ஏற்படுத்தி பாஜகவினர் மேற்கொள்ளும் தேர்தல் பணி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

நயினார் நாகேந்திரன் சார்ந்த சமுதாய வாக்குகள் அவருக்குக் கூடுதல் பலம். எனினும், தொகுதி மாறி அவர் போட்டியிடுவதால் திமுகவின் சவாலை எதிர்கொண்டு சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரண்டாம் முறை களம் காணும் திமுக வேட்பாளர்: இந்தத் தொகுதியில் கடந்த 2011 பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த, அந்தக் கட்சியின் சாத்தூர் மேற்கு ஒன்றியச் செயலர் கடற்கரை ராஜ் தற்போது இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள், திமுகவின் உதயசூரியன் சின்னம் ஆகியவை இவருக்கு சாதகம். இவர் சார்ந்த சமுதாய வாக்குகள் கூடுதல் பலம்.

புதிதாகக் களம் காணும் அஇபுமமுக: பசும்பொன் மக்கள் தேசம் கட்சித் தலைவர் இசக்கிராஜா இந்தத் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார். இவர், சாத்தூர் தொகுதி மக்களிடம் ஏற்கெனவே அறிமுகமானவர். எனினும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்தவர். சாத்தூர் தொகுதி தேர்தல் களத்துக்கு புதியவர். இவரது தீவிர களப் பணியும், இவர் சார்ந்த சமுதாய வாக்குகளும் இவருக்கு சாதகம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தராஜா தொகுதியின் மண்ணின் மைந்தர். இருப்பினும், மிகப் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர். தேர்தலுக்குப் புதியவர். சீமானின் பிரசாரமும், நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் பணிகளுமே இவருக்கு பலம்.

தவெக வேட்பாளர்: தவெக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாணவரணி நிர்வாகி அஜீத் களம் காண்கிறார். பேரவைத் தேர்தலுக்குப் புதியவர். விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்து, கட்சிப் பதவியைப் பெற்றவர். இளைஞர்களின் செல்வாக்கு இவருக்கு சாதகம்.

சாத்தூர் தொகுதியில் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களே அதிகளவில் மக்களின் கவனம் பெற்ற சின்னங்களாக உள்ளன. எனவே, தாமரை சின்னத்தை மக்கள் மனதில் பதியச் செய்ய வேண்டியது நயினார் நாகேந்திரனுக்கு பெரும் சவாலாக உள்ளதென அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இவர் சார்ந்த சமுதாயத்தின் வாக்குகளை அபுதமமுக வேட்பாளரால் பிரிக்கப்படும் என்பதும், திமுக வேட்பாளர் கடற்கரைராஜுக்கு அவர் சார்ந்த சமுதாய வாக்குகள் பலமாக இருந்தாலும் பிற சமுதாயத்தவரிடம் இவருக்கு பெரிய அளவிலான இணக்கம் இல்லாததும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்தத் தொகுதியில் பாஜக, திமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் இடையேதான் கடுமையான போட்டி என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.