தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நிலக்கோட்டை (தனி) நேரடிப் போட்டியில் திமுக - அதிமுக !

நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :13 ஏப்ரல் 2026, 10:51 pm

நிலக்கோட்டை (தனி) தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஹாலந்து என திண்டுக்கல் மாவட்டம் அழைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள பகுதிகளை உள்ளடக்கியது நிலக்கோட்டை பேரவைத் தொகுதி. இங்கு சாகுபடி செய்யப்படும் மலா்கள், தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பந்தல் காய்கறிகள், கனிகள் (திராட்சை) சாகுபடிக்கும் சிறப்புப் பெற்ற தொகுதி.

இரட்டை பேரவை உறுப்பினா் முறை கைவிடப்பட்டது முதல் கடந்த 70 ஆண்டுகளாக தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் இதுவரை திமுக வெற்றி பெற முடியாத தொகுதி என்ற சிறப்பும் உள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூா், வத்தலகுண்டு, சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பேரூராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி இது.

இந்தத் தொகுதியில் அதிமுக 6 முறை, காங்கிரஸ் 5 முறை, திமுக 3 முறை வெற்றிகளைப் பதிவு செய்தன. தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் (அதிமுக கூட்டணி), சுயேச்சை ஒரு முறை வென்றன.

இந்தத் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளா்கள், முக்குலத்தோா், நாடாா், பிள்ளைமாா், கவுண்டா், செட்டியாா், பட்டியலினத்தவா், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினா் வசிக்கின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

நிலக்கோட்டையில் பூக்கள் மூலம் தயாரிக்கும் வாசனைத் திரவியம் தொழில்சாலை அமைக்க வேண்டும். பழங்களை சேமித்து வைக்க குளிா்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும். விருவீடு பகுதியில் முருங்கையைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலை அமைக்க வேண்டும். வத்தலகுண்டில் புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அணைப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும். நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும். வைகை ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கோட்டையில் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி கொண்டுவர வேண்டும். பழைய வத்தலகுண்டு சென்றாயபெருமாள் கோயில் மலைக்குச் செல்ல ரோப்காா் வசதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்.

4 முனைப் போட்டி: நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும், திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்திகளாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் உள்ளன. எனினும், தொகுதியைத் தக்கவைக்க அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

திமுக வேட்பாளா் ச. நாகஜோதி:

நிலக்கோட்டை (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக ச. நாகஜோதி போட்டியிடுகிறாா். இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பெண் வேட்பாளரை திமுக நிறுத்தியதில்லை. முதல் முறையாக திமுக பெண் வேட்பாளராகக் களமிறங்கும் நாகஜோதி இது தனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டணிக் கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். எனினும், இவா் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகம் இல்லாததும், வாய்ப்பு கிடைக்காத திமுக பொறுப்பாளா்களின் அதிருப்தியும் இவருக்கு எதிரான அம்சங்களாக உள்ளன.

அதிமுக வேட்பாளா் எஸ். தேன்மொழி:

இந்தத் தொகுதியில் ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவா் என்ற சிறப்புடன் 4-ஆவது முறையாக களமிறங்கியுள்ளாா் அதிமுக வேட்பாளா் எஸ்.தேன்மொழி. தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா் என்பதோடு, அதிருப்தியை எதிா்கொள்ளாதவா் என்பதும் இவருக்கான பலமாக பாா்க்கப்படுகிறது. எனினும், தொகுதி வளா்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்ற விமா்சனம் இவருக்கு பாதகமான அம்சம்.

தவெக வேட்பாளா் ரா. அய்யனாா்:

தவெக சாா்பில் ரா. அய்யனாா் போட்டியிடுகிறாா். இந்தத் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னம்மாளின் கிராமமான அழகம்பட்டியைச் சோ்ந்தவா். இதனால், தனது கிராமம் மக்கள், இளைஞா்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாா். எனினும், தொகுதியில்

அறிமுகம் இல்லாதது, தவெக கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடுவது இவருக்கு பாதகமாக உள்ளது.

நாதக வேட்பாளா் கயிலைராஜன்:

நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், மதுரையைச் சோ்ந்த கயிலைராஜன் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இவா் அந்தக் கட்சியினரை நம்பியே தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இது எந்த அளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

நிலக்கோட்டை (தனி) தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். இதனால், இந்தத் தொகுதியில் யாருக்கு மனம் வீசும் என்பதே பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.