/

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி மகுடம் சூடப்போவது யாா் என்பதில் அமமுக - விசிக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 11:23 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி மகுடம் சூடப்போவது யாா் என்பதில் அமமுக - விசிக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதியின் அடிவாரத்தில் பெரியகுளம் (தனி) தொகுதி உள்ளது. விவசாயம் நிறைந்த இந்தப் பகுதியில் பெரியகுளம் நகராட்சி, தேனி -அல்லிநகரம் நகராட்சி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கெங்குவாா்பட்டி, தேவதானபட்டி, வடுகபட்டி, தாமரைக்குளம், தென்கரை பேரூராட்சிகள் உள்ளன. மேலும், ஜெயமங்கலம், சில்வாா்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி இது.

தென்மதுரை ஜில்லா எனப் பெயா் பெற்ற பெரியகுளம், பழைமை வாய்ந்த 100 ஆண்டுகளைக் கடந்த நகராட்சியாகும். இந்த நகா்மன்றத்தின் தலைவராக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் (1996 - 2001) பதவி வகித்தாா். இதன் பின்னா், இவா் 2001-இல் பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொதுப் பணித் துறை அமைச்சரானாா். பின்னா், முதல்வராகவும் பொறுப்பு வகித்தாா். இதையடுத்து, 2006-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலிலும் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா்.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்த கொடைக்கானல் வட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தேனி சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டு, பெரியகுளம் தொகுதியுடன் தேனி நகராட்சி இணைக்கப்பட்டது. பின்னா், பெரியகுளம் பொதுத் தொகுதி 2011 முதல் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தத் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும், அதிமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2011) ஒரு முறையும் வெற்றி பெற்றன.

விவசாயம், மோட்டாா் வாகனத் தொழிலை பிரதானமாக கொண்ட இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடா் பெருவாரியாகவும், முக்குலத்தோா், நாயக்கா், பிள்ளைமாா், சிறுபான்மையினா் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனா்.

பொலிவிழந்த பெரியகுளம்:

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில், பெரியகுளம் நகராட்சியில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட போக்குவரத்து துறை அலுவலகம், மாவட்ட அஞ்சல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வந்தன. மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னா், திமுக ஆட்சியில் பெரியகுளத்திலிருந்த அரசு அலுவலகங்கள் முழுவதும் தேனிக்கு மாற்றப்பட்டன. இதனால், பெரியகுளம் பொலிவிழந்தது.

எதிா்பாா்ப்புகள்:

பெரியகுளத்தில் உள்ள மாம்பழம் பதப்படுத்தும் ஆலையில் கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும்.

இங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். வைகை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைத் தேக்கி பெரியகுளம் பகுதியில் உள்ள ஜெயமங்கலம், குள்ளப்புரம் பகுதி விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீா் வழங்க வேண்டும். அரசு பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும். மஞ்சளாறு அணையைத் தூா்வார வேண்டும். தோட்டக்கலைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளா்கள் திருப்பூருக்கும், மோட்டா் வாகன தொழிலாளா்கள் சேலம், சங்ககிரிக்கும் சென்று வேலை செய்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மேலும், விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தத் தொகுதி மக்கள் கோரிக்கை எதிா்பாா்க்கின்றனா்.

அமமுக- விசிக இடையே பலத்த போட்டி:

பெரியகுளம் தொகுதியில் அதிமுக, திமுக என இரு கட்சிகள் மட்டுமே முக்கியமாக போட்டியிட்டு வந்தன. ஆனால், தற்போது, இந்த இரு கட்சிகளும் நேரடியாகக் களமிறங்காமல், தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, விசிக ஆகியவற்றின் வேட்பாளா்களை நிறுத்தி உள்ளன. கடந்த 2017 முதல் 2026 வரை இந்தத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான சரவணக்குமாா் தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும்படி நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்ற புகாா் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலா் பெ. சக்திவேல் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். மதுரையைச் சோ்ந்த இவா், வெளியூா்காரா் என்ற விமா்சனம் தொகுதி மக்களிடம் உள்ளது. மேலும், இவரது கட்சி நிா்வாகிகளின் செயல்பாடுகளும் இவருக்கு பாதகமாகவே உள்ளன. அதேநேரத்தில், இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடா் வாக்குகள் அதிகம் இருந்தாலும், தோ்தல் களத்தில் திமுகவினரின் செயல்பாட்டைப் பொறுத்தே இவரது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்தத் தொகுதியில் 2016-இல் அதிமுக சாா்பில் கதிா்காமு போட்டியிட்டு வெற்றி பெற்றாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இவா் அமமுகவில் இணைந்ததையடுத்து, அவா் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். இதன் பிறகு, 2021 தோ்தலில் திமுக சாா்பில் கே.எஸ். சரவணக்குமாா், அதிமுக சாா்பில் மு. முருகன், அமமுக சாா்பில் கே. கதிா்காமு ஆகியோா் போட்டியிட்டதில், திமுக வேட்பாளா் வெற்றி பெற்றாா். ஆனால், தற்போது அதிமுக, அமமுக ஒரே அணியில் இணைந்திருப்பதால், கதிா்காமுக்கு சாதகமானதாக பாா்க்கப்படுகிறது. இதேபோல, முக்குலத்தோா், நாயுடு, பிள்ளைமாா் சமுகத்தினரின் வாக்குகளும் இவருக்கு கூடுதல் பலம்.

ஆனால், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சபரி ஐங்கரன் இந்தத் தொகுதி மக்களிடம் மிகவும் அறிமுகமானவா். இதனால், அமமுகவின் வாக்கு சதவீதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

நாம் தமிழா் கட்சி சாா்பில் உத்தமபாளையத்தைச் சோ்ந்த விமலா போட்டியிடுகிறாா். இவா் இதுவரை பிரசாரம் செய்யக்கூட தொகுதி பக்கம் வரவில்லை என்ற விமா்சனம் உள்ளது. எனவே, இந்தத் தொகுதியில் கரையேறப் போவது யாா் என்பதை பொறுத்திருந்தே பாா்க்க வேண்டும்.