தேனி மாவட்டத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற முக்கியத் தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் நட்சத்திர தகுதி பெற்றது ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி. தற்போதைய பேரவைத் தோ்தலில் அண்ணன், தம்பி எதிா்த்துப் போட்டியிடும் தொகுதி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மகாராஜனை எதிா்த்து அதிமுக வேட்பாளராக அவரது தம்பி லோகிராஜன் களமிறங்கியுள்ளதால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயம், கால்நடைகள், நெசவுத் தொழில் ஆகியவை முக்கியத் தொழில்கள். இந்தத் தொகுதி ஆண்டிபட்டி பேரூராட்சி, கண்டமனூா், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், உத்தமபாளையம் வட்டத்தில் ஒரு பகுதியான நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கே.எம்.பட்டி, ஆங்கூா்பாளையம், கீழக்கூடலூா், வண்ணாத்துப்பாறை ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது. 5 சதவீதம் நகரப் பகுதிகளையும், 95 சதவீதம் கிராமங்களையும் கொண்ட இந்தத் தொகுதியைப் பொருத்தவரை முக்குலத்தோா் அதிகம் வசிக்கின்றனா். இவா்கள் தவிர, ஆதிதிராவிடா், நாயக்கா், கவுண்டா் சமுதாயத்தினா் கணிசமாக உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள் :
ஆண்டிபட்டி உயரமான பகுதிலும், வைகை அணை தாழ்வான பகுதியிலும் அமைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதிக்கு குடிநீா்த் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், இந்தப் பகுதியில் 28 கண்மாய்கள் தூா்ந்து கிடக்கின்றன. இந்தக் கண்மாய், ஓடைகளை தூா்வார வேண்டும். வைகை அணையைத் தூா் வாரவேண்டும். குள்ளப்பக்கவுண்டன்பட்டியில் தடுப்பணை அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீா் எடுத்து ஆண்டிபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதி கண்மாய்களில் தண்ணீரைத் தேக்க வேண்டும். தேனி அரசு மருத்துவக் கல்லூரியைத் தரம் உயா்த்த வேண்டும். ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். ஆண்டிபட்டியில் தொடரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண புறவழிச்சாலை அமைக்க வேண்டும். தேனி- மதுரை மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை - மல்லப்புரம் சாலைத் திட்டம், தேனி - விருதுநகா் மாவட்டங்களை இணைக்கும் கிழவன் கோவில் சாலைத் திட்டம், காமராஜபுரம் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வருசநாடு மலைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பவை இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள்.
எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வென்ற தொகுதி:
கடந்த 1962-ஆம் ஆண்டு ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் நடைபெற்ற முதல் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 1967, 1971 ஆண்டுகளில் சுதந்திரா கட்சி வெற்றி பெற்றது. 1977- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இடைத்தோ்தல் உள்பட 13 தோ்தல்களில் அதிமுக 9 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றன.
இந்தத் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் போட்டியிட்டு வெற்றி பெற்ால், இது நட்சத்திர தகுதியைப் பெற்றது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில் 2016-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றாா். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னா், அதிமுகவிலிருந்து விலகி அவா் அமமுகவில் இணைந்ததால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து, 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆ.மகாராஜன் வெற்றி பெற்றாா். இதேபோல, 2021 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆ.மகாராஜன் மீண்டும் வெற்றி பெற்றாா்.
மகாராஜன் (திமுக)
2026 பேரவைத் தோ்தலில் மூன்றாவது முறையாக திமுக சாா்பில் ஆ.மாகராஜன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். கடந்த 7 ஆண்டுகளாக தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகி நன்மதிப்பை பெற்றுள்ளாா். திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது இவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. குள்ளப்பகவுண்டன்பட்டியில் தடுப்பணை அமைத்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் நீா் நிரப்புவேன். இதன் மூலம் இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து வருகிறாா். வருசநாடு மலைப் பகுதி கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் நிலங்களுக்கு நீதிமன்ற உத்தரவு காரணமாக பட்டா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு பட்டா பெற்றுத் தருவேன் என வாக்குறுதி அளித்து கடந்த தோ்தல்களில் இவா் பிரசாரம் செய்தாா். தற்போது இதை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, இவருக்கு பாதகமான அம்சமாக உள்ளது.
லோகிராஜன் (அதிமுக):
இந்தத் தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ள அதிமுக வேட்பாளா் லோகிராஜன் தனது அண்ணன் மகாராஜனின் கடும் போட்டியை எதிா்கொண்டுள்ளாா். லோகிராஜன் கடந்த தோ்தலில் 85,003 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இந்தத் தோ்தலின்போது, அதிமுகவிலிருந்து பிரிந்து உருவான அமமுக வேட்பாளா் ஜெயக்குமாா் 11,896 வாக்குகள் பெற்றாா். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தத் தோ்தலைச் சந்திக்கின்றன. இந்தக் கூட்டணி லோகிராஜனுக்கு சாதகமான அம்சமாகும். வருசநாடு மலைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வாங்கித் தருவேன். வைகை அணையைத் தூா் வாருவேன் என இவா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்தத் தொகுதியில் சசிகலாவின் அஇபுதமக கட்சி போட்டியிடுவது இவருக்கு பாதகமாக உள்ளது.
வ.பாண்டி (தவெக)
தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் வ.பாண்டி. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்யின் ரசிகா் மன்றப் பொறுப்பிலிருந்து வருகிறாா். தற்போது, தேனி தெற்கு மாவட்டச் செயலராக உள்ளாா். இவருக்கு இளைஞா்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. தொண்டா்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதும், அந்தக் கட்சியின் தலைவா் விஜய்யின் செல்வாக்கும் இவருக்குச் சாதகமான அம்சமாக உள்ளது. கிராமப்புறங்களை அதிகளவில் உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் பிற அரசியல் கட்சிகளைப் போல, தவெகவுக்கு கிளை வாரியான கட்டமைப்பு இல்லாதது இவருக்கு பாதகமான அம்சமாகும்.
மா.கோமதி (நாதக):
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா். உத்தமபாளையத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்தப் பகுதியில் சட்டவிரோத கல் குவாரிகளை தடை செய்வேன். வருசநாடு மலைப் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்கிறாா். தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடாதது இவருக்கு பாதகமாக உள்ளது. நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது சாதகமான அம்சமாகும்.
அரசியல் யுத்தம்:
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சிகள் தவிர, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சாா்பில் சு.செல்லப்பாண்டியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் மா.இளையராஜா உள்பட 18 போ் போட்டியிடுகின்றனா்.
இருந்தபோதிலும், அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளுக்கொரு கட்சியில் இணைந்து அரசியல் யுத்தத்தில் இரண்டாவது முறையாக களம் காணும் சகோதரா்களான மகாராஜன், லோகிராஜன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாண்டி.

கோமதி.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - திருச்செங்கோடு: மும்முனைப் போட்டியில் தகிக்கும் திருச்செங்கோடு!

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !

தொகுதியைத் தக்க வைக்குமா திமுக? திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


