திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியைத் தக்கவைக்க அதிமுகவும், தொகுதியை மீட்டெடுக்க திமுகவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு தாலி செய்து கொடுத்ததால், திருமாங்கல்யம் என்ற பெயர் மறுவி திருமங்கலம் என மாறியது. தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தொழில்பேட்டை (கப்பலூர்), துணைக்கோள் நகரம், தென் மாவட்டத்தின் நுழைவு வாயில் பகுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட தொகுதியாக திருமங்கலம் தொகுதி உள்ளது.
திருமங்கலம் நகராட்சி (27 வார்டுகள்). திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள், தே.கல்லுப் பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள், பேரையூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் என கிராமப் பகுதிகள் அதிகம் நிறைந்ததாக இந்தத் தொகுதி உள்ளது.
இந்தத் தொகுதியில் நடைபெற்ற 16 தேர்தல்களில் (ஒரு முறை நடைபெற்ற இடைத்தேர்தல் உள்பட) அதிமுக 6 முறையும் காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும், மதிமுக, பார்வர்டு பிளாக், சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றன.
முக்குலத்தோர், நாயுடு, நாடார், பட்டியலினத்தவர். சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் இந்தத் தொகுதியில் வசித்து வந்தாலும், தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது முக்குலத்தோர் வாக்குகளாகவே உள்ளன.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு: திருமங்கலம் நகர் பகுதியில் வெளியூர் பேருந்து நிலையம், நகரில் புதை சாக்கடை வசதி செய்து தரப்பட வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். டி.கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சிப் பகுதிகளில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும். டி. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளில் விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும். கள்ளிக்குடி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பெரும்பாலான கிராமங்களை இணைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்தத் தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாகும்.
15 பேர் போட்டி இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மு. மணிமாறன், நாம் தமிழர் கட்சிசார்பில் முனீஸ், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சதீஸ்குமார் உள்பட 15 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக- திமுக இடையே நேரடிப் போட்டியிருந்தாலும், தவெக வேட்பாளர் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சியினரிடமும் மேலோங்கி உள்ளது.
அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார்: திருமங்கலம் தொகுதியைப் பொருத்தவரை, கடந்த அதிமுக ஆட்சியில் துணைகோள் நகரம், எய்ம்ஸ் மருத்துவமனை, கள்ளிக்குடி தனி வட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் எளிதில் அனைவரும் அணுகக் கூடியவராகவும், தொடர்ந்து தொகுதிக்கு நலத் திட்ட உதவிகள் செய்து வருபவராகவும் அறியப்படுகிறார். மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியும் உள்ளார். இவை இவருக்குச் சாதகமான அம்சங்கள்.
திமுக வேட்பாளர் மு. மணிமாறன்: திமுக சார்பில் போட்டியிடும் மு. மணிமாறன், பேரவை முன்னாள் தலைவர் சேடபட்டி முத்தையாவின் மகன் ஆவார். கூட்டணிக் கட்சியினர் இவருக்கு ஆதரவாக முழுவீச்சில் வாக்குச் சேகரித்து வருவது சாதகமாகக் கருதப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு முறை பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், அனுதாப அலையில் இந்த முறை வெற்றி பெறலாம் என திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்.
நாதக வேட்பாளர் முனீஸ்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முனீஸ் கிராமத்து இளைஞர்கள், விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இது அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தவெக வேட்பாளர் சதீஷ்குமார்! தவெக வேட்பாளர் சதீஷ்குமாரும் இளைஞர்கள், பெண்கள் ஆதரவைப் பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனினும், திருமங்கலத்தைப் பொருத்தவரையில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்கள் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியைத் தக்கவைக்க அதிமுகவினரும், கைப்பற்ற திமுகவினரும் போட்டியிடுகின்றனர். முனைப்புடன் களப் பணியாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலக்கோட்டை (தனி) நேரடிப் போட்டியில் திமுக - அதிமுக !

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

சட்டப்பேரவை தொகுதி விவரக் குறிப்பு: ஒரத்தநாடு - 175!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


