சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்தத் தொகுதி தேர்தல் களத்தில் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதியாகும்.
தொகுதி மறுசீரமைப்பின்போது எடப்பாடி வட்டம், மேட்டூர் வட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகள், எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்கள் அடங்கியுள்ளன.
சமூக நிலவரம்: வன்னியர் சமூக மக்கள் அதிக அளவில் வசித்துவரும் எடப்பாடி தொகுதியில், அதற்கு அடுத்த நிலையில் கொங்கு வேளாளக் கவுண்டர், மீனவ சமுதாய மக்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
தொழில்வாய்ப்பு: விசைத்தறி, ஜவுளி உற்பத்தி, நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளன. இவற்றுக்கு இணையாக விவசாயமும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதியின் தெற்கு எல்லையில் உள்ள சூரியன் மலைப் பகுதியில் "டீப் ஒயிட் " என்னும் அரியவகை கிரானைட் கற்கள் கிடைப்பதால், இங்கு பல கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இருந்தபோதும் இங்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அருகில் உள்ள பெருந்துறை, பள்ளிபாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் வேலைக்குச் சென்றுவரும் சூழல் உள்ளது.
தொகுதியின் மேற்கு எல்லையை ஒட்டிய காவிரி பாசனப் பகுதிகளில், அதிக அளவு நெல், கரும்பு, வாழை, பாக்கு உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதியின் உட்புறங்களில் மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, புகையிலை ஆகியவை விளைவிக்கப்படுகின்றன.
நிறைவேற்றப்பட்ட பணிகள்: எடப்பாடி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், புதிய அரசு கலைக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, புதிய கூட்டுக் குடிநீர் திட்டம், குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 400}க்கும் அதிகமான அடுக்குமாடி வீடுகள், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் புறவழிச் சாலைகள், தரம் உயர்த்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்கள், சரபங்கா நதியின் குறுக்கே பல்வேறு இடங்களில் பாலங்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையிலான காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் உள்ளிட்டவை தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள்.
கோரிக்கைள்: இப்பகுதியில் மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலான தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும், இங்குள்ள விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன் பெறும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் வகையில் மகுடஞ்சாவடி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையையும், பவானியிலிருந்து மேட்டூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் பயன் பெறும் வகையில், அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பன மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.
கடந்த தேர்தல் நிலவரம்: எடப்பாடி தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும், ஒருமுறை காங்கிரஸýம், 3 முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி 1,63,154 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் த. சம்பத்குமார் 69,352 வாக்குகள் பெற்று 2}ஆம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீரத்னா 6,626 வாக்குகள் பெற்று 3}ஆம் இடத்தையும் பிடித்தனர்.
2026 தேர்தல் களத்தில் 15 வேட்பாளர்கள்: தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளராக ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவர் காசி களம்காண்கின்றனர். இவர்களோடு, தவெக தலைவர் விஜய் ஆதரவளித்துள்ள சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரியதர்ஷினி, புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.எல். சுரேஷ் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளர்: அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இந்தத் தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வென்றவர். இப்போது 6}ஆவது வெற்றியை நோக்கி களத்தில் இறங்கியுள்ளார்.
எடப்பாடி அருகே உள்ளே சிலுவம்பாளையம் கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியில் உள்ள பலதரப்பட்ட மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். இவரின் எளிமையான அணுகுமுறையாலும், தொகுதி வளர்ச்சிக்காக இவர் பெற்றுத் தந்த திட்டப் பணிகளாலும் தொகுதியில் அதிகப்படியான மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்றுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி தொகுதியில் அவரது வெற்றிக்காக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக வேட்பாளர்: எடப்பாடி தொகுதியில் களம் காணும் திமுக வேட்பாளர் காசி, ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர். உள்ளாட்சித் தேர்தலில் 3 முறை ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் இவர், ஏற்கெனவே உள்ளாட்சிப் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், எடப்பாடி தொகுதி முன்னேற்றத்துக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவேன் எனக் கூறி, மக்களிடம் பிரசாரம் செய்துவருகிறார். மேலும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும், தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளும் தன்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்.
நாதக வேட்பாளர்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான பிரியதர்ஷினி, வீரபாண்டி அருகே உள்ள நாழிகழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நிர்வாகியாக கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானின் கொள்கை பிடிப்பு மிகுந்த பேச்சும், இளைஞர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு உள்ள வரவேற்பும், தன்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையோடு களத்தில் உள்ளார்.
தவெக ஆதரவுடன் சுயேச்சை: எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சேலத்தைச் சேர்ந்த பிரேம்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை வேட்பாளருக்கு கட்சித் தலைமை ஆதரவளித்த போதும், தங்களுக்கான விசில் சின்னம் இல்லாத ஏமாற்றத்துடன் தவெக தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
2021 பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி திமுக வேட்பாளரைவிட 93,802 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த முறை வெற்றி வித்தியாசத்தை அதிகப்படுத்துவதை இலக்காக கொண்டு அதிமுகவினர் களப் பணியாற்றி வருகின்றனர். திமுக கூட்டணி பலத்துடன் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

திருமங்கலம்! தக்கவைக்க அதிமுக, மீட்டெடுக்க திமுக மும்முரம்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி! எடப்பாடி பழனிசாமி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


