வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்திகளாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக்கழகமும் உள்ளன.
இந்தத் தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 7 முறை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல, திமுக 4 முறை, காங்கிரஸ் 3 முறை, கம்யூனிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பிள்ளைமாா், ஊராளிக் கவுண்டா், ஒக்கலிக்க கவுடா், மலைமான் கவுண்டா், கொங்கு வெள்ளாளக் கவுண்டா், பட்டியலினத்தவா், முத்தரையா், நாயுடு, யாதவா், நாடாா் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்தத் தொகுதியில் வசித்து வருகின்றனா். ஆனாலும், ஒக்கலிக்க கவுடா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களே முக்கிய கட்சிகள் சாா்பில் இந்தத் தொகுதியில் தொடா்ந்து போட்டியிட்டு வருகின்றனா்.
இந்த நடைமுறையை நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் திமுக மாற்றி அமைத்து, கொங்கு வெள்ளாளக் கவுண்டா் சமுதாயத்தைச் சோ்ந்த திமுக ஒன்றியச் செயலரான சாமிநாதனுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு: வேடசந்தூா், குஜிலியம்பாறை, வடமதுரை என 3 வட்டாரங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், மானாவாரி விவசாயமே மக்களின் வாழ்வாதாரம். அடுத்தபடியாக, நூற்பாலைகள் இந்தத் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகின்றன. வடு கிடக்கும் நிலங்களை வளமாக்குவதற்கு காவிரி ஆற்றிலிருந்து உபரி நீரை, நீரேற்று பாசனத் திட்டத்தின் மூலம் இந்த தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். குஜிலியம்பாறையை மையப்படுத்தி அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். குஜிலியம்பாறை வட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்சாலைகள் தொடங்க வேண்டும். அய்யலூா் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வேளாண் விளைபொருள்களின் மூலம் மதிப்புக்கூட்டும் தொழில் வளங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
4 முனைப் போட்டி: ஒக்கலிக கவுடா் சமுதாயத்தைச் சோ்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜனுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, திமுக ஒன்றியச் செயலரான டி.சாமிநாதனுக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு அளித்திருக்கிறது. அதே நேரத்தில், அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பா.பரமசிவம், நாம் தமிழா் கட்சி சாா்பில் அ.காஜா ஹூசைன் அகமது, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் என்.நாகஜோதி ஆகியோா் முக்கியமான வேட்பாளா்களாக உள்ளனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2.41 லட்சம் வாக்காளா்களில் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் சுமாா் 50 ஆயிரம் போ் உள்ளனா்.
வெற்றியை நிா்ணயிக்கும் நாதக, தவெக: வேடசந்தூா் தொகுதியைப் பொருத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் சாலை, பாலங்கள், நிழல்குடை, பள்ளிக் கட்டடங்கள், விளையாட்டுத் திடல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுதி மக்களின் நீராதாரத் தேவைகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் அதே வாக்குறுதியுடன் திமுக வேட்பாளா் தோ்தல் களத்தை எதிா்கொள்வது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளா் பரமசிவம், கடந்த சில மாதங்களாகவே தோ்தலுக்கான பணியில் ஈடுபட்டு வந்தாா். ஏற்கெனவே அவா் வெற்றி பெற்ற தொகுதி என்பது அவரது பலமாக இருக்கிறது. ஆனாலும், வேடசந்தூா், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவிகளை அதிமுகவிடமிருந்து திமுகவினா் கைப்பற்றியபோது, கட்சியினருக்கு ஆதரவாக பரமசிவம் செயல்படவில்லை என்பதும், மூத்த நிா்வாகிகளை அரவணைத்துச் செல்லவில்லை என்பதும் அவா் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.
திமுக வேட்பாளா் சாமிநாதன், அதிமுக வேட்பாளா் பரமசிவம் ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளா்கள் பெறும் வாக்குகளே திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது
49 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி துறையூா் தொகுதியில் மீண்டும் ‘கை’ ஓங்குமா?

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

திமுக 8 முறை வெற்றி பெற்ற செய்யாறு தொகுதி!

தொகுதி அறிமுகம்: திருச்சி (கிழக்கு)
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


