தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்...

கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு திரையில் சாகசம் செய்யும் நம் திரைப்பட நடிகர்கள், பெரும் புகழ் மற்றும் பண மழையில் நனைந்து குதூகலிக்கும் விளையாட்டு வீரர்களைத்தான் நாம் நம் வாழ்வின் கதாநாயகர்களாக எண்ணி வாழ்ந்து வருகிறோம்.

News image
Updated On :30 ஜூன் 2013, 8:59 pm

இராம. பரணீதரன்

கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு திரையில் சாகசம் செய்யும் நம் திரைப்பட நடிகர்கள், பெரும் புகழ் மற்றும் பண மழையில் நனைந்து குதூகலிக்கும் விளையாட்டு வீரர்களைத்தான் நாம் நம் வாழ்வின் கதாநாயகர்களாக எண்ணி வாழ்ந்து வருகிறோம்.

ஆனால், தங்கள் இளம் வயதிலேயே பெற்றோர், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலில் நாட்டின் எல்லையைக் காப்பதற்காக தங்கள் இன்னுயிரையும் விடத் தயாராக இருக்கும் லட்சோபலட்ச ராணுவ மற்றும் துணை ராணுவ படை வீரர்களே நம் இந்தியாவின் உண்மையான கதாநாயகர்கள்.

எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள், இவை தவிர உளிளிருந்தே நாட்டைச் செல்லரிக்கத் துடிக்கும் உள்ளூர் தீவிரவாதக் குழுக்கள் எனப் பல்வேறு விதமான அபாயங்களிலிருந்தும் நாட்டைக் காக்கும் சீரிய பணியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மேற்கொண்டு வரும் செயல் வீரர்கள்.

கடந்த வாரம் வட மாநிலங்களை புரட்டிப் போட்ட கடும்மழை, நிலச்சரிவு, காட்டு வெள்ளம் போன்றவற்றில் சிக்கிய ஆயிரக்கணக்கான யாத்ரிகர்களையும், பொதுமக்களையும் தங்கள் உயிரையும் பொருள்படுத்தாது சாகசங்கள் செய்து காப்பாற்றிய ராணுவ மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும்போது நம் உள்ளம் பெருமிதத்தால் விம்முகிறது.

அதேநேரத்தில் இதற்காக அந்த வீரர்களின் குடும்பங்கள் செய்யும் தியாகங்களை எண்ணிப் பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது.

மதுரையைச் சோர்ந்த ராணுவ விமானி பிரவீண் மீட்புப் பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது, அதேபோல் காஷ்மீரில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களில் ஒருவரான அத்வைதாவின் இளம் மனைவி, தனது கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்து உயிரிழந்தது என வீரர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்குப் பின்னும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத சோகம் இருந்து வருவதை மறுக்க முடியாது.

ஆனால், தாங்கள் பெறும் சம்பளத்துக்காக இப் பணியைச் செய்யாமல், இவற்றை நாட்டுக்குச் செய்யும் சேவையாக எண்ணியே ஒவ்வொரு வீரரும், அதேபோல் வீரரின் வீரமரணத்தை நாட்டுக்காகச் செய்த தியாகமாக அவர்களின் குடும்பமும் கருதி வாழ்ந்து வருவது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

அண்ணன், தம்பிகளாய் பழக வேண்டிய அண்டை மாநிலத்தவர்கள் தண்ணீருக்காகவும், மின்சாரத்துக்காகவும் அடித்துக் கொள்வதும், அதையே சாக்காக வைத்து இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவித்து, பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்து பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி கொடுப்பதுபோல, ""பேராபத்தில் சிக்கியவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரும் ஓர் இந்தியரே, அவரைக் காப்பாற்றுவதும் என் பணியே'' என இயற்கையை எதிர்த்துப் போராடி, உயிர்களைக் காக்கும் நெஞ்சுரம் கொண்ட நம் வீரர்களை நாம் போற்ற வேண்டும்.

உயரதிகாரிகள் சற்று ஓய்வு எடுத்துவிட்டு பணியாற்றுமாறு கூறிய போதும், ஓய்வைப் புறக்கணித்துவிட்டு, உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்த பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்றியதும், கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டதும் அவ் வீரர்கள் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக இப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, உடல் உழைப்பையே அறியாமல் இருந்து வரும் ஒருசில அரசு அதிகாரிகளை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தினால்தான், அவர்களுக்கு கொஞ்சமாவது நாட்டுப் பற்று வளரும். மேலும், தேச விரோத, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

அதனால்தான் இங்கிலாந்து போன்ற சில வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாழ்நாளில் குறிப்பிட்ட சில வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து கட்டாயமாகச் சேவை புரியவேண்டுமென சட்டமே உள்ளது. இது அந் நாட்டின் அரச குடும்பத்தினருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டாய ராணுவ சேவையில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை.

அப்போதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது அக்கறையும், காதலும் ஏற்படும். நாடு வேறு, நாம் வேறு அல்ல. நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நாட்டின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பது புரியும்.

நாட்டிலுள்ள குடிமக்களுக்கும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் நமது ராணுவ வீரர்கள் தங்களது செயல்கள் மற்றும் தியாகங்கள் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இந்தியாவின் நிஜ கதாநாயகர்களின் தியாகங்களைப் போற்றுவோம். வீர வணக்கம் செலுத்துவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.