ஐந்து வயது, ஆறு வயது, நான்கு வயது - எங்கு போய் போர்க்கொடி தூக்கலாம்? எப்படி இந்தக் கொடூரத்தை நிறுத்துவது? பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த பயிற்சிபெறும் இளம் நீதித்துறை அதிகாரிகளிடம், பாலியல் வன்முறை - சீண்டுதல் வழக்குகளில் நீதிமன்றத்தின் அணுகுமுறைபற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 150 இளைஞர்கள், ஆண்களும், பெண்களும். இறுதியில் கேள்வி நேரத்தில் ஓர் இளம் அதிகாரி இன்று நிலவும் சூழ்நிலைப் பற்றி விவரித்து, ""என்ன செய்யலாம் மேடம்? தாங்க முடியாத துயரமும் அவமானமுமாய் இருக்கிறது'' என்றார். இதையே எதிரொலித்து இரு மாணவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள், ""மேடம் இது பற்றி நிறையப் பேசவேண்டும், பொறுக்கவில்லை'' என்றார்கள். பொறுக்குதில்லை, உண்மை. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை சமீப காலமாக நடக்கும் ஒன்று என்று நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல.
4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தக் கொடுமைக்குப் பலியாகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. எத்தனை எத்தனை குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உணர்வுகள், மனநிலை சிதைக்கப்பட்டு வாழ்கிறார்கள்! இந்தக் கொடுமை நடந்தபின் அவர்கள் பார்வையிலும் கண்ணோட்டத்திலும் சந்தேகமும், பயமும், துயரமும், அழுத்தமும் நிரந்தரமாகக் கவிந்துவிடுகிறது.
சாவித்திரி குணசேகரா என்ற மனித உரிமை சிந்தனையாளர் சொல்லுவார், ""உரிமையும் கடமையும் எதிரும் புதிருமல்ல; இரண்டையும் ஒன்றாகப் பின்னலாம்'' என்று.
குடும்பங்களில் பெரியவர்களுக்கு இருக்கும் அதிகாரமும் ஆளுமையும் குழந்தைகளின் குரல்களை அமுக்கிவிடுகின்றன. இங்கு "குழந்தைகள்' என்று குறிப்பிடுபவர்கள் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.
""ஸத்யமேவ ஜயதே'' என்ற நிகழ்ச்சியில் இந்தக் கொடுமையை நடிகர் அமீர்கான் நம்முன் வைத்தார். அதில் அந்த அன்னை, தன் மகள் தனக்கு நேரும் கொடுமையை அவ்வப்போது முறையிட்டபோது தான் செவிசாய்க்க மறுத்ததுபோல் ""நீங்களும் செய்யாதீர்கள்'' என்று நேயர்களை வேண்டிக்கொண்டார்.
உங்கள் குழந்தையை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், யார் அதற்குத் துணை? பல ஆண்டுகளாக அவர் மகள் சொந்தக்காரர் ஒருவரின் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். இந்த அநீதிக்கு எதிராகப் போராடும் சமூக அமைப்புகள் சொல்வது என்னவென்றால், பெரும்பாலும் தந்தையோ, தாத்தாவோ, சித்தப்பாவோ, மாமாவோ, குடும்ப நண்பரோ, ஆசிரியரோ அல்லது குடும்பத்துக்கு வேறு வகையில் நெருங்கினவரோதான் இந்தக் குற்றத்தைப் புரிகிறார்கள். அதனால், தாயார்களே குடும்ப மானம் காரணமாக இந்த நிகழ்வை இருட்டடிப்பு செய்துவிடுவார்களாம். ""சும்மா இரு அப்பாதானே, அவருக்கில்லாத உரிமையா?'' என்றுகூடக் கூறுவார்களாம். தராசில் - குழந்தையா, மானமா என்றா பார்ப்பது? புரியவில்லை.
இதுதான் உண்மை நிலை என்றால், குற்றவாளிகள் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களில் நின்று தண்டனை பெறுவது நடக்காத ஒன்று. இதைவிட, நரகத் தீயில்கூட பனிக்கட்டியை உருகவிடாமல் பார்த்துக் கொள்வது இன்னும் சுலபம். குழந்தைகளுடைய உடல் நலம், மனவளம், மனநலம் எல்லாவற்றையும் காப்பாற்றும் கடமை அரசுக்கு உள்ளது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் குழந்தைகளுக்கும் உண்டு. நாமும் சட்டத்தின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டம் சரியாக அமல்படுத்தப்பட வேண்டும். சில அரிய சட்டங்கள், காகிதப் புலிகளாகவே அமைந்து போவதும் உண்டு!
குழந்தையின் கண்ணோட்டத்தில் அனுபவங்களையும் பாருங்கள். துன்புறுத்துபவர் தாய்மாமன் என்று வைத்துக் கொள்வோம். மறைவான இடத்தில் அந்த அக்கிரமத்தைப் புரிந்துவிட்டு, உணவறைக்கு வந்து எல்லோருடன் உணவருந்துகிறார். அம்மாவும் பரிந்து பரிந்து பரிமாறுகிறார். குழந்தைக்கு ஒன்றும் புரியாது. "மாமா கெட்டவரா, இல்லை நான்தான் சரியில்லையா? அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லையே? பின் அம்மா அவருடன் ஏன் சிரித்துப் பேசுகிறார்?'. "ராட்சஸன்', "ராட்சஸன்' என்று சபிக்காதீர்கள். இந்தக் கொடூரர்கள் நம்மைப் போலத்தான் இருப்பார்கள். கோரைப்பற்களும், கொம்புத் தலையும் இருக்காது. நம்மைப் போலவே... இருப்பார்கள். அதுதான் பயங்கரம்!
இந்தக் கொடுமையைப் பற்றி நமக்கு எல்லாத் தகவல்களும் தெரியாது. அறியாமையே பரவியுள்ளது. உடலுறவு கொண்டால்தான் கொடுமை என்பது சரியல்ல. பாலியல் வக்கிரக் காட்சிகளைக் கொண்ட படத்தைக் குழந்தைகளிடம் காட்டலாம், அந்தக் குழந்தைகளையும் அந்த நிலையில் படமெடுக்கலாம். குழந்தையின் உடம்பில் "தொடக்கூடாத இடத்தில்' தொடலாம், குழந்தையைத் தன் உடலுறுப்புகளைத் தொடச்சொல்லலாம். இப்படி எத்தனையோ? அதனால், உடலுறவு வரைக்கும் போகவில்லையே என்று குழந்தையின் முறையீட்டை ஒதுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு எது நல்ல தொடல், எது நல்லதல்ல என்று எச்சரிக்க வேண்டும்.
டியூஷன் வகுப்புக்குப் போகமாட்டேன் என்று அழுதால் பொறுமையாக விசாரிக்க வேண்டும். பாடம் படிக்க வெறுப்பாக இருக்கலாம்... அல்லது இந்த பயங்கரமாகவும் இருக்கலாம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
ஒரு வழக்கை விசாரிக்க நேரிட்டது. ஒரு சிறுவன் 4 வயது - பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலையும் செய்யப்பட்டான். குற்றவாளிக்கு இந்தச் செயல் முதல் முறையல்ல. முன்னமேயே வேறு குழந்தைகளையும் கொடுமைப்படுத்தியிருந்தான். அரசுத் தரப்பு சாட்சி ஒரு சின்னப் பெண். இதே மனிதனால் வன்முறைக்கு ஆளான பெண் குழந்தை - 6 வயது. குற்றம் சாட்டப்பட்டவருடன் தான் வெளியே சென்றதாகவும், அவர் அடிக்கடி பிஸ்கட் வாங்கிக் கொடுத்ததாகவும், பிறகு தன்னை அவர் என்ன செய்தார் என்று தன் "குழந்தை மொழி'யில் விவரிப்பதாகவும் அந்த சாட்சியம் அமையும்.
குற்றவாளி மேல் முறையீட்டாளர் தரப்பில் வாதம் என்னவென்றால், "நிஜமாகவே இந்த சம்பவம் நடந்ததென்றால் திரும்பவும் அவருடன் போயிருக்குமா அந்தக் குழந்தை?' என்பதுதான்.
சிறுவர் மீதான பாலியல் கொடுமைபற்றிப் படித்தோமானால் தின்பண்டங்களையோ பரிசுப்பொருள்களையோ கொடுத்து வசப்படுத்துவது என்ற ஒன்றைப்பற்றி அறிந்து கொள்வோம். இதை ஆங்கிலத்தில் "குரூமிங்' என்பார்கள்.
குற்றம் இழைப்பவர்கள் முதலில் பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்து நம்பிக்கையைப் பெற்று... பின் நிறைவேறும் அவர்கள் கொடூரம்.
அந்தக் குழந்தைக்கு தனக்கு என்ன நேர்ந்தது என்றே புரியாது. அந்த நிகழ்வு மனக்கிணற்றின் ஆழத்தில் எங்கோ புதைந்து இருக்கும். பின் என்றோ ஒரு நாள் கிணற்றிலிருந்து ஏதோ ஒரு சிறு உணர்வு தூண்டலில் அந்த நினைவுகள் பூதமாகக் கிளம்பும். இவ்வளவு நாள்கள் சும்மாதானே இருந்தது அந்தக் குழந்தை; இப்பொழுது இவ்வளவு நாள்கள் கழித்து ஏன்? என்று நமக்குப் புரியாது. அது உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு தற்காப்புக் கவசம். குழந்தையின் மெüனம் சம்மதம் இல்லை. ஒரு "மைனர்' குழந்தையின் சம்மதம்கூட சட்டப்படி செல்லாது.
இந்தக் கொடூரம் நம்மைக் கலக்குகிறது; நம்மை அச்சுறுத்துகிறது. ஆகையால் தானே தனக்கு அதை எதிர்கொண்டு பார்க்கும் திறன் இல்லை. ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ஜிலேபி கொடுத்து அந்தக் கொடூரன் "குரூம்' செய்வான். அந்தக் குழந்தையாக நடித்த சிறுமி பார்க்கும் பார்வை நம்மை அடிவயிற்றில் குத்தும். அவளுக்குத் தெரியும், அவள் பயந்து வெறுக்கும் ஒன்று நடக்கப்போகிறது என்று தெரியும். இருந்தும் அந்தச் சிறுமி போவாள். என்னால் திரைப்படத்தை மேலே பார்க்க முடியவில்லை. வாழ்க்கையிலும் அதேதான். நிஜத்தை நேர்கொண்டு பார்க்க மறுக்கிறோம். அதன் விளைவு 12 வயது, 5 வயது, 4 வயதுக் குழந்தைகள் குதறப்படுகின்றனர்.
குழந்தைகள் முறையிடும்பொழுது செவிகளை மூடிக்கொள்ளாதீர்கள். என்ன செய்ய வேண்டுமோ - குற்றவாளி யாராக இருந்தாலும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களை விட்டால் குழந்தை எங்கு போகும்? ஆசிரியரைப்பற்றி முறையீடு என்றால், ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுவார்கள். ஏன் வேறு புதிய மலர்களைப் பாழாக்குவதற்காகவா?
தமிழ்நாடு அரசு ஆணை 121 (கல்வி) 17.5.2012 இருக்கிறது, அதன்படி ஆசிரியர் குற்றம் புரிந்தார் என்று நிரூபணம் செய்யப்பட்டால் அவருடைய சான்றிதழ்கள் பறிக்கப்படும். நன்று.
மெத்தானந்தா என்ற புத்த பிட்சு ஒரு கதை கூறுவார் ""ஒரு புத்த பிட்சுவிடம் ஒரு பெண் சென்று அழுதாள்; ""ஐயனே, எனக்கு 12 வயது இருக்கும்பொழுது என் ஏழைப் பெற்றோர் என்னை ஒரு விபசார விடுதிக்கு விற்றுவிட்டார்கள். அன்றிலிருந்து அதே தொழில் செய்து வருகிறேன். என் பாவங்களை மன்னிக்க வேண்டும்''. அதற்கு பிட்சு பதிலளித்தார், ""குழந்தாய், நீ என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டாம். உன்னைக் காப்பாற்றத் தவறியதால் என்னையும் இந்த உலகத்தையும் நீதான் மன்னிக்க வேண்டும். எங்களை நீ மன்னிப்பாயா?''.
நாம் அனைவரும் இந்தக் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை பாவத்தின் சுமை நம்மேலும் ஏற்றப்படும்.
சற்று நில்லுங்கள். ஆரம்பத்தில் கேட்டோமே, ""எங்களுக்கும் அவமானமாக இருக்கிறது'', ""பொறுக்கவில்லை'' என்ற இளைஞர் குரல்கள். அவை வன்முறைக்கு முற்றுப்புள்ளி என்ற நம்பிக்கையின் பூபாளமா? நம்புவோம். அதே சமயத்தில் குழந்தையின் குரலையும் கேட்டு இந்த அவலம் நேராமல் அரண் கட்டுவோம்.
கட்டுரையாளர்: உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

