வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அவரும் அப்படித்தான்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜனின் கன்னி கடன் கொள்கை காட்டமான விமர்சனங்களைச் சந்தித்து உள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2013, 8:27 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜனின் கன்னி கடன் கொள்கை காட்டமான விமர்சனங்களைச் சந்தித்து உள்ளது. ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 7.25 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக (கால் சதவீதம்) உயர்த்தப்பட்டிருப்பதற்கு, பணச்சந்தை, பங்குச்சந்தை, வர்த்தக சம்மேளனங்கள், நிதி ஊடகங்கள் ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளன. இது புரிந்துகொள்ளக் கூடியதே. காரணம், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டபோது, மேற்கூறிய அமைப்புகளுக்கிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடின.

காரணம், ரகுராம் ராஜனின் பின்னணி அப்படி. அவருக்கு முந்தைய கவர்னர்களான டி. சுப்பாராவ், ஒய்.வி. ரெட்டி போன்றவர்களைப் போல் மத்திய நிதி அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஊறித் திளைத்தவர் அல்ல ராஜன். மாறாக, சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர்; சிகாகோவில் பணியாற்றிய பேராசிரியர்; சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) பொருளாதார ஆலோசகராக இருந்தவர். பின்னர், மத்திய நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக ஓராண்டு காலம் பொறுப்பு வகித்தவர். அப்போதுகூட அவர் இந்தியாவில் வட்டி வீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தையும் சரி, தொழில் உலகமும் சரி, ராஜனிடமிருந்து வட்டி குறைப்பைதான் எதிர்பார்த்ததே தவிர, வட்டி அதிகரிப்பை அல்ல. நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று ஆனவுடன், முந்தைய கவர்னர் டி. சுப்பாராவ் போல, ராஜனும் பணவீக்கத்துக்கு எதிராக போர் தொடுக்கிறாரே தவிர, வளர்ச்சியை ஊக்குவிக்க முன் வரவில்லையே என விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

நிலைமையை கூர்ந்து கவனித்தால் இந்த விமர்சனம் உண்மையல்ல என்பது விளங்கும்.

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், ஒரு முக்கிய கொள்கையை வெளியிட்டது. அமெரிக்காவில் டாலர்களின் புழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்திடும் திட்டம்("குவாண்டிடேடிவ் ஈஸிங்') இப்போதைக்கு தள்ளிப் போடப்படுகிறது என்பதுதான் அது. ஆனால் அங்கு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், டாலர்களின் புழக்கத்தை குறைக்கும் திட்டம் அமலாகும் என்பது வெளிப்படை.

டாலர் புழக்கம் குறையும்போது, அதன் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் மதிப்பு மேலும் சரியக்கூடும் அல்லவா? அதுபோன்ற ஒரு நிலையை எதிர்கொள்வதற்கும், ரூபாயின் மதிப்பை தாங்கிப் பிடிப்பதற்கும், இப்போதிலிருந்தே இந்தியா தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் புதிய கடன் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கடன் கொள்கையின் மூலமும் அதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட சில புதிய நடவடிக்கைகளின் பலனாகவும் ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல ஸ்திரம் அடைந்து, உயர்ந்து வருகிறது என்பது கண்கூடு. அதே நேரம், பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கு உதவியாகவும் கடன் கொள்கை உள்ளது என்பது வெளிப்படை.

சரி, புதிய கடன் கொள்கை என்னதான் சொல்கிறது? 2011 - 2012 நிதி ஆண்டு வரை, ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் (ரெப்போ ரேட்) மட்டுமே கடன் கொள்கைகளில் பேசப்பட்டு வந்தது. இப்போது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து, இரண்டு வழிகளில் குறுகிய கால கடன்களை பெற்றுக் கொள்ளலாம். ஒன்று, "ரெப்போ ரேட்' வழி. இதன்படி, ஒரு வங்கி, தனது ஒட்டுமொத்த டெபாசிட் தொகையில் அரை சதவீத அளவுக்கு மட்டுமே கடன் வாங்க முடியும்.

ரிசர்வ் வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் அதற்கு மேல் குறுகிய கால கடன் வாங்க வேண்டுமானால், "மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெஸிலிடி' (எம்.எஸ்.எஃப்) என்கிற சிறப்பு குறுகிய கால கடன் திட்டத்தின் வாயிலாக வாங்கிக் கொள்ளலாம். இதற்கும் உச்சவரம்பு உண்டு. ஒரு வங்கி தனது ஒட்டுமொத்த டெபாசிட் தொகையில் இரண்டு சதவீதம் அளவுக்கு கடன் பெற்றுக் கொள்ளலாம். "ரெப்போ ரேட்' மூலம் வாங்குவதைப் போல் நான்கு மடங்கு "எம்.எஸ்.எஃப்' மூலம் வாங்கலாம்.

கடன் கொள்கையில் "ரெப்போ ரேட்' கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எஸ்.எஃப் என்கிற சிறப்பு குறுகிய கால கடனுக்கு வட்டி முக்கால் சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது ரெப்போ ரேட் 7.50 சதவீதமாகவும் எம்.எஸ்.எப் 9.50 சதவீதமாகவும் உள்ளது.

எனவே, கூட்டிக் கழித்துப் பார்த்தால், அரை சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது என்கிறார் கவர்னர் ரகுராம் ராஜன். ஆனால், வட்டிச் சுமை வங்கிகளுக்கு ஓரளவு குறைந்திருக்கிறதே தவிர கணிசமாகக் குறையவில்லை. எப்படி என்றால், சாதாரணமாக வங்கிகள், எம்.எஸ்.எஃப்.பில் 55 சதவீதமும் "ரெப்போ ரேட்டில்' 45 சதவீதமும் கடன் வாங்குகிறார்கள். வட்டியோ, எம்.எஸ்.எஃப்பில் 9.50 சதவீதம்; ரெப்போவில் 7.50 சதவீதம். எனவே வட்டிச்சுமை கணிசமாகக் குறைய வாய்ப்பில்லை என்பது தெளிவு.

இது ஒருபுறம் இருக்க, பொதுவாக "ரெப்போ ரேட்' உயரும்போது அது பொதுமக்களை நேரடியாக பாதிக்கிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு வட்டி உயருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேநேரம், பணப்புழக்கம் குறைவதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இது வழி வகுக்கிறது.

குறுகியகால சிறப்புக் கடன் (எம்.எஸ்.எஃப்) வட்டி வீதம் ஜூலை மாதத்தில் (சுப்பாராவ் காலத்தில்) 10.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், வட்டிச்சுமை கடுமையாக உயர்ந்ததால், தொழில் வளர்ச்சி குறைந்ததும் வங்கிகள் கூடுதல் நிதி ஆதாரத்துக்கு இந்த கடன் திட்டத்தையே நாட வேண்டி இருப்பதால், "ரெப்போ'வை பின்னுக்குத் தள்ளிவிட்டு, எம்.எஸ்.எஃப். பிரதான கடன் திட்டமாக மாறிவிடுமோ என்ற பேச்சும் எழுந்தது.

வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், வட்டிச்சுமையைக் குறைக்கும் நோக்கிலும் எம்.எஸ்.எஃப். கடன் வட்டி 0.75 சதவீதம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு திட்டங்களுக்கும் வட்டி வித்தியாசம் இரணடு சதவீதம்தான். இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, ஒரே ஒரு சதவீதமாக இருக்கும் என்று டாக்டர் ராஜன் தெரிவித்துள்ளார். மேற்கூறிய இரண்டு வகை வட்டி என்பதை பணவீக்கத்தைக் குறைக்கவும், வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனலாம்.

அடுத்த மூன்று மாதங்களில், அமெரிக்க பெடரல் ரிசர்வ், டாலர்களைப் புழக்கத்தில் விடுவதை குறைக்கத் தொடங்குமேயானால், அது ரூபாயின் மதிப்பை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

முதலாவது, வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து டாலர் டெபாசிட்டுகளைத் திரட்டுவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான திட்டம். இதன்படி, வங்கிகள் திரட்டும் டாலர்களைப் பெற்றுக்கொண்டு, ரூபாய்களை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும். இதற்கு வங்கிகள் குறைந்த அளவில் (3.5 சதவீதம்) கட்டணம் செலுத்தினால் போதும். பொதுவாக கரன்ஸி சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களால் வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய "ரிஸ்க்'கை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு.

இதனால் வங்கிகள், இழப்பு பற்றிய அச்சம் இல்லாமல், முனைப்புடன் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து டாலர் டெபாசிட்டுகளைத் திரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவதாக, வங்கிகள் தங்களது முதல் நிலை (டயர்-1) மூலதனத்துக்கு இணையாக, வெளிநாட்டிலிருந்து டாலர் கடன்களை வாங்கி, அதனை ரிசர்வ் வங்கியிடம் சலுகை கட்டணத்தில் ("ஸ்வேப்' முறையில்) ரூபாயாக மாற்றிக்கொள்ளும் திட்டம். இதனாலும் வங்கிகளுக்கு இழப்பு ஏதும் இல்லாமல் டாலர்களைத் திரட்ட முடியும்.

இவ்விரு திட்டங்கள் வாயிலாக, அடுத்த ஆறு மாதத்தில், கிட்டத்தட்ட 20 பில்லியன் (2000 கோடி) டாலர்களை இந்தியா திரட்ட முடியும் என்று கணிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே 1.4 பில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்கம் உள்ளிட்ட இறக்குமதி இறங்கு முகத்தில் இருக்கிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கான இலக்கை எட்டும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

மேற்கூறிய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 60 என்கிற நிலைக்கு உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆக, புதிய கவர்னர் ரகுராம் ராஜனின் இலக்கு, பணவீக்கம் மற்றும் விலைவாசி கட்டுப்பாடு மட்டுமல்லாமல், வளர்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பை நிலைநாட்டுதல் ஆகியவற்றையும் சார்ந்திருப்பது தெளிவு. ரிசர்வ் வங்கி கவர்னராக வருபவர் - மத்திய நிதி அமைச்சகத்திலிருந்து வந்தாலும் சர்வதேச நிதியத்திலிருந்து வந்தாலும் - இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி தத்துவம், தனித்தன்மை, ஆளுமை ஆகியவற்றுடன் இணைந்து விடுவார் என்பதே எழுதப்படாத விதி. டாக்டர் ரகுராம் ராஜனும் இவ்விதிக்கு விலக்கானவரல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.