ஓரு கத்திமுனை விஷயத்தைப்பற்றி கூறப்போகிறேன். அழுகையைப்பற்றி. அழுகை என்பது கண்ணீர் சுரப்பிகள் தங்கள் வேலையை சரியாக செய்கின்றன என்பதை காட்டுகிறது. கண்ணீர் சுரக்கவில்லை என்றால் அதற்கு மருந்து சொட்டுகள் விட்டுக்கொள்ள வேண்டும். இப்பொழுது சொல்லப்போவது அதைப்பற்றி அல்ல. நாம் எந்தெந்த சூழ்நிலையிலெல்லாம் அழுகிறோம் என்று பார்ப்போம்.
முதலில் ஆனந்தக்கண்ணீர். இது தன் குழந்தையை மற்றவர் புகழக் கேட்டதும் பெற்றோர் கண்ணில் வழிவது. ஆசிரியர் தன் மாணவனின் சிறப்பைக் கண்டு அழலாம். இதெல்லாம் பெருமிதம், சந்தோஷம் காரணமாக வரும் கண்ணீர். இதற்கு எதிரிடையாய் தன் மகன் குற்றம் புரிந்தவனாக நிற்கும் பொழுது அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் அழுவது. அடுத்தது உணர்ச்சி மேலீட்டால் கண்ணில் நீர் வருவது. உதாரணம், நம் தேசியக் கொடி ஏற்றப்படும் நேரம், நம் நாட்டுக்காக போரில் உயிர் நீத்தவரின் மனைவி குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெறும் நேரம் போன்றவை.
ஒருமுறை பார்வையற்ற மாணவர்களின் பள்ளி சிறப்பு தினத்தன்று அவர்கள் "குறையொன்றும் இல்லை' பாடலைப் பாடினார்கள், கண்களில் நீர் வழிந்தது. அடுத்தது பக்தி பொங்கி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி "காரொளி வண்ணா, கண்ணா' என்று கதறும் ரகம். திரைப்படத்திலோ நாடகத்திலோ யாராவது அழுதால் அதன் எதிரொலி போல் நாமும் அழுவது. நமக்கு பிரியமானவர்கள் நம்மை விட்டு பிரியும்பொழுது, தாற்காலிகமாகவும் இருக்கலாம் அல்லது நிரந்தர பிரிவாகவும் இருக்கலாம். இது ஒரு ரகம்.
அடுத்தது, நமக்கு பிரியமானவர்களின் துன்பத்தைக்கண்டு நாம் அழுவது. நம் வலி} அது உடல்வலியாக இருக்கலாம் அல்லது மனதில் வலியாக இருக்கலாம்} அது தாங்க முடியாமல் அழுவோம். இப்படி பல விதமான காரணிகள். அவரவர் சுபாவத்தைப் பொருத்தது. சில சூழ்நிலைகளில் நாம் தைரியமின்மையால், பலவீனத்தினால், சுய பச்சாதாபத்தினால் அழுகிறோம். அதுவும் பெண்களைப் பற்றிக் கூறுகிறேன். இங்கேதான் வருகிறது கத்திமுனை.
அப்படி அழுவது நியாயமல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, பெண்கள் வேலைக்குப்போவது என்பது இப்பொழுது சகஜமாகி விட்டது. அது சமத்துவம் பற்றிய விஷயம். அதே நேரத்தில் பெண்கள் வீட்டைப் போலவே வேலை செய்யும் இடத்திலும் நடந்து கொள்ளலாமா? வீட்டில் யாராவது திட்டினால் அழுவது போல, வேலையில் மேலதிகாரி திட்டினால் அழுவது முறையல்ல. இது பெண்களின் உரிமைத்தளத்தை வலுவிழக்க செய்கிறது. "நான் செய்தது தவறல்ல' என்று விளக்கலாம். அல்லது "தவறாக இருந்தால் மன்னியுங்கள்' என்று சொல்லி மறுமுறை அந்தத் தவறு நிகழாமல் கவனமாக இருக்கலாம். அதை விடுத்து ஓவென்று அழுதால்? அந்த மேலதிகாரி "இதோ பாரம்மா அழாதே, நான் மிட்டாய் தருகிறேன்' என்று சொல்லுவாரா? "இனிமேல் நான் உன்னை கோபித்துக்கொள்ள மாட்டேன்' என்று சொல்லுவாரா? "இதுதான் பெண்கள் வேலைக்கு வருவதில் உள்ள சங்கடம்' என்று தோன்றும் அல்லவா? அழுகையை வீட்டில் வைத்துவிட்டு, வேலைக்கு வரும்பொழுதாவது உறுதி கொண்ட நெஞ்சினளாக இருக்கவேண்டும். இதுதான் நாம் செய்யும் வேலைக்கு தரும் மரியாதை. பெண்ணியத்திற்கு தரும் கௌரவம். சமத்துவம் என்பது பெண்ணுக்கு மற்றவர்கள் கொடுப்பது அல்ல, நம்மிடம் இருக்கும் உரிமை. அந்த உரிமையை நாம் நிலைநாட்டப் போராடும் பொழுது பலவீன அழுகையைத் தவிர்க்க வேண்டும்.
ஒருமுறை பெண்கள் தினத்தன்று ஒரு கல்லூரிக்கு சென்றேன். குடும்ப வன்முறை சட்டம் பற்றி தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றார்கள். அப்போது புதிதாக வந்திருந்த திரைப்படத்தைப் பற்றி கேட்டேன். பளிச்சென்று பதில் வந்தது. அவர்கள் யாரும் குடும்ப வன்முறைக்கு ஆளாகவேண்டாம். ஆனால் அவர்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் உதவலாம் அல்லவா? என்னைக் காப்பாற்றி கொள்ள சட்டமும், என் தன்னம்பிக்கையும் எனக்கு உதவ வேண்டும், அழுகையல்ல. அது உதவவும் உதவாது.
ஒரு கதை சொல்லுகிறேன். இதை படிப்பவர்கள் எல்லோருக்கும் அந்தக்கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படிக் கூட இப்போது நிச்சயமாக சொல்லுவதற்கில்லை.
கதைக்கு முன்னால் ஒரு நெடும் பீடிகை. திரைப்பட தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு நம் கலாசாரம், நம் இதிகாசம், நம் தேசத்தலைவர்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. "குளிப்பாட்டிய தண்ணீருடன் குழந்தையையும் கொட்டிவிட்டோம்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அதுபோல எதையெல்லாமோ இழந்துவிட்டோம்.
இந்தியாவிலிருந்து ஒருவர் தாய்லாந்து சென்றாராம். அந்த நாட்டில் ராமாயணக் கதைகள் பிரபலம். அவருடன் சென்ற சுற்றுலா வழிக்காட்டி எல்லாவற்றையும் விளக்கினார். நம் நாட்டவருக்கு ஒரே வியப்பு. "நான் ஹிந்து நீங்களோ இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். எனக்கு தெரியாத ராமாயண சம்பவங்களை நீங்கள் கூறுகிறீர்களே எப்படி' என்றாராம். அதற்கு தாய்லாந்து நாட்டவரின் பதில் "இஸ்லாம் என் மதம், ராமாயணம் என் கலாசாரம் சார்ந்தது, இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?'
பீடிகை முடிந்தது இப்போது கதைக்கு வருகிறேன், ஒரு அரசகுமாரியைப் பற்றிய கதை. பூப்பந்து விளையாடி சப்ர மஞ்சத்தில் படுத்து சொகுசாக வளர்ந்தவள் அவள். ஒரு அரசகுமாரனை மணக்கிறாள். அவன் நாலு பேரில் மூத்தவன். அவன்தான் பட்டத்து இளவரசன். அவனுக்குதான் முடிசூட்டு விழா நடைபெறவேண்டும் என்று நாடே எதிர்பார்க்கும் நேரம். ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. நம் கணவனுக்கு நாளை முடிசூட்டு விழா என்று அவள் மிதந்துகொண்டிருக்கும் வேளையில், அவன் வந்து சொல்லுகிறான், "மன்னித்துக்கொள் மனைவியே, நான் நாளைக்கு காட்டுக்கு செல்லப்போகிறேன், அப்பா உத்தரவு' என்று.
இதுவே இன்றைய தொலைக்காட்சித் தொடர் என்றால், பின்னால் "ஓ' என்ற சோக ஓலத்துடன் அவள் பிழியப் பிழிய அழுதிருப்பாள். அப்பாவுக்கோ அம்மாவுக்கோ போன் செய்து மாளிகையே கண்ணீரில் மிதந்திருக்கும். ஆனால் அவள் அழவில்லை. தானும் அவனுடன் செல்ல தயாராகிறாள். யாரும் அவளைக் காட்டுக்குப் போகச் சொல்லவில்லை. அவள் கணவன், "காட்டில் கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள் இருக்கும்' என்று கூறி அவளை தடை செய்கிறான். "வராதே, இங்கே அரண்மனையிலேயே இரு' என்று சொல்லுகிறான். அவள் அச்சப்படவுமில்லை அழவுமில்லை. அஞ்சாநெஞ்சத்துடன் காட்டுக்குப் போகிறாள்.
அடுத்து ஒரு காட்சி. காட்டில் அவளை அந்நிய நாட்டு அரசன் ஒருவன் கடத்திச் செல்கிறான். அப்பொழுது அவள் சமயோசிதத்துடன் வழியில் தன் நகைகளை கழற்றிப் போடுகிறாள். கணவன் அதைப்பார்த்தால் அவள் எந்த திசையில் கடத்தி செல்லப்பட்டாள் என்று அறிந்துகொள்வான் என்பதற்காக. அவள் மூக்கைச் சிந்தி அழுதுகொண்டிருந்தால் மூக்கு வேலை செய்யுமே அன்றி மூளை வேலை செய்யாது. கடத்தி சென்றவன் அவளை மிரட்டுகிறான் தன் இச்சைக்கு இணங்காவிடில் கொன்றுவிடுவேன் என்கிறான். சுற்றி யாரும் அவளுக்கு தெரிந்தவர்கள் இல்லை. அப்போதும் அவள் அழவில்லை. ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டு "நீ இதற்கு சமம்' என்று சொல்லாமல் சொல்லி அவனுக்கு அறிவுரை வழங்குகிறாள்.
பிறகு அவளுடைய கணவன் சேனையைத் திரட்டி அவளைக் கடத்திச் சென்ற அரசனுடன் போரிட்டு வென்று அவளை சொந்த நாட்டிற்கு அழைத்து வருகிறான். அடுத்த காட்சி. அவள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஊரார் ஏதோ சொன்னார்கள் என்று அரசன் அவளை காட்டுக்கு அனுப்புகிறான்.
இரண்டாம் முறை வனவாசம் என தெரிந்தது. இப்பொழுதும் அவள் அழவில்லை. காட்டுக்கு அவளைக் கொண்டுவிடும் இளவலிடம் "நான் கர்ப்பிணி என்பதை இப்போதே தெரிந்துகொள், பிறகு அதுவேறு பிரச்னையாக முளைக்க கூடாது என்கிறாள். அசாத்திய துணிவுள்ளவள்தான் இப்படி பேச முடியும். யார்மேலும் சார்ந்துக்கொள்ளாமல் தனியாக தன் இரட்டைப்பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கிறாள். வளர்த்து ஆளாக்கி அவர்களை தந்தையுடன் சேர்க்கிறாள். பின் அவள் விலகிச் சென்று விடுகிறாள்.
அவள் பெயர் சீதை. சீதையும் "பூமாலை புழுதி மண் மேலே' என்று அழுதிருக்கலாம். அவள் நெஞ்சத்தின் உரம் ஒன்றுக்காகவே அவளைக் கொண்டாடவேண்டும். சோக கீதம் பாட பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவள் வீராங்கனையாக வாழ்கிறாள்.
இவளைப்போல பல பெண்கள். இவள் கதையை நான் ஏன் கூறினேன் என்றால் எல்லோருக்கும் தெரியும் என்ற நம்பிக்கையில் தான்.
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் இருக்கும் மாணவிகளுக்கு இதே கதையைக் கூறினேன் . பிறகு அங்கு இருந்த கண்காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பும் சமயத்தில் அந்த ஆசிரமத்தின் சந்நியாசினிகள், சில மாணவிகள் என்னுடன் பேச விரும்புவதாக சொன்னார்கள். என்னவென்று கேட்டேன். பதினெட்டு வயது கூட நிரம்பாத அப்பெண்கள், "அம்மா, நாங்கள் உங்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறோம். இனி எப்போதும் நாங்கள் அழமாட்டோம். தைரியமாக இருப்போம்' என்றார்கள். பெருமையாக இருந்தது.
"இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்று ஒரு படம், பலரும் பாராட்டும் படம். அதில் வரும் குடும்பத் தலைவியை அவள் ஆங்கிலம் கற்றுக்கொண்ட பின்புதான் அவள் கணவனும் பெண்ணும் மதிக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய கருத்து. இதை விட்டுவிடுவோம். உயர்வான கருத்தையும் அதில் சொல்லியுள்ளார்கள். அதில் அந்த கதாநாயகி தேம்புவதில்லை, இறுதியில் அவள் ஒன்று சொல்கிறாள், "நான் என்னை மதிக்க கற்றுக்கொண்டேன்'.
இது தான் முக்கியம். நம்மை நாமே மதிக்க வேண்டும். அந்த முதல் படியில் நாம் அழுத்தமாகக் காலைப் பதித்தால் அழுகை தானாக கீழே இறங்கி விடும்.
கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

