சட்டத்தில் திருத்தம் தேவை
பாலியல் வல்லுறவு, கொலைக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் 16 வயது நிரம்பியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களை


பாலியல் வல்லுறவு, கொலைக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் 16 வயது நிரம்பியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களை 18 வயது நிரம்பியவர்களாகக் கருதி, விசாரித்து, உரிய தண்டனை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
முன்னேற்றமடைந்து வரும் ஒரு சமுதாயத்தில் நவீனமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்றவற்றால் சமுதாய மாற்றம் ஏற்படுகிறது. இதுவே சமுதாய சீர்குலைவிற்கும் காரணமாகிறது.
பல்வேறு கலாசாரம் கொண்ட மக்கள் ஒன்று கலக்கும்போது யார், யார் எந்தெந்த ஒழுக்கங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவையெல்லாம் அந்தப் பகுதிகளைச் சென்றடைகிறது.
தீயொழுக்கமானது குற்ற மனதில் வளர்ந்து, குற்றச் செயல் மூலம் வெளிப்படுகிறது. ஒருவன் அதிக அறிவுடையவனாக இருந்தாலும் அவனிடத்தில் மக்கள் பண்பு இல்லையென்றால் அவன் மரத்துக்கு ஒப்பாவான் என கூறுகிறார் வள்ளுவர்.
முன்பெல்லாம் இளஞ்சிறார்கள் தடம் புரளும் வயது 16-க்கு மேல்தான் இருந்தது. ஆனால், இன்றோ பிஞ்சில் பழுத்த பழம்போல, 12 வயதுக்குள்ளேயே அனைத்துக் கெட்டப்பழக்க வழக்கங்களிலும் மூழ்கி விடுகிறார்கள்.
இதற்கு அடிப்படை காரணம், பாலுணர்வை சித்திரிக்கும் திரைப்படங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மேலை நாட்டினரின் பழக்க வழக்கங்களை நாமும் பின்பற்றுவது, சிறுவயதிலே புகை, மது போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவது போன்றவையே.
இவ்வாறு அவர்கள் தூண்டப்படுவதால், வாழ்க்கை திசைமாறி, கொள்ளையடித்தல், பாலியல் வன்முறை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
புதுதில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அவசியம்.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதற்கு பின்னர் மாநில உருவாக்கம், மன்னர் மானியம் ஒழிப்பு உள்ளிட்டவைக்காக மட்டுமே, 36 முறை திருத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இன்றைய தேவைக்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டுவதோடு நின்றுவிடாமல், வருங்காலத் தலைமுறையினரின் தேவைகளைக் கணக்கிட்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கேற்ப, குற்றம் புரிய முற்படுவோரின் மனநிலையை அவர்களே மாற்றிக்கொண்டால் தவிர, குற்றங்களை அடியோடு ஒழிக்க முடியாது என்பது உண்மையாயினும்கூட, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மிகவும் அவசியம்.
1958-ஆம் ஆண்டில் நன்னடத்தைக் குற்றவாளிகள் சட்டத்தின்படியும், 1960-இல் மத்திய அரசின் குழந்தைகள் சட்டப்படியும் இந்தியாவில் இளஞ்சிறார் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
இன்று இந்தியாவில் சுமார் 75-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இளங்குற்றவாளிகளுக்கென தனி நீதிமன்றம் அமைத்ததன் நோக்கமே, அவர்களின் மனதில் குற்றத்தின் சாயலோ, குற்ற எண்ணங்களோ வராமல் இருக்கத்தான்.
இதனால்தான் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி அங்கு அவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், பண்பாடு, உள்ளத்தூய்மை குறித்து போதிக்கப்படுகிறது.
மொத்தத்தில் குற்றவாளிகளைச் சீர்திருத்தி அவர்களும் மனித சமுதாயத்தில் ஒருவராக கருதப்பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் உருவானதுதான் இந்த நீதிமன்றம். முன்பெல்லாம் இந்த நீதிமன்றம் மூலம் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்த இளஞ்சிறார்கள் திருந்தி சமூகத்தில் நல்ல நிலையை அடைந்தனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்திலோ குற்றம் செய்துவிட்டு சிறைக்குச் சென்று, அங்கே யார் பெரியவர் என சண்டையிட்டுக் கொள்வதும், வெளியே வந்து முன்பை விட பயங்கர குற்றங்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.
இந்நிலை மாற, சிறார்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் மாற்றம் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களைத் திருத்தக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
அவர்கள் குற்றச் செயல் புரிய பயப்படும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...