புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொடர வேண்டிய திட்டம்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியமான சமூநலத் திட்டங்களில் ஒன்றான "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட'த்தை பா.ஜ.க. அரசு கைவிட்டு விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2014, 9:22 pm

ரமாமணி சுந்தா்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியமான சமூநலத் திட்டங்களில் ஒன்றான "மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட'த்தை பா.ஜ.க. அரசு கைவிட்டு விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் பட்ஜெட் உரையும் அதற்கு முன்பு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் இந்தத் திட்டம் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு விவசாயப் பணியுடன் இத்திட்டம் இணைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டியது.

2006-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த மாபெரும் சமூகநலத் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வேலை செய்யத் தயாராக உள்ள பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆண்டில் நூறு நாள்கள் வேலை கிடைப்பதற்கான உறுதியை அளிக்கிறது.

முதலில், இருபது பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 2008-ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மக்களின் வேலை பெறும் உரிமைக்கு, (தண்ஞ்ட்ற் ற்ர் ரர்ழ்ந்) செயல்வடிவம் அளிப்பதோடு, கிராமங்களில் வாழ்வோர் வேலை தேடி நகரங்களை நோக்கிக் குடி பெயர்வதைத் தடுக்கவும், கிராமங்களின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தி மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவும் வழி செய்கிறது.

நாட்டிலுள்ள பல வறுமை ஒழிப்பு, வாழ்வாதார முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டம், மகளிர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் போன்றவர்களுக்கு வேலை வழங்கி, அவர்களுக்கு உரிய அதிகாரமளிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் உருவாகும் வேலைவாய்ப்புகளில், குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வேலை மகளிருக்காக ஒதுக்கப்படவேண்டும் என்றும் இந்தத் திட்டம் பரிந்துரைக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அப்பணிகளை எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்று திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் பணிகளின் பட்டியலில், தண்ணீர் சேமிப்பு, அறுவடை செய்தல், வறட்சி நிலையைத் தடுக்கும் முயற்சிகள், நீர்ப்பாசன வசதிக்காக கால்வாய்களை உருவாக்குதல், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி, நில அபிவிருத்தி, பாரம்பரிய நீர்ப்பாசன வசதிகளைப் புதுப்பித்தல், கிணறு, குளங்களில் தூர் வாருதல், விளைநிலங்களை மேம்படுத்துதல், வெள்ளம் வராமல் தடுப்பது, கிராமங்களை இணைக்க சாலைகள் அமைப்பது போன்றவை இடம் பெற்றன.

நாளடைவில் இந்தப் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டு, தானியங்கள் சேமித்து வைக்கும் கூடம், சுய உதவிக் குழுவினருக்குப் பொதுப் பணிமனை, வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி போன்ற இடங்களில் கழிவறைகள், விளையாட்டு மைதானங்கள், கிராமப் பஞ்சாயத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, இடுகாடு போன்றவற்றுக்கான கட்டடங்களைக் கட்டுவது, கிராமச் சொத்துக்களைப் பராமரிப்பது போன்ற பணிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாகச் செயல்படத் தொடங்கி சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் ஏழு கோடியே நாற்பது லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்றும், நாலு கோடியே எண்பத்தைந்து லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளன என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் வேலை பெற்றவர்களில், நாற்பது சதவீதத்திற்கும் மேல் பட்டியல் வகுப்பினர் அல்லது பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் மகளிரின் பங்கு ஐம்பது சதவீதத்தை எட்டியுள்ளது என்பது பாராட்டுதலுக்குரியது. இந்தத் திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு அவர்களுடைய கிராமத்திற்குள்ளேயோ அல்லது ஐந்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள்ளோ வேலை வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

ராஜஸ்தான் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் கிராமத்தை விட்டு வெளியே செல்ல விரும்பாத அல்லது முடியாத மகளிருக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மகளிருக்கு நாலு காசு சம்பாதிக்க வழி வகுத்ததுடன், பிற பெண்களுடன் பழகுதல், வீட்டை விட்டு வெளியே செல்லும் சுதந்திரம் போன்ற சமூக ஆதாயங்களையும் இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஓரளவு பொருளாதார சுதந்திரத்தையும் வழங்கி, மகளிரின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது இத்திட்டம்.

கேரளா, தமிழ்நாடு, ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் மகளிரே.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பயனாக கிராமப்புறங்களின் குடும்ப வருமானம் ஓரளவு உயர்ந்துள்ளது என்றும், பல பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச கட்டாயக் கூலி வழங்கப்படுகிறது.

அந்தக் கூலி, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக கிராமங்களில் விவசாயக் கூலியாட்களின் தினக்கூலியும் கணிசமாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதையே நிலச்சுவான்தார்கள் "விவசாயக்கூலி அதிகரித்துவிட்டது, வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை' என்று குறையாகக் கூறுகிறார்கள்.

ஆனால், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கூலி குறைவாக உள்ளதால் ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெரும்பாலான ஆண்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய விரும்பவுதில்லை.

காலம் காலமாக நமது நாட்டில் மகளிரின் தினக்கூலி ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான கூலி வழங்கப்படுகிறது.

அதனால், மற்ற வேலைகளிலும் இருபாலருக்கும் இடையே இருந்த கூலி வித்தியாசம் ஓரளவு குறைந்து வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் நூறு நாள்கள் வேலை அளிப்பதாக இத்திட்டம் உறுதி அளித்தாலும், இதுவரை சுமார் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான குடும்பங்களே நூறு நாள்கள் வேலை என்ற இலக்கை எட்டியுள்ளன.

இத்திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் வரை இருந்தும் பல மாநிலங்கள் இதற்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இத்திட்டத்தை அமல்படுத்துவதில் மெத்தனமாகவே உள்ளன.

இப்படி ஒரு வேலைவாய்ப்புத் திட்டம் இருக்கிறது என்று கிராமப்புற மக்கள் எல்லாருக்குமே ஓரளவு தெரிந்திருந்தாலும், இத்திட்டத்தின் விதிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே போதிய அளவில் இல்லை என்பது, சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய விழிப்புணர்வின்மை இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடக்கும் முறைகேடுகளுக்கு இடமளிக்கிறது.

தங்களது கிராமத்தை விட்டுக் கூலியாள்கள் வேலை தேடி நகரங்களுக்கோ பிற மாநிலங்களுக்கோ செல்வதைத் தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இப்படித் தாற்காலிகமாக குடி பெயர்வது பெருமளவு குறைந்திருந்தாலும், பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களினால் வேலை தேடி வெளியே செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த மாபெரும் சமூகநலத் திட்டத்தின் தேவையும் வெற்றியும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. உதாரணமாக, பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை அதிகமானோர் பயன்படுத்தவில்லை என்று தெரிகிறது.

அதேசமயம், இந்தத் திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில், குறிப்பாக மகளிரின் வாழ்வில், ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. பல மாநிலங்களில், கிராமத்தை விட்டு வெளியே செல்ல இயலாத முதியோரும் மகளிருமே இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தினால் அதிகம் பயனடைகின்றனர்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணித்து, அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப பணிகளை மேற்கொண்டு, இத்திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வளம் பெறச் செய்வது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும்.

கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர் (ஓய்வு), தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வு நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.