புறக்கணிக்கப்படும் தேசிய விழாக்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டாட்டமும் கும்மாளமும் இருந்தது. அன்று, வழக்கத்தைவிட முன்னதாகக் கிளம்பி உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்வார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டாட்டமும் கும்மாளமும் இருந்தது. அன்று, வழக்கத்தைவிட முன்னதாகக் கிளம்பி உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்வார்கள்.
பள்ளியில் கொடிக் கம்பத்துக்கு முன் வரிசையாக நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, கொடிப்பாட்டு பாடி தேசியக் கொடியேற்றியபின் தேசியகீதம் பாடப்படும். பின்னர் இனிப்பு வழங்கப்படும். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
ஆனால், இன்றோ, சுதந்திர தினம் என்றால் என்ன என குழந்தைகள் நம்மை கேள்வி கேட்கும் நிலையாகிப்போனது. இதற்குக் காரணம் பள்ளிக்கூடங்கள்தான்.
அரசுப் பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. பெயருக்கு சில ஆசிரியர்களையும் சில மாணவ, மாணவியரையும் வரவழைத்து ஏதோ ராணுவ ரகசியம்போல அவசர கதியில் கொடியேற்றி, சுதந்திர தினம், குடியரசு தினங்களைக் கடமைக்கு கொண்டாடுகின்றனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த அளவுக்குக் கூட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. பல பள்ளிகளில் இத்தகைய விழாக்களைக் கொண்டாட, திடலோ, கொடிக் கம்பமோ இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை.
கட்டண வசூல், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பது என இந்த இரு விஷயங்களில் மட்டுமே அக்கறை காட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் நமது தேசிய விழாக்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.
எண்ணிலடங்கா உயிர்களை பலிகொடுத்து நாம் பெற்ற சுதந்திரம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தற்கால சந்ததியினர் அறியும் நிலை முற்றிலும் இல்லை.
தேசத் தலைவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இளைய தலைமுறையினர் மறந்து வருவது வேதனையளிக்கிறது.
பெரியோர் மத்தியிலும் சுதந்திரத்தின் பெருமிதம் மங்கிப்போய்விட்டது. எல்லா வளமும் கொண்ட இந்திய திருநாட்டில் கடமை, பொறுப்பு, தேசப்பற்று இவற்றை மக்கள் மறந்துவிட்டதாக பல சமூக ஆர்வலர்கள் கூறியும் அவற்றை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.
பெரியோர் பொறுப்புடன் நடந்தால்தான் அவர்கள் குழந்தைகளுக்கு உபதேசிக்க முடியும். பல பெரியோர் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றைப் பொருள்படுத்துவதே இல்லை. ஏன் அவர்களே அதனைப் பொருள்படுத்துவதுமில்லை.
கடந்த ஆக. 15-ஆம் தேதியன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் சுற்றித் திரிந்த பெரியவர்களையும், பெண்களையும், மாணவ, மாணவியரையும் காண முடிந்தது.
தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர், அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி, தேசியக் கொடியைக் கொடுத்தபோது, வேண்டா வெறுப்புடன் அதனைப் பெற்றுக்கொண்டு சென்றனர்.
சுதந்திரத்தைப் பொருள்படுத்தாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதாகத் தோன்றுகிறது. இதனைப் போக்க சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் குறித்து அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இல்லையேல், வரும் தலைமுறைக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் என்ன, அவற்றை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற சந்தேகம் வந்துவிடும்.
தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா கொண்டாடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும். மறுத்தால் தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, இவற்றைக் கொண்டாடாத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்க வேண்டும்.
அரசு நிறுவனங்களில் விடுமுறையை மட்டுமே கவனத்தில் கொண்டு, சுதந்திர தினத்தை சுற்றுலா தினமாக கொண்டாடி வருகின்றனர். கும்பலாக சுற்றுலா தலங்களுக்குச் செல்கின்றனர்.
அந்த நாள்களில் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலா போகட்டும், சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு சுற்றுலா செல்லட்டுமே. தேசத்தை மறப்பவருக்கு அரசு வேலை ஏதற்கு? தேசப்பற்றுள்ள வேறு யாருக்காவது அந்த வேலை கிடைக்கட்டும்.
தேசிய விழாக்களைக் கொண்டாடாமல் இருப்போரை பணி நீக்கம் அல்லது பணியிடை நீக்கமாவது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுதந்திரத்தின், குடியரசின் அருமையையும் பெருமையையும் உணர்வார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...