ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காட்டை அழித்து கடலையும் அழித்து...

உலக நன்மைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக புருஷர்களாக, மனிதருள் மாணிக்கங்களாக மகாத்மா காந்தி, வினோபா பாவே, வள்ளலார் போன்ற ஆன்றோர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில், உயிர்கள் மீதும் இயற்கை மீதும் தாக்குதல் தொடங்கிவிட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2014, 8:02 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

உலக நன்மைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக புருஷர்களாக, மனிதருள் மாணிக்கங்களாக மகாத்மா காந்தி, வினோபா பாவே, வள்ளலார் போன்ற ஆன்றோர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில், உயிர்கள் மீதும் இயற்கை மீதும் தாக்குதல் தொடங்கிவிட்டது. புத்தனையும் ஏசுவையும் நபிகளையும் வணங்குவது போல் நடித்துத் தனக்கென்றே கோடி கோடியாகச் சொத்துகள் சேர்த்துக் கொண்டு, தன் வாரிசுகளின் சுபிட்சத்திற்காக வாழ்பவர்களில் சுரங்கம் சுரண்டும் தொழில் முதலைகளும் உண்டு. அரசியல் பெருச்சாளிகளும் உண்டு.

அன்று துரியோதனனும் சகுனியும் செய்த சூழ்ச்சி அரசியல் இன்றும் உண்டு. மொழி, இனம், சாதி, மதம், கொள்கை, தன்மானம் என்ற சொற்கள் அரசியல் சொக்கட்டானின் பகடைகள். நாட்டின் நலனில் அக்கறையின்மையால் பல்லுயிர் இம்சிக்கப்படுகிறது. இம்சிக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கம் அறிந்தும் நடக்கிறது. அறியாமலும் நடக்கிறது.

புவனகிரி மிராசுதார் ஒருவர் வள்ளலார் பக்தர். அருட்பா பிரார்த்தனையில் கலந்துகொள்ள வேக வேகமாகத் தன் வில் வண்டியில் வடலூருக்கு வந்திறங்கினார். நேரத்தில் வந்துவிட்டதாக அவர் வள்ளலாரிடம் தெரிவித்தபோது வள்ளலார் கண்ணீர் வடித்து, அவர் வந்து இறங்கிய மாட்டு வண்டி அருகில் சென்றார்.

மூச்சிறைக்க நின்று கொண்டிருந்த அந்தக் காளையிடம் சென்று, "என் பக்தனை மன்னித்துவிடு' என்று கூறி, அந்த மாட்டுக்கு தாகம் தீர தண்ணீர் வழங்கிப் புற்களையும் போட்டாராம். "உயிர்களை இம்சிக்காதே' என்ற பாடம் பயில வந்த மிராசுதார், காளையைச் சாட்டையால் அடித்து ரணமாக்கியதைப் போலவே, இன்றைய அரசியல்வாதிகளின் கொள்கை இம்சை செய்தல் என்றாகிவிட்டது.

மண் மீதும் பயிர் மீதும் உயிர் மீதும் காதல் இல்லாத மனித ஜன்மங்கள் வாழ்ந்து என்ன பயன் என்று நொந்துபோன வள்ளலார் போல், இன்று நமது பல்லுயிர்ப் பெருக்கம் கூண்டோடு அழிவதைப் பார்த்து நொந்து நோயுறுவதைத் தவிர வேறு வழி இல்லை.

மரங்களை எழுப்பி வனங்களை வளர்த்து எளிய வீடுகளைக் கட்டிய பொற்காலம் போய், மலையை வெட்டி மணலை அள்ளிக் கற்களை விற்கும் இன்றைய கற்காலத்தில், இயற்கையை இம்சித்துச் சுரங்கம் அமைத்து மனிதன் சுகம் காண்கிறான்.

உயிருக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என்று இயற்கை உருவாக்கிய குகைகளில் சமணர்கள் வாழ்ந்தனர். இன்றைய ஜைனர்கள் (சேட்டுகள்), வனங்களை அழித்துப் புதிய குகைகளை (சுரங்கம்) உருவாக்கினால் "உலோகாதாயம்' கிட்டுமா என்று சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சரகம் முன் உரிமம் பெற தவம் இருக்கிறார்கள்.

"மேக் இன் இந்தியா' என்று தன்மீது முத்திரை பதித்துக் கொண்ட பா.ஜ.க.வின் மோடி அரசாங்கம், இயற்கை வளத்திற்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் ஆபத்து என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்களை வேக வேகமாக, சுத்தம் செய்து வருகிறது. உயிர்ச் சூழல் - பல்லுயிர்ப் பெருக்கத் தடை நீக்கமும், "ஸ்வச் பாரத்' ஒருங்கிணையப்பட்டு, இந்தா உரிமம் என்று தவமிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளன.

சுமார் 1,600 ஹெக்டேர் காடுகள், 92 வகையான திட்டங்களுக்கு, குறிப்பாக, சிறுதொழில் என்ற போர்வையில், ஆண்டுக்கு 80 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி என்ற வரம்பின் கீழ், புதிய சுரங்கங்களுக்கு அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நிலக்கரி ஊழலில் சிக்கித் தவிக்கும் முந்தைய மன்மோகன் அரசின் பிடியிலிருந்த "கோல் இந்தியா' இன்று மோடியின் கையில்.

இன்றைய பிரதமர் கோல் இந்தியாவிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், முகத்தில் கரி பூசிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படலாம். தவிரவும், வனத் துறை சுத்தம் செய்து (clearance) வழங்க இருக்கும் வனங்கள், வனச் சரணாலயங்களின் எல்லைப் பகுதி என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்தியாவில் உள்ள வனச் சரணாலயங்கள் எவையெவை? அவை எவ்வளவு நிலப்பரப்பு என்று எவராயினும் யோசித்தது உண்டா? நாம் யோசிக்காவிட்டாலும் ஐ.நா.வின் பூமிப் பாதுகாப்பு அமைப்பு யோசித்து பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், ஆண்டுதோறும் பூமி உச்சி மகாநாடு கூட்டி இந்தியாவின் சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்து ஐ.நா. நினைவுபடுத்தத் தவறாது.

நமது அமைச்சர்களும் ஒரு காதில் வாங்கி மறு காதின் வழியே வெளியேற்றி விடுவார்கள். புவி வெப்பமாதல், தடுமாறும் தட்பவெப்பம் ஆகியவற்றின் தீர்வு பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்பில் உள்ளது.

பல்லுயிர்ப் பெருக்கம் என்பதில் பூமியில் பிறந்த மானிட ஜன்மம் முதல் சகல வகைப் பயிர்த் தாவரங்களும், பல வகை விலங்கினங்களும், பல வகைப் பூச்சிப் புழுக்களும், பல வகை நுண்ணுயிரிகளும் அடங்கும். ஊர்வன, நடப்பன, பறப்பன எல்லாம் உண்டு. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இதன் பிணைப்பைப் பற்றிச் சொல்வதானால், காட்டில் 500 வருஷ வயதுள்ள மரம் ஒன்றைக் கவனித்தால் அதைச் சுற்றிப் பல கொடிகள், ஏராளமான பொந்துகள் பறவைகளுக்குப் புகலிடமாயிருக்கும். பறவைகளுக்கு வீடு என்பது மரங்களே.

பறவைகளைத் தவிர பறவைக்கு எதிரியான பாம்புகளும் மரப்புற்றுகளில் காணப்படும். காக்கையும் கூடு கட்டும். குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. காக்கை கட்டிய கூட்டில் குயில் முட்டையிடும். குயில் முட்டையைத் தன் முட்டையென்று அடைகாத்துக் குஞ்சு பொறித்து வளர்க்கும் காகம் போல், ஓசியில் வாழ்வது பாம்பு. கரையான் வளர்த்த புற்றிலும், எலி தோண்டிய வளையிலும் பாம்பு வாழும்.

எல்லா வினோதங்களையும் அந்த 500 வயது மரத்தின் கீழ் காணலாம். திடீரென்று யானை வந்து அந்த மரத்தின் கிளையை ஒடித்து இலைகளை உண்ணும். மர இலைகள் யானையின் உணவு. அந்த மரங்களின் கீழே உள்ள மண்ணில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள பல்லுயிர்களுக்கும் வாழ்வு தரும் அந்த மரம் கூடுதலாக மழை பெய்யும்போது மரங்களைச் சுற்றியுள்ள பொந்துகள் வழியே மண்ணுக்குள் சென்று மரத்தின் வேர் வழியே பயணம் செய்து மண்ணுக்கு அடியில் உள்ள நீரூற்றுக்கு மழைநீர் செல்லும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் மரங்களே.

மரங்களின் பசுமையால் விண்ணில் உஷ்ணம் குறைகிறது. பூமிக்கு அடியில் நீருற்றுப் பெருகுகிறது. இப்படிப்பட்ட ஒரு மரத்தை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியக் கோணம் இதுவே. மற்றொரு கோணமும் உண்டு.

உலகில் உள்ள ஒரே வகைத் தாவரத்திலும் விலங்குக்குள்ளேயும்கூட நிறம், மணம், குணம், உயரம், நீளம், அகலம் போன்ற கனபரிமாணத்தில் வேற்றுமைகள் உண்டு. மஞ்சள் நெல், சிவப்பு நெல், கருப்பு நெல், வெள்ளை நெல் உண்டு.

காராம் பசு, செவலை, வெள்ளை, புள்ளி என்று பசுவில்தான் எவ்வளவு வகை? திமில் உள்ளது, திமில் இல்லாதது, குட்டைப் பசு, உயரப் பசு என்று சொல்வதுபோல், ஒவ்வொர் உயிரையும் சொல்லலாம். மனிதர்களுக்கும் கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, குட்டை, நெட்டை, குண்டு, ஒல்லி என்றெல்லாம் வேற்றுமைகள் உண்டு.

ஆனால், மனித இன நிறம் நான்குதான். ஐந்தாவதாக எதிலும் சேராத இந்திய மனிதனின் நிறம், பல கலப்புகளின் அவியல். வெள்ளையிலும் சேராது. கருப்பிலும் சேராது. சிவப்புமல்ல; மஞ்சளுமல்ல, மாநிறம் - அதிகம். இப்படிப்பட்ட நிற வேற்றுமை, குணம், ருசி வேற்றுமையையும் பல்லுயிர்ப் பெருக்கம் குறிக்கும். பல்லுயிர்ப் பெருக்க எதிரி மனிதனே. மனித நிறத்தை மறந்துவிட்டு கானகத்தை நினைப்போம்.

கானகங்களிலும் கடலிலும் உள்ள பல்லுயிர்ப் பெருக்கங்களின் காப்பிடங்களை ஆங்கிலத்தில் பயோ ஸ்ஃபியர் ரிசர்வ்ஸ் (Bio sphere reserves)  என்பார்கள். குறிப்பாக, உலகிலேயே சிறப்புமிக்க கடல் காப்பிடம் மன்னார் வளைகுடா. இது இலங்கை - இந்திய கடல் எல்லையில் 555 சதுர கி.மீ. போட்டி போட்டுக் கொண்டு விசைப் படகைப் பயன்படுத்தி அரிய வகை மீனினங்கள் அழிவதை ஓரளவுக்கு ராமர் பாலம் காப்பாற்றி வருகிறது. கப்பல் விட மாற்றுப் பாதை கண்டுபிடித்து கடல் மண்ணைச் சுரண்டும்போது இந்தியா சுத்தமாவதைப் போல் இக்கடலும் சுத்தமாகும்.

பல்லுயிர்க் காப்பிடங்களில் 74 தேசியப் பூங்காக்களும் 414 சரணாலயங்களும் உள்ளன. கணக்குப்படி எல்லாம் சரியாக இருந்தால், காப்பிட நிலப்பரப்பு 1,40,285 சதுர கி.மீ. முந்தைய அரசுகள் சுரங்க உரிமை, நீர் மின்சார உரிமை வழங்கி அழிக்கப்பட்ட கணக்கு தெரியாவிட்டாலும், இந்த நவம்பர் மாத நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 1,600 ஹெக்டேர் வனம் சுத்தமாகும் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சுரங்கம் சுரண்டப்படலாம்.

நிலத்தில் மண்ணையும் காட்டையும் அழித்த மனிதப் பசி, இன்று கடல் மண்ணை அழிக்க முன்வந்துவிட்டது! ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் பற்றிய ஆய்வே தொடக்க நிலையில் உள்ளபோது, ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துலக கடல் படுகை ஆணையம் (International Sea Bed Authority)  இந்தியா, சீனா, சிங்கப்பூர், பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து நிறுவனங்களுக்கு தேசியக் கடல் எல்லைக்கு 370 கி.மீ. தாண்டிக் கடல் மண் அள்ள ஒப்புதல் வழங்கிவிட்டது!

மனிதனின் மண்ணாசை நதிகளைத் தாண்டி கடலுக்கப்பாலும் பரவி விட்டதே! இதனால், இம்சிக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கங்களுக்கு எல்லையில்லாமல் போய்விட்டதே! கலியுகம் முற்றிவிட்டதோ!

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.