தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தென் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி ஆசிய கண்டம் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டம் வருகிறது. அங்கு பல மன்னர்கள் இருந்தாலும் அவர்களின் குறிப்பிடத்தக்க அரசாக இருந்தவை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகியவை.

News image
Updated On :21 டிசம்பர் 2014, 8:26 pm

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

தென் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி ஆசிய கண்டம் முடிந்த பிறகு ஐரோப்பா கண்டம் வருகிறது. அங்கு பல மன்னர்கள் இருந்தாலும் அவர்களின் குறிப்பிடத்தக்க அரசாக இருந்தவை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகியவை.

இந்த நாடுகள், மொழியாலும், கலாச்சாரத்தாலும் மாறுபட்டவையாக இருந்தாலும் மதத்தால் ஒன்றுபட்டவை. இவர்களுக்கிடையே நடந்த சண்டை ஐரோப்பாவோடு முடியவில்லை. அவர்களுடைய காலனி ஆதிக்க நாடுகளுக்கெல்லாம் உலக யுத்தமாக நீண்டு முடிவடைந்து லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர்.

உலக அமைதிக்காக ஒரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டாலும் நலிந்து போன தங்களுடைய பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய வெறுப்பையும், சண்டையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு புதிய அமைப்பை பற்றி சிந்திக்க ஆரம்பித்தன.

1950-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி பிரான்சு நாட்டினுடைய வெளிநாட்டு அமைச்சர் ராபர்ட் ஸ்சுமான் முயற்சியால் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நிலக்கரி மற்றும் இரும்புக்கான கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இது 50 ஆண்டுகளில் ஐரோப்பாவின் முகத்தையே மாற்றிவிட்டது. "ஐரோப்பிய பொருளாதார கூட்டு' என ஆரம்பித்த கோஷம் 1989-இல் பெர்லின் சுவரை இடித்து வளர்ச்சிப் பாதையில் அடி எடுத்து வைத்தது. 2004-இல் ஏழு நாடுகள் சேர்ந்து தொடங்கிய ஐரோப்பிய யூனியன் 2007-இல் பத்து நாடுகளானது. இன்றைக்கு ஐரோப்பிய யூனியனில் 28 உறுப்பு நாடுகள் இருக்கின்றன.

ஐரோப்பிய வியாபாரிகளின் உலக வாணிபம் சுருங்கி விட்ட நிலையில் போக்குவரத்து செலவு அதிகரித்து விட்டதால் நாட்டு எல்லைகளை தாண்டிய சந்தைகளை தேட ஆரம்பித்து விட்டனர். இதனால், ஐரோப்பாவின் 50 கோடி மக்களும் ஒரு குடையின் கீழ் வந்தனர். அன்று வியாபாரத்துக்கு சண்டையிட்ட ஐரோப்பியர்கள் இப்போது வியாபாரத்துக்கு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் வியாபாரம் ஐரோப்பிய ஒற்றுமைக்கு வழிகோலியது. ஐரோப்பிய முதலீட்டு வங்கிகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு விட்டு நாடு செல்லும் சாலைகளும், ரெயில்களும் புழக்கத்தில் வந்தன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல் அனைத்து நாட்டிற்கும் ஒரே பணச் செலவாணியாக யூரோ என்ற பணம் புழக்கத்தில் வந்தது. ஒன்றுபட்ட நாடுகள் தங்கள் கடன் சுமையை குறைக்க ஆரம்பித்தன.

ஒன்றுபடுகிறோம் என்பதற்காக நாடுகள் தங்களுடைய கலாச்சாரத்தையும், மொழியையும் இழந்துவிட வில்லை. "ஷெங்கன் விசா' என்ற பெயரில் வழங்கப்படும் அனுமதி மூலமாக ஒரே விசா மூலம் 28 நாடுகளில் பயணிக்கலாம்.

நேரு சொன்ன "வேற்றுமையில் ஒற்றுமை' இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பயணித்திருக்கிறது. இதன் தொடக்கம் டிசம்பர் 2000-இல் நைஸ் என்ற ஊரில் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து முதலில் இணைந்தன. மார்ச்சு 2000-இல் லிஸ்பன் ஒப்பந்தத்தின் மூலமாக ஐரோப்பிய ஒற்றுமைக்கு விதை ஊன்றப்பட்டது.

அக்டோபர் 2004-இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசியல் நிர்ணய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இதை இரண்டு நாடுகள் நிராகரித்ததால் மீண்டும் கூடிப்பேசி லிஸ்பன் ஒப்பந்தம் 13.12.2007-இல் அமலுக்கு வந்து 01.12.2009 முதல் ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட ஆரம்பித்தது.

லிஸ்பன் பிரகடனத்தால் விடுதலை, ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், சட்டத்தின் செயலாக்கம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் உறுப்பினராகலாம் என அறிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டாட்சி அமைப்பு அல்ல. உறுப்பு நாடுகள், கவுன்சில் எனப்படும் சபையின் மூலமாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் மூலமாகவும் இயங்குகின்றன. கவுன்சில் எனப்படும் மேல் சபையில் நாடுகளில், தலைவர்களே உறுப்பினர்கள்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு உறுப்பு நாட்டு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பல்கேரியாவின் முன்னாள் பிரதம மந்திரி வான் ரோம்பி டிசம்பர் 1, 2009-இல் ஒன்றியத்தின் முதல் தலைவரானார்.

கவுன்சில்தான் இதன் உச்ச கட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளிள் பிரதிநிதிகள் அடங்கிய மந்திரி சபை உண்டு. உறுப்பு நாடுகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் உண்டு.

2009 கணக்கின்படி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 236 உறுப்பினர்கள் உண்டு. சிறிய நாடான மால்தாவிற்கு ஐந்து உறுப்பினர்கள், பெரிய நாடான ஜெர்மனிக்கு 99 உறுப்பினர்கள். இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் தலா 72 உறுப்பினர்கள். மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கை மாறுபடும்.

ஒரே சந்தை ஒரே பணம், ஒரே விசா என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய சாதனையாகும். உறுப்பு நாடுகளில் வியாபாரத் தடங்கல்கள் கிடையாது. போட்டி வியாபாரத்தால் பொருளின் தரமும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளன என்பது உண்மை. நாடு விட்டு நாடு போய் வேலை பார்ப்பதும் போக்குவரத்தும், சுற்றுலாவும் ஐரோப்பாவில் எளிதாகிவிட்டன.

ஐரோப்பிய யூனியனின் தலைநகரம் புருùஸல்சில். ஒன்றியத்தின் புதிய உறுப்பினராக சேர விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. ஒரு நாடு புதிய உறுப்பினராக ஆவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையம் ஜனநாயகத்தின் மீது அழுத்தமான உடன்பாடும் வேண்டும். அந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியிருக்க வேண்டும். சிறுபான்மையருக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

சுதந்திரமான பொருளாதாரமும், திறந்த பொருளாதாரச் சந்தையும் இருக்க வேண்டும். மனித உரிமையே பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையாய கடமையாக கருதப்படுகிறது. உறுப்பு நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு ஆண்டு பதவி வகிப்பர்.

இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூலம் டிசம்பர் 9 2009-இல் போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பன் நகரில் கையெழுத்தான லிஸ்பன் உடன்படிக்கை. இது கூடுதல் ஜனநாயகம், கூடுதல் வெளிப்படை தன்மை என்ற கோஷத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன்படி, 50 கோடி ஜனத்தொகையுள்ள ஒன்றியத்தில், 5-இல் ஒருவர் அதாவது 10 கோடி மக்கள் கையெழுத்திட்டு ஒரு கோரிக்கையை ஒன்றியத்தின் தலைமைக்கு அனுப்பலாம்.

தன்னுடைய சாம்ராஜயத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லை என்று ஒரு காலத்தில் மார்தட்டிக் கொண்ட இங்கிலாந்து, இன்றைக்கு சிறிய நாடாக சுருங்கி விட்டது. பழைமையை மறக்கவும், மாற்றவும் இயலாத இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுடன் ஒட்டியிருக்கவில்லை என்பதால் இன்னமும் யூனியனில் முழுமையான பூகோளரீதியான நாடாகவில்லை. யூரோ பணத்தை தன்னுடைய நாட்டு பணமாக அங்கீகரிக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கென தனி நீதிமன்றம் உள்ளது. தங்களுடைய பிரச்னையை தாங்களே தீர்த்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடு அது. உறுப்பு நாடுகள் தன்னிச்சையாக செயல்பட முற்பட்டால் அதைத் தடை போட ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

1952-இல் பாரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்ட நிலக்கரி மற்றும் இரும்புக்கான ஒப்பந்தம், 1957-இல் ரோம் நகரில் "ஐரோப்பிய பொருளாதார அமைப்பு'-ஆக மாறியது. அக்டோபர் 29, 2004ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க ரோம் நகரில் உடன்படிக்கை ஏற்பட்டது.

2005-இல் பிரான்சும், நெதர்லாந்தும் பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பில் இந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 13, 2007-இல் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பர்னில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகளால் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

ஏழு ஆண்டுகளில் ஒன்றுபட்ட ஐரோப்பா ஒரு மாபெரும் சந்தியாக உருவெடுத்துள்ளது. டிசம்பர் 1, 2009-இல் ஐரோப்பிய ஒன்றியம் செயல்முறைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தது. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உலகை ஆண்ட ஐரோப்பியர்கள் கால மாற்றத்தால் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று இணைந்து நிற்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஏக்கர், ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திற்கும் அரை ஏக்கர் என நிலத்தை ஒதுக்கீடு செய்து தங்களுடைய பிராந்தியத்தின் சிறந்த கட்டிடங்களை அங்கு மாதிரியாக அமைத்தால் சுற்றுலா வளர்வதோடு தேசிய ஒருமைப்பாடும் மேலோங்கும்.

அன்றே சொன்னார் மகாகவி பாரதியார், "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே } நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!'

கட்டுரையாளர்: சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.