ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆண்களோடு பெண்களும்...

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசுப் பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

News image
Updated On :23 பிப்ரவரி 2014, 7:36 pm

இரா. மகாதேவன்

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசுப் பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

முடிந்தவரை அரசுப் பெண்கள் பள்ளியில் ஆண்களும், ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டாம் என கருதியுள்ளதாகவும், இதில் பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு உள்ளதாகவும் ஆசிரியர்களிடையே கூறப்படுகிறது.

அண்மையில் ஊடகங்களில் வெளியான ஆண் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த செய்திகளும், இந்தச் செய்திகளால் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு எதிராகக் கொண்டுள்ள மனப்பான்மையுமே இதற்குக் காரணம்.

ஆனால் இது சரியான முடிவா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தற்போது, இளைஞர்களின் வேலைவாய்ப்பை நிர்ணயிப்பது போட்டித் தேர்வுகளும், நேர்முகத் தேர்வுகளும் தானேயொழிய, அவர்கள் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் அல்ல.

இந்த நிலையில் இன்று வேலைவாய்ப்புகளில் உயர் பதவிகளைப் பெறுவோர் பெரும்பாலும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவ, மாணவிகள்தான் என்பது நிதர்சனம்.

இதற்குக் காரணம் அங்கு கல்வி கற்பிக்கப்படும் முறை, ஆசிரியர்களின் அணுகு முறை, இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்விமுறை போன்ற திட்டமிட்ட பல முறைப்படுத்துதல்தான்.

இங்கு தவறுகள் இல்லாமலோ, குறைவாகவோ இருக்கக் காரணம் கட்டமைப்பு. மேற்பார்வையிடுதலில் காட்டப்படும் தீவிரம், தவறுகளை உடனடியாக தலைமையிடம் எடுத்துச்செல்ல வாய்ப்பு, தவறு நேர்ந்திருந்தால் உடனடி நடவடிக்கை போன்றவை அவர்களை தவறு செய்ய தூண்டுவதில்லை.

ஆனால், அரசுப் பள்ளிகளில் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. தவறு நேர்ந்தவுடன் ஆசிரியரிடம் விசாரிக்கும் அதிகாரம் தலைமை ஆசிரியருக்கு இருந்தும், பிரச்னை பெரிதாகும் வரை தன் அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதோ, அல்லது அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்படுவதோ இல்லை.

காரணம், தவறு செய்யும் ஆசிரியரின் அடாவடித்தனம், மிரட்டல், அரசியல் செல்வாக்கு போன்றவையே. நடவடிக்கை கடுமையாக இருக்குமேயானால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை.

தற்போது, உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளால், பணி வாய்ப்பு என்பது தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ சுருங்கி விடுவதில்லை. திறமையுள்ள ஆண், பெண் எவரொருவரும், இந்த உலகின் எந்த மூலையிலும் பணி வாய்ப்பை பெறமுடியும். இதற்கு கல்வி அறிவோடு, தனித்திறமைகளும் அவசியம்.

இவற்றில் ஒன்றாக உள்ளதுதான் குழு மனப்பான்மை. இதில் குழுவாக வேலை செய்யும்போது, ஆண்கள் தலைமையில் பெண்களும், பெண்கள் தலைமையில் ஆண்களும், ஒரே குழுவில் ஆண், பெண் இருபாலருடனும் வேலை செய்ய வேண்டியது வரும்.

இந்த நிலையில், தொடக்கப் பள்ளிகளில் இருந்தே ஆண்களுக்கு தனி பெஞ்ச், பெண்களுக்கு தனி பெஞ்ச் என்று பிரித்து வைக்கும் நாம், ஆறாம் வகுப்புக்குப் பிறகோ அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருந்தோ ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என இருபாலரையும் முழுமையாகப் பிரித்துவிடுகிறோம்.

இதனால், சில பெற்றோர்கள் பிளஸ் 2-வுக்குப் பிறகும்கூட தங்கள் பெண்களை பெண்கள் கல்லூரிகளைத் தேடிச்சென்று சேர்க்கும் மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. இதே நிலை மாணவர்களுக்கும் உள்ளது.

இதனால், பால் வேறுபாடுகளில் திளைக்கும் இருவரும் ஏதேனும் ஓரிடத்தில் இணையும்போது, பருவ தூண்டுதலால் காதல் வயப்பட்டு கல்வியினின்று பாதைமாறிச் சென்று சீரழிந்துவிடுகிறார்கள்.

இந்த நிலையில், ஆண், பெண் மாணவர்களை ஒன்றாக அமர்த்தி படிக்க வைக்கும் நிலையில் நாம் இல்லாவிட்டாலும், இருபள்ளிகளிலும் இருபால் ஆசிரியர்களும் பணியாற்றும் சூழ்நிலையையாவது ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

சில பெண்கள் பள்ளியில் ஏற்படும் காலிப் பணியிடங்களை பெண்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என காலியாக வைத்திருப்பதும், இதனால், பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களால் பிரச்னை என்றால், ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்களாலும் பிரச்னை இல்லாமல் இல்லை.

கற்பு நிலை என்று வந்தால், அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்றார் பாரதி. அது பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திலும் இருக்க வேண்டும்.

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதில்லை. களைக்கு பயந்து விவசாயத்தை விடுவதில்லை. எனவே, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பல்கலை வளர்க்கத் தடையாக இருக்கும் களைகளை வேரோடு அழிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.