ஓய்வு பெற்ற உயர்ஆட்சிப்பணி அதிகாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பேராண்மை மனு தாக்கல் செய்தார்கள். (T.S.R.Subramanian and ors vs Union of India) (பேராண்மை மனு எண் 82 மற்றும் 234 2011.) அவர்கள் கேட்டதெல்லாம் இந்திய ஆட்சி பணி அலுவலர்களின் சுதந்திரத்தையும், நேர்மையையும் அச்சமின்மையையும் பாதுகாக்க பல சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை என்பதுதான். அக்டோபர் 2013இல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு 1) பாராளுமன்றம் விரைவில் இம்மனுவின் நோக்கங்களை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு ஆட்சி பணி வாரியம் (Civil Service Board) அமைக்க வேண்டும். 2) ஆட்சிப்பணி அதிகாரிகளை நிர்வாக நலனுக்கு அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாற்றல் செய்வது பொது நலத்திற்கு ஊறு விளைவிக்கும். ஒரு பதவியில் ஒரு அதிகாரி குறைந்தபட்ச காலம் இருக்க வேண்டும். இந்த காலவரையை நிர்ணயம் செய்யவேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால் தான் அதிகாரிகள் தங்கள் அலுவலில் மேற்கொண்ட இலக்குகளை அடையவும், பொது நல கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று கூறியது. அப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் குறித்த திட்டங்களுக்கு எப்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும், எவ்வாறு திட்டங்களை வரிசைப்படுத்தி செயல்படுத்தலாம் என்று அதிகாரிகள் வழி வகுத்துக்கொள்ள முடியும் என்றும் கூறியது. அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வது நல்ல அரசாண்மையின் லட்சணம் அல்ல என்றும் தீர்ப்பு வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள், இந்த காலவரையை தீர்மானம் செய்யவேண்டும் என்றும் இந்த தீர்ப்பு அறிவுறுத்தியது. 3) அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எழுத்துமூலமாகத்தான் இருக்கவேண்டும். வாயால் சொல்லுவது சரியல்ல. எழுத்து மூலம் இருப்பதுதான் ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையான செயல்பாடு என்றும் அப்பொழுதுதான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் விடைஅளிக்கமுடியும் என்றும் அந்த தீர்ப்பு கூறியது .
2004 இல் ஹோடா குழுவின் பரிந்துரைகள், சந்தானம் குழுவின் பரிந்துரைகள், லஞ்ச ஊழல் தடுப்பு பற்றிய குழுவின் பரிந்துரைகள் முதலியவற்றைப் பரிசீலித்தபின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் மனுதாரர்களாக கையெழுத்திட்டவர்கள் முன்னாள் கேபினெட் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.கோபாலசுவாமி, அமெரிக்காவிற்கு முன்னாள் இந்திய தூதுவர் அபித் ஹுசெய்ன், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ஜொகீந்தர் சிங், முன்னாள் மணிபுரி மாநிலத்தின் ஆளுநர் வேத பிரகாஷ் மர்வாஹ மற்றும் 77 பேர். அனைவரும் தத்தம் பதவியில் சிறப்பாக கடமையை ஆற்றி மக்களின் மதிப்பை பெற்றவர்கள். அவர்கள் தீர ஆலோசித்தபின்தான் இந்த பேராண்மை மனுவை தாக்கல் செய்திருப்பார்கள் என்று நாம் நம்பலாம். இன்று நடைமுறையில் என்ன நடக்கிறதோ அது நாட்டிற்கு நல்லது இல்லை என்று உணர்ந்து தான் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார்கள். ஆட்சிப் பணியாளர்கள் (civil servants) தான் தூய அரசாட்சிக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள் என்று தொலைக்காட்சியில் முன்னாள் இந்திய தூதுவர் கே.சி. சிங் கூறினார். அவர்கள் முதுகெலும்பு போல் என்று கூட சொல்லலாம். நேர்மையாகவும் அச்சமின்றியும் தங்களுக்கு இட்ட பணிக்கு பல படிகள் மேலே உயர்ந்து நாட்டின் நலனுக்காக உழைத்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் உள்ளார்கள். அவர்களில் சிலரே இந்த மனுதாரர்கள். இன்றும் இது போன்ற அதிகாரிகள் நாடெங்கும் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி மாற்றம் செய்தோ, தாற்காலிக பணி நீக்கம் செய்தோ அந்த முதுகெலும்பை வளைக்க முற்படும்பொழுது அது தலைப்புச் செய்தியாகி நாம் படிக்கிறோம்.
இப்படி ஒரு தலைப்புச் செய்தி தான் மத்திய சுகாதார செயலாளர் கேசவ் தேசிராஜுவின் மாற்றமும். அரசுத்துறை பணியில் மாற்றல்கள் என்பது இன்றியமையாத ஒன்று. இதில் ஒரு பிரச்னையும் இல்லை. மாற்றல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை பொதுவாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த மாற்றல், அதிகார துஷ்ப்ரயோகம் என்றும் நன்மை செய்யும் எண்ணத்திற்கு மாறுபட்டுள்ளது என்றும், ஆதாரம் இருந்தால் வெற்றி பெற முடியும். தேசிராஜுவை மாற்றல் செய்த உத்தரவை எதிர்த்து மன நல மருத்துவர்களும் அந்த துறையில் இருப்பவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.
சுகாதார செயலராக அவர் பணியேற்றது 2013 பிப்ரவரியில் தான். ஒரு ஆண்டுகூட நிறைவாகவில்லை என்கிறார்கள். ஒரே அதிகாரியை நம்பி எந்த துறையும் இல்லை என்று வாதம் செய்யலாம். அதுவும் உண்மை தான்.
ஆனால், அரசுத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் ஏன் குறைந்தபட்ச காலவரை விதிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள்? அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கவேண்டும். துவக்கிய பணியை நிறைவு செய்யும் சாத்தியம் இருக்கும், ஓரளவு தொடர்ச்சியும் இருக்கும். இது எல்லாமே பொதுநலனுக்காக தான். தேசிராஜு இன்னும் ஒரே ஒரு வருடம் அதே பதவியில் இருந்திருந்தால்கூட பல சீரிய திட்டங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக மன நல சட்டமும் நல்ல விதமாக அமலுக்கு வந்திருக்கும் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை எப்படி பாதுக்காக வேண்டும் என்றும் அவர்கள் ஆரோக்யத்தை எப்படி பேணவேண்டும் என்றும் புரிந்துகொண்டவர் அவர் என்றும் மன நல மருத்துவர்களும், ஆர்வலர்களும் அத்துறையில் பணிபுரியும் பேராசிரியர்களும் கூறுகிறார்கள். இவர்கள் மட்டும் அல்ல, பொதுவாகவும் சுகாதாரத்துறையில் ஈடுபட்டவர்களும் இந்த மாற்றத்தை வரவேற்கவில்லை
மன நோயாளிகள், சமூகத்தின் விளிம்பில் வாழுபவர்கள். அதுவும் ஏழையாக இருந்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக அவர்கள் யார் கண்ணிலும் கருத்திலும் படமாட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களுடைய உரிமைகளையும் அரசின் கடமைகளையும் புரிந்துகொள்வது அரிது. அவர்களுடைய ஜீவாதார உரிமைகள் எளிதில் பறிபோய்விடும். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணவேண்டும் என்றால் இவர்களுடைய நலனுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த பணியை நன்கு செய்பவர்களை செயல்பட விட வேண்டும்.
இந்த மாற்றம் நிர்வாக ரீதியாக வழக்கமாகச் செய்யும் மாற்றம்தான் என்கிறது அரசு. ஆனால் அண்மையில் ஒரு விழாவில் பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி தேசிராஜுவின் மாற்றம் சரியான காரணங்களுக்காக செய்யப்படவில்லை என்றார். அரசு அதிகாரிகளில் சிலர் அசைக்கமுடியாமல் நேர்மையாக இருப்பார்கள், சிலரோ அசைக்கமுடியாமல் ஊழல் பேர்வழிகளாக இருப்பார்கள். நடுவில் இருக்கும் பெரும்பான்மையினர் மதில் மேல் பூனைகள். எந்தப் பக்கமும் சாயலாம். ஆகையால் ஊழல் ஒழிப்பு சட்டங்களை அமல் செய்தால் மட்டும் போதாது, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்ற பயமும் நேர்மைக்கு பலன் உண்டு என்கிற நம்பிக்கையும் உறுதியாக வேண்டும். எளிதில் தப்பிக்கலாம் என்று தோன்றினால் நடுவில் இருப்பவர்களுக்கு தவறு செய்ய ஏதுவான சூழ்நிலை உருவாகும் என்று வலியுறுத்தினார்.
அதுபோலவே, நேர்மையான அதிகாரிகளை ஆட்சியில் இருப்பவர்கள் பந்தாடினால், மதில் மேல் பூனைகளுக்கு "என்னத்த நேர்மையாயிருந்து... என்னத்த கண்டோம்' என்று தோன்றுவது இயற்கை.
தேசிராஜுவை சுகாதாரத் துறையிலிருந்து திடீரென்று மாற்றியது குறித்து சில பிரமுகர்களும் ஒய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகளும் சேர்ந்து பிரதம மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இது போல் உயர் நிலை அதிகாரிகளை மாற்றினால் பொது மக்கள் மனத்தில் அவநம்பிக்கையும் ஏமாற்றமும் அதிகமாகும், இதனால் அரசிலிருந்து வேற்றுமைப்பட்ட உணர்வு மேலோங்கும் என்று அவர்கள் வருந்தியுள்ளார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கமும் தேசிராஜுவுக்கு ஆதரவு தருவோம் என்று கூறியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. அனைத்திந்திய மருத்துவ ஆலோசனைக் குழுவில் நடக்கும் முறைகேடுகளை அவர் தடுத்தார் என்பதுதான் மாற்றலுக்கு காரணம் என்பது பொதுவான கருத்து. காரணமில்லாமல் பிறப்பிக்கப்பட்ட இவ்வுத்தரவு இப்படி பல ஊகங்களுக்கும் ஹேஷ்யங்களுக்கும் இடமளிக்கிறது. இது போன்ற சூழ்நிலை உருவாகுவது ஆரோக்யமில்லை. எல்லாரும் முறையாக வெளிப்படையாக செயல்பட்டால் பிரச்னை இல்லை.
இது இவர் ஒருவரைப் பற்றி மட்டும் எழுப்பும் குறை அல்ல. பிம்ப்ரி சிஞ்ச்வாத் நகராட்சி ஆணையர் ஸ்ரீகர் பர்தேஷியை மாற்றியதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சத்தை எதிர்த்து அவர் எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்களின் நன்மைக்காக இருந்தது என்றும் அவரை மாற்றுவது பிம்ப்ரி சிஞ்ச்வாத் மக்களுக்கு பெரிய நஷ்டம் என்றும் அந்த வழக்கு கூறுகிறது. இது போலவே துர்க்கா சக்தி நாக்பாலைப் பற்றியும் கேம்காவைப் பற்றியும் தலைப்பு செய்திகளில் படித்தோம். இன்னும் நிறைய உதாரணங்கள். சில நாள்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து பின் வேறு ஒரு தலைப்பு செய்தி வந்ததும் முன்னது பின்னுக்குப் போகிறது. ஆனால், ஆழ வேரூன்றியிருக்கும் நோயின் வெளிப்பாடாக, இது ஒரு பிளவை, ஒரு புண். ஒவ்வொரு முறை இந்த நஞ்சு கொப்புளமாக வெடிக்கும்பொழுதும் கரிசனமுள்ளவர்கள், "இப்பொழுதே இதற்கு மாற்று மருந்து கொடுக்கவேண்டும்' என்று பரிதவிக்கிறார்கள் அவ்வளவே. ஆங்கிலத்தில் க்ஷர்க்ஹ் ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீ என்பார்கள். அதாவது நம் நாட்டை மனித உடலாக உருவகப்படுத்துவது. நம் உடலில் புகுந்த நச்சு நோயை உடனடியாக விரட்டாவிட்டால் அது எப்படி சீழ் பிடித்து அழுகுமோ, அப்படித்தான் நாடும். இந்திய ஆட்சிப்பணியில் சேருபவர்களில் பலரும் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் தான் சேருகிறார்கள். அவர்கள் அதே உற்சாகத்துடன் ஒய்வுபெறும்வரை பணிபுரியும் சுதந்திரமும் சூழ்நிலையும் அமையவேண்டும். "அரசுதுறையா? ஐயோ அது அல்லல் துறை!' என்று அலறும்படி செய்தால் அது நமக்கு நஷ்டம்; நாட்டிற்கு துரோகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

