நன்றும் உண்டு; தீதும் உண்டு

ஓடும் பேருந்துகளில், ஓய்வுப் பொழுதுகளில் உள்ளங்கையில் உலகத்தை அடக்கிக்கொண்டு தன்னொத்த உணர்வாளர்களை அழைத்து, அன்புச் சொற்களைப் பரிமாறிக்கொள்ள அறிவியல் உலகம் கண்டு தந்த அதிசய வாயில் முகநூல் (ஊஹஸ்ரீங் ஆர்ர்ந்).
Updated on
2 min read

ஓடும் பேருந்துகளில், ஓய்வுப் பொழுதுகளில் உள்ளங்கையில் உலகத்தை அடக்கிக்கொண்டு தன்னொத்த உணர்வாளர்களை அழைத்து, அன்புச் சொற்களைப் பரிமாறிக்கொள்ள அறிவியல் உலகம் கண்டு தந்த அதிசய வாயில் முகநூல் (ஊஹஸ்ரீங் ஆர்ர்ந்). வாய் பேச வேண்டிய வார்த்தைகளை விரல்கள் அடுக்க, மனம் போன போக்கில் கண்டதையும், கேட்டதையும் அடுக்கி அடுக்கி அனுப்பவும் எதிர்கொள்ளவும் இன்னொரு சாளரமாய் இருக்கிறது இது.

வெவ்வேறு கோணங்களில் தன்னையும், தான் சார்ந்த நிலைப்பாடுகளையும் படங்களாய் அடுக்கி, விரல் சொடுக்கி முடிக்கும் நேரத்தில் உலகத் தோழமைகளுக்கு அனுப்பி உடன் விருப்பங்களையும் கருத்துகளையும் அறுவடை செய்துகொள்கிற அளவிற்கு அமோக விளைச்சல் கண்டிருக்கிறது.

மின்னலாய்ப் பளிச்சிடும் கவித்துவவரிகள், தன்னுணர்வுப் பதிவுகள், எண்ணங்கள், எண்ணங்களில் எழும் எரிச்சல், கோபம், எள்ளல், வருத்தம், சமூக அக்கறை, அதுசார்ந்த அறச்சினம், அறிவுரை, அனுபவவிளக்கம் உள்ளிட்ட அனைத்தையும் உரிய சான்றுகளோடும் விளக்கங்களோடும் படங்களோடும் எடுத்துச்சொல்லி இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கிற முகநூல், தனித்தனியே வாசல் கொண்டிருந்தாலும் உரியவர்கள் ஒன்றாய்க்கூடிக் கருத்துரைக்கும் ஜனநாயகச் சாளரங்களைத் திறந்திருக்கிறது.

எவரது குறுக்கீடும் இடைச்செருகலும் இன்றித் தன் கருத்தைத் தானே துணிந்து எழுதச் சுதந்திரம் கொடுக்கும் இத்தளத்தில் எந்தவொரு கருத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்த இயலும். அதனையே பலருக்கும் பகிர்ந்தளிக்க முடியும்.

முறைப்படி, வேண்டுகோள் விடுத்து இணைந்துகொள்ளத் திறக்கும் இப்பகுதியில், வேண்டியவர்களை அனுமதிக்கவும், விருப்பமில்லாதவர்களை விலக்கிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும்போது திறந்துகொள்ளவும், வேண்டாதபோது மூடிக் கொள்ளவும் கதவுகள் உண்டு.

இணைப்புப் பெற்ற எவரும் எவரது முகநூலின் உள்புகுந்தும் காணலாம். கருத்துகளை எடுத்துக் கொள்ளலாம்; தத்தம் கருத்துகளை எழுதலாம்; அதைத் திறக்கும் யாரும் அதனைப் படிக்கலாம்; உரியவர்கள் தடுக்கும் வகையில் அதில் உலாவ வாய்ப்புண்டு.

முகநூல் என்றால் முகம்தான் காட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை அல்லவா? எனவே, தன்னை எப்படிக் காட்டிக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறார்களோ அப்படியெல்லாம் காட்டிக் கொள்ள வாய்ப்புகளை உள்ளடக்கிய இவ்வாசல் வழியாக பல விஷமத்தனங்களும் நுழைந்து தமது அநாகரிக அடையாளங்களைப் பதிக்காமல் இல்லை.

தணிக்கை செய்வதற்கும் தடை செய்வதற்கும் வாய்ப்பில்லாத அளவிற்குச் சுதந்திரம் கொண்டிருக்கும் இவ்வெளி, பல்வேறு முறைகேடர்களின் பணிகளுக்கும், பாலியல் வக்கிர வெளிப்பாடுகளுக்கும் களமாகிப் பல்வேறு நல்லுள்ளங்களைப் பாழ்படுத்தியிருக்கிறது.

தனிமை, தன்னுணர்வு, தமக்கு மட்டுமே உரிய கடவுச்சொல் எல்லாம் கிடைப்பதால் தமக்குரிய கடமையுடனான கட்டுப்பாட்டுணர்வை மெல்ல இழக்கத் தலைப்படும் தருணத்தில்தான் இத்தகு கொடூரர்கள் உள்நுழைந்து விடுகிறார்கன் என்பதை உரியவர்கள் உணரவேண்டும். அதேசமயம், அறிவியல் தளத்தில் விரிந்த இவ்வதிசயச் சாளரத்தில் நல்ல காற்றும் வரலாம் நச்சுக் காற்றும் வரலாம் என்கிற தெளிவோடு இத்துறையைப் பார்க்கிற தன்மையும் பலருக்கு வாய்க்க வேண்டும்.

எத்தகு வளர்ச்சி வாயில்கள் திறந்தாலும் தம் அகவொழுக்கம் குன்றா மனநிலையை வளர்த்துக் கொள்ளவேண்டியது மானுடக் கடமை என்பதை இன்னொரு விதத்தில் இது சொல்லிக் கொடுக்கிறது. இத்துறையில் பயில்பவர்கள், பழகுபவர்கள் இடையில் நிகழ்கிற இத்தகு விபத்துக்களால் தம் உணர்வுகளும் உறவுகளும் பலியாகாமல் பாதுகாத்துக் கொள்கிற பக்குவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.

எத்தனையோ கவிஞர்களையும், கருத்தாளர்களையும் பல்கலை வல்லுநர்களையும் அடையாளப்படுத்தி இன்னொருவிதத்தில் நட்பினை வளர்க்கும் இம்முகநூலில் வள்ளுவர் சொன்னதுபோல், தோன்றிற் புகழொடு தோன்றுக. இத்திறத்தில் இருந்து தவறுவோர் இக்குறளின் மிச்ச வரிகளான, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்பதையும் கருத்தில் இருத்திக் கொள்வது நல்லது.

முகநூல் என்பதை முகம் காட்டும் புத்தகம் என்று அரைகுறையாய்ப் புரிந்து கொள்வது ஆபத்து. இது புத்தகம் அன்று; நூல். நூல் என்பது புத்தகத்தை மட்டும் குறிப்பதன்று. பஞ்சு தரு பயனாய் விளைவது. ஆழ நீளங்களை அடையாளம் காணவும் அளக்கவும் உதவுகிற இந்நூலினைக் கட்டடக்கலை வல்லுநர்கள் மட்டம் பார்க்கவும் பயன்கொள்வதுண்டு.

மானங்காக்கும் ஆடை நெய்ய அடிப்படையாகும் பஞ்சு நூல். மனங்காக்கப் பேருதவி புரியும் ஏடுகளை அடக்கியது படிக்கும் நூல். இருபொருள் விரிக்கும் நூல் எனும் சொல்லின் பொருளை உள்வாங்கிக் கொண்டு முகநூலைத் திறங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com