தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தை பிறந்தது; வழி பிறக்குமா?

வயல்களில் கதிர்முற்றி களத்தில் செந்நெல் குவிக்கப்படும் முடிவான காலத்தில் உழவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட முடியாத நிலை மார்கழி மாதத்தில் ஏற்படுகிறது.

News image
Updated On :13 ஜனவரி 2014, 8:58 pm

இரா. செழியன்

உலகில் மனித குல நாகரிக வளர்ச்சி படிப்படியாக, நான்கு முறைகளில் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்: (1) முதலில் வேட்டையாடியும் செடி-கொடி-மரங்களில் இருந்த காய்-கனிகளை எடுத்தும் மனிதன் வாழ்ந்தான் (2) ஆடு, மாடு, குதிரை, கோழி போன்ற உயிர் இனங்களைப் பழக்கப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் மனிதன் கொண்டு வந்தான் (3) நிலத்தைப் பண்படுத்தி மாடு, குதிரை போன்ற மிருகங்களை வைத்து உழுது, பயிர் வளர்த்து, தேவையான உணவுப் பொருள்களைச் சேமித்துக்கொண்டான் (4) குடும்பம், வீடு, சிற்றூர், வீதிகள், சமுதாயம் என நாகரிக வளர்ச்சியில் மனித வாழ்வு செம்மைப்பட்டது.

உழவுத் தொழிலில், பயிர் விளைந்து நெல், கோதுமை போன்ற பல்வேறு உணவு தானியங்கள் குவிந்ததும் அதற்காக மகிழ்ச்சி அடையும் மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி ஆண்டுதோறும் உழவுக்கான விழா எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சமுதாயத்தின் வளமும் மக்களின் வாழ்வும் உழவுத் தொழிலின் அடிப்படையில் வளர்ந்தன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திருக்குறளில் உழவுத் தொழிலுக்கு சிறப்பான இடம் தரப்பட்டுள்ளது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

பல்வேறு தொழில்களை மக்கள் மேற்கொண்டாலும், இறுதியில் உழவுத் தொழில்தான் தலைமைத் தொழிலாக இருக்கிறது. பிற தொழில்களில் ஈடுபட்டவர்கள்கூட, உழவர்கள் தரும் உணவுகளை உண்ட பிறகுதான் தமது தொழில்களில் செயல்பட முடியும்.

பொங்கல் விழா தை மாதம் முதல் நாளன்று வருகிறது. மேலும், உழவுத் தொழிலில் உதவும் மாடுகளுக்கும் சிறப்பு செய்யும் வகையில் மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ஆயினும் தைமாதத்திற்கு முன்னதாக உள்ள மார்கழி மாதம், திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற மாதம் அல்ல என்று ஒரு தவறான கருத்து நிலவுகிறது.

வயல்களில் கதிர்முற்றி களத்தில் செந்நெல் குவிக்கப்படும் முடிவான காலத்தில் உழவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட முடியாத நிலை மார்கழி மாதத்தில் ஏற்படுகிறது.

மார்கழி மாதம் பீடையான மாதம் அல்ல, பீடுடைய நல்ல மாதம். ஆண்டாள் திருப்பாவையின் துவக்கமே மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்பதாகும்.

மாணிக்கவாசகர் இயற்றிய திருப்பள்ளி எழுச்சியும் மார்கழித் திங்களில் சிவபெருமான் அருள்பெற அதிகாலையில் அடியார்கள் உறக்கம் நீங்கப் பள்ளி எழுச்சி அழைக்கிறது.

இவற்றுக்கு மேலாக, பகவத் கீதையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பத்தாவது அதிகாரத்தில், 35ஆவது உபதேசத்தில் மாதங்களில் நான் மார்கழியாக, இருக்கிறேன் என்று கூறுவதால் கிருஷ்ண பகவானாலேயே மார்கழி சிறந்த மாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையை வைத்துதான் கவிஞர் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் "மாதங்களில் அவள் மார்கழி' என்று எழுதினார்.

இருபதாம் நூற்றாண்டின் தேசிய கவியான பாரதியாரும் ஒரு திருப்பள்ளி எழுச்சி பாடியிருக்கிறார். பாரதியார் பாடிய கவிதையில் "துயில்கின்ற பாரதத் தாயே பள்ளி எழுந்தருளாயே தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்' என்று புதியதொரு பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி யை அமைத்தார்.

எப்பொழுது எதற்காகப் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியை பாரதியார் பாடினார் என்பதுபற்றி, அவருடன் இருந்த பாரதிதாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

"மார்கழி மாதத்தில் ஒரு நாள் காலையில் பாரதியாரோடு நீராட நாங்கள் சென்றோம். அப்பொழுது வழியில் முதுவயதான அம்மையார் பாரதியைப் பார்த்து நீங்கள் ஒரு திருப்பள்ளி எழுச்சி பாடித் தரலாமே என்று கேட்டார். உடனே கவி பாரதியின் கவித்துவம் எழுந்தது'.

பாரதிதாசன் எழுதினார்: "நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையில், காலை மலரக் கவிதை மலர்ந்தது, பொழுது புலர்ந்தது என்று ஆர்ந்த நல்ல தமிழ்க் கவி நாமடைந்தோம்'.

அதாவது, "பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால் புன்மை யிருட்கனம் போயின யாவும்' என்று துவங்கும் பாரதியின் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி மார்கழி மாதம் நீராடப்போகும்பொழுது மலர்ந்தது.

1921-22இல் தேசியக் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக வந்த காந்தியார் இந்தியா சுதந்திரம் பெற நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். ஆனால் 1947 ஆகஸ்டு 15இல்தான் இந்தியா விடுதலை பெற்றது.

சுதந்திரம் அடைந்த இந்திய மக்களின் ஏழ்மையைப் போக்க, வாழ்க்கை வளம்பெற, சமதர்ம வழிமுறையில் பிரதமர் ஜவகர்லால் நேரு ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்தார்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்களாக இருப்பதால், ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயம்-சமுதாயவளர்ச்சிக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்று அப்பொழுது கருதப்பட்டது. பிறகு, ஐந்தாண்டுத் திட்டம் ஆண்டுத் திட்டமாக சிலசமயங்களில் மாறியது.

1991-92இல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், நேரு காலத்திய சமதர்ம அடிப்படைத் திட்டம் வெற்றி பெறவில்லை, வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்று, உலகளாவிய மார்க்கெட் பொருளாதரத்தில் இந்தியாவும் போட்டியிடவேண்டும் என்று 1991-92 வரவு-செலவுத் திட்டத்தில் ஆரம்பித்தார்.

அந்த வரவு-செலவுத் திட்டத்தின் 24ஆம் பகுதியில் நிதியமைச்சர் தெரிவித்தார்:  இந்தப் புதிய பொருளாதாரத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள இதயமற்ற உல்லாசமான செலவுகளில் நாம் ஈடுபடமாட்டோம்.

நமது நோக்கமெல்லாம் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர்-விவசாயத்துக்கான தண்ணீர், கிராமப்புற பாதைகள், பெருமளவில் கல்வி-சுகாதார வளர்ச்சி ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதே.

1991-96 வரை நிதிமந்திரியாக இருந்த மன்மோகன் சிங் 2004-2014 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருக்க நேரிட்டுவிட்டது. நிதி அமைச்சராகவும் பிரதம அமைச்சராகவும் 15 ஆண்டுகள் இருந்த மன்மோகன் சிங், பொது மக்களின் நல்வாழ்வுக்கான எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை.

1950-51இல் இந்திய மக்கள் தொகையில் 82 சதவிகித மக்கள் கிராமப் பொருளாதாரத்தில், முக்கியமாக விவசாயத் தொழிலையொட்டி இருந்தார்கள்.

அப்பொழுதைய நாட்டு மொத்த வருமானத்தில் (ஜிடிபி), 57 சதவிகிதம் விவசாயத் தொழிலுக்குக் கிடைத்தது. காலப்போக்கில் கனரக உற்பத்தி, சேவைசெய்யும் தொழில் துறைகள் வெளிநாட்டு மூலதனங்களுடன் வளர்ச்சி அடைந்து வருகின்றன..

2011 கணக்கின்படி, இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 121கோடி. கிராமப்புறத்தில் இருக்கும் 69 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர்.

மத்திய அரசாங்கம் வெளியிட்ட 2012-13 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு (எக்கனாமிக் சர்வே) தந்துள்ள புள்ளி விவரப்படி, விவசாயத்துறைக்கு கிடைத்த மொத்த நாட்டு வருமானத்தின் (ஜிடிபி) அளவு 14 சதவிகிதத்துக்கு குறைந்துவிட்டது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் உழைப்பாளர்களுக்கு வாழ்வு இல்லை என்று ஆகிவிட்டது.

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பாடிய பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது:

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை       செய்வோம் -வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்.

விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்

வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்

உழைப்பவர்களும் உழுது விளைப்பவர்களும் தந்த வளர்ச்சியும் நாட்டின் வளமையும் விழலுக்குப் பாய்ச்சிய நீராக ஆகிவிட்டன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பாரதியார் விடுத்த எச்சரிக்கைப்படி, வீணர்களுக்கு உழைத்தது ஓய வேண்டிய காலம் வந்து விட்டது.

நாட்டின் வளமும், நமது வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலமும் தழைக்க நிலை பெற ஒவ்வொருவரும் வாக்குச் சாவடியில் தமது நல்வாக்கை அளிக்கவேண்டும்.

கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.