‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

மூன்று மரணத் தாக்குதல்கள்

அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (1948 ஜனவரி 30) புது தில்லியில் மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் ஹிந்து தீவிரவாதி கோட்úஸயால் சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. தேசமே ஸ்தம்பித்தது.

Updated On :30 ஜனவரி 2014, 2:36 am IST

அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (1948 ஜனவரி 30) புது தில்லியில் மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் ஹிந்து தீவிரவாதி கோட்úஸயால் சுட்டுக் கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. தேசமே ஸ்தம்பித்தது.

காந்திஜி தனது 55 ஆண்டுகால பொது வாழ்வில் பலமுறை மரணத்தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிர் தப்பியிருக்கிறார். அவற்றுள் மூன்று தாக்குதல்கள் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்தவை.

பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டு ஆறு மாதம் கழித்து, தமது மனைவி மற்றும் இரு மகன்களுடன் 1897-இல் தென்னாப்பிரிக்காவுக்குச் திரும்பிச் சென்றபோது முதல் தாக்குதல் டர்பன் நகர வீதியில் நிகழ்ந்தது. இந்தியா வந்தபோது, தென்னாப்பிரிக்க இந்திய மக்கள் இனவெறிக்கு ஆட்பட்டு படும்பாடுகளைப் பற்றி காந்தி பேசியும் எழுதியும் வந்த வாசகங்களை "லண்டன் டைம்ஸ்' நாளிதழ் திரித்து வெளியிட்டது. அதைப் படித்த நேடால் மாகாண ஆங்கிலேயர்கள் கொதிப்படைந்து, பாரிஸ்டர் காந்தியை கண்டனம் செய்து கூட்டங்கள் நடத்தினர்.

டர்பன் துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறங்கிய பாரிஸ்டர் காந்திக்கு உள்ளூர் நிலவரம் தெரியவந்தது. ஆகவே முதலில் தமது மனைவி கஸ்தூர்பாவையும் மகன்களையும் தனியே ரிக்ஷாவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஊரடங்கிய பிறகு நடந்தே வீடு செல்ல விழைந்தார். அவரை அழைத்துப் போக வந்த நண்பர் பார்ஸி ரஸ்டோம்ஜியும் அவரது நிறுவன ஆங்கிலேய வழக்குரைஞரும் அவரைப் பின் தொடர்ந்தனர். வழியில் சில ஆங்கிலேயச் சிறுவர்கள் காந்திஜியை அடையாளம் கண்டு கூக்குரலிட்டனர். உடனே பத்து பதினைந்து ஆங்கிலேய ரவுடிகள் காந்திஜியை மட்டும் சுற்றிவளைத்துக் கொண்டு கற்களையும் அழுகிய முட்டைகளையும் அவர்மீது வீசினர். நெருங்கி வந்து, நாற்புறமும் சரமாரியாகத் தாக்கலாயினர்.

பின்னர் நடந்ததை காந்திஜியே தமது சுயசரிதத்தில் இவ்வாறு விவரிக்கிறார்: "...எவனோவொருவன் என் தலைப்பாகையை பிடுங்கி எறிந்தான். மற்றவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக அடித்தனர்; காலால் உதைத்துத் தள்ளினர். ஒரு வீட்டின் வேலிக் கம்பியைப் பற்றி சுதாரித்தேன்; என் முகத்தில் முஷ்டியால் குத்தினர்; அடிதாங்கமாட்டாமல் மயக்கமுற்றுத் தரையில் சரிந்து வீழ்ந்தேன். தற்செயலாக அந்தப்பக்கம் வந்து கொண்டிருந்த போலீஸ் சூப்பிரண்டெண்டன்டின் மனைவி என்னை அடையாளம் கண்டு ஓடோடிவந்து குறுக்கிட்டுக் குடை விரித்துத் தடுத்து நின்றாள்... சம்பவத்தைக் கண்ணுற்ற ஒரு இந்திய யுவன் விரைந்து சென்று போலீஸýக்குத் தகவல் அளிக்கவே, ஒரு சில போலீஸார் உடனடியாக வந்து என்னை அருகிலுள்ள பார்ஸி ரஸ்டோம்ஜி இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்'.

ஆனால் இருள் கவிந்த பிறகு, ஒரு பெருங் கும்பல் அவரது இல்லத்தைச் சூழ்ந்துகொண்டு, "ஏ காந்தி, வெளியே வா; இல்லையேல் உள்ளே புகுந்து உம்மை வீழ்த்தி, உன் நண்பனின் உடமைகளையும் அடித்து நொறுக்குவோம்' என கூச்சலிட்டவண்ணமிருந்தனர். அங்கிருந்த சில போலீஸ்காரர்களால் கும்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

போலீஸ் சூப்பிரண்டெண்டன்ட் அலெக்ஸாண்டர், பாரிஸ்டர் காந்தியைத் தப்புவிக்க ஒரு செய்தி அனுப்பினார். அதன்படி காந்திஜி ஓர் இந்திய போலீஸ்காரனின் உடையணிந்து தலையில் ஆயுத போலீஸ் ஹெல்மெட் அணிந்து வீட்டின் பின்கட்டு வழியே இருட்டோடு இருட்டாக வெளியேறி, இரு ரகசிய போலீஸாரின் பாதுகாப்புடன் அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனை அடைந்து தங்கினார். காந்தி தப்பி விட்டார் என்று அறிந்த கும்பல் கலைந்தது.

அடுத்த மூர்க்கத் தாக்குதல் ஜோஹன்னஸ் பர்க் நகரில் 1908 பிப்ரவரி 10 அன்று நிகழ்ந்தது. தென்னாப்பிரிக்க அரசின் உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸýடன் பாரிஸ்டர் காந்தி செய்துகொண்ட சமரச உடன்படிக்கையின்படி இந்தியர்கள் கை விரல்கள் நாட்டு இட்டு குடியுரிமைப் பத்திரம் பெற வேண்டும் என்ற முந்தைய சட்டப்படி கட்டாயப்படுத்தப்படாமல், தாமாகவே முன்வந்து கைரேகை பதித்து லைசென்ஸ் பெற்றால் போதுமானது என்பதே சமரச உடன்பாடு.

ஜனவரி 31, 1908 அன்று பிரிட்டிஷ் இந்திய சங்கத்தின் ஆதரவில் ஜோஹன்னஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாரிஸ்டர் காந்தி அந்த உடன்பாட்டை விளக்கினார்.

அப்போது ஒரு முரட்டுப் பட்டாணியன் எழுந்து நின்று, "நீர் ஜெனரல் ஸ்மட்ஸிடம் பதினைந்தாயிரம் பவுண்டு லஞ்சம் பெற்று எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டீர். கைரேகை பதிக்கும் அவமானத்திற்கு ஒருக்காலும் உட்பட மாட்டோம் என்று உம்மை நம்பி அல்லாவின் மேல் ஆணையாக பிரதிஞ்ஞை மேற்கொண்டோம். அதனின்றும் ஒருபோதும் வழுவ மாட்டோம். கைரேகை பதிக்க அரசு அலுவலகத்திற்கு முதலில் செல்பவனை நான் அல்லாமீது ஆணையாகக் கொன்று தீர்ப்பேன்' என உரத்து உறுமினான். அவன் குற்றச்சாட்டை காந்திஜி அடியோடு மறுத்தார்.

1908 பிப்ரவரி 10 அன்று தம்பி நாயுடு மற்றும் இúஸாப்மியா என்ற இரு சகாக்களுடன் பாரிஸ்டர் காந்தி கைரேகை பதித்து குடியுரிமை பத்திரம் பெற அரசு பதிவு அலுவலகத்திற்கு முதல் அணியாகக் கிளம்பினர். ஆனால், வழியில் மிர் ஆலம் என்ற ஆஜானுபாகுவான பட்டாணியன் வேறு சில பட்டாணியர்களுடன் குறுக்கிட்டான். மிர் ஆலம் முன்பு ஒரு சட்ட வழக்கில் காந்திஜியின் கட்சிக்காரனாக ஆலோசனை பெற்றுப் போனவன். "எங்கே போகிறாய்?' என கடுகடுத்து கேட்டான். காந்திஜி பதில் சொல்வதற்கு முன் அவரது பின்புறத்திலிருந்து ஒரு பட்டாணியன் காந்திஜியின் தலையில் தடியால் ஓங்கி அடித்தான். "ஹே ராம்!' என்று உதடு முணுமுணுப்புடன் காந்திஜி மூர்ச்சித்து வீழ்ந்தார்.

அத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றிப் பின்னர் காந்திஜி தமது "இந்தியன் ஒபினியன்' வார இதழில் இவ்வாறு பதித்துள்ளார்: "...அதன்பின் என்ற நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நேரில் பார்த்தவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: நான் உணர்விழந்து வீதியில் வீழ்ந்தவுடன் மிர் ஆலம் ஒரு நீண்ட இரும்புக்குழாயால் என்னை அடித்தானாம். மற்ற பட்டாணியர்கள் தடியால் சரமாரியாக அடித்து உதைத்து உருட்டினார்களாம். என்னுடன் வந்த தம்பி நாயுடுவும் இúஸாப்மியாவும் குறுக்கே பாய்ந்து பல தடியடிகளை தங்கள் முதுகில் தாங்கிக் கொண்டார்களாம். வீதியில் வந்து கொண்டிருந்த சில ஐரோப்பியர்கள் ஓடோடி வந்தனராம். ஆனால் ஐரோப்பியர்கள் உள்பட ஓரு கும்பல் அவர்களைத் துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனராம்' (-"இந்தியன் ஒபினியன்', 22-2-1908).

மூன்றாம் தாக்குதல் பாரிஸ்டர் காந்தி உடல் தேறிய பிறகு டர்பன் நகரில் நேட்டால் இந்தியர்களின் பொதுக்கூட்டத்தில் 1908 மார்ச் 5 அன்று பேசியபோது நிகழ்ந்தது. பொழுது சாய்ந்து இருள் கவிந்து கூட்டம் முடிவுறும் தறுவாயில் மின் விளக்குகள் திடீரென அணைந்தன. ஒரு முரட்டுப் பட்டாணியன் கூட்டத்தின் முன் வரிசையிலிருந்து குதித்தெழுந்தான். மேடை மீது தாவி ஏறி கையில் குண்டாந்தடியைச் சுழற்றியவாறு காந்திஜி மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தான்.

அசம்பாவிதம் ஏதும் நேரக்கூடும் என்று எதிர்பார்த்து காந்திஜியின் நண்பர்கள் பலர் மேடையருகில் எதற்கும் உஷாராகவே இருந்தனர். அவர்களும் மேடைமீது குதித்தேறினர். ஒருவர் அந்தப் பட்டாணியனை பயமுறுத்துவதற்காக அவன் முன் கைத் துப்பாக்கியை நீட்டி இருமுறை வெற்று வெடி சுட்டார். மற்றவர்கள் பாரிஸ்டர் காந்தியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி மேடையின் பின்புறம் வழியாக இறக்கி, பத்திரமான இடத்திற்கு இட்டுச் சென்றனர்.

ஜனவரி 24 (1948) அன்று நண்பர் ஒருவருக்கு காந்திஜி இந்தியில் எழுதிய கடிதத்தில், "சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம் முதலானவற்றை கடவுள் சாட்சியாக நான் நிறைவேற்றி வருகையில், அவற்றையொட்டி நான் மரிப்பதற்கு ஆண்டவன் அருள்புரிவாராக! எவரோ ஒருவர் என்னைக் கொன்றால் அந்நபர் மீது நான் சிறிதும் கோபப்படலாகாது. ராம நாமத்தை முணுமுணுத்தவண்ணம் நான் சாவேன்' என்று தன் கைப்பட எழுதியுள்ளார். ("கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி').

அவரது வேண்டுதல் அதற்கடுத்த வாரமே நிறைவேறிற்று. ஜனவரி 30, 1948 வெள்ளிக்கிழமை மாலை, மதக்கலவர வன்முறைத் தீப்பிழம்புகளைக் கண்டு மனம் நொந்த அண்ணல் காந்தி, அம்மரண வேதனையினின்றும் நிரந்தரமாக விடுபட்டார். "ஹே ராம்!'.

இன்று மகாத்மா காந்தி நினைவு நாள்

கட்டுரையாளர்: காந்திய அறிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.