தடைபோடக் கூடாது; முடியாது!
மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி மூன்று முக்கிய நிகழ்வுகளில் தொடங்குகிறது.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
மனித வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி மூன்று முக்கிய நிகழ்வுகளில் தொடங்குகிறது. 1. விலங்குகளைப் போல் வேட்டையாடி உண்டு வாழ்ந்த மனிதன், தீயின் பயனறிந்து உணவை சமைத்து உண்ண ஆரம்பித்தது. 2. விலங்குகளைப் போல் ஆடையில்லாமல் திரிந்த மனிதன், பருத்தியிலிருந்து நூல் எடுத்தும், மிருகங்களின் ரோமம் மற்றும் தோலிலிருந்தும் ஆடை தயாரித்து அணிய ஆரம்பித்தது. 3. சக்கரத்தைக் கண்டுபிடித்தது.
மனிதன் ஆடையை அணிய முக்கிய காரணம் விலங்குகளைப் போல் அவனால் குளிரையும் வெப்பத்தையும் தாங்க முடியாமல் போனதுதான். மனிதன் அணியும் உடை அவனிருக்கும் இயற்கைச் சூழலை சார்ந்திருந்தது. அண்டார்டிக்காவில் வசிக்கும் எஸ்கிமோ இனத்தவரின் உடை, அதிக குளிர் பிரதேசமான ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாறுபட்டது.
இந்தியா, சீனா உள்பட வெப்ப பூமியான கீழ்திசை நாடுகளின் உடை தேவைக்கேற்ப அமைந்தது. ஆனால், நாடு பிடிக்கும் ஆசையில் ஐரோப்பியர்கள் உலகம் எங்கும் பயனித்து தங்களது மொழி, உடை, உணவுப் பழக்கங்களை மற்றவர்கள் மீது திணித்தது ஒரு கலாசார பயங்கரவாதம்.
இந்தியாவில் ஆண்களின் பாரம்பரிய உடையான வேட்டி பலவிதமாக அணியப்படுகிறது. சாமியார்கள் காவி வேட்டி அணிகிறார்கள், சில சமூகத்தினர் பஞ்சகச்சம் என்ற ஐந்து முடிச்சு ஆடையாக வேட்டியை உடுத்துகிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலானவர்கள் தட்டுச் சுற்றாக அணிகிறார்கள்.
இங்கிலாந்துக்கு படிக்கப்போய் பாரிஸ்டராக இந்தியா திரும்பி, தொழிலுக்காக தென் ஆப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட பிறகும், இந்தியா திரும்பி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய காலத்திலும் கோட்டு சூட்டு அணிந்த நாகரிக மனிதராகவே இருந்தார்.
மதுரையில் மண்ணின் மைந்தர்கள் இருந்த அவலத்தைப் பார்த்தபின் தன் வெளிநாட்டு உடையைத் துறந்து "அரை நிர்வாண பக்கிரி'யாக மாறினார். காந்தியை அவருடைய கொள்கைக்காக உலகம் கொண்டாடுகிறது. உடைக்காக அல்ல.
வட்ட மேஜை மகாநாட்டிற்காக காந்தி இங்கிலாந்து சென்றபோது தன்னுடைய உடையான வேட்டியை மாற்றிக் கொள்ளவில்லை. உலகத்தை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களை அவர் சந்தித்துப் பேசும் பொழுதும் அவர் வேட்டியை மாற்றவில்லை. அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
தன்னுடைய ஜெயிலில் இருந்த இந்த அரை நிர்வாண பக்கிரிக்குத்தான் ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பினார். இதே ராணி பி.பி.சி.யில் பேட்டியளிக்கும்போது, காந்தி தன்னுடைய கையால் நூல் நூற்று நெய்து தனக்கு அனுப்பிய திருமண பரிசான சால்வையை தன்னுடைய பொக்கிஷங்களில் ஒன்றாக வைத்து பாதுகாப்பதாக குறிப்பிட்டார். இதே மகாத்மாவிற்கு வேட்டி அணிந்த கோலத்தில்தான் உலகமெங்கும் சிலைகள் உள்ளன.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று நிகழ்த்திய சிகாகோ உரையின்போது தன்னுடைய சன்னியாசி ஆடையை அவர் மாற்றவில்லை. இன்றும் தலாய் லாமா தன்னுடைய ஆடையை மாற்றிக் கொள்ளவில்லை. பெருந்தலைவர் காமராஜர் ரஷ்யாவிற்கு வேட்டி சட்டை அணிந்துதான் சென்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தனது கூட்டத்திற்கு வருபவர்களுக்கு என ஒரு ஆடை நிர்ணயம் (ஈழ்ங்ள்ள் இர்க்ங்) செய்துள்ளதின் அடிப்படையில், அவர்கள் அனுப்பிய அழைப்பிதழை வைத்துக் கொண்டு கூட்டத்துக்கு வந்த நீதியரசரையும் இரண்டு வழக்குரைஞர்களையும் கூட்டத்திற்கு அனுமதிக்காமல் தடை செய்தது பிரச்னையாகி உள்ளது.
கிரிக்கெட் என்பது இங்கிலாந்தில் பிரபலமாகிய விளையாட்டு. இது அமெரிக்கா நீங்கலாக இங்கிலாந்து காலனி ஆட்சியிலிருந்த பல நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டாகும். அதிலும் இந்தியர்கள் கிரிக்கெட் மோகம் பிடித்து அலைபவர்கள். கிரிக்கெட் என்பது விளையாட்டாக இல்லாமல் கோடிக்கணக்கான பணம் கொட்டும் வியாபாரமாக மாறிவிட்டது.
கனவான்களின் ஆட்டம் என அழைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் செயல்கள் ஒன்றுகூட கனவான்கள் செய்யத்தக்கது அல்ல. ஊழலாலும் புரோக்கர்களாலும் கிரிக்கெட் விளையாட்டு இன்று சீர் கெட்டு கிடக்கிறது.
ஐ.பி.எல். என்ற பெயரில் ஆடு மாடுகளை போல் வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டு பணம் ஒன்றையே அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் கவனம் சிதறாமல் இருக்க வீரர்களுக்கு எதிரில் திரைகள் வைக்கப்பட்ட காலம் போய், வீரர்களை குஷிப்படுத்த என்ற பெயரில் அப்பாவி ரசிகர்களை குஷிப்படுத்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆன குட்டை ஆடை பெண்கள் கூத்தாடுகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய ஆளுமை கொண்ட விளையாட்டு என்பது கால்பந்தாட்டம்தான். கிரிக்கெட் போல் இரண்டு பேர் ஆட பதினோரு பேர் தடுத்தாடும் ஆட்டமல்ல கால்பந்து.
சம எண்ணிக்கையான வீரர்கள் ஆடுகளத்தில் ஓடி ஆடி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். சமீபத்தில் பிரேசிலில் நடந்து முடிந்த உலக கால்பந்து போட்டியை நாம் மறக்க முடியுமா? இரண்டு பேரை நம்பிய பிரேசில் தோல்வி அடைந்தது. கூட்டாக ஆடிய ஜெர்மனி வென்றது.
ஆடையை நிர்ணயம் செய்வதற்கும் சீருடை அணிவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. ஆடையை நிர்ணயிப்பது "நான் மேலானவன்' என்ற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. சீருடை "நாம் அனைவருமே சமம்' என்ற ஒற்றுமையை உணர்த்துவது.
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகியும் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆடை நிர்ணயம் என்ற பெயரில் மக்கள் பிரித்தாளப்படுவது சட்ட விரோதமாகும். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14-இன் படி அனைவரும் சமம் என அறிவிக்கப்பட்ட பிறகு, உடையின் அடிப்படையில் மக்களை பிரிப்பது துரதிர்ஷ்டவசமானது. முந்நூறு ஆண்டு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நாம், ஆங்கிலேயரை பார்த்து வாழ நினைப்பது கேவலம்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் ஒரு விழாவிற்குச் சென்றபோது அவர் அணிந்திருந்த ஆடையால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் வீடு திரும்பி எடுப்பான ஆடையை அணிந்து கொண்டு மற்றொரு செட் ஆடையையும் எடுத்துக் கொண்டு விழாவிற்கு திரும்பினார்.
அமைப்பாளர்கள் அவரை விருந்து மேடைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தன் கையிலிருந்த உடுப்பை உண்ணும் மேஜையில் வைத்து அதற்கு உணவு படைக்குமாறு சொன்னார். பதறிப்போன விழா அமைப்பாளர்கள் தாஸ் திருப்பி அனுப்பப்பட்டதைத் தெரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வேட்டி அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வேட்டி என்பது நம்முடைய வெப்பமான சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்புடையது. இந்தியாவில் தையல் மிஷின் இல்லாத காலத்தில் ஆரம்பித்த வேட்டியும் சேலையும் இன்றும் தொடர்கின்றன. கால ஓட்டத்தில் வேட்டி தனித்து நிற்பது அதனுடைய பாரம்பரியத்தையும் உபயோகத்தையும் காட்டுகிறது.
இன்று தொலைக்காட்சி பெட்டிகளை இயக்கினால் வேட்டிகளின் புகழ்பாடும் விளம்பரங்கள் கண்ணைக் கவர்கின்றன. ஆனால், பெண்களின் பாரம்பரிய உடையான தாவணியும் புடவையும் கால வெள்ளத்தில் வழக்கொழிந்து விடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது.
சேலை கட்டிய மாதரை நம்பாதே என்றதாலோ என்னமோ நம் பெண்கள் தாவணியையும் சேலையும் தவிர்த்து, சல்வார் கமிசுக்கும் பைஜாமா குர்தாவுக்கும் மாறி விட்டார்கள். உடை என்பது உடலை மறைக்க என்பது தாண்டி, கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டித்தரும் வியாபாரமாக மாறி விட்டது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பாரம்பரிய உடையான வேட்டிக்கு தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னை சட்ட சபையிலும் எதிரொலித்துள்ளது. தமிழ்நாடு சங்கங்கள் சட்டம் 1975, பிரிவுகள் 34 மற்றும் 36-இன் கீழ் சங்கப் பதிவாளருக்கு தங்கள் கீழ் இயங்கும் சங்கங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.
இந்திய அரசியல் நிர்ணய சட்டம் 15-இன்படி ஒருவர் ஜாதி, மதம், பால் மற்றும் பிறந்த இடத்தின் அடிப்படையில் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது என தெளிவாக சொல்லியுள்ளது. சட்டப் பிரிவு 21-இன்படி தனித மனிதனுடைய வாழ்க்கை மற்றும் தனி உரிமைகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன.
தனி மனித உரிமை என்பதை நீதிமன்றங்கள் மிகவும் விரிவாகவும் விசாலமாகவும் பொருள் கொண்டு பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமலும் ஆபாசமாக இல்லாமலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உடை அணிவது தனி மனித சுதந்திரத்தின் கீழ் வரும். அதை கிரிக்கெட் சங்கங்கள் போன்றவை தடை செய்ய முடியாது.
மிக விரைவில் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புவோம்.
கட்டுரையாளர்:
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...