மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மனிதன் செய்த குற்றமடி!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளை அவருடைய மகள் செய்தார்.

Updated On :29 ஜூலை 2014, 8:03 pm

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளை அவருடைய மகள் செய்தார். ஒருவருக்கு மகள் கொள்ளி வைத்தாள் என்பது கண்களை விரிய வைக்கும் செய்திதான். பெண்களுக்கு அந்த உரிமை உள்ளது என்று எந்த சாத்திரமாவது கூறுகிறதா?

இந்து பாரம்பரிய வழிமுறைகள் பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்று ஒரு சாரார் மனுதர்ம சாத்திரங்களை சுட்டிக் காட்டுகிறார்கள். அதற்கு மறுப்புக் கூறும் வகையில், "நம் நாட்டில்தான் யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா: (எங்கு பெண்கள் பூசிக்கப்படுகிறார்களோ அங்கு தெய்வங்கள் மகிழ்கிறார்கள்) என்று சொன்னோம்' என்று விடை தருகிறார்கள் இன்னொரு சாரார்.

இருவரும் வடமொழி ஆதாரங்களையே தங்கள் கட்சிக்கு சான்றாக காட்டுகிறார்கள். இப்பொழுது பிரச்னை பெண்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டார்களா என்பதே. அது குறித்து சம்ஸ்க்ருத சான்றுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் தங்கை சீதா பொருத்தமான சுலோகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்து எனக்கு உதவினார்.

அபுத்ரஸ்ய ம்ருதஸ்ய குமாரி ரிக்தம் க்ருஹ்ணீயாத்.

(பொருள்:- இறந்தவருக்கு ஆண்பிள்ளை இல்லை என்றால் அவர் பெண் அந்த உரிமையை எடுத்துக்கொள்ளட்டும்.)

ஆக பெண் கொள்ளி வைப்பது இன்று நடந்த புரட்சி இல்லை அது அன்றே எழுதி வைக்கப்பட்ட ஒன்று. ஏன் இருபாலருக்கும் சம உரிமை என்று கூறவில்லை என்பது நியாயமான கேள்வி. அப்படித் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், கண்டிப்பாக தூரத்து ஆண் உறவினரைத் தேடி அலையவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது, ஏன் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று சொல்லும் சாத்திரங்களையும் மேற்கோள்களையும் நாம் புறக்கணித்தோம்?

பெண் பிறந்தவுடன் இரு விதமான கவலைகள். ஒன்று அவளுடைய திருமணச் செலவு, இன்னொன்று அவள் இன்னொருவர் வீட்டிற்கு சென்று அனுபவிக்கப் போகும் கஷ்டங்கள். "பிருகதாரண்யக உபநிஷத்' ஒரு தந்தையின் வேண்டுதலைப் பற்றிகூறுகிறது.

அத ச இச்சேத் துகிதா மே பண்டிதா ஜாயேத.

(பொருள்:- எனக்கு படித்த அறிவார்ந்த ஒரு புதல்வி பிறக்க வேண்டும் இறைவா.) பையனுக்கு மட்டுமே படிப்பும் முதலிடமும் தருவது சரியல்ல என்றும் பெண்ணை வீட்டில் வைத்து வேலை செய்ய சொல்வதை பாராட்டுக்குரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும் தெரிகிறது.

கன்யாப்யேயம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத:

(பொருள்:- பெண்ணை நன்றாகப் பேணிக் கல்வி புகட்ட முயற்சி செய்யவேண்டும்) முதலிடம் அவள் கல்விதான். பிறகு திருமணம் செய்யலாம். ருக் வேதத்தில் பெற்றோர் வீட்டில் இருக்கும் வயதான் பெண்கள் அமாஜூ: என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதனால் பாழுங் கிணற்றில் தள்ளித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாகத் தோன்றவில்லை.

ஒரு திருமணத்திற்கு பத்து பேர் இருந்தால் போதுமாம்.

வரஸ்ய பிதரெள வத்வா: பிதரெள சஹபாடினெள

வதூவரஞாதியுக்மம் ஆசர்யாச்ச புரோகித:

மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் இருவரின் சொந்தக்காரர்கள் இருவர், ஆசிரியர், திருமணம் செய்து வைப்பவர் 2+2+4+1+1=10. இந்த பத்து பேருக்குக் குறைவாக இருக்ககூடாது என்கிறது இந்த சாத்திரம். இவர்களுடன் மணமக்களைச் சேர்த்தால் பன்னிரெண்டு.

இவர்களை மட்டும் வைத்து ஒரு திருமணம் நடத்தினோமென்றால் வீட்டிலேயே முடித்துவிடலாம். மண்டபம், சமையல் செய்பவர், விருந்து, லைட் மியூசிக் கச்சேரி என்று அலையவேண்டாம். பெண்ணைப் பெற்றவர்களுடைய பெரிய கவலை இந்த செலவுதானே? நமக்கும் மொய் யாரும் எழுதவேண்டாம், நாமும் யாருக்கும் தரவேண்டாம். இதற்கு பயந்து யாரும் பெண் சிசு வதை செய்யவேண்டாம், கருவிலேயே திருகவேண்டாம்.

இந்த ஆடம்பரத் திருமணங்கள் பெண்குலத்திற்கு எதிரி என்றே தோன்றுகிறது. ஒருமுறை மதுரையில் பெண்கள் கல்லூரி மாணவியர் முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என் எதிரே அமர்ந்திருந்தார்கள். "எங்கள் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று நீங்கள் உறுதி மொழி அளிக்கவேண்டும்' என்று நான் சொன்னேன். "செய்வோம்' என்று ஒரே குரலில் என்னைக் குளிர்வித்தார்கள். பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாது. என் விலாசத்தை நான் கொடுக்க

வில்லையே!

தைத்ரீய ஸம்ஹிதையில், "ப்த்னீ ஹி ஸர்வஸ்ய மித்ரம்'. இதற்கு பொருள் எளிதில் விளங்கும், ஆனாலும் சொல்கிறேன்: மனைவிதான் எல்லோரைக்காட்டிலும் உயர்ந்த நட்பு. இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால், வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்களுக்கு அவசியம் இருக்காது.

இது திருமணத்தைப்பற்றி சாதியைப்பற்றி என்ன கூறுகிறது என்றால்,

தன்மனுஷ்யே மனுஷ்யத்வம் கவி கோத்வம் ச வானரே

வானரத்வம் பிகே தத்வத் பிகத்வம் ஜாதிருச்யதே.

இதன் பொருள் என்னவென்றால் - மனிதனின் மனிதத் தன்மையும், ஆவினங்களின் ஆவினத் தன்மையும், குரங்குகளின் குரங்குத் தன்மையும், குயில்களின் குயில் தன்மையுமே சாதி என்பார்கள் என்பதுதான். இவ்வாறென்றால் ஒன்றே குலம் என்றே ஆகிறது. பிறகு கிளைகிளையாக சாதி எங்கிருந்து வந்தது?

இன்று கட்டப் பஞ்சாயத்து, கௌரவக்கொலை என்று பல வேடங்கள் தரித்து பெண்களை அடக்குவது நிறைவேற்றப்படுகிறது. கோத்திரம், சாதி இதெல்லாம் இந்த கொடுமைக்கு ஒத்துழைக்கும்.

ஸ்த்ரீபும்ஸயொர்மிதோ ராகாத் க்ராம்யதர்மே யதி ப்ரஜா:

ஜாயதே ஜாதிரனயோரேகான்யா மோஹகல்பிதா - என்று ஒரு சுலோகம்.

இதன் பொருள், ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்று பட்டு மக்களைப் பெற்றால், அங்கு சாதி என்பது ஒன்றுதான். கலங்கிய சித்தம்தான் வேற்றுமை பேசும். தொன்மையின் காவலர்கள் நாங்கள் என்று கூறுபவர்கள் இது போல் சமத்துவம் பேசும் சான்றுகளையும், பெண்மையை மதிக்கும் அறிவுரைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி மனிதன் செய்த குற்றமடி' என்று பாடலாமா? ஆதிக்கத்தை கையில் வைத்துக் கொள்ள சாதகமாக இருக்கும் சான்றுகளை மேற்கோள் காட்டிவிட்டு, சமத்துவம் பேசும் வரிகள் மறைக்கப்

பட்டனவா?

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15-இன்படி ஒரு இந்துப் பெண் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் பின்வரும் வரிசையில் வாரிசுகள் அவள் சொத்தை அடைவார்கள். மக்கள், முன்பே இறந்த மகன் மகளின் மக்கள், கணவன், இவர்கள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகள், அதன் பின் பெற்றோர்களின் வாரிசுகள். இதில் ஒரு விதிவிலக்கு.

அந்தப் பெண்ணுக்கு மக்கள் இல்லையென்றால் பெற்றோரிடம் இருந்து அவள் வாரிசுரிமையில் அடைந்த சொத்து பெற்றோரின் வாரிசுகளுக்கு செல்லும். ஒரு வழக்கு நடந்தது. நாராயணி தேவி என்ற ஒரு பெண். அவள் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவனை இழக்கிறாள். தாய் வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அங்கே அவள் படித்து, பணி புரிந்து, பொருளீட்டி பின் இறக்கிறாள்.

அவள் வங்கி சேமிப்புத் தொகையைக் கேட்டு அவள் தாய் நீதிமன்றத்தில் மனு கொடுக்கிறார். அவளுடைய கணவனின் சகோதரி மகனும் விண்ணப்பம் செய்கிறார். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. தோற்றது தாய். காரணம், பெற்றோரிடமிருந்து வாரிசாகப் பெற்ற சொத்து மட்டும்தான் பெற்றோர் வகைக்கு செல்லும். அவளுடைய மற்ற சொத்தெல்லாம் கணவன் வாரிசுக்குத்தான் செல்லும் என்று சட்டம் சொல்கிறது.

வடமொழி நாரத ஸ்ம்ருதியில் ஒரு வரி. அப்ரஜாயா ஹரேத்பர்த்தா மாதா ப்ராதா பிதாபிவா. மக்கள் பெறாமல் இறந்த பெண்ணின் வாரிசுகள் இந்த வரிசையில். கணவன், தாயார், சகோதரன், தந்தை.

இந்த வரியை பின்பற்றி இந்து வாரிசுரிமை சட்டத்தை 1956-இல் இயற்றி இருந்தால் நாராயணி தேவியின் சொத்து அவர் தாயாருக்குத் தான் என்று தீர்ப்பாகியிருக்கும், துரத்திவிட்ட புக்ககத்தினருக்கு ஜாக்பாட் அடித்திருக்காது. 1956-இல் சட்டம் வந்த போது இது போல செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? மறுபடியும் டி.எம்.எஸ்.சின் உன்னைச் சொல்லி-தான்.

இப்பொழுது விதவைகளைப் பற்றி பார்போம். சுவாஸினி என்ற சொல்லுக்கு ருக்வேத காலம் தொட்டு நல்ல உடை அணிந்தவள் என்றுதான் பொருள். கணவன் உயிருடன் இருக்க வேண்டும் என்று அப்பொழுது குறிப்பிடப்படவில்லை.

ஆனால், பிற்காலத்தில் கணவன் உயிருடன் இருக்கும் பெண்தான் சுவாஸினி என்று எவ்வாறு வந்ததோ தெரியவில்லை. கணவனை இழந்த பெண்ணிற்கு பல கட்டுப்பாடுகள் விதித்து அவளை நல்ல உடை உடுக்க அருகதை இல்லாமல் செய்து, அவள் சுவாஸினி இல்லை, அறுத்தவள், வீணாகப் போனவள் என்பது ஸ்தாபிக்கப்பட்டது.

இன்று அந்தப் பெண்கள் நல்ல உடை அணிந்து கொண்டாலும் அவர்களை சுவாஸினியாக சேர்த்துக் கொள்வதில்லை. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "சுவாஸின்யர்சனப்ரீதா' என்று வரும்.

அப்படியென்றால், நல்ல உடை அணிந்து போற்றுபவர்களை அவளுக்கு பிடிக்கும் என்றுதான் பொருள். நிச்சயமாக தெய்வம் "கணவன் உயிரோடு இருப்பவர்களைத்தான் நான் அணைப்பேன்' என்று சொல்லாது.

பத்யெள ப்ரவ்ரஜிதே நஷ்டே க்ரீவே பதிதே ம்ருதே

பன்சஸ்யாபத்ஸூ நாரீணாம் பதிரன்யோ விதீயதே.

கணவன் தொலைந்து போனால், இறந்து போனால், துறவறம் பூண்டால், ஆண்மை இழந்தவனாக இருந்தால், அவனுக்கு தீரா நோய் இருந்தால், அவன் சித்த சுவாதீனம் இழந்தால், பெண்பித்தனாக இருந்தால் }ஒரு பெண் மறுமணம் செய்யலாம் என்பது தான் மேற்கண்ட சுலோகத்தின் பொருள்.

தமிழும் வடமொழியும் ஒரே குரலில் ஒற்றுமையாக பேசுவது தெளிவு. இடையே விரோதம் இருப்பதாகத் தெரியவில்லை. பின் ஏன் கைபெண்ணுக்கு ஒரு கோலம் கொடுக்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணனின் "பாதையில் பதிந்த அடிக'ளில் (மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை) இந்த வரிகளைக் காணலாம். ஆனால், மொட்டையாகிப் போனவள் சொட்டூண்டு டிகாக்ஷன்கூட விடாமல் பாலைக் குடிக்கலாகாது. இந்தச் சாஸ்திரங்களை எந்த ரிஷி முனிவர்கள் எழுதி வைத்தார்கள்? இன்று இல்லை இந்த நிலை. உண்மை.

ஆனால் பெண் என்பவளின் மதிப்பும் உரிமையும் ஆண் சார்ந்தது என்ற நிலைதான் நிலவி வந்துள்ளது. இந்தக் கசண்டின் அடிக்கசப்பு தான் அந்த நாராயணி அம்மாள் வழக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தின் எதிரொலி தான் குடும்ப கெளரவம் என்ற பெயரிலும், சாதிக் கட்டுப்பாடு என்ற பெயரிலும் நடக்கும் கொடூரங்களும் பாரம்பரியம் என்றும் சொல்லி பெண்களை அடிமைபடித்துவதும். நாம் தேர்ந்தெடுப்பதுதானே மேற்கோள்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.