குறைந்த தண்ணீரைக் கொண்டும், வறட்சியான காலத்திலும் சாகுபடி செய்யக் கூடியது கரும்பு. தமிழகத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் (தமிழகத்தின் மொத்த சாகுபடியில் 5%) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரும்பு சர்க்கரையாக மட்டும் பயன்படாமல், பல்வேறு வகையான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது. எத்தனால், ஆல்கஹால், கரும்புக் கழிவிலிருந்து உரம் என எண்ணற்ற பயன்கள் கரும்பின் மூலம் கிடைக்கின்றன. இதுமட்டுமல்லாமல் கரும்பிலிருந்து மின்சார உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் கரும்பு சாகுபடியில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ள தமிழகத்தில் (நாட்டின் மொத்த கரும்பு சாகுபடியில் 9 விழுக்காடு) கடந்த 2012-13 காலத்தில் 3.95 லட்சம் ஹெக்டேர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.
2013-14-ஆம் ஆண்டில் இந்த இலக்கை மிஞ்சித்தான் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 கூட்டுறவு ஆலைகள், 3 பொதுத்துறை ஆலைகள், 27 தனியார் ஆலைகள் என 46 சர்க்கரை ஆலைகள் இருந்தாலும் 43 ஆலைகள்தான் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் தினமும் 1,250 மெட்ரிக் டன் முதல் 7,000 மெட்ரிக் டன் வரை கரும்பு பிழிதிறன் வசதி கொண்டவையாகும்.
விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கும் ஆலைகள் ஒரு டன் கரும்பிலிருந்து, ஒரு லட்சம் வரை லாபம் ஈட்டுகின்றன.
இவ்வாறு லாபம் ஈட்டி வரும் நிலையில், தற்போது கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத்தான் தருவோம், மாநில அரசின் ஊக்கத்தொகையைத் தரமாட்டோம் என்று மாநிலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கூறி வருகின்றன.
தற்போது மத்திய அரசு, கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,300, மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.300, போக்குவரத்துப் படி ரூ.100 என டன்னுக்கு ரூ.2,600-ஐ கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும்.
ஆனால், இதில் மாநில அரசின் ஊக்கத்தொகையான ரூ.300-ஐ வழங்க முடியாது. ரூ.2,300 மட்டும்தான் வழங்க வேண்டும், அத்தொகையையும் உடனடியாக வழங்க முடியாது என்று கூறி விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன தனியார் சர்க்கரை ஆலைகள்.
தங்கள் ஆலைக்குத்தான் கரும்பை வழங்க வேண்டும் என்று நடவு காலத்தில் விடாப்பிடியாக விவசாயிகளை அக்கறையுடன் துரத்தும் சர்க்கரை ஆலை அதிகாரிகள், வெட்டுக்காலம் வந்த போது அதிநவீன கருவிகளுடன் கரும்பை வெட்டி எடுத்துச் செல்ல அக்கறை காட்டும் அதிகாரிகள் அந்த அக்கறையை உரியத் தொகையை வழங்குவதில் காட்டினால் நன்றாக இருக்கும்.
சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் டன் கணக்கில் கரும்பு கொடுத்திருந்தாலும் உரிய ரசீதுகள் கிடையாது. அதிகாரிகள் கொடுக்கும் ரசீதுதான், அவர்கள் கொடுக்கும்போதுதான் பணத்தை வாங்க முடியும் என்ற நிலைதான் வெகுகாலமாக உள்ளது.
அண்மையில் திருச்சி மாவட்டத்திலுள்ள தனியார் கரும்பு ஆலையொன்று, விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு விலைமட்டும்தான் வழங்க முடியும் மற்ற தொகையை வழங்க முடியாது என அறிவித்தது. இதனை, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
அந்த ஆலை மீது வருவாய்ச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அப்போது கடுமையாக எச்சரித்தார். இருந்தும், ஆலை நிர்வாகம் அதனை பொருட்படுத்தவில்லை.
தற்போது கரும்பு ஆலைகளில் சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆனால் சர்க்கரையின் தேவை குறைவு, ஏற்றுமதி குறைவு போன்ற காரணங்களால் ஆலையை நடத்த இயலாத நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும், அரசு மானியம் வழங்கினால்தான் இதர தொகையை வழங்க முடியும் என்றும் கூறுகின்றனர் கரும்பு ஆலை நிர்வாகிகள் சிலர்.
நெல், கோதுமை, கரும்பு போன்ற உற்பத்திப் பொருள்களுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்ற முந்தைய மத்திய அரசின் முடிவை செயல்படுத்தியிருக்கிறது தற்போதைய மத்திய அரசு.
அத்துடன், கரும்பாலைகளின் ஏற்றுமதி, இறக்குமதி பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக ரூ. 4,600 கோடியை வட்டியில்லா கடனாகவும் அளித்திருக்கிறது.
நாளுக்கு நாள் கசப்பாகிக் கொண்டு வரும் கரும்பு விவசாயிகளின் வாழ்வை இனிப்பாக்க அரசு ஆவன செய்திட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை





