ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சாமானியனுக்கு மரியாதை

அண்மையில் கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், காங்கிரஸ் அரசு கஜானாவை காலிசெய்துவிட்டதால் அதை சரிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

News image
Updated On :18 ஜூன் 2014, 8:55 pm

இரா. மகாதேவன்

அண்மையில் கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், காங்கிரஸ் அரசு கஜானாவை காலிசெய்துவிட்டதால் அதை சரிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி தனது செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது மூலம் எதிர்வினையாற்றியது. அதில், நரேந்திர மோடி, தான் பிரதமராகிவிட்டதை இன்னும் நம்பமுடியாத நிலையில் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து ஒரு பிரசாரகர் போல பேசி வருவதாகவும், அவர் ஒரு பிரதமரைப் போல நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுவாக, எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்ற ஒருவர் சிறிது காலத்திற்கு அந்த சந்தோஷத்தில் இருப்பது வழக்கம்தான். என்றாலும், தற்போது வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. அந்த சந்தோஷத்தை அளவோடு கொண்டாடி வருவதாகத்தான் தெரிகிறது.

வழக்கமாக மிகவும் நிதானமாகப் பேசும் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையின்மையை கண்டு, அதை எதிர்கொள்ள வேண்டிய வேகத்துடனும், அதனால், தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என அறிந்தும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தபோது, அந்த வேகத்தின் வெளிப்பாடாகவே காங்கிரஸ் கஜானாவை காலிசெய்துவிட்டது என்று பேசியதாகக் கருதவேண்டியுள்ளது.

அதே சமயம் காங்கிரஸ் ஆற்றிய எதிர்வினை ஒவ்வொரு சாமானியனையும் முகம் சுளிக்கவைத்துள்ளது. அதாவது, தான் பிரதமர் ஆகிவிட்டதை இன்னும் நம்பமுடியாத நிலையில் மோடி உள்ளார் என்று கூறுவதன் மூலம், ஒரு சாமானியன் இந்த நாட்டின் பிரதமர் ஆகமுடியாது என்ற நிலையில், சாமானியனான நரேந்திர மோடி, தான் பிரதமரானதை நம்பமுடியாமல் உள்ளார் என்று கூறுவதாகத்தான் இதனை எடுத்துக்கொள்ள முடியும்.

இல்லையென்றால், நாட்டு மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற்ற நரேந்திரமோடி பிரதமரானதில் அவர் நம்பமுடியாதது என்ன இருக்கிறது?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வுகளும் இன்றி யார் வேண்டுமானாலும் மக்கள் ஆதரவோடு ஊராட்சித் தலைவர் முதல் பிரதமர் வரை எந்தப் பதவிக்கும் வரலாம்.

மத்திய ஆட்சி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை மறந்து, தங்களது விருப்பம்போல மாநில அரசுகளை புறக்கணித்தது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.

இந்த நிலையில், மத்திய ஆட்சியின் தயவு இல்லாமலே மாநிலங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என நிரூபித்துக் காட்டின குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள். இதற்கு அந்த மாநிலங்கள் செயல்திட்டங்களைத்தான் கையில் எடுத்தன, வெறும் பிரசாரத்தை அல்ல.

அதே சமயத்தில் பிரசாரம் என்பது தேவையற்ற ஒன்றல்ல. மக்களிடம் நோய்த்தொற்று குறித்தோ, சுகாதாரம் குறித்தோ விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது பிரசாரம்தான்.

அதேபோல, மக்கள் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் தேவைப்படுகிறது. எனவே, மோடி ஒரு பிரசாரகர் போல செயல்படுகிறார் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மேலும், அவர் ஒரு பிரதமராக நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கியிருக்கிறது காங்கிரஸ். ஒரு பதவியில் இருப்பதாலேயே ஒருவருக்கு மரியாதை கிடைத்துவிடுவதில்லை.

தனது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தபோது, அந்நாடுகளின் தலைவர்களேகூட முதலில் தயக்கம் காட்டினர்.

ஆனால், அவர்கள் வராமல் தவிர்க்கவில்லை. அவர்களை மோடி கட்டாயப்படுத்தவுமில்லை. அந்தத் தலைவர்களிடம் ஏன் மனமாற்றம் ஏற்பட்டது? அதுதான் மோடியின் தலைமைத்துவம்.

இந்தியத் தூதரை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஒருநாடு, அதற்காக சிறிதும் வருத்தப்படாமல் தாங்கள் செய்தது சரி என்றே சாதித்து வந்த நிலையில், இன்று இந்திய பிரதமரின் வருகையை எதிர்நோக்கி இருப்பதாக கூறி வருகிறது.

நம் பிரதமர் ஒருவர் ஊர்ஊராக சுற்றிவந்த நிலையில், இந்தியாவுக்கு கிடைக்காத மரியாதை, இன்று மோடி பிரதமராகப் பதவியேற்ற சில வாரங்களுக்குள் உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது என்றால், யார் யாரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலேயே மக்களுக்கு விளங்கிவிடும்.

எனவே, கஜானா காலியாகவில்லை என்று சொல்லமுடியாவிட்டாலும், காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன், அந்தக் கட்சி தாங்கள் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று அடுத்த ஐந்தாவது ஆண்டில் பிரதமராவோம் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். அதுதான் இந்திய சாமானியனுக்கு காங்கிரஸ் கொடுக்கும் மரியாதை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.