உலக மகளிர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வாழ்த்துகளும் விழாக்களும் அமர்க்களப்படுகின்றன. ஊடகங்கள், தனித்தன்மை வாய்ந்த பெண்களை தேடித் தேடி பிரபலப்படுத்துகின்றன. "நமக்கே நமக்காக ஒரு தினத்தை ஒதுக்கி உள்ளார்களே' என்று பெண்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். அந்த ஒரு நாளில் பெண்களின் துதி பாடுகிறார்கள்; பெண்களை ஆராதிக்கிறார்கள்.
மகளிர் தின விழாக்கள் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு பூங்கொடியோ, ஒரு உமா மகேஸ்வரியோ சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பல பெண்களின் பெண்மை சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும். இத்தகைய நிலைமையில் அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் தேவையா? வியாபாரிகள் பெண்களின் ஆடைகளுக்கும், ஒப்பனை சாதனங்களுக்கும் தள்ளுபடி அறிவித்து அப்பொருள்களின் விற்பனையைக் கூட்ட மகளிர் தினம் உதவுகிறது. அவ்வளவே.
படித்து, வேலை பார்க்கும் பெண்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. ஆனாலும் அவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதே உண்மை. நம் கழனிப் பெண்களின் நிலை என்ன? அவர்களுக்கு தங்களின் உரிமைகளைப் பற்றி ஏதாவது தெரியுமா?
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்க்கையின் வசந்தத்தைத் தொலைத்து நிற்கும் பல பெண்களுக்கு மகளிர் தினம் பற்றி தெரியுமா? சின்னத்திரையே உலகம் என்று சுருங்கிப் போய் விட்டவர்களுக்குத் தங்களின் உரிமைகள் பற்றித் தெரியுமா? தான் எதைத் தொலைத்து விட்டோம் என்பதே புரியாத பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிஞ்சுகளைப் பற்றி யார் கவலைப்படப் போகிறோம்?
நவநாகரிகப் பெண்கள் பாதிக்கப்பட்டால் அரசு விழித்துக் கொள்கிறது, ஊடகங்கள் ஓயாமல் புலம்புகின்றன. ஆனால் கட்டட வேலை செய்யும் பெண்கள், கூலித் தொழில் செய்யும் பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் போன்றோரின் வலியையும், வேதனையையும் நாம் உணர்கிறோமா?
நாம் அடிமைப்படுத்தப் பட்டுள்ளோம் என்பதே புரியாமல் விரும்பி அடிமையாகிக் கொண்டிருக்கும் பெண்களின் விடுதலை எப்போது? வாழ்க்கை என்பது ஒரு வரம், ஓர் அற்புதம் என்றெல்லாம் அனுபவித்து வாழ வகையின்றி "வாழ்க்கை ஓர் அவலம்', "ஒரு சாபம்' என்று வாழ்கின்ற பெண்களின் தலைவிதியை எப்படி மாற்ற? வேலை செய்யும் இடத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, உள்ளுக்குள் உடைந்துபோய், மெüனமாக அழுது கொண்டிருக்கும் பல பெண்களின் கண்ணீரை எப்படித் துடைக்க? இவை அனைத்தும் சரி செய்யப்பட்டால்தான் மகளிர் தினக் கொண்டாட்டங்களில் ஓர் அர்த்தம் இருக்கும்.
இன்றைய பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உள்ளது போலவும், கருத்துச் சுதந்திரம் உள்ளது போலவும் தோன்றலாம். ஆனால் அது வெறும் மாயை. பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் அவலம் பெருகி வருகிறது.
இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில், ஆணின் ஆடை விளம்பரத்திற்குக் கூட பெண்கள் தேவைப்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் பெண்ணின் உடலைக் காட்டி அதை ஒரு நுகர்வுப் பொருளாக்கி வருகிறார்கள். நாம் மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் மகளிர் தினம் தேவையா?
உயிர் பறிக்கும் கொலைகள் முதல் வரதட்சணைக் கொடுமைகள், பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறைகள், ஆசிட் வீச்சு உள்ளிட்ட பத்து வகையான வன்முறைகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்றப்பிரிவு ஆவண மையமும், மாநில குற்றப் பதிவுகள் ஆவண மையமும் பட்டியலிடுகின்றன. இக்குற்றங்கள் களையப்பட வேண்டும்.
மகளிர் தின விழாவில் இனிப்பு சாப்பிடும்போதும், புதுப் புடவை உடுத்திக்கொள்ளும்போதும், உடம்பில் துணி இல்லாமல் மரத்தில் தொங்கவிடப்பட்ட பூங்கொடியும், ஒன்பது நாள்களாக அழுகிப் போய் புதரில் கிடந்த உமா மகேஸ்வரியும் நம்மை மன்னிப்பார்களா?
ஒரு பெண் கல்வி கற்றால், அவளுடைய சந்ததியே மேன்மையுறும் என்கிறோம். ஆனால் படித்த பெண்கள் பெற்ற மக்களும் தவறு செய்கிறார்களே? தவறு செய்யும் தன் கணவனையும், பிள்ளையையும் கண்டிக்காத பெண் கற்ற கல்வியால் என்ன பயன்? குடும்ப வாழ்க்கையின் ஆனந்தத்தை, இனிமையை பெண்கள் தொலைத்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும்.
அக்காலப் பெண்கள் எந்தக் கல்லூரிக்கும் சென்று படித்தது இல்லை. பட்டம் வாங்கியதும் இல்லை. ஆனால் குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் அவர்களிடம் இயல்பாகவே இருந்தது. பொறுமை, தியாகம், கற்பு, தாய்மை ஆகிய நற்குணங்களின் நிறைவை நோக்கிச் செல்வதில்தான் தங்களின் உண்மையான முன்னேற்றம் உள்ளது என்று நம்பினார்கள்.
இன்று பெண்களின் முன்னேற்றம், சுதந்திரம் எல்லாமே ஆணைக் கருத்தில் கொண்டே சிந்திக்கப்படுகிறது. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க ஏக போட்டி. ஆணுக்கு சமமாக பெண் மரம் ஏறுவதும், இடுகாட்டுப் பணியைச் செய்வதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நுகத்தடியை ஏற்றுக்கொண்ட பேதைமை இது.
ஆண்கள் செய்ய வேண்டிய கடின வேலைகளையெல்லாம் பெண்கள் செய்வதால், சோம்பேறி கணவர்கள் மனைவிகளின் ஊதியத்தில், உழைக்காமல் உண்ணக் கற்றுக் கொள்கிறார்கள். இல்லப் பணி, அலுவலகப் பணி ஆகிய இரண்டும் சேர்ந்து இக்காலப் பெண்களை அழுத்துகின்றன.
புலி வாலைப் பிடித்த கதையாக, வேலைக்குப் போக முடியாமலும் வருமானம் கருதி வேலையை விட முடியாமலும் தவித்துக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினக் கொண்டாட்டங்கள் இவர்களின் நிலையை நிச்சயம் மாற்றப் போவது இல்லை. பெண்களைப் பொறுத்தவரை காற்றை எதிர்த்துப் பறக்கும் காற்றாடியைப் போல, வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
பெண் அதிகாரி என்றால் ஜீரணிக்க முடியாத ஆண்கள்; முதுக்குப் பின்புறம் பேசும் ஆண்கள்; வயது வித்தியாசம் பார்க்காமல் வெறிக்கும் ஆண்கள்; குழந்தையிடம் கூட வக்கிரமாக நடந்து கொள்ளும் ஆண்கள்; பெண்களின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு அவர்களை வீழ்த்த முயற்சிக்கும் ஆண்கள் - இவர்கள் அனைவரும் மனிதர்களாக, நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய சகோதரர்களாக, தோழர்களாக மாறிய பின்னர் கொண்டாடப்படும் மகளிர் தின விழாக்களே மனநிறைவைத் தரும்.
பெண்கள் சுய பச்சாதாபத்திலும், கழிவிரக்கத்திலும் காலத்தை ஓட்டாமல், "நம் பலம் என்ன? பலவீனம் என்ன?' என்று ஆராய்ந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நற்பண்புகளின் உறைவிடமாக பெண் இருந்தால்தான் ஒரு சிறந்த சமுதாயம் உருவாகும்.
சுயக்கட்டுப்பாடு, தன்முயற்சி, தெளிந்த சிந்தனை, திட நம்பிக்கை, இனிய சுபாவம் ஆகிய பண்புகளைப் பின்பற்றினால் ஒரு பெண் தெய்வமாகப் போற்றப்படுவாள். அறிவாற்றலே நம் மூலதனம், புற அழகன்று என்று பெண் உணர வேண்டும்.
"பெண்' என்பவள் வெறும் போகப் பொருள் அல்லள். கணவனின் கைப்பாவை அல்லள். சமையலறையோடு முடங்கிப் போக வேண்டிய ஜீவன் அல்லள். பிள்ளை பெற்றுப் போடும் எந்திரம் அல்லள். அரைகுறையாக உடுத்தியும், உடுத்தாமலும் ஆடிப்பாடி ஆண்களை மகிழ்விக்கப் பிறந்த பிறவி அல்லள். சிந்திக்கும் திறனை மழுங்கடித்துக் கொண்டு ஆண்களுடைய சொல்லுக்குத் தலை ஆட்டும் பொம்மை அல்லள். ஒரு முழம் முல்லைக்கும் ஒரு பொட்டலம் அல்வாவுக்கும் தன் சுயத்தை அடகுவைக்கும் அறிவிலி அல்லள்.
அவளுள்ளும் ஒரு சக்தி உள்ளது; ஆற்றல் உள்ளது. அச் சக்தியை அவள் இச் சமுதாயம் பயனுற பயன்படுத்த வேண்டும். தங்களைச் சுற்றி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், எந்த நிலையிலும் மாறாத கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டு வாழ வேண்டும். ஒரு பெண் தன் சுயம், தன் உடல், தன் இலக்கு, தன் விருப்பம் ஆகியவற்றை உணர்ந்து கொண்டு தன் உரிமைகள் பற்றிய தெளிவைப் பெற்று இருக்க வேண்டும். அத்தகைய தெளிவை, மாற்றத்தை மகளிர் தின நிகழ்ச்சிகள் உண்டாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும்.
இன்றைக்கு மகளிர் தினத்தன்று என்ன செய்கிறோம்? ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரி புடவை அணிந்து வருகிறார்கள். அன்று அலுவலகத்தில் போட்டிகள், கூட்டம், பரிசு, இனிப்பு.... இத்யாதி... இத்யாதி... உச்சி குளிர்ந்து போகிறது பெண்களுக்கு. பலி ஆட்டுக்கு மாலை போட்டு, பொட்டு வைத்து ஊர்வலமாக அழைத்துப் போகிறார்களே, அந்த ஆட்டுக்கு தான் வெட்டுபடப் போகிறோம் என்பது தெரியுமா?
பெண்களின் உணர்வுகளை மதித்து, அவர்களை கண்ணியத்துடன் நடத்தினால் எல்லா நாளுமே மகளிர் தினங்கள்தான். வருடம் முழுவதும் சொல்லாலும், செயலாலும் பெண்களின் மீது சேற்றை வாரி இறைத்து விட்டு ஒரே ஒரு நாள் விழா கொண்டாடினால் ரணங்கள் ஆறாது; ஆறினாலும் வடுக்கள் அழியாது.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.