ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

எல்லாருக்குமா இலவசம்?

பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை இலவச கல்வி, மதிய உணவு, வில்லையில்லா மடிக்கணினி போன்ற திட்டங்கள்.

News image
Updated On :10 மார்ச் 2014, 8:44 pm

இரா. மகாதேவன்

பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை இலவச கல்வி, மதிய உணவு, வில்லையில்லா மடிக்கணினி போன்ற திட்டங்கள்.

கிராமப்புற மாணவர்கள் அனைவரும் உயர்நிலை, மேல்நிலைக் கல்விபெற வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் திட்டம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வட்டார அளவிலோ அல்லது பெரிய நகரங்களிலோ மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது.

தற்போது, குக்கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகள், பெரும்பான்மையான ஊராட்சிகளில் உயர்நிலைப் பள்ளிகள், குறுவட்ட அளவிலோ அல்லது 3 கி.மீ. தொலைவுக்குள்ளேயோ மேல்நிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இப்போதும் அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது, சலுகைகளை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்தும் நிலையையும், பள்ளி நிர்வாக அமைப்பில் சில சிக்கல்களை தோற்றுவிப்பதாகவும் உள்ளது.

குறிப்பாக, ஒரு பெரிய கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000 மாணவர்கள் படிப்பதாக வைத்துக்கொண்டால் இவர்களில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் சுமார் 700 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள 300 மட்டும் சில கி.மீ. தொலைவில் இருந்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இதில் இந்த 300 பேருக்கு மட்டும் இலவச பஸ் பாஸ் அல்லது சைக்கிள் வழங்கலாம்.

கிராமப்புற மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது நிலைமை சொல்லும்படியாக இல்லை. இங்கு சுமார் 400 பேர் அளவுக்கு மட்டுமே மாணவர்கள் பயில்கின்றனர். மற்ற அனைவரும் இலவச பஸ் பாஸ் அல்லது சைக்கிளைப் பயன்படுத்தி அருகேயுள்ள நகரத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துவிடுகின்றனர்.

இன்று நகரப் பள்ளிகளுக்கு இணையாக கிராமப் பள்ளிகள் முழுமையான கட்டமைப்பில் உள்ளன. கிராம கல்விக் குழுத் தலைவர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அனைத்து வசதிகளும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள நிலையில், நகரப் பள்ளிகள் சிறந்தவை, அதற்காக இடம்பெயர்கிறோம் என்று சொல்லும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளுர் பள்ளிகளைத் தவிர்த்து, நகரத்திற்கு வரும் மாணவர்களுக்கும் பஸ் பாஸ், சைக்கிள் போன்ற திட்டங்கள் பெற்றுத் தரப்படுகின்றன. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான இழப்பை சந்திக்கின்றன. வழக்கமான பயணிகள் பெரும் இடையூறை சந்திக்கின்றனர்.

ஒழுங்கு, கட்டுப்பாடு இல்லாமல் ஏறி, இறங்கும் மாணவர்கள், அவர்களால் நேரிடும் விபத்து போன்றவற்றால் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கிராம பள்ளிகளின் நிர்வாக செயல்பாட்டில் இது பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. கிராமபுறத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளியை செயல்படுத்த அரசு பல கட்டமைப்புகளை ஏற்படுத்துகிறது.

கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கற்பித்தல் கருவிகள், நூலகம், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்களை பணியமர்த்துதல் போன்றவற்றை நிறைவு செய்த பிறகு, அந்த கிராம மாணவர்கள் நகரப் பள்ளிகளுக்கு செல்வதால், திட்டமிடுதல், நிர்வகித்தலில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு மாணவர்களைப் பிடிக்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், பணி நிரவலில் சம்பந்தமில்லாத ஊர்களுக்கு தூக்கியடிக்கப்படலாம் என்ற மன உளைச்சலில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பாதிக்கப்படும் நிலையும், போதிய மாணவர்கள் இல்லாத நிலையில், பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் வீணாகும் நிலையும் உண்டாகும்.

மடிக்கணினி பெறும் மாணவர்கள் அதைப் பயன்படுத்துவது குறித்து கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. செல்போனுக்கு தனி குறியீட்டு எண் உள்ளது போல, இலவச மடிக்கணினிக்கு உள்ள சங்கேத எண்ணை மாணவர்கள் பெயரோடு பதிவுசெய்து வைக்கலாம். இதன்மூலம் தேவைப்படும் போது மாணவர்கள் வைத்திருக்கும் கணினியை அவர்கள் சங்கேத எண்ணோடு சரிபார்த்து எளிதாக ஆய்வு செய்ய முடியும்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெறாத, அடுத்த ஆண்டு படிப்பைத் தொடராத மாணவர்களிடமிருந்து சைக்கிள், மடிக்கணினிகளை திரும்பப் பெறுவது, பஸ் பாûஸ நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

இதன்மூலம் இலவசம் என்பது புதையல் அல்ல. அது பலரின் கடுமையான உழைப்பின் வரிப்பணத்திலிருந்து பெறப்பட்டது என்பதை மாணவர்களும், பெற்றோரும் உணரும்படி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.