என் இனிய இந்திய (முதல் முறையாக வாக்களித்த) இளைஞர்களே, வணக்கம். நான் சிறுமியாக இருந்தபோது ராஜா ராணி கதைகள் படிப்பேன். ஒரு அரசன் வாரிசு இல்லாமல் இறந்து விடுவான். அடுத்து அரசாளுவது யார்?
பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து அதை நடக்க விடுவார்கள். ஒரு இளைஞனின் கழுத்தில் அந்த மாலையை யானை அணிவிக்கும். உடனே எல்லோரும் மகிழ்வார்கள். அந்த இளைஞன் பட்டம் சூடி செங்கோல் ஏந்தி செம்மையாக அரசாள்வான்.
இன்று நம் நாட்டிற்காக யானை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாலைகளைத் தூக்கிக்கொண்டு செல்கிறது. பிறகு சற்று அயரலாமென்றால் மாநிலங்களுக்காக மாலையைத் தூக்க வேண்டும். நாம்தான் அந்த யானை, பெரிய பொறுப்புள்ள யானை.
1977-ஆம் ஆண்டு என்று நினைவு. நம் நாட்டில் பிரசுரமாகும் ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டைப்படம் என் மனக்கண் முன் எழுகிறது. வடக்கில் எங்கோ புழுதி படர்ந்த ஒரு இடம். அங்கே ஒரு பெண்மணி வாக்குச்சாவடி வரிசையில் நிற்கிறார். அவர்கள் பின்புறம் தான் நமக்குத் தெரியும். வியப்பைத் தரும் படம்.
இந்த கிராமத்துப் பெண்மணி தன் வாக்குரிமையால் மாபெரும் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்தார். இது 1977 தேர்தலின் ஒரு பதிவு. 2014 தேர்தல் என்றவுடன் என் நினைவில் வருவது நீங்கள்தான்.
வாக்குச் சாவடியில் கூட்டம் எப்போது குறைவாக இருக்கும் என்று கணக்குப் போட்டு சரியாக 11 மணிக்குப் போனேன். தப்பு. அப்பொழுது தான் அலை மோதியது கூட்டம்.
அதுவும் உங்கள் கூட்டம். "பர்ஸ்ட் டைம் டீ', "பர்ஸ்ட் டைம் டா', "இதைப் பாரு' என்று பெருமையுடன் விரலைத் தூக்கிக் காட்டுதல்.
இந்த காட்சி தான் இப்பொழுதும் என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. இதனால்தான் நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். உங்கள் தலைவிதியை நீங்கள் எழுதும் நாள் இது என்று புரிந்துதான் நீங்கள் வந்தீர்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.
நான் எப்பொழுது முதல் முறையாக வாக்களித்தேன் என்று நினைவில்லை. அப்பொழுது எனக்கு இந்த தெளிவு இருந்ததா என்றால் சந்தேகம்தான்.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இத்தேர்தலில் முதன்முறையாக வேட்பாளராக நின்றார். "எப்படி இருந்தது அந்த அனுபவம்' என்று கேட்டேன். "எல்லாம் புதிதாக இருந்தது' என்றார். ஒரு பெண்மணி அவரிடம் "ஒரு துடைப்பமாவது கொடுங்க, வோட்டு போடறேன்' என்றாராம்.
"நிறைய பேர் வாக்களிப்பது என்பது கூலிக்கு செய்யும் வேலை என்று தான் எண்ணுகிறார்கள்' என்று வருத்தப்பட்டார். அவர்கள் உங்கள் தலைமுறையாக இருக்கமாட்டார்கள்.
என்ன சரிதானே? நம் அரசியல் வாழ்வில், அரசியல் புரிதலில் நாம் வயதுக்கு வருவது நாம் வாக்குரிமை பெறும்பொழுது தான். அது நம் வாழ்வில் ஒரு முக்கியமான மைல் கல்.
நான் என் தேசத்தின் குடிமகள் என்பதற்கு ஒரு அடையாளம். இதன் வெளிப்பாட்டை காசுக்கோ பொருளுக்கோ விற்கக்கூடாது.
ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் அதிகாரி எஸ். ஒய். குரேஷியின் நூல் "ஓர் ஆவணப் படுத்தப்படாத அதிசயம்' (An Undocumented Wonder) மே மாதத்தில் இங்கு வெளியிடபட்டது. வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் ஒரே குரலில் சொன்ன ஒரு விஷயம், தேர்தலின்மேல் இருக்கும் அழுத்தமான பணத்தின் தாக்கத்தை
ஒழிக்கவேண்டும் என்பது. பண பலம் என்ற சுனாமியை எதிர்த்து நில்லுங்கள் என்றார்கள்.
பண பலமும் குற்றமயமாதலும் இரட்டைக் குழந்தைகள். அதிலும் சயாமிய இரட்டையர்கள், பிரிக்க இயலாது. இன்னொரு விஷயமும் புரிந்தது. அது இந்தியாவின் தேர்தலுக்கு ஈடாக ஒரு அரசு நடத்தும் நிகழ்ச்சி வேறெங்கும் அரங்கேறுவது இல்லை என்பதுதான்.
அன்று மேடையை அலங்கரித்தவர்கள், குரேஷி, கோபாலகிருஷ்ண காந்தி, எம்.ஜி. தேவசகாயம், டி.எஸ். கிருஷ்ணமுர்த்தி, என். கோபாலசுவாமி. இவர்கள் அனைவரும் அரசுத் துறைக்கு பெருமை சேர்த்தவர்கள். பார்க்கும் பொழுதே பெருமையாக இருந்தது.
தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவத்தை, ஆளுமையை, சிறப்பை எல்லோருக்கும் தெரியவைத்த சேஷன் முதல் மேடையில் அமர்ந்த மூவர் மட்டுமல்ல, மாநில அளவில் நரேஷ் குப்தா, ப்ரவீண் குமார் என்று எத்தனையே பேர் தேர்தலை ஒழுங்காக நடத்த மகத்தான சேவை புரிந்துள்ளார்கள்.
நீங்கள் முதலில் இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் ஆரவாரத்திற்குக் காரணம் இவர்கள்தான். இவர்கள் மறக்கக் கூடாது.
குரேஷியிடம் ஒரு மூத்த பத்திரிகையாளர் தேர்தல் ஆணையத்தைப் பற்றி கடுமையாக விமரிசித்தாராம். தனக்கு எல்லாம் தெரியும் நாங்கள் எல்லோரும் கையாலாகாத அசடுகள் என்று அவர் நினைத்தார் என்று அந்த நூலில் குரேஷி எழுதுகிறார்.
ஆணையத்தின் செயல்பாடுகளை நேராக பார்க்க குரேஷி அந்த பத்திரிகையாள நண்பரை அழைத்தாராம். பார்த்த பின் நண்பர் உஜாலாவிற்கு மாறிவிட்டார். அதாவது தேர்தல் ஆணையத்தைப்பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். குரேஷியிடம் சொன்னாராம். நம் வாயிற்படிக்கு மக்களாட்சி எப்படி கொண்டுவரப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆனால், நாம் தெரிந்து கொள்வதில்லை. ஆணையத்திற்கு என் சிறிய வணக்கம். நீங்கள்தான் எங்கள் நம்பிக்கை.
அவர் சொன்னதுதான் ஒரு ஆவணப்படுத்தப்படாத அதிசயம் என்பது. அதையே குரேஷி தன் நூலின் தலைப்பாக வைத்துவிட்டார்.
பழமையான நாடு நம் நாடு. ஆனால், இளம் ஜனநாயகம். இருந்தும் நாம் இதில் முன்னோடியாக உள்ளோம். அதற்கு நம் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்புகளினால் பெரிதும் உதவியது. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
2003-இல் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் (PUCL and another vs. Union of India) வேட்பாளர்களைப் பற்றிய விவரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் அதுவே ஜனநாயகம் வளர வழிவகுக்கும் என்றும் பொது வாழ்க்கையில் நேர்மையையும் வளர்க்கும் என்றும் கூறியது.
மத்தியிலும் மாநிலத்திலும் வேட்பாளர்களைப் பற்றிய தகவல் அறியும் உரிமை பேச்சு சுதந்திரத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்தத் தீர்ப்பு நம் சட்டவியலில் ஒரு பெரிய திருப்பு முனை.
இதனால், உங்களுக்கு, ஏன் எனக்கும் தான், ஒவ்வொரு வேட்பாளரின் பின்புல விவரங்கள் தெரிந்து விடும், அதன் அடிப்படையில் நம் வாக்கை யாருக்கு அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கலாம்.
2013-இல் இன்னொரு தீர்ப்பு, (Lily Thomas v. Union of India) அதன்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ மக்களவை உறுப்பினரோ குற்றவாளி என்று தீர்ப்பாகி அவர் பேரில் தண்டனை பிறப்பிக்கப்பட்டால் உடனேயே அவர் உறுப்பினர் தகுதியை இழப்பார்.
மேல்முறையீட்டு காலவறை செல்லும் வரை காத்திருக்கவேண்டியது இல்லை. இந்த உத்தரவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. நம் அரசியலை தூய்மைபடுத்த அடிகோலும் இதன் வலுவை செயலற்றுப்போக அரசு மேற்கொண்ட முயற்சியும் விழலானது.
2014-இல் சட்ட ஆணையம் சம்ர்ப்பித்த 244-வது அறிக்கையில் நாடாளுமன்றத்திலும் மக்களவையிலும் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் ஒருவர் குற்றக்கறை படிந்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் பேரில் குற்ற வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளதோ அவர் அது போன்று ஏதும் இல்லாதவரை விட வெற்றி பெறும் சாத்தியம் உள்ளதாம். அதாவது குற்றவாளியாக இருப்பது ஒருவருக்கு கூடுதல் மதிப்பெண் தருகிறது போலும்.
இப்பொழுது ஆகஸ்து மாதத்தில் ஒரு தீர்ப்பு, (Manoj narula vs Union of India), அதில் குற்றவாளிகளை அமைச்சர்களாக நியமிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் வரையறுக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருந்தார்.
தீர்ப்பில் அரசமைப்பு சட்டத்தின்படி யார் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்பதை தேசிய அளவில் பிரதம மந்திரியும் மாநில அளவில் முதல் மந்திரியும் தான் முடிவு செய்யவேணடும் என்றும் அவர்கள் விவேகத்துடனும் பொது நன்மையை கருத்தில் கொண்டும் செயல்படுவார்கள் என்பது நம் நம்பிக்கை என்றும் சொல்லப்பட்டது.
ராஜா ராணி காலத்து யானை பற்றி சொன்னேன். ஒரு குறை. எனக்குத் தெரிந்து ஒரு யானை கூட ஒரு பெண்ணை அரசியாக்கவில்லை. அதை விடுவோம். ஆனால் யானை எப்படியும் பாராட்டுக்கு உரியது.
யானையால் மாலையணிவிக்கப்பட்ட இளைஞன் நல்ல சிறப்பான அரசனாகவே அமைவான். யானை தவறி கூட ஒரு கொடூரனுக்கோ கொலைகாரனுக்கோ மாலை அணிவித்தது இல்லை. குடியரசு நாட்டில் நாம் தேர்ந்தெடுப்பவர்கள்தான் நம்மை ஆளுபவர்கள்.
நாம் குற்றவாளிகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் தேர்வு செய்து வாக்களிக்கிறோமே, ஏன்? யானைக்கு நம்மைவிட பகுத்தறிவு அதிகமா?
தேர்தல் எப்பொழுது வரும் என்று காத்திராமல், அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன். மாலையை தகுதியான, தூய்மையான வேட்பாளர்களுக்கு அணிவித்தால் நமக்கு வெற்றி; நம் நாட்டுக்கு வெற்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

