மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அநியாயமாக ஒன்றும் கேட்கவில்லை

சுதந்திரம் கிடைச்சுதாம், யாருக்குக் கிடைச்சுதுன்னு எனக்குத் தெரியலை. அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள்

Updated On :20 ஏப்ரல் 2015, 9:33 pm

சுதந்திரம் கிடைச்சுதாம், யாருக்குக் கிடைச்சுதுன்னு எனக்குத் தெரியலை. அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் குறித்த பொது விசாரணை நடைபெற்றபோது அமர்வு நடுவர் குழுவில் ஒருவராக இருந்தேன். அதில் பங்கேற்ற ஒருவரின் கேள்விதான் இது.

"வேதம் புதிது' படத்தில் பெரியவரைப் பார்த்து சிறுவன் ஒரு கேள்வி கேட்பான். உடனே, பெரியவராக நடிக்கும் சத்யராஜ் முகம் அறைபட்டு அறைபட்டு திரும்புமே. எனக்கு அப்படித்தான் இருந்தது. பாடுபட்டு தலையை நேராக நிறுத்தினேன்.

ஆனால், இது நகைச்சுவை நேரம் இல்லை, நாம் சிந்திக்க வேண்டும். அன்று நான் சந்தித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுதந்திர இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்பது ஒரு கேள்வி. ஏனென்றால், அவர்களது உரிமைகள் பெரிதாக மதிக்கப்படுவதில்லை.

ஆனாலும், அவர்கள் புறமுதுகிட்டு ஓடாமல், அன்றாட வாழ்வின் போராட்ட வீரர்களாக வாழ்கிறார்கள். கொத்தடிமைத்தனம், குழந்தைத் தொழில் முறை, இடம் பெயர்தல் போன்ற பிரச்னைகள் பரவலாக உள்ளன.

அமைப்புசாராத் தொழில் செய்வதால் விபத்து, இறப்பு, மூப்பு நேரும்போது தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது பற்றியும் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றியும் வந்தவர்கள் பேசினார்கள். வந்தவர்கள் பல தொழில்களின் பிரதிநிதிகள், (உ-ம்) கட்டடத் தொழில், சிறு கடை, உப்பளம், வீட்டு வேலை, சலவை.

திருவாரூர், கோயமுத்தூர், மதுரை என்று பல மாவட்டங்களில் இருந்து  வந்தவர்கள் நேராகவும், எழுத்து மூலமாகவும் தங்கள் குறைகளைக் கூறினர்.

இவர்கள் நலனை முன்னிறுத்தும் வாரியங்களும் திட்டங்களும் உள்ளன. அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நலத் திட்டங்களின்படி மூக்குக் கண்ணாடியில் இருந்து கல்விச் செலவு, திருமணச் செலவு என்பது வரை என்ன என்னவோ நலத் திட்ட உதவிகள். பிறகு பிரச்னைதான் என்ன?

அவர்கள் குரல்களைக் கேளுங்கள். அவை நம்பிக்கையின் சவங்களுக்கு ஊதும் சங்கா? இல்லை, சமூகத்தை உறக்கத்திலிருந்து எழுப்பும் நாதமா?

கட்டடத் தொழிலாளர் ஒருவர் தன் தாயை இழந்தார். திட்டத்தின்படி இறுதிச் சடங்குகள் செய்ய உதவித் தொகை கேட்டு அவர் மனு கொடுக்கலாம். இந்தத் தொகை கிடைக்கும் என்று நம்பி, அவர் கடன் வாங்கி தாயின் இறுதிச் சடங்குகளை முடித்தார்.

கோப்பு கை மாறி தொகையாய் உருவெடுக்கும் வரை அம்மா காத்திருக்க மாட்டாள் இல்லையா,  பணம் கைக்கு வர வேறு என்ன கை மாற வேண்டும் என்று பராபரமே அறியும்.

கடன் குட்டி போட்டு இப்போது இரட்டிப்பாகிவிட்டது. திட்டத் தொகை கைக்கு வந்தபாடில்லை. வீட்டை ஏலத்துக்குக் கொண்டு வருவேன் என்று கடன் கொடுத்தவர் மிரட்டல். அருமை பெருமையுடன் சொந்த வீட்டுக் கூரையின் நிழலில் வாழ்ந்த அவரும், குடும்பமும் தெருவில் நிற்கும் நாள் தொலைவில் இல்லை. ஏன்?

திட்டத்தின் தவறன்று. செயல்படுத்துவதில்தான் தவறு. எதையும் பின்னாடி செய்யலாமே என்ற மெத்தனமா, எதையுமே ஏன் செய்ய வேண்டும் என்ற சோம்பலா, இல்லை, எதையுமே சுயலாபம் இருந்தால்தான் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமா, தெரியவில்லை. எதுவாக இருந்தால்தான் என்ன, விளைவு சோகத்தில் முடிந்தது.

அழுத்தமும் தெளிவும் உள்ள ஒரு பெண்மணி பேசினார். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் வீட்டு வேலை செய்பவர். அவர் கேட்ட கேள்வி நம் குற்றவியல் சட்டத்துக்கு சவுக்கடி. ஏங்க, நாங்க வேலை செய்யும் இடத்தில் ஒரு பொருள் காணாமல் போய்விட்டால், முதலாளி புகார் கொடுக்கிறார், உடனே போலீஸ் வருகிறது, எங்களை மிரட்டுகிறது, நாங்கள்தான் தவறு செய்தோம் என்ற சந்தேகத்தில் எல்லோரும் எங்களைப் பார்க்கிறார்கள்.

ஆனால், எங்களுக்குப் பணியிடத்தில் நேரும் ஒரு தொல்லையைப் பற்றி நாங்கள் புகார் செய்தால், போலீஸ் கண்டுகொள்வதில்லை. சட்டத்தில் பணக்காரர் புகார் செய்தால்தான் பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கா? ஏம்மா, நீங்கதான் சொல்லுங்க என்றார். உண்மைதானே.

நான் படித்த குற்றவியல் சட்டத்தில் அப்படி ஏதும் இருந்ததாக நினைவில்லை. கண்களைத் துணியால் கட்டி தராசைத் தூக்கிக்கொண்டு நீதி தேவதையை உருவகப்படுத்துகிறோம், இல்லையா, அதன் பொருள் அநீதிக்குக் கண் மூடிக் கொள்வேன் என்பதில்லை, எந்த ஒரு சமூக, பொருளாதார, மத வேற்றுமைகளும் அவள் கண்களில் படாது. அவள் தராசை நேராகத் தூக்குவாள் என்பதுதான்.

நரிக்குறவர் ஒருவர் வந்தார். என்ன ஓர் உற்சாகம், சிரிப்பு. அவருடன் அவர் மனைவியும் இன்னும் மூன்று பேரும் வந்தனர். பேசியவர் தங்கள் குல வரலாற்றைப் பற்றிக் கூறினார். பரம்பரையாக அவர்கள் வேட்டையாடுபவர்கள், அணிகலன்களும் செய்பவர்கள். எங்கள் தொழில் காவல் காப்பது. திருடுவது இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னார். வாழ்க்கை முறைகள் மாறியதில் இவர்கள் வாழ்வும் மாறியது.

அதனால், பாசிமணி மாலை முதலியன விற்று மட்டுமே பிழைக்கிறார்கள். பழங்குடியினர்களான அவர்களுக்கு பல பாரம்பரிய மருந்து முறைகள் அத்துப்படி. எங்களுக்கு நோயே வராது, வந்தாலும் டாக்டரிடம் போகாமல் சரி செய்துகொள்ளத் தெரியும், கூட்டுக் குடும்பம்தான். ஆனால், எங்களுக்குள் சண்டையே வராது என்று சொல்லி ஒரு சிரிப்பை உதிர்த்தார். யாரைப் பார்த்து பின்தங்கியவன் என்கிறாய் என்றாரா?

ஓடும் ரயில், பேருந்து போன்றவற்றில்தான் விற்பது எளிது என்று அவர் விளக்கினார். நடமாடும் விற்பனையாளர் என்று ஓர் அடையாளச் சீட்டை ரயில்வே நிர்வாகம் கொடுக்கலாமே. நாங்கள் நேர்மையாகப் பிழைக்கணும் என்றுதானே நினைக்கிறோம் என்றார்.

அவர் கேள்விக்கென்ன பதில்? உனக்கு இலவசங்கள் கொடுத்து உன்னை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவனாக ஆக்குவோமேயன்றி  சுயசார்புடன் கெளரவமாக வாழ உதவி செய்யமாட்டோம் என்பது எழுதப்படாத அரசியல் சாசன விதி என்பதை அவருக்கு எப்படி விளக்குவது? ரயிலில் அவர் மனைவி பாசிமணி விற்றுக்கொண்டிருந்தபோது காவல் துறை அதிகாரி லத்தியால் அடித்தாராம்.

என் கையில் லத்தி இருக்கிறது, துப்பாக்கி இருக்கிறது. நான் அடிப்பேன், சுடுவேன் என்று போலீஸ் செயல்படுவது சரியல்ல. பயணச்சீட்டு இல்லையென்றால் வண்டியில் இருந்து இறக்கிவிட வேண்டியதுதானே? ஏன் அடிக்க வேண்டும்? அதற்குத்தான் அவர், எங்களுக்குப் பிரத்யேக சீட்டு கொடுங்கள் என்கிறார். நியாயமாகத்தான்படுகிறது. அதற்கு விதிமுறை, புகைப்பட அடையாளம் எது உண்டோ அவற்றை வரைமுறையில் கொண்டு வரலாம். இவர்கள் பிழைக்க வழிவகுக்க வேண்டும்.

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நல வாரிய அட்டை கொடுப்பதாகத் திட்டம் உள்ளது. அந்த அட்டை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும், நல வாரியத்தின் பயன்களைப் பெற உதவும். அது இன்னொரு துயரக் கதை. அட்டைக்கு மனு கொடுத்தால் அந்த மனு தன் சகோதர, சகோதரிகளுடன் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறதாம்.

பதிவு விண்ணப்பங்கள் தேங்குகிறதாம், நேரத்தில் பரிசீலனை செய்வதில்லை, புதுப்பிக்க மனு கொடுத்தால் அதற்கும் அதே விதிதான். ஆண்டுக்கணக்கில் தாமதம். மனுவை ஏற்றவுடன் அதிகாரிகள் அதை மறந்து விடுவார்களோ? அலுவலகத்தில் என்னதான் செய்வார்கள்?

கண்ணெதிரே இருக்கும் கோப்புகளைப் பரிசீலிப்பதுதானே அவர்கள் கடமை? வேண்டாம்... அதைப் பிறிதொரு நாள் பார்க்கலாம் என்று தள்ளிப் போடுதல்தான் பொதுவாக நடைபெறுகிறது. ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வந்து பணம் இருந்தால் நடக்கும் என்றார்கள்.

கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் வேறு மாநிலங்களில் இருந்துதான் வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள். ஒன்று, அவர்கள் பிறந்த மாநிலங்களில் பிழைக்க வழியில்லை.

இரண்டு, தமிழகத் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவு ஊதியத்தை இவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். சக்கையாகப் பிழியலாம். இவர்களுக்கு குடும்ப அட்டை கிடையாது, நல வாரியத்தில் பதிவு செய்ய முடியாது.

இடம் பெயர்தலால் இவர்கள் அனுபவிக்கும் துயரம்தான்  எத்தனை? ஆனால், தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கும் இருக்கிறது. அதற்கும் ஓர் அட்டை வேண்டுமே.

நரிக்குறவ நண்பர் வந்தாரே, அவர் சொன்னார்: நாங்கதான் சம்பாதிக்க ஊர் ஊரா அலையணும். எங்கப் பெண் பசங்களை கஸ்தூரிபாய் பாலிகா பள்ளியில் சேர்த்தால் அவங்க இடைஞ்சல் இல்லாம படிக்கலாம். ஆனா அது முடியலை என்றார் ஏக்கமாக.

எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார், என்ன உயர்வான கனவு! பள்ளி இருக்கிறது, படிக்கும் வயதில் பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆவல் பெற்றோர்களுக்கும் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று புள்ளிகளைச் சேர்த்து ஓர் அழகிய கோலம்தான் போடமுடியவில்லை.

ஓய்வூதியம் கிடைக்கவில்லை, விபத்து நிவாரண நிதி கிடைக்கவில்லை, மகப்பேறு நிதி கிடைக்கவில்லை. இத்தனூண்டு கிடைக்க வேண்டும் என்றாலும் அலையோ அலை என்று அலைய வேண்டும். என்ன செய்வார்கள்?

நடுவர் குழுவில் இருந்த நாங்கள் பட்ட வலியே மலையளவு என்றால், அவர்களின் வலி எவ்வளவு கூரியதாக இருக்கும். கத்தை கத்தையாக அவர்கள் கையில், பல்வேறு நிதி உதவி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் நகல்கள். ஒன்றும் பைசல் ஆகவில்லை.

அவர்கள் அநியாயமாக ஒன்றும் கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கிறார்கள். சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் சொல்கிறார்: நினைத்துப் பார்த்தால் ஒரு நியாயமான, அக்கறையுள்ள அரசு என்பது ஒரு நியாயமான, அக்கறையுள்ள சமூகம் இருந்தால்தான் உருவாகும் என்பது உண்மை.

முதலில் கேட்ட கேள்விக்கு நாம்தான் பதில் அளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: நீதிபதி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.