மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

எய்ட்ஸ் நோயாளிகளின் ஏந்தல்!

"எண்பதுகளில் உலகத்தை அப்பியது எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி. மற்ற எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் எய்ட்ஸ்

Updated On :11 ஆகஸ்ட் 2015, 8:29 pm

"எண்பதுகளில் உலகத்தை அப்பியது எய்ட்ஸ் எனப்படும் எச்.ஐ.வி. மற்ற எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் எய்ட்ஸ் நோய் எளிதாகப் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தன. கடுமையான வறுமை, பிற மோசமான பழக்கவழக்கங்கள், சூழல் இவற்றின் கலவையே எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணம். கணக்கிலடங்கா மக்கள் தண்ணீர் வசதி இல்லாமல் வாழும் நாட்டில், நோய் தீர்க்கும் மருந்துகளுக்கு அவர்கள் எங்கே போவார்கள்?

பொது சுகாதாரத்தின் பொருட்டு அரசு செலவிடும் தொகை குறைவே. மறு பக்கத்தில் நூற்றாண்டின் முடிவில், நெடுந்தூரம் ஓட்டிச் செல்லும் லாரி ஓட்டுநர்களின் எண்ணிக்கையும், பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்பதால், இந்தியாவில் வெடிக்கப் போகிறது அபாயகரமான எய்ட்ஸ் வெடி என பல ஆராய்ச்சியாளர்கள் நினைத்தார்கள்.

ஆனால், அது நடக்கவில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் ஒரு பெண்மணி. அவர்தான் அண்மையில் மறைந்த சுனிதி சாலமன்.' முப்பது ஆண்டுகளாக எய்ட்ஸ் பற்றியும், காச நோய் பற்றியும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வரும் மைக்கேல் ஸ்பெக்டர் "நியூ யார்க்கர்' பத்திரிகையில் சுனிதி சாலமனுக்கு இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள வி.ஹெச்.எஸ். அரங்கத்தில் அவருக்கு இரங்கல் நிகழ்வு அண்மையில் நடந்தது. மேலை நாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் அவர் புகழை நமக்குச் சொல்ல வேண்டும் என்றில்லை.

ஆனால், பல நேரங்களில் நமக்கு மேற்கில் இருந்து வெளிச்சம் போட்டால்தான் நம் அண்டை வீட்டில் இருப்பவரின் அசுர சாதனைகள்கூட கண்ணில்படும். அன்று பல முகங்கள் கூடின. சகோதர அமைப்பைச் சார்ந்த ஒருவர், இனிமேல் தங்களுக்கு உதவுவதற்கு அவர் போல யார் வருவார் என்று ஏங்கினார்.

சுனிதி எப்படி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினார் என்று லயோலா கல்லூரி பாதிரியார் ஒருவர் விளக்கினார். அன்று வந்த கூட்டம் போல ஒரு சில நிகழ்ச்சிகளுக்கே வந்து இருக்கிறது என்று சொன்னார். மாணவர்கள் அமைதியாக கவனம் சிதறாமல் சுனிதி பேசுவதைக் கேட்டார்கள் என்றும் சொன்னார்.

இந்த நோயின் அபாயத்தை ஆராய்ச்சியில் கண்டுபிடித்தபின், ஆராய்ச்சியுடன் தன் செயல்பாட்டை முடித்துக் கொள்ளாமல், எப்படி மேலும் மேலும் தன் ஆக்கப்பூர்வ சிந்தனையை அவர் செயலாக்கினார் என்று ஒரு மூத்த மருத்துவர் விளக்கினார்.

சுனிதியின் வாழ்க்கையை மூன்று சொற்களில் அடக்கிவிடலாம் என்று ஒருவர் சொன்னார். பர் ந்ய்ங்ங்ப், ற்ர் ச்ங்ங்ப், ற்ர் ட்ங்ஹப் (உன் பக்கம் வருகிறேன், உன் வலியைப் புரிந்துகொள்கிறேன், உன் நோயைப் போக்குகிறேன்). இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் உள்ள இடர்கள் அனைத்தையும் இந்த மூன்று சொற்கள் நீக்கிவிடுகின்றன.

இந்த நோயைப் போக்குவதில் தடங்கல்கள்தான் என்ன? பணம் இல்லை, கல்வி இல்லை, புரிதல் இல்லை. எய்ட்ஸ் நோய் என்றாலே அவர் ஒழுக்கம் அற்றவர். ஆகையால், ஒதுக்கப்பட வேண்டியவர் என்ற நினைப்பு.

நோய்த் தடுப்பு, குறைப்பு முயற்சிகள் சரியான நபர்களை போய் சேர்வதில்லை. சரியான திட்டங்கள் தீட்டப்படுவதில்லை. அப்படியே திட்டங்கள் தீட்டப்பட்டாலும், அவை ஆமை வேகத்தில்தான் நகர்கின்றன.

எய்ட்ஸ் மருத்துவரீதியான பிரச்னை மட்டுமல்ல, சமூக, கலாசார, பொருளாதாரப் பிரச்னைகளின் கலவை என்பதுதான் உண்மை.

அன்று பேசியவர்கள் எல்லோரும் சுனிதியை எய்ட்ஸ் நோயாளிகள் ஒரு தெய்வப் பிறவியாக, ஒரு தேவதையாகவே கருதினார்கள் என்று சொன்னார்கள்.

நான் பதவியில் இருந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் நாமக்கல்லில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு விழிப்புணர்வு, இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது. நானும் பங்கேற்றேன். 500-க்கும் மேற்பட்ட விதவைகள் வந்தார்கள். ஏன் இத்தனை பெண்கள் என்று கேட்கிறீர்களா?

நாமக்கல்லில் இருந்து நாடு முழுவதும் லாரி போக்குவரத்து உண்டு. லாரி ஓட்டுநர்களான ஆண்கள் தாங்கள் சம்பாதித்துவிட்ட நோயை மனைவிக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு இறந்து விடுவார்கள். உயிர் வாழ்வது அந்த எச்.ஐ.வி. விதவைகள்.

இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் பெண்ணின் மாமனார், மாமியார் தங்கள் பிள்ளையால் வந்த வினைதானே என்பதை அறவே மறந்து அந்தப் பெண்ணை வீட்டை விட்டு விரட்டி, அவளது குழந்தைகளிடம் இருந்து பிரித்து விடுவார்கள்.

அந்தப் பெண்கள் சொல்லும் சோகக் கதையைக் கேட்டால் கல் மனமும் கரைந்துவிடும். தங்கள் குழந்தைகள் தங்களுக்கு வேண்டும் என்பதில் இருந்து தங்களுக்கு குடும்ப அட்டை வேண்டும் என்பது வரை தங்கள் குறைகளை அவர்கள் அன்று சொன்னார்கள்.

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 500 வீராங்கனைகளும் தங்களுக்கு இந்த நிலைமை என்பதைத் துணிவில்லாமல் மறைக்கவில்லை, நீதி கோரி முன்வந்தார்கள்.

முதலில் மேடைக்கு வந்த பெண்மணியிடம் கை குலுக்க நாங்கள் கையை நீட்டியபோது அவர் முதலில் தயங்கினார், பின் கையை நீட்டினார், பின் உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டார்.

"சார், எங்களுக்கு இந்த நோய் என்று தெரிந்த பின்னரும், தைரியமாக அன்புடன் எங்களைத் தொடும் முதல் நபர் நீங்கள்தான்' என்றார். பின் அனைவரும் பெருமிதத்துடன் கை குலுக்கினர்.

வெளியே இன்னும் 200 பெண்கள் காத்திருப்பதாக எங்களிடம் மாவட்ட ஆட்சியர் சொன்னார். ஒதுக்க வேண்டும் என்று நினைத்து சமூகம் எவ்வளவு கொடுமையாகச் செயல்படுகிறது பாருங்கள்.

ஒரு நிறை மாதப் பெண், அரசு மருத்துவமனையில் குழந்தைப் பேறு பிரிவை அணுகினாராம். அவருக்கு எச்.ஐ.வி. என்று தெரிந்ததும் அவரை விரட்டி விட்டார்களாம். வெளியே விழுந்த அவருக்கு உடனே குழந்தை பிறந்துவிட்டது.

இதைப் பார்த்து சுனிதி வேதனைப்பட்டார். வேதனைப்பட்டதுடன் நிற்கவில்லை. இது போன்று இனிமேல் நடக்கக் கூடாது என்று வி.ஹெச்.எஸ். வளாகத்தில் ஒரு ஏற்பாடு செய்தார். நினைத்ததை முடித்தவர் சுனிதி. அன்று பேசியவர்கள் அனைவரும், நான் செய்ய மாட்டேன் என்று சொல்லி சுனிதியிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றார்கள்.

ஆரம்ப நாள்களில் எய்ட்ஸ் நோயாளியான பெண் பிள்ளை பெற்றால் அவரை அணுக செவிலியரும் தயங்குவார்கள். சந்திர மண்டலத்துக்குச் செல்வது போல பாதுகாப்பு உடை அணிவார்களாம். ஆகையால், அந்தத் தாய் குழந்தைக்குப் பாலூட்டும் நேரத்தில் சுனிதியே வந்து மேற்பார்வை பார்த்து உதவியும் செய்வாராம். இதுவும் அன்று கேட்ட தகவல்தான்.

ஆராய்ச்சி செய்து, நோயின் அபாயத்தைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரு மையத்தை அமைத்து, அங்கு நோயாளிகளுக்கு ஆவன செய்து, பின் பிள்ளை பெறும் தாய்மார்கள் நலன், பாலருந்தும் குழந்தை நலன், செவிலியருக்குப் பயிற்சி, மருத்துவருக்குப் பயிற்சி என தொடர் பணிகளுக்கு இடையே இடைவிடாத ஆராய்ச்சியையும் மேற்கொண்டவர் சுனிதி.

இத்துடன் நிற்கவில்லை. அவரது அரவணைப்பு என்ற குடையின் கீழ் வந்த, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்திருக்கிறாராம். முடியாது என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது போல.

கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு எய்ட்ஸ் பற்றியும், ஆணுறைகள் பயன்படுத்தினால் பாதுகாப்பு என்பதைக் குடிசைவாழ் மக்களிடமும் விளக்கினார். எந்த தரத்தில் உள்ள மக்களையும் அவர் சந்திக்கத் தயங்கவில்லை, தவறவில்லை. எய்ட்ஸ் அரக்கனைத் தோற்கடிப்பது என்ற போரில் ஓர் ஆயுதத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

இந்தப் போரின் துவக்கத்தில் அவர் கணவரே இந்தத் துறை அபாயமானது இல்லையா என்று கேட்டாராம். அவரது கணவர் மிகப் பெரிய மருத்துவரான விக்டர் சாலமன். அதற்கு, அவர்களுடைய சோகங்களை நீங்கள் கேட்டால் இப்படி சொல்ல மாட்டீர்கள் என்றாராம் சுனிதி.

முதன்முதலில் 1986-இல் அவர் பரிசோதனைக்கு எடுத்த ரத்தம் சென்னையில் எடுக்கப்பட்டதுதான். அதில் ஒன்று 13 வயதுப் பெண்ணுடையது. அவர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் திணிக்கப்பட்டார். அவர் கதைதான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது என்று சுனிதி ஒரு நேர் காணலில் கூறியிருக்கிறார்.

காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை, சமூகவியல் என்று எவ்வளவு முனைகள் இந்தப் பிரச்னைக்கு. அப்படியிருந்தும் அந்த அபாயம் பெரிதாக வெடிக்காமல் ஓர் அபூர்வப் பிறவி தடுத்திருக்கிறார்.

அந்த அபூர்வப் பிறவிக்கு நம் அரசு பத்ம கெüரவத்தை அளிக்கவில்லை. அவருக்கு ஒன்றும் அதனால் குறைவில்லை. யார் யாருக்கோ கிடைக்கிறது. எய்ட்ஸýடன் ஒண்டிக்கு ஒண்டியாக இந்தியாவில் போராடிய இவருக்கு பத்ம விருது இல்லை - போகட்டும். அவரே போய்விட்டார்.

அன்று பேசிய ஒருவர், குடும்பத்தில் ஒருவர் இறந்தாலே சோகம் தாங்கவில்லை, இருவரை இழப்பது - முதல் நாள் கலாமை இழந்தோம், மறுநாள் சுனிதி. அன்று பேசிய மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள் எல்லோரும் சுனிதியின் பணியைத் தொடருவோம், அதற்கு இறப்பில்லை என்றார்கள்.

இறுதியில் நன்றி சொன்ன சுனிதியின் மகன், "என் அம்மா இப்போது நம்மைப் பார்த்தால் ஏன் வெட்டியாக என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? வேலை இருக்கிறது என்று சொல்லி இருப்பார்' என்றார்.

பெரியோர்கள் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இதுதான். காலம் என்ற மணற்பரப்பில் உன் உயர்வான வாழ்க்கையினால் கால் தடம் பதிக்க வேண்டும் என்று லாங்ஃபெல்லோ என்ற ஆங்கிலக் கவி பாடினார்.

அதற்கு என் சினேகிதர், "கால் தடத்தை காற்று அழித்துவிடும்' என்று சிரித்துக் கொண்டே சொல்வார். சுனிதியின் கால் தடத்தை காற்று அழிக்காது. அதற்கு அழிக்க மனது வராது.

கட்டுரையாளர்:

நீதிபதி (ஓய்வு).

இந்தியாவில் வெடிக்கப் போகிறது அபாயகரமான எய்ட்ஸ் வெடி என பல ஆராய்ச்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் அண்மையில் மறைந்த சுனிதி சாலமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.