தேவை உறுப்பு தான விழிப்புணர்வு

முற்காலத்தில் தானம் என்றால் பொன், பொருள், நிலம், பசு, துணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மருத்துவத் துறையின்
Updated on
2 min read

முற்காலத்தில் தானம் என்றால் பொன், பொருள், நிலம், பசு, துணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மருத்துவத் துறையின் வளர்ச்சி காரணமாக ரத்த தானம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
 அதைத் தொடர்ந்து கண் தானம் வலியுறுத்தப்பட்டது. இருக்கும்போது ரத்த தானம், இறந்த பிறகு கண் தானம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் மக்களின் மனதை ஆள்கொள்ளத் தொடங்கியது.
 இப்போது உடல் உறுப்புகள் தானம் என்ற நிலையையும் தாண்டி, மருத்துவ ஆராய்ச்சிக்காக, இறந்த பிறகு தனது முழு உடலையும் அப்படியே தானமாக (தேக தானம்) சிலர் மருத்துவமனைகளுக்குத் தந்துவிடுகின்றனர்.
 ஆனாலும், இந்த அறிவியல் யுகத்திலும் பலருக்கு இந்தத் தானங்களைச் செய்ய முன்வருவதில் தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
 இப்போதைய நவீன யுகத்தில் மருத்துவத் துறையின் கண்டுபிடிப்புகளால் நோய்களைக் குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டால் அதற்கு மாற்றாக 100 சதவீதம் சரியாக இயங்கக் கூடிய செயற்கை உறுப்புகள் இல்லை. இயற்கையான உறுப்புகளை மாற்றினால் மட்டுமே அது முழுமையாகச் செயல்படக் கூடிய திறன் கொண்டதாக உள்ளது.
 ஆனால், இயற்கை உறுப்புகள் கிடைப்பது எளிதன்று. உயிரோடு இருப்பவர் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், குடல், கணையம் ஆகியவற்றின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவற்றை தானம் செய்யலாம். இறந்த பின்பு, இரண்டு சிறுநீரகம், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை ஆகியவற்றை தானம் செய்யலாம்.
 உயிரோடு இருப்பவர் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யும்போது, இரண்டு சிறுநீரகங்களின் வேலையை ஒரு சிறுநீரகமே செய்யும். கல்லீரல், நுரையீரலின் ஒரு பகுதியை எடுப்பதால் அது தானாக வளர்ந்து பழைய நிலைக்குத் திரும்பி விடும். ரத்த தானம் செய்த பிறகு தானாக ரத்தம் சுரந்து சாதாரண அளவுக்கு வந்துவிடும்.
 எலும்பு, எலும்பு மஜ்ஜை, இருதயம், ரத்த நாளங்கள், தோல், இருதயத்தில் உள்ள வால்வுகள் ஆகியவற்றையும் தானமாக அளிக்கலாம்.
 ஒருவரின் இதயத் துடிப்பு நின்றுவிட்டாலோ, நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ, மூளை செயல் இழந்துபோய் இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் அவருடைய நெருங்கிய குடும்ப உறவினரின் சம்மதம் பெற்று அவரது உடலில் இருந்து 25 வகையான உடல் உறுப்புகளையும், திசுக்களையும் எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம். ஒரு மனிதர் 10 பேருக்கு உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முடியும்.
 இந்தியாவில் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஆண்டுக்கு சுமார் 1.75 லட்சம் சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், சுமார் 5 ஆயிரம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள்தான் நடக்கின்றன.
 கல்லீரல் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பதோ ஆயிரம்தான். அதே போல, இருதயம் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரமும், நுரையீரல் சுமார் 20 ஆயிரமும் தேவைப்படுகின்றன.
 கருவிழிப் படலம் சுமார் 2 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால், கிடைப்பதோ 50 ஆயிரம்தான். உடல் உறுப்பு தானங்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் செய்யப்படுகின்றன.
 பொதுவாக உடல் உறுப்பு தானங்கள் பெரும்பாலும் நோயாளியின் உறவினர்களாலேயேதான் செய்யப்படுகின்றன. முன்பின் தெரியாத பொதுவான நபர்கள் நோயாளிகளுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வது என்பது குறைவாக உள்ளது.
 மூளைச்சாவு அடைந்தவர்களுடைய உடலுறுப்புகள்தான் வெளி நபர்களுக்குத் தானமாக வழங்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வு இல்லாததே. மேலும், அறியாமை, அச்சம், தயக்கம், தவறான அனுமானங்கள், மூட நம்பிக்கைகள் காரணமாகவும் உடல் உறுப்பு தானம் குறைவாக உள்ளது.
 இறந்த ஒருவரின் உடல் மண்ணில் புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது மனித உடல் உறுப்புகள் எவருக்கும் பயன்படாமல் அழிந்து போகின்றன.
 உடல் உறுப்புகளை இவ்வாறு ஏன் வீணடிக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து முடிவெடுத்தால் பல உயிர்களைக் காப்பாற்றிவிட்டோம் என்ற மன நிம்மதி ஏற்படும். இப்படி ஒவ்வொருவரும் சிந்தித்தால் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் ஒரு புரட்சியே நிகழும் என்று திட்டவட்டமாகக் கூற முடியும்.
 உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணைய தளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். நம்முடைய இறப்புக்குப் பிறகு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதில் பதிவு செய்ய வேண்டும்.
 அதேநேரத்தில், நாம் நமது உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ள தகவலை நமது குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
 நமது இறப்புக்குப் பிறகு உடனடியாக யாரைத் தொடர்பு கொண்டு உடல் உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும் என்பதையும் குடும்பத்தினரிடம் முன்கூட்டியே தெரிவித்து அவர்களை மனோரீதியாக தயார் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
 மனித உடல் உறுப்புகளை தானம் அளிப்பது குறித்த பிரசாரத்தை ஓர் இயக்கமாகவே அரசும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து நடத்த வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு சலுகைகளை வழங்கலாம்.
 ஆனாலும், எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
 மண்ணுக்கு இரையாகும் மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவோம், மனித உயிர்களைக் காப்போம்.
 (இன்று உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com