புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

என்று மடியும் ஆண் குழந்தை மோகம்?

"பேட்டி பசாவ், பேட்டி படாவ்' (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்) என்ற பெண் குழந்தைகளின் நலனுக்கான புதிய திட்டத்தை

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 8:06 pm

ரமாமணி சுந்தா்

"பேட்டி பசாவ், பேட்டி படாவ்' (மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்) என்ற பெண் குழந்தைகளின் நலனுக்கான புதிய திட்டத்தை ஹரியாணா மாநிலத்தின் பானிபட் நகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
 சமீபத்தில் அதே மாநிலத்தின் பிபிப்பூர் என்ற கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட தனது மகளுடன் எடுத்துக் கொண்ட கைப்படமும் (selfie), அவர் நடத்திய மகள் - தந்தை புகைப்படப் போட்டியும், பெண் குழந்தைகளுக்கான பிரதமர் மோடியின் திட்டத்துக்கு வலு சேர்ப்பது போல் அமைந்தன.
 பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தந்தையின் நூதனமான பிரசாரத்தால் கவரப்பட்ட பிரதமர் மோடி, மனம் திறந்து பேசும் தனது வானொலி நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டதன் விளைவாக தந்தை - மகள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்து குவிந்தன.
 இப்படியெல்லாம் முயற்சி எடுத்து பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை, மக்களுக்கு அதுவும் குறிப்பாக ஹரியாணா மாநில மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியதன் அவசியம் என்ன?
 நமது நாட்டின் மக்கள் தொகையில் ஆண் - பெண் விகிதம் (அதாவது 1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளார்கள் என்பது) குறைந்து கொண்டே வருகிறது. இதில், மிகவும் கவலைக்குரிய விஷயம், படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளில் ஆண் - பெண் விகிதம்.
 1981-இல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 962 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம், 1991-இல் 945-ஆகி, 2001-இல் 927 ஆகக் குறைந்து, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 918 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர் என்ற நிலைக்குக் குறைந்துள்ளது.
 குழந்தைகளின் எண்ணிக்கையில் நாட்டின் எல்லா மாநிலங்களைவிடவும் மிகவும் குறைவான ஆண் - பெண் விகிதத்தைக் கொண்ட மாநிலம் என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது ஹரியாணா. இந்த மாநிலத்தில் ஆறு வயது வரையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 834 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.
 கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், மிஸோரம், மேகாலயம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா போன்ற வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் விகிதம் 900-த்துக்குக் குறைவாகவே உள்ளது.
 இப்படி குறைந்து கொண்டு வரும் பெண்களின் எண்ணிக்கை, ஹரியாணாவில் ஒரு சமூகப் புரட்சியையே உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது, இந்த மாநிலத்தில், பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால், திருமணத்துக்குப் பெண் கிடைப்பது அரிதாகப் போய்விட்டது.
 மணப்பெண்ணுக்காக ஏங்கித் தவிக்கும் ஹரியாணா மாநில இளைஞர்கள் எந்த மாநிலத்து, எந்த நாட்டுப் பெண்ணையும் பணம் கொடுத்து மணக்கும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார்கள்.
 காப் (Khaap) பஞ்சாயத்து நடத்தி வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்பவர்களைத் தண்டித்துக் கொண்டிருந்த ஹரியாணா மாநிலப் பெரியவர்கள், இன்று தங்கள் மாநில இளைஞர்கள் பிகார், மேற்கு வங்கம், ஒடிஸô, ஆந்திரம், கேரளம் என பிற மாநிலப் பெண்களைத் தேடிப் போய் திருமணம் செய்து கொள்வதை ஆமோதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 மாறுபட்ட ஒரு கலாசாரத்தில் வளர்ந்த பெண்கள், அதுவும் குறிப்பாகத் தென் மாநிலங்களிலிருந்து வரும் பெண்கள், கட்டுப்பாடான ஹரியாணா கிராமங்களின் பழக்க வழக்கங்களுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வேறு வழியின்றி நடக்கும் இப்படிப்பட்ட திருமணங்களில் பல தோல்வியில்தான் முடிகின்றன என்பது கசப்பான உண்மை.
 வட மாநிலங்களில், அதுவும் குறிப்பாக ஹரியாணாவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதற்கான காரணங்கள் என்ன? காலம் காலமாக, இந்த மக்கள் பெண் குழந்தைகளைக் குறைவாக மதிப்பிடுவதும், பெண் குழந்தைகளின் மேல் காட்டும் வெறுப்புமே இதற்கு முக்கியக் காரணங்கள்.
 எல்லாக் குடும்பங்களிலும், இரண்டு அல்லது அதிகமாகப் போனால் மூன்று குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு ஓர் ஆண் குழந்தையாவது இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளனர் வட மாநிலத்தவர்கள்.
 அதனால், முதல் குழந்தை பெண் என்றால், அந்தத் தாய் இரண்டாவது முறை கருவுற்ற உடனே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொண்டு, பெண் என்றால் மறுபடியும் பெண் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து கருக் கலைப்பு செய்து விடுகிறார்கள்.
 இன்றைக்கு உலக அளவில் பாட்மிண்டன் விளையாட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ள, ஹரியாணா மாநிலத்தில் பிறந்த சாய்னா நெவால், பெற்றோர்களுக்குத் தான் இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்ததால், மிகவும் துக்கமடைந்த தனது பாட்டி, தான் பிறந்து ஒரு மாதம் வரையில் தன்னைப் பார்க்க வரவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
 வட மாநிலங்களில் பெண் குழந்தை அறவே வேண்டாம் என்று நினைக்கும் சிலர், முதல் முறை கருத்தரித்ததில் இருந்தே, ஸ்கேன் செய்து பார்த்து பெண் கருக்களை அழிக்கும் பாவத்தைக் கட்டிக் கொள்ளவும் தயங்குவதில்லை.
 பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் என்ன என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 1994-ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்து பார்ப்பது இந்தச் சட்டத்தின்படி குற்றமாகும்.
 இந்தக் குற்றத்தைச் செய்யும் மருத்துவரும், குடும்பத்தினரும் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டம் இருந்தும், இங்கு ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கும் பரிசோதனை செய்வதில்லை என்று எழுதப்பட்ட பலகை எல்லா மருத்துவமனைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தாலும், இந்தக் கொடுமை ரகசியமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 கருவை ஸ்கேன் செய்யும் இயந்திரங்களை, மருத்துவ வசதிகள் இல்லாத குக்கிராமத்துக்குக்கூட எடுத்துச் சென்று, கருக் கலைப்பு செய்யும் பாவச் செயலை சில மருத்துவர்கள் புரிகிறார்கள்.
 அப்படியே கருக் கலைப்பு செய்ய முடியாமல் போய், பெண் குழந்தை பிறந்து விட்டால், அக் குழந்தையின் வளர்ப்பில் பாகுபாடு காட்டப்படுகிறது. ஊட்டச்சத்து உள்ள உணவளிப்பதிலும், நோய்வாய்ப்பட்டால் மருத்துவ வசதிகளை நாடுவதிலும் ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பெண் குழந்தைகள் ஓரவஞ்சகமாகவே நடத்தப்படுகிறார்கள்.
 அதனால்தான், இயற்கையிலேயே ஆண் குழந்தைகளைவிட அதிக ஆரோக்கியமாகப் பிறக்கும் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் நமது நாட்டில் அதிகமாக உள்ளது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் 39 ஆண் குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்குள்ளேயே இறந்து விடுகின்றனர். இந்த இறப்பு விகிதம் பெண் குழந்தைகளுக்கு 42-ஆக உள்ளது.
 நமது நாட்டின் எல்லா மாநிலங்களிலுமே இந்த பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உள்ளது.
 இதேபோன்று, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் பெண் குழந்தைகளில் அதிகமாகவே உள்ளது. இறப்பு விகிதத்தில் ஆண் -பெண் குழந்தைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ஓரளவு குறைந்து கொண்டு வருகிறது என்றாலும், இந்தப் புள்ளி விவரங்கள் நமது நாட்டில் பெண் குழந்தைகளின் மேல் காட்டப்படும் பாகுபாட்டை வெளிப்படுத்துகின்றன.
 ஏன் இந்த ஆண் பிள்ளை மோகம்? பெண் பிள்ளை வேண்டாம் என்று எல்லா ஹரியாணா தாய்களும் நினைத்திருந்தால் நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்த உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவாலோ, விண்வெளியில் பயணித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவோ நமக்குக் கிடைத்திருப்பார்களா?
 ÷குறைந்து கொண்டே போகும் ஆண் - பெண் விகிதத்தைச் சரி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் "மகளைக் காப்பாற்றுங்கள், மகளைப் படிக்க வையுங்கள்' திட்டத்தின் கீழ், நாட்டில் மிகவும் குறைவான ஆண் - பெண் குழந்தைகள் விகிதம் கொண்ட நூறு மாவட்டங்கள், பல்துறை நடவடிக்கைகள் எடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருகின்றன.
 மத்திய அரசின் மகளிர் - குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் - குடும்ப நலம், மனித வள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களும் இணைந்து செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் என்ன என்று கண்டுபிடித்து கருக் கலைப்பு செய்வதைத் தடுக்கவும், பிறக்கும் பெண் குழந்தைகளை இறந்து போகாமல் காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பெண் குழந்தைகள் கல்வி பெறவும், பெண் குழந்தைகளும் எல்லா நடவடிக்கைகளிலும் பங்கு பெறவும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் பிள்ளை வேண்டாம் என்று எல்லா ஹரியாணா தாய்களும் நினைத்திருந்தால் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவாலோ, விண்வெளியில் பயணித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்குரிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவோ நமக்குக் கிடைத்திருப்பார்களா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.