மட்டுமீறிப் பெருகியிருக்கிற நுகர்வுக் கலாசாரம், ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிற சமூகப் பொறுப்பற்ற மனோபாவம், சூழல் நலம் பற்றிய விழிப்புணர்வின்மை, சோம்பல் மனப்பான்மை, வணிகப் பேராசை, தடுமாறிக் கொண்டிருக்கும் புறத்தூய்மை நிர்வாக முறைகள், அறப்பார்வைகள் ஏதுமற்ற அறிவியல் வளர்ச்சி, அரசுகளின் தொலைநோக்குப் பார்வையின்மை போன்றவற்றுக்கெல்லாம் ஒற்றைச் சான்றாகி இன்று நமது சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன பலதரப்பட்ட நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகள்.
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவிப் படர்ந்து குவிந்திருக்கின்ற விதவிதமான நெகிழிக் கழிவுகள் எனும் அசூயைகளிடமிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாதவர்களாக நாம் மாறியிருக்கிறோம். அதிலும், பிளாஸ்டிக் பைகள் என்றழைக்கப்படுகிற நெகிழிப் பைகள் இல்லாமல் வாழவே முடியாது என்கிற இழிநிலை, இன்றைய நமது மக்களிடையே வலுப் பெற்றிருக்கிறது.
மருத்துவக் கருவிகள் போன்ற அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நெகிழி வகையினங்கள் தேநீர் குவளைகளாகவும் பயன்படுத்தப்பட்டு எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அந்தந்த இடங்களிலேயே வீசியெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உணவு விடுதிகளில் இருந்து வாங்கி வரப்படுகிற ஒரு வேளை உணவின் கூறுகள் பதினைந்துக்கும் மேற்பட்ட நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.
உண்டு முடித்த பின்பு கழிவுகளாக மாறுகிற அத்தகைய வெற்று நெகிழி உறைகள் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுகின்றபோது அவை நழுவிப் படபடக்கின்றன, நீரில் பயணிக்கின்றன, காற்றில் பறக்கின்றன.
ஒருவரது ஒரு வேளை உணவிலேயே இத்தனை நெகிழிக் கழிவுகள் என்றால் ஒரு பெரிய உணவு விடுதியின், ஒரு மாநகரத்தின் அனைத்து உணவு விடுதிகளின், ஒரு நாட்டின் அனைத்து உணவு விடுதிகளின் வழியாக ஒவ்வொரு நிமிடமும் வெளியேறும் நெகிழிக் கழிவுகள் எவ்வளவு இருக்கும் என்பதை அவரவர் கணக்குக்கே விட்டுவிடுவோம்.
மெல்லிய நெகிழி உறைகளில் தனித்தனியாகக் கட்டப்படுகிற அனைத்துப் பொருள்களையும் மீண்டும் ஓர் உறுதியான பெரிய நெகிழிப் பையில் மொத்தமாகப் போட்டுத் தருகிறார்கள். அத்தகையத் தாய் பைகள் அந்தந்த நிறுவனங்களின் முதன்மையான விளம்பரங்களாக நுகர்வோராலேயே காட்சிப்படுத்தப்படுகின்றன.
உண்ட ஓரிரு மணி நேரத்துக்குள் செரிமானமாகியும், சிறுநீராகியும் விடுகிற உணவுப் பொருள்களைத் தாங்கி வருபவை, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் தானாகவும் அழியாத, தரையில் புதைந்தாலும் மக்காத நெகிழி வகையினங்கள்தான் எனும் நிலை மிகக் கொடூரமானதொரு முரண் ஆகும்.
மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வியலுக்கு உயிராதாரமாக விளங்கும் நீர்நிலைகளும், நிலப்பரப்புகளும், காற்று மண்டலமும் நெகிழிப் பொருள்களின் குப்பைகளால் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதையெல்லாம் சான்றுகளோடு விளக்கி சூழலியல் அறிவியலாளர்களும், அமைப்புகளும் வெளியிடுகிற தகவல்கள் பேரதிர்ச்சிகளைத் தருகின்றன.
பறவைகளும், மீன்களும், கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களும்கூட நெகிழிக் கழிவுகளை உண்டு மாண்டு போவதை அவற்றின் வயிறுகளைத் திறந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகெங்கிலும் ஆங்காங்கே வீசியெறியப்பட்டு பசிபிக் பெருங்கடலைச் சென்றடைந்த நெகிழிக் குப்பைகள் ஒன்றுசேர்ந்து அமெரிக்க, ஆசிய கண்டங்களுக்கு இடையே ஹவாய் தீவு முதல் ஜப்பான் வரை வட பசிபிக் பெருங்கடலில் ஒரு குப்பைத் தீவாக மாறியிருப்பதை கடலியல் ஆய்வாளர் சார்லஸ் மூர் என்பவர் கண்டறிந்து வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்தீவுக்கு Great Pacific Garbage Patch என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், சுமார் 10 கோடி டன் நெகிழிக் குப்பைப் பொருள்கள் அங்கு திரண்டிருக்கலாம் என்றும் பல அதிர்ச்சித் தகவல்களைப் பட்டியலிட்டு முன் வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
சென்னையின் இயற்கைப் பேரழகின் அடையாளமாகவும், அரிய உலகப் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்கிய பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நமது நிகழ்காலத்தின் மாநகரக் குப்பைத் தொட்டியாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு குவிந்திருக்கும் துர்நாற்றக் குப்பை மேடுகளில் பல கோடிக்கணக்கில் படபடத்துக் கொண்டிருப்பவை எந்தக் காலத்திலும் மண்ணில் மக்கமுடியாத நெகிழிக் கழிவுகளேயாகும்.
உலக அளவில் நெகிழியின் பயன்பாடுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் நெடுவடிவம் எடுத்துள்ளன. இந்த ஐம்பது ஆண்டுகளில் அதற்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்பட்டு சீனா, அயர்லாந்து, வங்கதேசம், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றின் பயன்பாடு கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இருப்பினும், நெகிழிப் பொருள்களின் மிகவும் குறிப்பாக, உணவுப் பொருள் சார்பு நெகிழிப் பொருள்களின் உற்பத்தி அசுர வேகத்தில் நடக்கிறது.
பெட்ரோலியப் பொருள்களில் இருந்து உற்பத்தியாகிற நெகிழி வகையினங்கள் வெண்பாறைக் கட்டிகளைப் போன்று தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு பல லட்சக்கணக்கான தேநீர் கோப்பைகளாகவும், பல்வேறு வகை நெகிழிப் பைகளாகவும், புட்டிகளாகவும் ஒருசில மணி நேரங்களில் உற்பத்தியாகிவிடுகிற வேகம் மலைப்பு தருகிறது.
உலக அளவில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைப் பொருத்தவரை தொலைநோக்குப் பார்வைகளுடன் கூடிய சமூக அறிவியல் தோற்றுப்போய், வணிக அறிவியல் வெற்றி பெற்றுவிட்டது.
நெகிழிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பட்டுக் கழிந்த நெகிழிப் பொருள்களை மீண்டும் விலைக்கு வாங்கிக் கொள்வதாக அறிவிக்கின்றன. அந்த உடன்படிக்கையின் பொருட்டே, உற்பத்தியாகிற நெகிழிப் பொருள்களின் மீது கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இக்கொள்கையை உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கை Extended Producer Responsibility (EPR) என்கின்றனர். ஆனால், நடைமுறையில் இத்திட்டம் 5 சதவீத அளவுக்குக்கூட வெற்றிபெற்று பயன் தருவதில்லை. நெகிழிக் குப்பைகளின் பெருக்கத்தைத் தவிர்க்க அவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் முன் வைத்திருக்கிற சூழல் நலக் கருத்துகளால் கடுகளவும் பயன் விளையவில்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
இன்றைய நடைமுறையில் நெகிழிக் கழிவுகளை, மிகவும் குறிப்பாக உணவுப் பொருள்கள் சார்ந்த நெகிழிக் கழிவுகளை சேகரித்துச் சந்தைப்படுத்துவதில் முறையான வணிக ஒருங்கிணைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
ஏதேனும் ஒரு பொருளின் கவசமாக அவை பரவலாகவும், பரபரப்பாகவும், பெருமளவிலும், பெரு விருப்பத்துடனும் நாடெங்கிலும் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், மீண்டும் அவை தயாரித்தவர்களை நோக்கி எப்போதும் திரும்பி வருவதேயில்லை. இது குறித்து, இதுவரை முன்வைக்கப்பட்ட அத்தனைத் தீர்வுகளும் வெறும் கண்துடைப்புதான்.
அசுரத்தனமாக உற்பத்தி முறைகளையும், அவற்றின் வணிக முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுவிட்டு, விழிப்போடிருக்கும்படி நாம் மக்களுக்கு மட்டும் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
2002-ஆம் ஆண்டில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நெகிழிப் பயன்பாடு, கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ஆம் ஆண்டே பின்வாங்கிச் சென்றுவிட்டது. இதுகுறித்து நமது அரசுகள் பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை.
குப்பைகளாகிவிட்ட நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட திடக் கழிவுகளை எரிக்கக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. நெகிழிப் பொருள்களை எரிக்கும்போது உண்டாகும் டையாக்சின் உள்ளிட்ட கொடிய நச்சுக் காற்றுக் கூறுகள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன.
எனவே, நெகிழிக் கழிவுகளை எரிக்கக் கூடாது. மண்ணில் புதைத்தாலும் அவை எத்தனை நூறு ஆண்டுகளானாலும் மக்கப் போவதில்லை என்பதோடு மண் வளத்தையும் நாசப்படுத்தி விடுகின்றன.
துணிப் பைகளையோ அல்லது பிரம்புக் கூடைகளையோ திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதுபோல் நெகிழிப் பைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியுங்கள் அல்லது உடைத்துப் போடுங்கள் என்பதே நாகரிக அறிவுறுத்தலாகவும், வசதியான நாகரிகமாகவும் இருக்கிறது.
ஆக எரிக்கவும், புதைக்கவும், மீண்டும் பயன்படுத்தவும் முடியாத நெகிழிக் காகித வகையினங்களை மறுசுழற்சி செய்வதன் வாயிலாகவே மோட்சம் பெறச் செய்ய வேண்டும். இதிலும் துயரம் என்னவென்றால், மறுசுழற்சி செய்வதற்கு மூன்று மடங்கு பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதுடன் நெகிழியின் தரமும் குறைந்து போய்விடும் என்பதுதான்.
இதுவரை உலக அளவில் ஒரு விழுக்காடு அளவுக்கே நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சியாவதும் கண்துடைப்புதான்.
அப்படியெனில், இதற்கு என்னதான் தீர்வு எனில் அவற்றின் உற்பத்தி, வணிகப் பயன்பாடு, நுகர்வோரின் வீசியெறியும் மனோபாவ வாழ்க்கை முறை இம்மூன்று களங்களிலும் மிக உறுதியான நெருக்கடிகள் தோற்றுவிக்கப்பட்டு அதே வேளையில் இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான மாற்றுக் கண்டுபிடிப்புகளையும், தாவரங்களின் பொருள்களில் பொட்டலங்கள் கட்டப்படுகிற தொழில்நுட்பங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இப்படிச் செய்வதுதான் உண்மையான அறிவியலாக இருக்க முடியும்.
துணிப் பைகளும், சணல் பைகளும், பிரம்பு, ஓலைக் கூடைகளும் தொடர்ச்சியாகக் கையாள்வதற்கும், அப்படிக் கையாண்ட பிறகு பாதிப்புகள் ஏதுமின்றிக் கழித்துக் கட்டுவதற்கும் நூறு விழுக்காடு உகந்தவையல்லவா?
இயற்கையை, உயிரினங்களின் வாழ்வியலை சிதைத்துச் சீரழிக்காத வகையில் உணவுப் பொருள்களை வழங்கும் பொட்டல விநியோகத்தில், நமது அறிவியல் ஏன் வெற்றிபெறவில்லை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.