இன்றைக்கு உலக நாடுகளின் இலக்கிய அரங்குகள் தொடங்கி, உள்ளூர்த் திருவிழாக்கள் வரை எங்கும் இடம்பெறும் மேடை நிகழ்வு பட்டிமண்டபம். பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் இது, தொடக்கத்தில் பட்டிமண்டபம் என்ற பெயரில் அறிமுகம் ஆகி, இப்போது, பட்டிமன்றம் ஆகிவிட்டது.
வழக்காடு மன்றமும் இதனை ஒட்டி எழுந்த காரணத்தால், இரண்டையும் ஒருசேரக் கொண்டு, முன்னதன் பட்டி என்பதையும் பின்னதன் மன்றத்தையும் இணைத்துப் பட்டிமன்றம் ஆக்கிவிட்டனர் போலும்.
இதனை எப்படி அழைப்பது என்பது குறித்தே ஒரு பட்டிமண்டபம் நடத்தும் அளவுக்குத் தமிழறிஞர்கள் பலரும் முயன்றிருக்கின்றனர். என்றாலும், பழந்தமிழ் இலக்கியங்களில் பட்டிமண்டபம் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது.
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் என்கிறது சிலப்பதிகாரம். இத்தொடருக்கு அடியார்க்கு நல்லார் உரை செய்யும்போது, வாட்போர் வாய்ப்புடையோனாகிய மகத வேந்தன், பகையாற்பொருது தாங்கமாட்டாது, அப்பகையிடத்துத் தரப்பட்ட பட்டிமண்டபமும் என்று பொருள் தந்து, பட்டிமண்டபம் - வித்தியா மண்டபம் ஓலக்கமண்டபமென்க என்று விளக்கியுரைக்கிறார்.
பின்னர் எழுந்த மணிமேகலை, ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின் என்கிறது. தத்தம் சமயத்திற் பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ்செய்து வாதிக்கும் சமயவாதிகள், வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர் என்பது அதன் பொருள். அக்காலத்தில், கலை ஆராய்வதற்கும், வாது புரிவதற்கும் உரிய மண்டபமாக அது விளங்கியிருக்கிறது.
பின்னர், திருவாசகத்தில், "பட்டி மண்டப மேற்றினை யேற்றினை' என்று மணிவாசகர் பாடுகின்றார்.
"கரிசறு கவிக்குக் கவி. கமகனுக்குக்
கமகன். வாதிக்குஒரு வாதி
துரிசறு வாக்கி தனக்கொரு வாக்கியாய்
அவர் தொன்று தொட்டு அமைந்து
வரிசையின் வந்த வேள்வியர்பெறாது வரும்இகல் கடந்த எஃகு உடையார்
பரிசில் நூற் பயிற்சிஇன்புஎனக் கலை தேர் பட்டி மண்டபம் பல வயங்கும்'
என்று விரித்து விளக்குகிறது தணிகை புராணம்.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, பன்னருங்கலை தெரி பட்டிமண்டபம் என்ற தொடரைத் தருகிறான் கம்பன்.
இந்த வாக்கியம்தான் இன்றைய பட்டிமண்டபத் தோற்றத்துக்கு முக்கியக் காரணம். இந்த வடிவத்தைச் சென்ற நூற்றாண்டின் 30-களில் முதன்முதலில் கலை இலக்கிய வடிவமாக அரங்கேற்றியது காரைக்குடி கம்பன் கழகம். அதற்கு முன்னதாக, பட்டிமண்டபம் என்ற வடிவத்தை எழுத்து வடிவில் அதன் செயலர் கம்பன் அடிப்பொடி (சா.கணேசன்) எடுத்தாண்டிருக்கிறார்.
1932 ரங்கூனில் தனவணிகன் வார இதழில், பட்டிமண்டபம் என்ற தலைப்பில் செய்தியும் விளக்கமும் எழுதி வந்தேன். பின்னர் காரைக்குடியில் கம்பன் விழாத் தொடங்கிய மூன்றாவது ஆண்டு, 1941-இல் மேடையில் வாதப் பிரதிவாதம் செய்யக்கூடிய முறையில் பட்டிமண்டபத்தை அமைத்தேன்.
கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒரு காலத்தவரா என்ற ஆராய்ச்சி முதல் பட்டிமண்டபத்தில் நிகழ்ந்தது என்று அந்நிகழ்வை நினைவு கூர்கிறார். இதற்கான கருத்துருவை எழுத்துருவாக்கி, அவர் வாசித்துவிட்டு அமர, அந்த முதல் பட்டிமண்டபத்துக்கு நடுவராய் வீற்றிருந்தவர் வையாபுரிப் பிள்ளை.
மு. இராகவையங்கார், கே.என். குமரேச பிள்ளை, கு. அருணாசலம், ஜி. சுப்ரமண்யம் போன்றவர்கள் ஒட்டியும், வெட்டியும் பேசினர். என்றாலும், அம் முதற்பட்டிமண்டபத்தில் கட்சி பிரிந்து நின்று அவர்கள் வாதிடவில்லை. அவரவரும் தத்தம் விருப்பப்படி வாதிட்டனர். இறுதியாக, இருவரும் வெவ்வேறு காலத்தவர் என்று நடுவர் தீர்ப்பளித்தார்.
இந்த வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்திய சா. கணேசன், அதற்கு முன்னதாக இன்னொரு நிகழ்வையும் நடத்தியிருக்கிறார். அதற்கு வேழமுகவில்லியர் என்று பெயர். பேராசிரியர் அ. சீனிவாசராகவனும், கம்பன் அடிப்பொடியும் மேடையில் ஒலிபெருக்கி முன்வந்து அமர, பேராசிரியர், பட்டிமண்டபம் என்றால் என்ன என்று கேட்பார். சா. கணேசன் பதிலுரைப்பார். பின்னர், அதன் பண்டைக்காலப் பான்மைகளை எடுத்துச் சொல்லி, பட்டிமண்டபத்தைத் தொடங்குவார்கள்.
கணேசனுக்கு இன்னொரு பெயர் வேழமுகன். வில்லிபுத்தூராரைத் தந்த மண்ணில் இருந்து வந்த கவிஞர் அ.சீ.ரா. எனவே, முன்னவர் வேழமுகர். பின்னவர் வில்லியார். இருவரும் இணையும் மேடையில் இவர்கள் வேழமுகவில்லியர். அதன்பின் பட்டிமண்டபம் தொடங்கும்.
முதலில், இரு கட்சிகளாகவும், அடுத்து மூன்று அணியினராகவும் வாதிட, பின்னர் பார்வையாளர்களும் பங்கேற்கும் வண்ணம் நோக்கர்கள் தெரிவுசெய்யப் பெற்றனர். அவர்கள் ஒரு கட்சியை நீக்க, வாக்களிக்கவும் செய்தனர்.
எஞ்சிய இரு அணியினரின் வாத, பிரதிவாதங்களை வைத்து, நடுவர் தீர்ப்பளிப்பார். அதிலும் நிறைவுறாது, மேல்முறையீட்டுப் பட்டிமண்டபமும் தொடங்கும். காரைக்குடியில் தொடங்கிய இம்மரபு இன்னமும் புதுவைக் கம்பன் கழகத்தில் தொடர்வதைச் சுவைஞர்கள் காணலாம்.
இந்தப் பின்புலத்தோடு வளர்ந்த பட்டிமண்டபத்தில் பங்கேற்றுப் பெருமைமிக்க ஆளுமை புரிந்தவர்கள் மிகப் பலர். தோழர் ப. ஜீவானந்தம், க.கு. கோதண்டராமன், அ.ச. ஞானசம்பந்தன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோர் குறிப்பிடத்தக்கோர்.
கணவனும், மனைவியும் எதிர்எதிர் அணியில் பேசுவதாக அமைந்த அந்தக்கால நிகழ்வுகள் பெரிதும் சுவைஞர்களை ஈர்த்தவை. வி.கே.சி. நடராஜன் ஓர் அணியிலும், அவர்தம் துணைவியார் இராஜேஸ்வரி எதிர்அணியிலும் வாதிட்டமை அதற்கு ஓர் சான்றாகும்.
இத்தகு நிகழ்வுகளில் நடுவராய் இருந்து தீர்ப்பளித்த தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், தான் பங்கேற்ற 13 நிகழ்வுகளின் உரைகளை, பட்டிமண்டபம் என்றே நூலாக்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தொடக்கத்தில் கம்பன் கழகங்களில் மட்டுமே இடம்பெற்ற பட்டிமண்டபத்தைப் பட்டிதொட்டியெங்கும் பட்டிமன்றமாகக் கொண்டு சேர்த்தவர் அடிகளார். படித்தவர்களின், இலக்கிய ரசிகர்களின் செவிநுகர் கனிகளாக விளங்கிய கம்பன் கவிகளோடு, திருக்குறள், சிலம்பு, தேவாரம், பெரியபுராணம், வில்லிபாரதம், பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் விவாதப் பொருள்களாக ஆக்கினார். பின்னர், இலக்கியங்களோடு காந்தியம், மார்க்சியம் உள்ளிட்ட இசங்களையும் பேசும் களமாக அது விரிந்தது.
கலை, இலக்கிய, சமய, சமுதாயத் தலைப்புகளில் விவாதிக்கத் தொடங்கிய இவ்வடிவம், படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரது உள்ளங்களையும் ஈர்த்துச் செம்மைப்படுத்தத் தொடங்கியது.
திருவிழாக் காலக் கூட்டங்களை முன்னிறுத்தித் தொடங்கிய பட்டிமன்றங்கள் காலப்போக்கில் பெரிய திருவிழாக் கூட்டம் எனத்தக்க அளவில் மக்களைப் பெரிதும் திரட்டித் தந்தன. மெய்யாகவே, பட்டிமன்ற மேடையேறினால்தான் பாராட்டும் சிறப்பும் வந்து எய்தும் என்று சொல்லுமளவுக்குப் பரவலான மக்களின் செல்வாக்கைப் பெற்றனர் பேச்சாளர்கள்.
"பட்டிமண்டபத்தின் தந்தை என்று கம்பன் அடிப்பொடியைச் சொன்னால், பட்டிமன்ற ஆசான் என்று அடிகளாரைச் சொல்லலாம். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் எல்லாம் இணைந்து செய்ய வேண்டிய செயலைத் தனிஒரு மனிதராக நின்று செயல்படுத்தியவர் அடிகளார்' என்று பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. அந்த மரபில் நின்று வாதிட்ட பல பெருமக்கள் இன்றைக்குப் பிரபலமானவர்களாக வலம் வருகிறார்கள்.
என்றாலும், 90-களின் தொடக்கம் வரை, புரட்சிகரமான கருத்துப் புயல்கள் வீசிய அவ்வரங்குகள், மெல்லப் பொழுதுபோக்குக் களங்களாக மலியத் தொடங்கின.
வாழ்க்கைக்கு உதவும் கருத்துகளைச் சொல்லிப் பாராட்டுப் பெறுவதைவிடவும், மலிவான நகைச்சுவைகள் சொல்லிக் கைதட்டல் பெறுவதிலேயே பேச்சாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். கருத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய நகைச்சுவைகளை விடுத்து, நகைச்சுவைகளுக்காகவே பட்டிமன்றங்கள் அமைக்க அமைப்பாளர்கள் தலைப்பட்டனர்.
காலப்போக்கில், பட்டிமன்றங்கள் பாட்டுமன்றங்களாகவும் நகைச்சுவை உதிர்க்கும் சொல்லாடல் அரங்குகளாகவும் பரிணமிக்கப் பட்டிமன்றம் நீர்த்துப்போனதொரு கலைவடிவமாயிற்று. சின்னத்திரைகளில் விரியத் தொடங்கிய அது பெரிய திரைகளையும் எட்டுகிற வேளையில் முற்றிலும் பொழுதுபோக்கு வடிவமாகவே ஆகிவிட்டது.
சிந்தனைக்குரிய செய்திகளைச் சொல்லுவதும், விளக்குவதும் ஒவ்வாத செயல்கள் என்று மக்கள் நினைப்பதாக ஒரு மாயையை இட்டுக்கட்டி இதுதான் நிலைமை என்று தன் தரம் விடுத்து இறங்கிய காரணத்தால் அறிஞர்களின் மத்தியில் இதன் மதிப்பு குறைந்தும் வருகிறது.
இன்றைக்கு, என்ன தலைப்பு என்று தெரியாமலேயே விவாதிப்பதும், சிரிப்பதற்காகவே உதிர்க்கப்படுகிற - சமூகப் பயன் துளியும் தராத சொந்த அனுபவங்களும், தப்புந்தவறுமாக மேற்கோள் காட்டப்படும் இலக்கியத் தொடர்களும், எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழின் ஒலிப்புமுறை பற்றித் துளியும் அக்கறையில்லாமல் பெருங்குரல் எடுத்து ஒலிப்பதுமே பட்டிமன்றப் பாணி என்கிற போக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.
இது மொழிக்கோ, மக்களுக்கோ நல்லதன்று. பன்முகப் பரிமாணம் உடைய ஒரு மொழியின் ஆற்றல்சார் அறத்தன்மையை நீர்த்துப்போக வைக்கும் ஆபத்து உடையது. இதனை வெறும் வாய்ச்சொல் வீரர்களின் வம்பரங்குகள் என வருந்தலைமுறையினர் எண்ணுதற்கு இடந்தரக் கூடாது.
ஒருவகையில் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவும் வகையில் அறிஞர்களின் கருத்துரைகளை எடுத்துரைக்கும் களமாக விளங்கும் இதனை, இன்னும் செழுமைப்படுத்த வேண்டியதே இன்றைய தேவை. அதற்கு உண்மையே உயிர்.
நகைச்சுவை கூடாதென்பதன்று நம் கொள்கை. அது மனித மனங்களை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்.
பண்டைக் காலத்து மரபுணர்ந்து, சமகாலத்துத் தேவையறிந்து, நல்லறங்களைப் போதிக்கும் குரு பீடத்துக்கு நிகரானது இந்தப் பட்டிமண்டப மேடை. ஒட்டிய தலைப்புகளை விட்டுவிலகாமல் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின், பைந்தமிழ் பேணுமின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.