100 வருடத்திற்கு முன் இது போன்ற மழை வந்தது என்கிறார்கள். நீர்நிலைகளின் மீது கட்டடங்களைக் கட்ட அனுமதித்ததனால் தான் வெள்ளம் வந்தது என்கிறார்கள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், வரைமுறை ஏதும் இல்லாமல் தோன்றிய போக்கில் நடைபெற்றது, அதனால்தான் வெள்ளம் வந்தது என்கிறார்கள், ஏரியை ஒரேயடியாகத் திறந்ததனால் தான் வெள்ளம் வந்தது என்கிறார்கள், அரசு சரியாக செயல்படவில்லை.. அதனால்தான் வந்தது என்கிறார்கள்.
இப்பொழுது இன்று நான் அதைப் பற்றி எழுதப் போவதில்லை. நான், நம் சாதாரண சென்னைவாசியைப் பற்றி மட்டும் தான் பேசப்போகிறேன். அவர் நம்மை அசாத்தியமாக பெருமைப்பட வைத்துவிட்டார்.
ஒவ்வொரு சென்னைவாசியும் தான் எவ்விதம் அடுத்தவருக்கு உதவி செய்யமுடியும் என்று மட்டுமே யோசித்துள்ளார். தன்னைப் பற்றி சிந்திக்கவில்லை. இந்தப் பேரிடர் ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் அடித்து வீழ்த்தி இருக்கிறது. நான் அங்கே, இங்கே படித்ததை, கேட்டதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். இவரை சென்னைவாசி என்று அழைக்கபோகிறேன். வேறு ஏதோ பெயர் வைத்தேன் என்றால் அது ஆண் அல்லது பெண் பெயர் வைக்கவேண்டும்.
அன்று தன்னுயிர் போல பிற உயிர் காத்தவர் ஆண்களும் பெண்களும். மேலும் நான் வைக்கும் பெயர் சாதியை குறிப்பிடாவிட்டாலும், மதத்தை வெளிப்படுத்திவிடும். அன்று பிரவாகம் எடுத்து ஓடிய மனிதநேயம் மதம் தாண்டியது. ஆகையால், அவரை சென்னைவாசி என்றே அழைப்போம்.
ஒரு தேசிய சேனலில், வெள்ளத்தில் மூழ்கியிருந்த இடங்களைப் பார்வையிட்டு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் இருந்து சில தகவல்கள்: எங்கும் சாதாரண சென்னைவாசியின் அடித்தளங்கள் தான், சென்னைவாசியின் குரல்கள்தான், கரங்கள் தான். மதம், சாதி பிரிவு அனைத்தையும் இந்த வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது
உண்மை தான். சர்ச்சுகள், குருத்வாராக்கள், ஜெயின் ஆலயங்கள், மசூதிகள், கோயில்கள் என வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், தங்கள் கதவுகளைத் திறந்து எல்லோருக்கும் அடைக்கலம், உணவு என்று வழங்கின. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சென்னை உலகத்திற்கு காட்டியது. Secularism என்றும் Tolerance என்றும் compassion என்றும் equality என்றும் பேசுபவர்களிடம் சென்னைவாசி நான் கற்றுத்தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதே நிகழ்ச்சியில், ஒரு பெண்மணி அந்த தொகுப்பாளரிடம் சொன்னார். "உங்கள் ஐய்ற்ர்ப்ங்ழ்ஹய்ஸ்ரீங் விவாதம் இங்கு வேண்டாம். நாங்கள் எல்லொரும் ஒன்று' என்று. தொகுப்பாளர் சென்னைவாசியைக் கேட்டார். "ஏன் உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது?'
பதில்: மனிதம் தான். Humanity தான், என்றார்.
ஒரு சென்னைவாசி தன் நண்பரின் முதுகிற்கு பின்னாலிருந்து மெல்ல கேட்டார். இவ்வளவு ஆனதற்குப் பின் தான் உங்களுக்கு தென்னிந்தியா என்று ஒன்று இருக்கிறது என்று தெரிந்ததா? சென்னை இப்பொழுது தான் கண்களில் பட்டதா?
பலே சென்னைவாசி! சரியான கேள்வி.
தொகுப்பாளர்: "உண்மை தான். நாங்கள் தெற்கே பார்ப்பதில்லை. வடக்கு ஒன்று தான் இந்தியா என்று செயல்பட்டிருக்கிறோம். இது எங்கள் எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை மணி. அனைவரின் சார்பிலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்', என்றார்.
இன்னொரு சென்னைவாசி: எங்களுக்கு ஆட்சியாளர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இது கேள்வி நேரம் அல்ல, இது உதவும் நேரம்.
என்ன ஓர் அறிவு தோய்ந்த நிதானம்? இந்த ஊழிப் பெருக்கின் நடுவே.
ஓர் இடத்தில் அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவரிடம் தொகுப்பாளர் கேட்கிறார். "எல்லாம் போய்விட்டதே. என்ன செய்வீர்கள்?'
சென்னைவாசி: எல்லாம் போய்விட்டது. பூஜ்யத்தில் இருக்கிறோம். இங்கிருந்து மேலே உயருவோம். வேறேன்ன? என்று மெதுவாக புன்னகைத்தார்.
வெள்ளம் சென்னையின் துணிவை, நம்பிக்கையை அடித்துச் செல்லவில்லை. அடித்துச் செல்லவும் முடியாது. எத்தனை பேர் தங்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவித்து தங்கள் வீட்டில் வந்து தங்கலாம் என்று சொன்னார்கள். சொன்னபடியே செய்தார்கள். தெரிந்தவர், தெரியாதவர் என்று பாராமல் தங்கள் இதயங்களைத் திறந்து வைத்தார்கள்.
ராதா என்ற பால் விநியோகம் செய்பவரை இன்று அறியாதவரே இருக்க முடியாது முட்டி வரை நீரில் நடந்து அவர் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்தார்.
அந்த படம் இணைய தளத்தில் viral-ஆக பரவிற்று. அவரைப் போல பல சென்னைவாசிகள் மழை வெள்ளம் என்று பாராமல் தங்கள் கடமையைச் செய்தனர்.
வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சிலரின் அனுபவத்தை என்னுடன் என் நண்பர் பகிர்ந்து கொண்டார். அவர்கள் உயர்மட்ட வகுப்பினரின் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள். இரண்டாம் மாடியில் வெள்ளம் வந்து இரண்டு நாள்கள் ஆன பின்னும் அவர்களுக்கு உதவி வரவில்லை.
இருக்கும் உணவை ரேஷன் செய்து சாப்பிட்டும் அது தீர்ந்து போய்விட்டது. மூன்றாம் நாள் வருவது வரட்டும், நாம் நீந்தி எங்காவது போய்விடுவோம் என்று முடிவு செய்தார்கள். அப்பொழுது இருவர் ஒரு மரப்பலகையைத் தள்ளி இவர்கள் அருகே வந்து உங்களுக்கு உணவு வேண்டுமா அல்லது உங்களை காப்பாற்ற வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள்.
மரப்பலகையின் மேல் சாம்பார் சாதமும், குடிநீரும். தவித்தவர்களுக்கு என்ன தோன்றியிருக்கும்? இவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள்? நாங்கள் யாரோ.. எங்களுக்கு உதவி செய்ய தண்ணீரில் நீந்தி ஏன் வரவேண்டும்?
யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்.........அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே இந்த பாட்டு ஆண் பெண் காதலுக்குத் தான் பொருந்துமா? சென்னைவாசி அனைவருக்கும் காட்டிய அன்பும் .. இப்படித் தானே தாய் யாரோ.. தந்தை யாரோ?
உயிரைப் பணயம் வைத்து என்று படித்திருக்கிறோம். வெள்ளம் வந்த வேளையில் அதைப் பார்த்தோம். உதவி செய்யும் முயற்சியில் சிலர் உயிரையே இழந்திருக்கிறார்கள். சென்னைவாசி செய்த ஒவ்வொரு செயலும் தீர்க்கமாக யோசித்து எடுத்த முடிவல்ல, தன்னிச்சையாகச் செயல்பட்டார். அடுத்தவர் எல்லொரும் என் உடன் பிறந்தவர் தான். சென்னைவாசியின் சதை ஆடியது.
ஓர் ஆட்டோ ஓட்டுநர் சொன்னார். "எங்கள் வீட்டருகில் வெள்ளம் வந்துவிட்டது. நிறைய பேர் உதவிக்கு வந்தார்கள் மேடம். ஆனால், எங்கள் தெருவின் உள்ளே சென்றால் இன்னும் சிரமப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்று சொன்னோம்' என்று. அவர்களுக்கே உணவில்லை.. அந்த நேரத்தில் அடுத்தவரைப் பற்றி நினைத்திருக்கிறார் சென்னைவாசி.
இன்னொன்றும் சொன்னார் இந்த ஆட்டோக்காரர். "இந்த வெள்ளம் ஏழை, பணக்காரர்னு பார்க்காம.. எல்லோரையும் அடித்துவிட்டது'. உண்மைதான். மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் எந்த சென்னைவாசி உதவிக்கு வந்தாரோ அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் நடந்து வந்து கொண்டிருந்தாராம். சாதாரண நாளில் அந்த சென்னைவாசி அவர் கண்ணில் கூட பட்டிருக்கமாட்டார்.
அமாவாசை தர்ப்பணம் செய்து வைப்பவர் என் தங்கையிடம் சொன்னார்: நாம் சொல்லும் வித்தியாசம் எல்லாம் அர்த்தமே இல்லை என்று சொல்லிவிட்டது இந்த வெள்ளம். எங்கள் பக்கம் வந்து உடனே உதவி செய்தவர்கள் எல்லோரும் முஸ்லிம் மக்கள்தான்'.
அடுத்ததாக, ஜெயின் மக்கள். உலகுக்கே சமத்துவத்தின் வலிமையைக் காட்டிவிட்டார் சென்னைவாசி. ஒரு தன்னார்வக் குழு வெள்ள நிவாரண பணியில் மூழ்கி இருக்கிறது. அங்கு சென்றால் எத்தனை மொழி, சாதி, மதம் கலந்துள்ளது என்று பார்க்கலாம். சென்னைவாசியின் பாரத விலாஸ். சிறுவர் சிறுமியரும் அங்கு உள்ளனர். இந்த மனித நேய பாடம் இப்பொழுதே கற்றுக் கொள்ளவேண்டும்.
ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்த நாலைந்து நாள்களும் அந்த பள்ளியில் ஆபீஸ் உதவியாளராகப் பணி புரியும் பெண்மணி இரவு, பகல் பாராமல் சேவை செய்தார்.
இளம் கணவனை சில நாள்களுக்கு முன்பு இழந்த ஒரு பெண், வண்டியை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம் செய்ய கிளம்பிவிட்டார். இது போல உங்கள் எல்லோருக்கும் அனுபவம் நிச்சயம் இருக்கும்.
மார்பளவு தண்ணீர், கழுத்தளவு தண்ணீர். ஆனால், கையில் வயோதிகர் ஒருவரையோ, அல்லது மன வளர்ச்சி குன்றியவரையோ சென்னைவாசி தூக்கிக் கொண்டு செல்லும் புகைப் படங்கள் எவ்வளவு பார்க்கிறோம்.
யார் சொன்னார்கள் இவர்களிடம் உதவி செய்யச் சொல்லி? எப்படி இப்படி ஓர் அன்பு பிரவாகம், மனித நேய நதி சென்னைவாசியின் இதயத்தில் இருந்து கிளம்பிற்று. சென்னைவாசியின் புகழைப் பாடி எங்கிருந்து எல்லாமோ செய்திகள் வருகின்றன. இதை எழுதும்பொழுது என் கண்களை நீர் மறைக்கிறது. உண்மை தான், சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?
சர்ச்சுகள், குருத்வாராக்கள், ஜெயின் ஆலயங்கள், மசூதிகள், கோயில்கள் என வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், தங்கள் கதவுகளைத் திறந்து எல்லோருக்கும் அடைக்கலம், உணவு என்று வழங்கின. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சென்னை உலகத்திற்கு காட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

