மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதிக்க வேண்டிய பெண்கள்!

அகலிகை, மண்டோதரி, தாரை, சீதை, திரெüபதி ஆகிய "பஞ்ச கன்யை'களை தினமும் நினைக்க வேண்டும் என்று ஒரு சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது. "கன்யை' என்றால் "பெண்' என்று இங்கு பொருள் கொள்ளவும். எப்படி இவர்கள் என்று நீங்கள் புருவம் தூக்கலாம், நியாயம்.

Updated On :3 பிப்ரவரி 2015, 8:31 pm

அகலிகை, மண்டோதரி, தாரை, சீதை, திரெüபதி ஆகிய "பஞ்ச கன்யை'களை தினமும் நினைக்க வேண்டும் என்று ஒரு சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது. "கன்யை' என்றால் "பெண்' என்று இங்கு பொருள் கொள்ளவும். எப்படி இவர்கள் என்று நீங்கள் புருவம் தூக்கலாம், நியாயம்.

இவர்கள் ஒவ்வொருவர் கதையிலும் கேள்விக்குறிகள் உள்ளன என்பது உண்மை. இன்று நாம் சந்திக்க இருப்பது வேறு ஐந்து பெண்மணிகளை.

முதலில் நான் அறிமுகப்படுத்தும் பெண்மணி கிராமத்தில் வசிப்பவர். நான் நீதிபதி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக குடும்ப வன்முறை சம்பந்தமான ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வெளியூர் சென்றேன். நிறைய பெண்கள் வந்திருந்தார்கள். பெரும்பாலும் பொருளாதார வலிமை இல்லாத குடும்பப் பெண்கள். அவர்களில் படித்தவர்களும் குறைவே.

குடும்ப வன்முறைச் சட்டம் அப்பொழுது அமலுக்கு வரவில்லை. அங்கு கூடியிருந்த பெண்களில் பலர் மேடைக்கு வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது இந்த சகோதரியும் பேசினார். அவர் கணவர் இழைத்த கொடுமையை விவரித்தார். கூட்டத்தில் ஒருவர் "நீங்கள் ஏன் வீட்டை விட்டு வந்து விடவில்லை' என்று அவரிடம் கேட்டார். "நான் ஏன் என் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்? அது எனக்கும் சொந்தம் தானே? என் உழைப்பும் அதில் அடங்கவில்லையா? நான் வெளியே வரமாட்டேன். அங்கு இருந்து கொண்டே என் உரிமையைக் கேட்டு அவரிடம் போராடுவேன், எனக்கு பயமில்லை' என்றார். என்னவொரு தர்க்க ரீதியான வாதம்... என்னவொரு சுயமதிப்பு.

Shared residence என்று சட்டம் இன்று சொல்கிறது. வீட்டில் கணவன் - மனைவி இருவருக்கும் பங்கு உண்டு என்பதுதான் இதன் பொருள். சட்டம் இயற்றப்படும் முன்னரே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த வந்த அந்தப் பெண்மணிக்குத் தன் உழைப்பும் சேர்ந்ததுதானே அந்த குடும்பம் என்பது அசைக்க முடியாத உறுதியுடன் தெரிந்தது. அந்த வீட்டில் இருந்து கொண்டே போராடும் துணிவு அவருக்கு இருந்தது. இந்தத் துணிவும் சுயமதிப்பும் சுயசார்பும் பெண் வலிமைக்கு முக்கியம்.

இரண்டாவதாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்யும் பெண்மணியின் மீது அவர் கணவர் தச்சு வேலைக்கு பயன்படுத்தும் ஒரு திரவத்தையோ திராவகத்தையோ அள்ளித் தெளித்து அவர் முகத்திலும் கண்களிலும் அழியாத தச்சு வேலை செய்து விட்டார்.

சமூக சிந்தனையுள்ள ஒரு அமைப்பின் உதவியால் அந்தப் பெண்மணி பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தையும் கழுத்தையும் திருத்தம் செய்து கொள்ள முடிந்தது. இருந்தும் அவர் கண்களை பார்த்தால் நம் இதயம் உடையும். தனியாக இரு வெள்ளைக் கோளங்கள் துருத்திக் கொண்டு நிற்கும்.

தான் அன்று வரை நம்பி வந்த தெய்வம் தனக்குத் துணை நிற்கவில்லை என்று தோன்றி அவர் மதம் மாறிவிட்டார். இது உளவியல் ரீதியாக நடக்கும் என்கிறார்கள். ஒரு பெரிய சோகமோ, விபத்தோ நடந்தால் இது போல மதம் மாறுவார்கள் என்கிறார்கள். இவர் மதம் மாறியதோடு நிற்கவில்லை. கணவர் மீது புகார் செய்தார். வழக்கு நடந்தது. குற்றவியல் நீதிமன்றம் வழக்கை ஆராய்ந்து அவர் சார்பு வாதத்தை ஏற்றது. அவருடைய கணவருக்கு சிறைத் தண்டனை வழங்கியது.

மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் கணவரின் பிணை விண்ணப்பத்தை ஏற்றது. கணவர் வெளியே வந்துவிட்டார். நான் அந்தப் பெண்ணைச் சந்தித்தபோது மேல்முறையீடு நிலுவையில் இருந்தது.

"எனக்கு என் மகன் துணை இருக்காம்மா. அந்த ஆள் என் கண் முன்னாலேயே இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு இருக்கான். நான் என்ன செய்ய முடியும்? வீட்டில் தையல் வேலை செய்கிறேன்; சமைப்பேன்; படிப்பேன்; ஆண்டவனை தொழுகை செய்வேன். வெளியே போனால் கருப்புக் கண்ணாடி போட்டுப்பேன், யாரும் பயப்படக் கூடாதில்லையா என்னைப் பார்த்து? மாலையில் வெளியே போக முடியாது. கருப்புக் கண்ணாடி போட்டா என்ன தெரியும்' என்று என்னிடம் சொன்னார் அமைதியாக.

"உங்கள் எதிரிலேயே உங்கள் கணவர் சுதந்திரமாக வளைய வருவது உங்களைப் பாதிக்கவில்லையா' என்று கேட்டேன். "இல்லை. எல்லோரையும் மன்னித்துவிட்டேன், நீதிமன்றம் உள்பட' என்று சொல்லி மெலிதாக சிரித்தார். அவருக்குத் தெரியும் நான் ஓய்வு பெற்ற நீதிபதி என்று.

அவரிடம் சொன்னேன் "உங்களைப் போல அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை' என்று. தனக்கு நேர்ந்த வன்முறைக்கு நியாயம் தேடிப் போகும் உறுதி இவரிடம் இருந்தது. மருத்துவ ரீதியாக தனக்கு என்ன சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமோ அதையும் மறக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தத் துல்லியமான மனித நேயம். கசப்பைத் தேக்கிக் கொள்ளாமல் தன்னை அழித்தவரையும் மன்னித்த கருணை. இவரும் வலிமையான பெண்.

அடுத்தவரும் ஒரு வித்தியாசமான பெண்மணி. முன்பு சில பெண்களுக்கு நடக்குமே, ஒன்றும் புரிவதற்கு முன் திருமணம், அதுவும் புரிவதற்கு முன் கைம்மைக் கோலம் என்று. அதுதான் இவருக்கும் நடந்தது. இவர் கணவரை சரியாகப் பார்த்தாரா என்பது கூட சந்தேகம்தான். அதற்குள் கணவர் போய்ச் சேர்ந்துவிட்டார்.

இந்தப் பெண்மணிக்கு தலை முடி அகற்றி, நார்மடி உடுப்பு அணிவித்து எல்லாம் முடிந்தது. ஆனால், கை மணம் என்பார்களே அது இவருக்கு அபாரம். குழந்தைப் பெற்ற எங்கள் குடும்பப் பெண்களுக்குப் பத்திய சமையல் செய்வதை தன் கைங்கரியமாகவே வாழ்க்கை முழுதும் அவர் மேற்கொண்டார்.

ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைப் பெற்றுக்கொண்டு இருப்பார்கள். இவர் அவர்கள் வீட்டிற்குச் சென்று மூன்று மாதங்கள் பத்திய சமையல் சமைப்பார். சமைப்பார் என்றால் அத்தனை கவனத்துடனும் அத்தனை அன்புடனும் சமைப்பார்.

குழந்தை பெற்ற தாயாருக்கோ அந்த குழந்தைக்கோ ஒரு நாள் உடல் நலம் குறைந்தால் இவர் தவித்துப் போய்விடுவார். "நன்றாகத்தானே செய்தேன், தவறு ஒன்றும் செய்யலையே' என்று புலம்பித் தள்ளுவார். தாயும் சேயும் நன்றாக ஆனபின்தான் இவர் நிம்மதியாக மூச்சு விடுவார்.

அவருக்கு இல்லற இன்பம் கிட்டவில்லை, மக்கள் பேறும் இல்லை. எப்படி இப்படி ஒரு சுயநலமோ, சுய பச்சாதாபமோ, கசப்போ இல்லாமல் கருமமே கண்ணாக இருக்க அவரால் முடிந்தது என்று எனக்கு வியப்பாக இருக்கும்.

விதியும் அன்றைய சமூகமும் தன்னை சதி செய்து விட்டதே என்று அவர் ஒரு நாள் கூட நினைத்ததாகத் தோன்றவில்லை. யாரையும் சாராமல் தன் காலில் நின்று பணி செய்து மற்றவர்களுக்கும் எப்படி உதவலாம் என்பதை இவரிடம் இருந்து இன்றைய பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இவரும் வலிமையான பெண்மணி.

அடுத்து நான் கூறப் போவது என் வீட்டில் எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் உதவியாக இருந்த ஒரு பெண்மணியைப் பற்றி. கடமை தவறாதவர். என் கணவர் அவரிடம் ஒரு நாள் எங்கள் வீட்டு நாய்க்குட்டிக்கு உணவளிக்க வேண்டும் என்று சொன்னார் என்பதற்காக, அவர் மறைந்த பின்பும், இவர் மழையோ, வெயிலோ, காய்ச்சலோ, வலியோ வேலைக்கு வந்துவிடுவார்.

2006 அல்லது 2007 என்று நினைக்கிறேன், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் நல்ல உடையணிந்து அந்தப் பெண் வெளியே சென்று விட்டார். பின் ஒரு மணி நேரம் கழித்து வந்தார். பிறகு பல ஞாயிற்றுக்கிழமைகள் இது தொடர்ந்தது. ஒரு நாள் அவரிடம் எங்கு செல்கிறார் என்று கேட்டேன். தான் மதம் மாறிவிட்டதாகவும் மாதா கோயில் செல்வதாகவும் சொன்னார். சரி என்று சொல்லிவிட்டேன்.

அவராக விளக்கம் அளித்தார். அங்கே தனக்கு அமைதி கிடைக்கிறது என்றும், எங்கும் கிடைக்காத சமத்துவ உணர்வு அங்கு கிடைப்பதாகவும் சொன்னார். அதுதான் முக்கியம் என்று சொன்னேன். ஒரு ஞாயிறு அவர் வீட்டிலேயே இருந்தார். மாதா கோயில் செல்லவில்லை. மறந்து விட்டாரோ என எண்ணி நினைவூட்டினேன். "இல்லை நான் இனிமேல் போவதாக இல்லை' என்றார்.

பின் தானே விளக்கம் அளித்தார். தான் செத்த பிறகு தன் மகன் தனக்கு சாங்கியம் செய்யமுடியாது என்று சொன்னார்களாம். அது அவருக்கு பிடிக்க வில்லையாம். அதனால் பழையபடி மாறி விட்டார். முன்னர் எடுத்த முடிவும் பின்னர் எடுத்த முடிவும் சரியென்றோ தப்பென்றோ நமக்கு தோன்றலாம். அது முக்கியம் இல்லை. இரண்டும் அவர் தெளிவாக எடுத்த முடிவுகள்.

ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதும்பொழுது அவர் எடுக்கும் முடிவிற்கு என்ன காரணம் என்று சொல்ல வேண்டும் என்போம். அந்த சகோதரியுடைய இரு முடிவுகளும் அவரைப் பொறுத்த வரை யோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள். சுயேச்சையாக தீர ஆராய்ந்து அவரே எடுத்த முடிவுகள். பெண் வலிமைக்கு இது முக்கியம்.

இறுதியாக கூறப்போகும் சகோதரியை நான் நேரில் சந்தித்ததில்லை. சமீபத்தில் மக்சாய்சாய் விருது பெற்ற எழுத்தாளர் ப. சாய்நாத் ஒரு நிகழ்ச்சியில் காட்டிய ஆவணப்படத்தில் பார்த்தேன்.

சாய்நாத், "பாரி' (Peoples Archive of Rural India) என்ற இணைய தளம் அமைத்திருக்கிறார். கிராமப்புற இந்தியாவின் உயிருள்ள பெட்டகம் என்று அதைச் சொல்கிறார். இதில் அற்புதமான மனிதர்களை, வெகு ஜன பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டாத மனிதர்களை சந்திக்கலாம்.

இங்குதான் நான் காளியின் தாயைப் பார்த்தேன். கணவர் சுனாமியில் இறந்துவிட்டார். இவர்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். கட்டட வேலை செய்து மக்களை வளர்த்தார். அவர் மகன் காளி. அற்புதமாக நடனம் ஆடுவார். பெரிய நடன கலைஞராக ஆகவேண்டும் என்று ஆசை.

சிறு வயதிலேயே அவர் திறமையைக் கண்டு ஒரு நல்ல இதயம் படைத்தவர் காளியை கலாúக்ஷத்திராவில் பரத நாட்டியம் கற்க உதவி புரிந்தார். காளிக்கு அந்த இடம், மனிதர்கள், அந்தக் கலை எல்லாம் புதிது. அவ்வப்பொழுது துவண்டு போவார்.

பரத நாட்டியம் என்றால் என்ன என்றே தெரியாத அந்தத் தாய்க்கு ஒன்று தெரிந்தது. அது தன் மகனின் திறமையும் அவன் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதும். காளிக்கு ஊக்கம் அளித்து அவர் வெற்றிக்கு உயிரூட்டினார்.

"போனா போகட்டும் தம்பி, நீ கட்டட வேலைக்கு வா எனக்கும் ஒத்தாசையாக இருக்கும்' என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் காளியின் தாய்க்கு? இந்த நாட்டியத்தின் அருமை பெருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் பாருங்கள், ஆக்கபூர்வமான வாழ்க்கைக் கண்ணோட்டம். இவரும் வலிமையான பெண்.

÷வெளித் தோற்றமோ, ஆங்கில அறிவோ, பட்டப் படிப்போ, பொருளாதார வசதியோ இருந்தால் மட்டும் போதாது பெண்களுக்கு. அவற்றுடன் உறுதியும் தெளிவாக முடிவெடுக்கும் திறனும் சுய மதிப்பும் தீரமும் வேண்டும். இதுவே பெண் சமத்துவத்தை நிலைநாட்ட உதவும்.

இந்த ஐந்து சகோதரிகளுக்கும் மன வலிமை இருந்தது. அது ஒன்றுக்காக மட்டுமே அவர்களை தினமும் நினைக்கலாம். இவர்களைப் போல பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்தியாவில் நம் கண்ணுக்குப் புலப்படாமல்....

கட்டுரையாளர்: நீதிபதி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.