ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் பொது சுத்திகரிப்பு நிலையத் தொட்டி உடைந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானது குறித்த செய்திகள் நம் நெஞ்சை உலுக்குகின்றன.
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறப்பவர்கள், தோல் தொழிற்சாலை கழிவுநீரிலிருந்து விஷவாயு கசிந்து இறப்பவர்கள் என பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொருமுறை விபத்து நிகழும்போதும் பரபரப்படைகிறோம். அதன்பிறகு, வழக்கமான வாழக்கைக்குத் திரும்பி, விபத்துக்கு காரணம் என்ன என்பதை மறந்து விடுகிறோம்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கழிவுநீர்த் தொட்டியில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார்களா, அந்தத் தொட்டி கட்டப்படும் பொழுது அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா, கொடுக்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட அளவுகளில் அது கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன. இது ஒருபுறம்.
மறுபுறம் பள்ளியில் கூரை எரிந்து கும்பகோணத்தில் மாணவர்கள் இறந்தது, மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகி மாணவர்கள் இறந்தது, பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்னைகள். இவற்றுக்குக் காரணம், வருமுன் காப்போம் என்ற சிந்தனை இல்லாததுதான்.
எந்தப் பிரச்னையும் ஏற்படும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு கூடிய வரை அப்பிரச்னை ஏற்படாமல் தடுப்பதே உகந்ததாகும். வந்தபின் புலம்புவதைவிட, வருமுன் தடுப்பதே அறிவுடைமை. அதற்காகத் தான் அரசாங்கம் பல்வேறு சட்ட திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளது.
ஆனால், அந்த சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறோமா? சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் முதல் தவறு. ஆனால், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டியது அரசு அலுவலர்களின் கடமை. அந்தக் கண்காணிப்பில் உள்ள குறைபாடுதான், இவ்வாறான விபத்து, உயிரிழப்பு, பிரச்னைகளுக்கு மூலகாரணமாக உள்ளது.
காலிப் பணியிடங்கள், வேலைப்பளு, மேலதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை அரசு அதிகாரிகளின் அலட்சியத்துக்குக் காரணமாக கூறலாம். இருந்தபோதிலும், தங்களுடைய பணியை சரிவர செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.
அரசு அலுவலர்கள் விதிகளை கூடியவரை பின்பற்றுபவர்களைத்தான் கண்காணித்து தொல்லை தருகின்றனரே தவிர, முழுமையாக விதிகளைப் பின்பற்றாதவர்களை கண்டுகொள்வதே இல்லை என்ற புகாரும் உள்ளது.
பொறுப்பற்ற தன்மை, சமுதாய சிந்தனை இல்லாமை, நமக்கேன் வீண் வேலை என்று ஒவ்வொருவரும் இருந்துவிடுவதே இதற்குக் காரணம் ஆகும். சமுதாய சிந்தனையுடன் செயல்படும் சிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால்தான் சில முறைகேடுகள் வெளியாகின்றன.
மக்கள் தங்களுக்காக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் சட்டங்களை உருவாக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவோர் அதிகாரிகள். இந்த முத்தரப்புக்கும் பிரச்னைகளைத் தவிர்க்கும் பொறுப்புணர்வும் கடமையும் உண்டு.
அரசு அதிகாரிகள் முறையாகச் செயல்பட்டு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என அவ்வப்பொழுது கண்காணித்தாலே, வருமுன் காப்போம் என்பதை 90 சதவீதம் அடைந்து விடலாம்.
அவ்வாறு கண்காணிக்கும்போது, தவறுகள் நடப்பது தெரியவந்தால், அவர்களை எச்சரித்து அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே எடுப்பதன்மூலம் ஆபத்துகளை முழுமையாகத் தடுத்து விடலாம்.
இதைச் செய்யாமல், தவறுகளுக்கு அரசு அதிகாரிகள் துணை போகும்போதுதான் பிரச்னை தலைதூக்குகிறது. பிரச்னை கைமீறிச் செல்லும் பொழுது விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அதற்காக அனைத்து அரசு அதிகாரிகளையும் குறை கூறிவிட முடியாது. இருந்தபோதிலும், அரசு அதிகாரிகள் மனம் வைத்தால் கண்டிப்பாக அனைத்து சட்ட திட்டங்களையும் அனைவரும் பின்பற்றத் தொடங்கி தங்களை அதற்கு பழக்கப்படுத்திக் கொள்வார்கள். அப்பொழுது முறைகேடுகளும் குறைந்துவிடும்.
எனவே சட்ட திட்டங்கள், விதிமுறைகளை அனைவரும் முழுமையாகப் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும். அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உறுதியேற்க வேண்டும்.
ராணிப்பேட்டை கழிவுநீர்த் தொட்டி விபத்து நமக்கு அளித்துள்ள படிப்பினை, நமது கண்களைத் திறக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் துயரம் இனியும் தொடரக் கூடாது.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதுடன் நமது கடமைகள் முற்றுப்பெறுவதில்லை.
இனி எந்த இடத்திலும் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதே நமது கடமை. இதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய தருணம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மாற்றம் தேவையில்லை எனக் கூறினாரா அஜித்? சா்ச்சைக்கு மேலாளா் விளக்கம்

இருந்தும் பயன்படாத கைப்பேசி பைகள்; பெயரளவுக்கு செயல்பட்ட சக்கர நாற்காலிகள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

