என் சினேகிதி அவ்வப்பொழுது என்னைத் தொலைபேசியில் அழைத்து, "ஹலோ, நான் நியூஸிலாந்துக்கு ஓடிப்போகப் போகிறேன்' என்று எச்சரிப்பார். அவருக்குத் தெரியும், நியூஸிலாந்துக்கு ஓடிப்போக முடியாது, விமானத்தில்தான் போகவேண்டும், கடவுச்சீட்டு, விஸா, பயணச்சீட்டு எல்லாம் வேண்டும் என்று. அழுத்தம், இறுக்கம், சுமை, பொறுப்பு, குழப்பம் இவை எதுவும் இல்லாத இடத்திற்குப் போகவேண்டும் என்பதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிடுவார்.
அவர் சொல்லும் நியூஸிலாந்து புவியியல் சார்ந்த இடம் அல்ல. அது ஒரு கற்பனை இடம். அது போன்றதுதான் நான் இங்கே அறிமுகப்படுத்தும் சபர்மதி. ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமம் அல்ல. அங்கே நதிக்கரையில் அமைந்த இடம் இல்லை. என் சினேகிதியின் நியூஸிலாந்து போலதான் இந்த சபர்மதியும். இனி நான் சபர்மதி என்று குறிப்பிடுபோதெல்லாம் இந்த கற்பனை இடம் என்று பொருள் கொள்ளவும். இது சபர்மதி ஆசிரமம் இல்லை. ஆனால், இதற்கும் நம் தேசத் தந்தைக்கும் அவர் அமைத்த சபர்மதி ஆசிரமத்திற்கும் ஒற்றுமைகள் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றபோது, என்னுள் எழுந்த மன அதிர்வுகள் இன்றும் என் நினைவில் பதிந்து உள்ளன. ஒவ்வொரு பள்ளியும், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்பொழுதுதான் அவர்களுக்கு அண்ணல் காந்தி என்ற அதிசய சக்தி புரியும். அந்த சக்தியை அறிந்தால் நான் சொல்லும் சபர்மதியையும் புரிந்து கொள்ள முடியும்.
சபர்மதி புனிதமாக சுத்தமாக இருக்கும். அண்மையில் "தூய்மை இந்தியா' என்று ஓர் இயக்கத்தை பாரத பிரதமர் பிரகடனம் செய்துள்ளார். தில்லியில் துடைப்பத்தை சின்னமாக தூக்கிய கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சுத்தம் என்பதை நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு அம்சமாக நாம் ஏற்றுள்ளோமா என்று எண்ணிப் பார்த்தால் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
நம் அசுத்தங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பது குறிப்பிட்ட சிலரின் பணி மட்டுமே என்று நாம் எண்ணும் வரை, நம் வீட்டு குப்பையைத் தெருவில் கண்டபடி கடாசும் பழக்கம் நமக்கு இருக்கும் வரை, புவி அன்னையின் முகம் நாம் காறித் துப்புவதற்குத்தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வரை, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பறை என்பது நடைமுறையில் வரும் வரை, கழிவுப் பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தல் என்பதை நாம் ஏற்கும் வரை சபர்மதி தொலைவிலேயே இருக்கும்.
நம் தேசத் தந்தையின் சொற்களை சற்றே மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய துணையில்லாமல் நாம் சபர்மதியை அடைய முடியாது. "எண்ணமும் செயலும் விவாகரத்து செய்து கொண்டு விட்டன. அதனால்தான் நம் நாட்டில் இருக்கும் அழகெல்லாம் குப்பை மலைகள் ஆகிவிட்டன. எங்கும் அசுத்தம், எங்கும் துர்நாற்றம் என்று நாம் கண்களை மூடி மூக்கை அடைத்துக்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை.
நாட்டின் சுகாதாரமும் சமூக சுகாதாரமும் நாம் பேண வேண்டிய நன்மைகள் என்று நாம் புரிந்து கொள்ளவே இல்லை. இந்தக் கேடு கெட்ட நிலையை, கொடும் பாவம் என்றே நான் எண்ணுகிறேன். நன்றாக அமைந்த சமூகம், சுத்த, சுகாதார கோட்பாடுகளை மீறாது' - இவை 60-70 ஆண்டுகளுக்கு முன் வருத்தத்துடன் காந்தி மகான் உதிர்த்த சொற்கள். காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை.
சபர்மதியில் பெண்கள் சமமாக மதிக்கப்படுவார்கள். அங்கே பெண் ஒரு போகப் பொருளல்ல; உணர்ச்சியற்ற ஜடமுமல்ல. பாதி உலகத்தைத் தாங்கும் கரங்கள் அவளுடையதே. உலகெங்கிலும் கண்களுக்குப் புலப்படாத பணி (ண்ய்ஸ்ண்ள்ண்க்ஷப்ங் ஜ்ர்ழ்ந்) என்பது பெரும்பாலும் பெண்கள் செய்யும் பணிதான். அதனால்தான், அந்தப் பணிக்கு பொருளாதார மதிப்பு கூட கொடுப்பதில்லை.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பொருளாதார அறிஞர் வைத்தியநாதன் கூறினார்: "என் வீட்டின் அருகே ஒரு பெண்மணி தினமும் காய்கறி விற்கிறார். அவர் ஒரு ஆண்டில் நான்கு நாளுக்கு மேல் விடுப்பு எடுப்பதில்லை, நுகர்வோர் விருப்பு - வெறுப்பு, சந்தை ஏற்றத்தாழ்வு எல்லாம் அவருக்குத் தெரியும், ஆனால், பொருளாதார ஆய்வறிக்கைகளின்படி அவர் அமைப்புசாராதோர் பிரிவில்தான் அடங்குவார். இது என்ன நியாயம்'. உண்மைதானே?
மகளிர் திட்டங்களும், சுய உதவிக் குழுக்களும் பெண்களின் நிதிநிலை கட்டுப்பாட்டிற்கு அத்தாட்சியாகத் திகழ்கின்றன. ஆனால், எல்லாம் இருந்தும் பாலியல் வன்முறையும், சமூக நிலைப்பாடுகளும் பெண்ணை இரண்டாம் தர பிரஜையாகவே ஓரம் கட்டுகின்றன. அவள் இன்றும் குழந்தை பெறும் இயந்திரமாகவே கருதப்படுகிறாள் என்பதை அண்மையில் வெளியான சில அறிக்கைகள் உறுதி செய்கின்றன. ஆனால், அண்ணல் காந்தி நினைத்ததோ நேர்மாறானது.
சபர்மதியில் ஒரு பெண்ணுக்கு, ஆணைப் போலவே தன் விதியைத் தானே நிர்ணயிக்கும் சுதந்திரம் இருக்கும். சபர்மதியில் சமூக விதிகள் பரஸ்பர ஒத்துழைப்புடனும் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையிலும் அமைந்திருக்கும். சபர்மதியில் பெண்கள் பொம்மைகளாகவும் போகப் பொருள்களாகவும் இல்லாமல் மதிப்பிற்குரிய தோழர்களாக இருப்பார்கள்.
சமூகம் ஒவ்வொரு பெண்ணுக்கும் பரந்த கல்வியறிவை அளிக்கும் என்று அவர் நம்பினார். சபர்மதியில் பத்மினியும் விநோதினியும் அச்சமின்றி உலா வருவார்கள்.
சபர்மதியில் எம்மதமும் சம்மதம். நான் உயர்த்தி, நீ தாழ்த்தி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. "எவர் எவர் எதை எதைக் கடவுள் என்று நம்புகிறார்களோ, அதை அதை அவர் அவரைக் காட்டிலும் அதிகம் நம்புபவனே இந்து' என்றார் ஜெயகாந்தன்.
சபர்மதியில் இருப்பவர், எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் இந்த எண்ணம் கொண்டவராகவே இருப்பார். என் வழியே சரியானது, மாற்றுப் பாதைகளில் செல்பவர்கள் எல்லோரும் என் வழிக்கு வரவேண்டும் என்ற பேச்சே சபர்மதியில் எழாது. சபர்மதியில் என்ன நடக்கும்? இதற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்த அண்ணல் காந்தியின் ஃபீனிக்ஸ் ஆசிரம அனுபவத்தைப் பார்ப்போம்.
ருஸ்தம் ஷேத் என்பவருக்கு "மானே வாலுன்' என்ற குஜராத்தி பாடல் பிடிக்குமாம். அதன் பொருள் ராமனின் பெயர் எனக்கு அருமையோ அருமை. ""ராமனுக்குப் பதில் "ஹோர்மஜ்ட்' என்று சொல்லலாமா'' என்று அவர் கேட்க, எல்லாரும் அதற்கு இணங்கிப் பாடினார்கள். "ஹோர்மஜ்ட்' பார்ஸி மதக் கடவுளின் பெயர்.
அங்கே தாவுத் ஷேத்தின் மகன் ஹுசேனின் விருப்பப்படி "ஹை பஹாரே பாக்' என்ற இஸ்லாமியப் பாடலை எல்லாரும் பாடுவார்களாம். பின்னர் அந்தப் பாடல் ஆசிரமத்தின் பஜனைப் பாடல் தொகுப்பில் சேர்க்கப்பட்டதாம்.
ஜோசப் ராயப்பன் என்பவருக்கு "வைஷ்ணவ ஜனதோ' என்ற பாடல் மிகவும் பிடிக்குமாம். அதன் பொருள் "மற்றவரின் துயரை எவன் புரிந்துகொள்கிறானோ அவனே வைஷ்ணவன்'. ஒரு நாள் பஜனை பாடும்பொழுது ஜோசப், "வைஷ்ணவ' என்ற சொல்லிற்கு பதில் "கிருஸ்துவ ஜனதோ தேனே கஹியே, ஜே பீட பராயீ ஜாணெ ரே' என்று பாடினாராம். அதனை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுப் பாடினார்களாம்.
சபர்மதியும் இப்படித்தான் இருக்கும். அன்பே கடவுள் என்றால், அந்த அன்பிற்கு என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன? அன்பிற்கு பெயரிடாமல் இருப்பவர்களும் கூட சபர்மதியில் எல்லாரிடமும் அன்பாய் இருப்பார்கள்.
"தீயினைக் கும்பிடும் பார்ப்பார், நித்தம் திக்கை வணங்கும் துருக்கர், கோயிற் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் ஏசு மதத்தார், யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று' என்று பாடிய பாரதி சபர்மதியில் இருப்பார். மதத்தைத் தாண்டியது மனிதம். சபர்மதியில் மனிதம் மறக்காத மதம் இருக்கும்.
அம்பேத்கர் 1932-இல் ஒரு கடிதத்தில், "தீண்டத் தகுந்தவர்களையும் தீண்டத் தகாதவர்களையும் சட்டத்தினால் இணைக்க முடியாது. அவர்களை அன்பு ஒன்றே இணைக்கும்' என்று எழுதியுள்ளார்.
அவர் சொல்லியது முற்றிலும் உண்மை என்பதை நாம் இரட்டைக் குவளை முறையாலும், கோயிலுக்குள் நுழைய தடை செய்தும் நிரூபித்து வருகிறோம். "இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே. மனிதர் யாரும் சமானமாக வாழ்வமே' என்று பாடினால் மட்டும் போதாது, வாழ்ந்து காட்டுவோம் என்பதில் உறுதியாய் இருப்பர் சபர்மதி மக்கள்.
அண்ணல் காந்தி சொல்கிறார், "தீண்டாமை ஒரு கொள்ளை நோய், உலகத்தார் எல்லாரிடமும் நாம் அன்பு செய்தால், நாம் எல்லாருக்கும் அன்பு புரிந்தால், மனிதர்களுக்கிடையே இருக்கும் சுவர்கள் உடைந்தால் அந்தக் கொடு நோய் அழிந்து விடும்'. சபர்மதியில் சுவரும் இருக்காது;கதவும் இருக்காது.
சபர்மதியில் எங்கும் எளிமை, எதிலும் எளிமை இருக்கும். உடையில் எளிமை, உணவில் எளிமை, நடைமுறையில் எளிமை. நாம் பேராசைப் படாமல் இருந்தால் எல்லாருக்கும் எல்லாமும் இருக்கும் என்பதை அவர் வாழ்ந்து காட்டினார்.
ஒருபுறம் உணவு எச்சங்கள் குப்பை மலைகளாக குவிகின்றன. மறுபுறம் உணவையே பல நாள் பார்த்திராத மக்கள். ஒருபுறம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நீச்சல் குளம் என்று அசுர விளம்பரங்கள். மறுபுறம் தண்ணீர் லாரி எப்போது வரும் என்று சாதகப் பறவை போல காத்து நிற்கும் மக்கள். ஒருபுறம் காற்றை விட வேகமாகப் பறக்கும் சொகுசு வண்டிகள். மறுபுறம் நடைபாதையில் படுத்து அதே வண்டிகளின் சக்கரங்களில் சிக்கி மடியும் மக்கள். நாம் அமைதியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
சபர்மதியில் இது போன்ற கொடுமைகள் இருக்காது. எல்லாரும் அங்கே "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வர்'. எவரும் வீணில் உண்டு களித்திருக்க மாட்டார். எரிக் ஃப்ராம் (உழ்ண்ஸ்ரீட் ஊழ்ர்ம்ம்) என்ற அறிஞர், "வேண்டும் என்பதும் வெறுமனே இருப்பதும்' (பர் ஏஹஸ்ங் ஹய்க் ற்ர் ஆங்) என்று ஒரு அற்புதமான நூல் எழுதியுள்ளார்.
வேண்டும் வேண்டும் என்பது முடிவே இல்லாத படுகுழி. வெறுமனே இருப்பது என்பது லேசானது. சபர்மதி மக்கள் பேராசை என்ற படுகுழியில் விழுவதில்லை. அதனால், சபர்மதியில் எங்கும் பசுமையும் மகிழ்ச்சியும் ஆட்சிபுரியும்.
அகிம்சை அகிம்சை என்று அண்ணல் கொடி பிடித்தார் இல்லையா? சுத்தமும் கூட அகிம்சையின் ஒரு முகம்தான். அன்பும், பெண் சுதந்திரமும் அவ்வாறே. ஏன் மத நல்லிணக்கமும் கூட அகிம்சையின் ஒரு முகமே. சற்று யோசித்துப் பார்த்தால் எளிமை கூட ஒரு வகை அகிம்சைதான்.
இப்படி, முழுதும் அகிம்சை கற்களால் அமைந்தது சபர்மதி. இன்னும் அங்கு நிறைய இருக்கிறது. போவோமா சபர்மதிக்கு? அது தள்ளித் தள்ளிப் போகும் தொடுவானம் இல்லை - நாம் முயன்றால் தொட்டுவிடும் தூரம்தான்!
கட்டுரையாளர்: நீதிபதி (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்(தனி) மும்முனைப் போட்டியில் வெல்லப் போவது யாா்?

தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்
தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக! - தொகுதி அலசல் சாத்தூர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

