அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

நீர் ஆதாரமுள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து வீடு கட்டி குடியேறுவது அந்தக் காலம் தொட்டு இன்று வரை நடந்து வருகிறது.

நீர் ஆதாரமுள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து வீடு கட்டி குடியேறுவது அந்தக் காலம் தொட்டு இன்று வரை நடந்து வருகிறது.

இதுபோன்ற இடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் ஊருணிகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவை ஆக்கிரமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

முந்தைய காலங்களில் நகர்ப்புறங்களை நாடி பிழைப்புத் தேடி வருவோர் அங்குள்ள ஊருணிகள், குளங்கள், கால்வாய் பகுதிகளில் குடிசைகள் அமைத்து குடியிருந்து விட்டு குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிந்த பின்னர் வெளியேறிச் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இது போன்ற இடங்களை சிலர் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து தங்களின் தேவைக்காக நீர் நிலைகளே இல்லாத வகையில் மூடி விட்டனர்.

மக்கள் தொகையின் அதிகரிப்பாலும் வளர்ச்சியின் பொருட்டும் பேரூராட்சி நகராட்சியாகவும், நகராட்சி மாநகராட்சியாகவும் மாற்றமடைந்துள்ளன.

இந்த நிலையில், அரசு புறம்போக்கு நிலங்களையும் நீர் ஆதாரமுள்ள பிற இடங்களையும் நிரந்தரமாக ஆக்கிரமிக்கத் திட்டமிட்டு, கல்வி நிறுவனங்களாகவும், அடுக்குமாடிகளாகவும், வணிக நிறுவனங்களாகவும், குடியிருப்பு வீடுகளாகவும் கட்டி தங்களுக்கு தேவையான வருவாயை பெருக்கிக் கொண்டனர் சிலர்.

இதனால் நகர் பகுதிகளில் நீரோட்டமின்றியும், தேக்கமின்றியும் நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற இடங்களில் குடியிருந்த ஏழைகளை அப்புறப்படுத்தி விட்டு அரசியல் செல்வாக்குடையவர்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் குறுக்கு வழியில் தங்களை ஏழைகளாகவும், பயன்பாடற்ற இடம் பொதுமக்களின் தேவைக்கு என காண்பித்து சிலர் பட்டாவும் வாங்கியுள்ளனர்.

சிலர் பட்டா வாங்கித் தருவதாக ஏழைகளிடம் வசூல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, நீர் ஆதாரத்தை மையமாக வைத்து நகரமாக உருவான நகர்ப் பகுதியில் நீர் தேக்கங்கள் அழிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர் வெளி மாவட்டங்களிலிருந்து பல்வேறு பிரச்னைகளுக்கிடையே அதிகப்படியான அரசின் நிதி செலவிடப்பட்டு கொண்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அவரவர் தேவைக்கு ஏற்ப அரசு இடங்களை ஆக்கிரமித்து விடுவதால் வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவுநீரை வெளியேற்ற போதிய இடவசதியின்றி தவிக்கும் சூழ்நிலையும் உள்ளது.

நகர்ப் பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகை, வாகனப் பயன்பாடுகளின் அதிகரிப்பு என போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் கூடிக் கொண்டே வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுநல அமைப்புகள் விடுக்கும் கோரிக்கையினை ஏற்று, திட்டங்கள் வகுத்து நிதி ஒதுக்கப்படுகிறது.

இப்பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படுகின்றன.

இதில் அந்த இடங்கள் மூலம் வணிகம், வாடகை என்ற பெயரில் வருவாய் ஈட்டியவர்கள் பாதிக்கப்படுவதோடு குடியிருக்க வேறு இடம் எதுவும் இல்லாமல் வாழ்க்கையே கேள்விக் குறியாகும் நிலையிலிருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? இது அரசு இடங்களை ஆக்கிரமிக்கும் போது தடுக்காத அதிகாரிகளின் குற்றமா? அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாகக் குடியிருந்தவர்களின் குற்றமா? பொதுமக்களின் நலன் கருதி புதிய புதிய திட்டங்களை செயல்படுத்துவோரின் குற்றமா?

கண்மாய் நீர் பிடிப்புகளிலும், விவசாய இடங்களிலும் உள்ள நிலத்தை வீட்டு மனைகளாக பிளாட் போட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர் சிலர்.

இதில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டும், முறையான அனுமதி பெறாமலும் பொதுமக்களை ஏமாற்றி பிளாட்டுகள் விற்கப்படுகின்றன. இந்த ஏமாற்று வலையில் சிக்காமல் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

வளர்ந்து வரும் நகர் பகுதிகளில் பெருகி வரும் பிளாட் விற்பனையில் எந்தெந்த இடங்கள் அரசின் அனுமதி பெற்று முறையான விற்கப்படுகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் கண்காணித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் பணத்தைப் பறிகொடுத்து ஏமாறாமல், முறையான அனுமதி பெற்ற இடங்களை வாங்கிமக்கள் பயனடைவர். அரசு செய்யுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com