ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கொசுக்களைக் கொல்லும் மீன்கள்

உயிரியல் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் செயல்படும் அதே மனிதன் இயற்கை நியதிகளை மீறும்போது அழிவைத் தேடிக் கொள்கிறான்.

News image
Updated On :11 ஜனவரி 2015, 8:00 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

உயிரியல் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் செயல்படும் அதே மனிதன் இயற்கை நியதிகளை மீறும்போது அழிவைத் தேடிக் கொள்கிறான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு எதிரி உண்டு. ஆனால் மனிதனுக்கு எதிரி மனிதனே. சுற்றுப்புறத் தூய்மையை அழித்துவிட்டான். கொசுக்களைப் பெருக்கிவிட்டான்.

நாலுகால் பிராணிகளைவிட இரண்டுகால் மனிதன் பலமுள்ளவன். ஒரு குத்தீட்டியை வைத்துக்கொண்டு ஆதிகால மனிதன் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற கொடிய மிருகங்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டிருந்தான். கடலில் உள்ள திமிங்கலத்தைக் கொல்வான்; சுறா மீன்களைக் கொல்வான்; நதிகளில் உள்ள முதலைகளையும் ஈட்டியால் கொல்வான்; அதேசமயம், ஒரு ஈயைக் காட்டிலும் சிறிய உருவமுள்ள கொசுவை அழிப்பதில் மனிதன் தோற்றுவிட்டான்.

கொசுக்களின் எண்ணிக்கை பலம் மனித அழிவுக்கு வித்திட்டுவிட்டது. மலேரியா, ஃபிலேரியா (யானைக்கால்), டெங்கு என்று நோய்களை வழங்கிவருகிறது. உலகை வெல்ல மனிதன் ரசாயன வெடிகுண்டுகளையும், அணுக்கதிர் வீசும் குண்டுகளையும் விமானங்களிலிருந்து வீசுகிறான். எதிரிகள் மடிகிறார்கள்.

இந்தக் கொசுவோ வெற்றிக்களியாட்டம் போடும் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தைக் குடிக்கும்போதே விஷக்கிருமிகளை உள்ளே செலுத்தி மனிதனைப் படுத்த படுக்கையாக்கி விடுகிறது. இயற்கை நியதியை மனிதன் மறந்து விட்டதால் கொசுவுக்கு அடிமையாகிவிட்டான்.

இயற்கையின் நியதி என்றால் என்ன? அறிவியல் அடிப்படையில் இதனை "உயிரியல் சமன்பாடு' (உஸ்ரீர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஆஹப்ஹய்ஸ்ரீங்) என்று கூறலாம். ஆடு, மாடு, குதிரை, மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, முயல் போன்ற தாவர ஜீவிகளை, சிங்கம், புலி, கரடி, நரி போன்ற கொடிய மிருகங்கள் கொன்று தின்பது இயற்கையின் நியதி.

சாது மிருகங்களுக்கு எதிரிகள் இல்லாவிட்டால் அவற்றின் எண்ணிக்கை பலம் உயர்ந்து காடுகளை மேய்ந்து தின்றுவிடும். கொடிய மிருகங்கள் பசி எடுக்கும்போது சாதுவான சைவப் பிராணிகளைக் கொல்வதால் பசுமை காப்பாற்றப்படுகிறது.

கொடிய மிருகங்களை மனிதன் வேட்டையாடிவிட்டால் காட்டில் பசுமைக்கு ஆபத்து வந்துவிடும். ஆகவே, மனிதத் தலையீடு விரும்பப்படுவது இல்லை. இயற்கையின் நியதியைச் சொல்ல வேறு பல உதாரணங்களும் உண்டு.

பாம்பு என்றால் படையும் நடுங்கும். எனினும் எல்லாப் பாம்புகளும் விஷமுடையவையல்ல. கட்டு விரியன், கண்ணாடி விரியன், பலவகை நாகப்பாம்புகளுக்கு விஷமுண்டு.

சாரைப் பாம்பு, கொம்பேறி மூக்கன் (ஓலைப் பாம்பு), தண்ணிப் பாம்பு, பச்சைப் பாம்பு ஆகியவை விஷமற்றவை. கட்டு விரியனுக்கு வேகம் குறைவு. அடித்துக் கொல்வது எளிது.

நாகம் மனிதனைக் கண்டு பயப்படாது. படம் எடுத்து எச்சரிக்கும். உடனேயே கடித்துவிடாது. ஆகவேதான் அதை நல்ல பாம்பு என்று சொல்கிறோம். மனிதன் அருகில் வரும்போது "உஸ்உஸ்' என்று ஓசை எழுப்பி எச்சரிக்கை செய்யும். ஆகவே, நல்ல பாம்பை தெய்வமாக கிராம மக்கள் மதிப்பதால், கொல்லாமல் விரட்டி விடுவார்கள்.

சாரைப் பாம்பு எளிதில் மனிதனிடம் சிக்காது. மிகவும் வேகமாக மறைந்துவிடும். சாரையின் உடலில் கொழுப்பு அதிகம். சாரையின் வாலுக்கு சக்தி உண்டு. வாலைச் சுழட்டித் தாக்கும். தழும்பு ஏற்படும் வண்ணம் வாலால் அடிக்கும்.

பாம்புகளால் விவசாயத்திற்கு நன்மை உண்டு. பயிர்களுக்கு இடையூறு செய்யும் எலி, தவளை ஆகியவற்றைப் பாம்பு தின்னும். எலி, மனித உணவைத் திருடி வளைக்குள் சேமித்துக் கொள்ளும். தானியக் கதிர்களைக் கத்தரித்து விடும். பாம்பைக் கட்டுப்படுத்த கீரி, மயில், பூனை, கருடன் வாழ்கின்றன. இந்த நான்கும் பாம்பை உண்டுவிடும். விஷப் பையை ஒதுக்கிவிடும்.

பூனையின் உணவு எலி மட்டுமல்ல. அணில், கோழிகள், பறவைகளும்தான். பூனை மரத்தில் ஏறும். பறவைக் குஞ்சுகளையும் விட்டு வைக்காது. பசித்தால்தான் அவ்வாறு செய்யும். பூனைக்குப் பகை நாய். நாய்கள் சில நேரம் பூனையைத் தின்னும். மற்றபடி பூனையை ஒன்றும் செய்யாது. குட்டிப் பூனையை தாய்ப் பூனை மருந்தாகத் தின்பதும் உண்டு.

ஒரே சமயத்தில் 4, 5 குட்டி போடும் பூனை ஒரு குட்டியைத் தின்றுவிடும். எல்லாப் பூனைகளும் அவ்வாறு தின்பதில்லை. எலி, அணில், வவ்வால்களைப் பூனை உண்பதால் பூனையும் விவசாயத்திற்கு நண்பன்தான். பழத் தோட்டங்களில் பூனை வளர்ப்பது நன்மை பயக்கும்.

எதிரிகள் என்பதற்கு வேறு பல ஜந்துக்களையும் குறிப்பிடலாம். செடிகளுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை பல்லி, பறவை, சிலந்தி அழிக்கும். ஆனால் சிலந்தியைப் பல்லி அழிக்கும். எல்லாப் பறவைகளுக்கும் புழு, பூச்சிகளே உணவு. ஆனால் கொசுக்கள் தப்பிவிடும்.

சிலந்திகளில் நிறைய வகை உண்டு. இயற்கை விவசாயம் செய்வோர் நெல் வயல்களைப் பார்வையிடும்போது, அந்துப்பூச்சிகளை உண்ணும் சிலந்திகள் காணப்பட்டால் மகிழ்வர்.

ஊசித்தட்டான் இலைச் சுருட்டுப் புழுவை உண்ணும். பயிர்களைத் தாக்கி அழிக்கும் புழு பூச்சிகளின் எதிரிகளில் சிலந்தி, தட்டான், தவிர கிரிக்கெட் வண்டு, நீள் கொம்பு வெட்டுக்கிளி, நாவாய், நீர்தாண்டி, குழவிகள் முக்கியம். குழவி அசைவம். தேனீ சைவம். பூக்களில் உள்ள தேன், மகரந்தங்களை உறிஞ்சும். வண்ணத்துப் பூச்சியும் சைவம்.

மகரந்தச் சேர்க்கைக்கு சைவப் பூச்சிகள் உதவும். கழுகுகள் தேனீக்களுக்கு எதிரி. வேறு பறவைகள் தேனீக்களை நெருங்குவதில்லை. கழுகுகள் தேன்கூட்டைக் கலைத்து தேன் குஞ்சுகளைத் தின்னும். ஓணானைப் பார்த்தால் பலருக்குப் பிடிக்காது. பூராண், தேள் ஆகியவற்றை ஓணான் வேட்டையாடும்.

பொதுவாக ஒரு உயிரை மற்றொரு உயிர் வேட்டையாடுவது இயல்பாக நிகழ்ந்து உயிரியலில் சமன்பாட்டை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் கெடுத்துவிட்ட மனிதனுக்கு ஆண்டவன் வழங்காத தண்டனையை கொசுக்கள் வழங்கி வருகின்றன.

உண்மையில், கொசுவைத் தின்பது மீன்களே. இதைப்பற்றிய ஆவணக்குறிப்பு சுவையானது. இந்தியாவில் மீனை உண்ணும் மாநில மக்களில் முதலிடம் வங்காளிகளுக்குத்தான். வங்காளத்தில் உள்ள பிராமணர்களுக்கு மீன் சைவம்.

1920-களில் வங்காளத்தில் நீரியியல் பொறியாளராயிருந்த சர் வில்லியம் வில்காக்ஸ் 1930-இல் வெளியிட்ட "வங்காளத்தில் பண்டையப் பாசன முறைகள்' என்ற நூலில் எவ்வாறு மீன்கள் கொசுக்களைக் கட்டுப்படுத்தி மலேரியா, ஃபிலேரியா வராமல் காப்பாற்றின என்கிற விவரம் உள்ளது.

"வங்காள விவசாயிகளிடம் நான் கேட்டறிந்த செய்திகளின்படி கங்கை - தாமோதர் நதி வெள்ளம் குளம் குட்டைகளையும் நெல்வயல்களையும் நிரப்பும்போது கையில் அள்ளும் அளவில் மீன்கள் நிறைந்து காணப்படும்.

காடுகள் வழியே அடித்து வரப்படும் வெள்ளத்தில் மீன் முட்டைகளுடன் கொசு முட்டைகளும் கோடிக்கணக்கில் அடித்து வரும்போது மீன் குஞ்சுகளாக மாறும் கொசு முட்டைகள் (லார்வா) மீன்களுக்கு உணவாகிறது.

வங்க தேச விவசாயிகளின் கருத்தை வலியுறுத்தும் வகையில் 17-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் பணிபுரிந்த பெர்னியரின் ஆவணக்குறிப்பு உள்ளது.

மண்ணோடு மண்ணாக அடித்து வரப்படும் செந்நிற வெள்ளத்தில் கோடி கோடியான மீன்களில், கெண்டை இறால் வகை மீன் முட்டைகளுடன் கொசுவின் லார்வாக்களும் வருகின்றன.

மீன், குஞ்சு பொறித்தவுடன் கொசுவின் லார்வா உணவாகிறது. தாமோதர் நதி பல கிளைகளாகப் பிரிந்து ஏரி, குளங்களை நிரப்பிவிட்டு வயல்களுக்கு வரும்போது கோடிக்கணக்கில் மீன்கள் வளர்ந்து கொசுக்களை அழித்து விடுகின்றன.

வலையைப் பயன்படுத்தாமல் விவசாயிகள் வயல்களிலும் குளம் குட்டைகளில் மீன்களைக் கையால் அள்ளுவார்கள். மலேரியா பரவாதது ஒரு நன்மை. மனித உணவாக மீன்கள் கிடைப்பது மறு நன்மை'.

பெர்னியரின் குறிப்பு பொய்யல்ல என்ற விவரத்தை ஈஸ்டர்ன் ரயில்வே பொறியாளர் வில்காக் இண்டியன் மிர்ரர் இதழில், "1855-இல் கிழக்கு ரயில்வே கட்டுமானம் தொடங்கியது.

தாமோதர் நதி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கரைகள் உயர்த்தப்பட்டன. இதனால் வெள்ள நீர்ப்பாசனம் தடைப்பட்டு ஏரி, குளங்கள் தூர்ந்து களைகள் மண்டி விட்டன.

மீனினம் அழிந்தது. கொசு உற்பத்தி உயர்ந்து மலேரியா நோய் கொல்கத்தா நகரையே உலுக்கியது. கொல்கத்தா வாசிகள் மலேரியாவுக்கு பயந்து குர்தா, பாரக்பூர், நாவாகஞ்ச் ஆகிய இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்...' என்று குறிப்பிடுகிறார்.

ரயில் போக்குவரத்து வெள்ளநீர்ப் பாசனத்தை அழித்ததால் நன்மையில் தீமையும் விளைந்தது. ஆகவே, இயற்கையான வாழ்வில் மனிதன் தலையிடும்போது உயிர்ச்சூழல் சமன்பாடு என்று கூறப்படும் இயற்கையின் இயல்பு மாறி, மனித எதிரியான கொசுக்களை வளர்கின்றன.

ஏரி, குளங்களில் மீன் வளர்த்து கொசுக்களைத் தீனியாக்கும் புதிய முயற்சி இப்போது தேவை.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.