வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?

கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய மூன்றுமே ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகளாகும். பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டிய இம்மூன்று சேவைகளையும் முறையாக அளிப்பதில் நமது நிர்வாகங்கள் படுதோல்வி கண்டுள்ளன என்பதே உண்மை.
Updated on
3 min read

கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய மூன்றுமே ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகளாகும். பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டிய இம்மூன்று சேவைகளையும் முறையாக அளிப்பதில் நமது நிர்வாகங்கள் படுதோல்வி கண்டுள்ளன என்பதே உண்மை.

"இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலுமாக மொத்தம் 11,24,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32,000 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 23,000 பள்ளிகளில் ஓர் ஆசிரியர்கூட இல்லை. 1,30,000 பள்ளிகளில் ஒரே ஓர் ஆசிரியர் மட்டும் இருக்கிறார். 12,277 பள்ளிகளில் ஒரு வகுப்பறைதான் உள்ளது.

ஏனைய பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையும், ஆசிரியர் பணி நியமன முறைகளும் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. ஆசிரியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருக்கும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை மக்கள் புறகணித்து விடுகிறார்கள்' என்று புள்ளிவிவரங்களை முன்வைத்திருக்கிறது மத்திய அரசின் கல்வி ஆய்வு நிறுவனம்.

இந்த ஆய்வுத் தகவல்கள் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில், நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் சென்னையில் மட்டும் 54 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் பிரமிக்க வைக்கின்றன.

2015-ஜூன் மாதம் தொடங்க இருக்கும் கல்வி ஆண்டுக்கு ஜனவரி மாதமே சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தனியார் பள்ளிகள் அறிவிக்க, அப்படிச் செய்தால் அந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தனியார் பள்ளிகளின் வாசலில் பெற்றோர் நீண்ட வரிசைகளில் இரவு பகலாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் 14 லட்சம் குறைந்திருக்கிறது.

ஒரு பக்கம், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாடகை வீட்டிலோ அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ தொடங்கப்படுகிற தனியார் பள்ளிகள், அடுத்த சில ஆண்டுகளில் சகல வசதிகளோடும் கூடிய மெட்ரிக் பள்ளிகளாக வளர்ந்து, கல்லூரிகளாக வடிவமெடுத்து, சில இடங்களில் பல்கலைக்கழகங்களாகவும் கூட விரிவடைகின்றன.

இன்னொரு பக்கம், விசாலமான சொந்த இடத்தில் சகல வசதிகளோடும் தொடங்கப்படுகிற அரசுப் பள்ளிகள், அடுத்த சில ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போய், பெயரளவுக்கு இயங்கி, பின்னர் மூடுவிழா காண்கின்றன.

அரசு நடத்தும் மதுக் கடைகளில் எந்த நேரமும் கூட்டம் முண்டியடித்து மோதிக் கொண்டிருக்க, அரசின் பள்ளிக்கூடங்கள் மட்டும் வெறிச்சோடிக் கிடப்பது ஏன்?

கல்வியின் நிலைதான் இப்படியென்றால், அரசின் தொழிற்சாலைகள் இதைவிட மோசமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசுத் தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டு விட்டன. வேறு பல நிறுவனங்கள் மூடியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அரசின் போக்குவரத்துத் துறை எந்த அளவுக்கு பாழ்பட்டிருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்த அரசுப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே உதாரணம்.

இதில் தொழிலாளர் தரப்பினர் நிர்வாகத்தையும், நிர்வாகத் தரப்பினர் தொழிலாளர்களையும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டாலும், வேலை நிறுத்தத்தின் விளைவுகளை லட்சக்கணக்கான பொதுமக்கள் நன்றாகவே அனுபவித்தார்கள்.

பணியாளர்களுக்கு எந்தவிதமான பணி உத்தரவாதமும் தராத தனியார் பள்ளி, தனியார் பேருந்து, தனியார் மருத்துவமனை, தனியார் அஞ்சல் சேவை நிறுவனங்கள் மக்களுக்குச் சரியான சேவை வழங்குவதாக பெயரெடுத்திருக்கின்றன. ஆனால், பணியாளர்களுக்கு பணி உத்தரவாதம் வழங்கி, சங்க உரிமைகளையும் வழங்கியிருகின்ற அரசு நிறுவனங்கள் சேவை வழங்குவதில் அவப் பெயர் பெற்றிருக்கிறது.

அரசுப் பணியாளர்களை விட்டுவிடுவோம். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளேகூட தனியார் பள்ளிகளில் படிக்கிற நிலை ஏன் உருவானது? ஊதியத்துக்கு அரசுத்துறை, சேவை நுகர்வுக்குத் தனியார் துறை என்பதே கலாசாரமாக இருந்தால், அரசுத் துறைகளுக்கு யார்தான் நுகர்வோராக இருப்பார்?

மற்ற துறைகளை விட்டுவிடுவோம். குடிமக்களுக்கு மிக அவசியத் தேவையும், அவர்களது உரிமையுமான கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளையாவது அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, வளர்த்து செழுமைப்படுத்தித் தக்கவைத்துக் கொள்ள முடியாதா?

நமது அரசு, நமது வரிப்பணம், நமக்கான நிர்வாகம், நமக்கான சேவை என்கிற உணர்வு மக்களுக்கு இல்லையா? அல்லது அவ்வுண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லையா?

25 ஆண்டு காலம் பணிக்கு வராத பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவரை மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பணிநீக்கம் செய்ததாக அண்மையில் செய்தி வெளியானது. இப்படிப்பட்ட அரசுப் பணியாளர்கள் நமது நாட்டில் எவ்வளவுபேர் இருப்பார்களோ?

அரசுத் துறைகளின் பல்வேறு சேவை நிறுவனங்கள் குறித்த அவநம்பிக்கைகளும், கேலி உணர்வும், வெறுப்புகளும், கசப்பான அனுபவங்களும் நமது மக்களது பொதுப்புத்தியில் மிக வலுவாக, நெடுங்காலமாக நிலைபெற்று வருவதன் காரணமாகவே, பணம் கூடுதலாக செலவானாலும் பரவாயில்லை என்று அவர்கள் தனியாரை நாடுகிறார்கள்.

நாடு விடுதலை அடைந்த புதிதில் மிகவும் கம்பீரமாகவும், மக்கள் மீது கொண்ட உண்மையான அக்கறையுடனும் தோற்றுவிக்கப்பட்ட லட்சக்கணக்கான பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும், போக்குவரத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கலகலத்துச் செயலிழந்து போவதென்பது அவற்றைத் தோற்றுவித்தவர்களுக்கும், மக்களுக்கும், நாம் பெற்ற விடுதலைக்கும் சிறப்பு சேர்க்காது என்பது உணரப்பட வேண்டும்.

உணவு விடுதியொன்றை நடத்துகின்ற ஒருவர் வேறு ஒரு உணவுவிடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வருவதை ஒரு நகைச்சுவையாகப் பார்க்கிறோம். ஆனால், அரசு மருத்துவமனைகளை நிர்வகிப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெற்றால் அதை ஒரு கெüரவமாக ஏற்கிறோம்.

அமைச்சராக இருந்த கக்கன், ஜீவானந்தம், பெரியார், குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர். நாராயணன் உள்ளிட்ட எத்தனையோ தலைவர்கள் தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அரசு மருத்துவமனைகளையே நாடினர்.

அத்தகையோரின் அந்த முடிவு பரிதாபமாகப் பார்க்கப்பட்டதே தவிர, சிறந்த முன் மாதிரியாக ஏற்கப்படவில்லை. "கக்கன் தன் கடைசிக் காலத்தில் அரசு மருத்துவமனையில்தானே கிடத்தப்பட்டார்' என்று கேலி பேசி, கேள்வி கேட்போரும் உண்டு. "அதில் என்ன தவறு?' என்று எதிர்க்கேள்வி கேட்போர் இன்று இல்லை.

ஒரு காலத்தில் அரசுத் துறைகள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கின என்பதை மறுப்பதற்கில்லைதான். இன்றும் கூட ஆங்காங்கே வழங்கிக் கொண்டு இருக்கின்றன.

காலரா, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளின் சிகிச்சையை மிஞ்ச எந்த நட்சத்திர மருத்துவமனையாலும் முடியாது என்கிற உறுதியான நம்பிக்கை இன்றளவும் மக்களிடையே உண்டு. உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நமது சமூகத்தின் பெருவாரியான ஏழை - எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில்தான் தஞ்சமடைகிறார்கள். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ஒரு பிரிவாக மதுரையின் புறநகரில் இருக்கும் தோப்பூர் - ஆஸ்டின்பட்டி தொற்றுநோய் மருத்துவமனை கடந்து மூன்று ஆண்டுகளாக ஒரு நட்சத்திர மருத்துவமனையைப் போல இயங்கி சிறந்த சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

1961-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்ட அந்தத் தொற்றுநோய் மருத்துவமனை, காலப்போக்கில் சீரழிந்து, முள்செடிகள் படர்ந்து, பாழடைந்து, ஒரு திகில் கட்டடமாக, சமூக விரோதிகள் புழங்குகிற, செவிலியர்கள் பணிக்குச் செல்ல அஞ்சுகிற, அதிகாரிகளால் எட்டிக்கூடப் பார்க்கப்படாத, இறந்த நோயாளிகளின் உடல்களைக்கூட பெற்றுக்கொள்ளக்கூட எவரும் முன்வராத ஒரு பயமுறுத்தும் மருத்துவமனையாக இருந்தது.

ஒரு பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரே ஒரு உத்தரவால், கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த மருத்துவமனை, அனைத்து வகையான உயர்தர வசதிகளோடு கூடிய ஓர் உன்னதமான இடமாக மாற்றப்பட்டுவிட்டது. "தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறைச் செயலரின் முழுமையான ஒத்துழைப்போடு மதுரை அரசு மருத்துவமனையின் முதன்மை அலுவலர்கள் நடத்திய புரட்சி இது' என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

இதுபோன்ற இன்னும் பல மருத்துவமனைகள் தமிழக அளவில் ஆங்காங்கே இருக்கலாம். தோப்பூர் - ஆஸ்டின்பட்டி மருத்துவமனையின் கோலத்தையே மாற்றிச் செப்பனிட்ட தமிழக சுகாதாரத் துறைக்கு, தமிழ்நாட்டில் சீரழிந்து போயிருக்கும் வேறெந்த மருத்துவமனையும் சவாலாக இருக்க முடியாது.

மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற அரசின் சேவைத் துறைகள் நம்பிக்கைக்கும், உண்மையான சேவைகளுக்கும் உத்தரவாதமளித்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதார மையங்களாக மாற்றப்பட்டால்தான், நமது நாடு ஜனநாயக நாடு என்கிற கூற்று மெய்ப்படும்.

அரசுக்கு வரிப்பணம் செலுத்துகிற குடிமக்களை கெüரவமாகப் பராமரிப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்.

ஏழைகளாகவும் எளியவர்களாகவும் இருக்கும் மக்கள், தனியார் நிறுவனங்களின் குடிமக்கள் அல்லர், நமது குடிமக்களே என்பதை அரசு உணர வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com